5-அருளே அறிவே அமுதே! – சுப்பு ஆறுமுகம்


இதன் முந்தைய பகுதி…

 

நெல்லைச் சீமைக்காரன் நான். சத்திரம் புதுக்குளம் என்கிற கிராமம்தான் சொந்த ஊர். அந்த ஊரில் ஒரு கோவில். அந்தக் கோவிலின் குருக்கள்தான், எங்கள் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர். பெயர் ராம ஐயர். அவர் ஒரு ஆசிரியர், நான் ஒரு மாணவன் என்று பார்க்காமல், அவர்கள் குடும்பத்தில் ஒருவன் போல பழகுவேன்.

அவரது அப்பா, சற்றே மனநிலை சரியில்லாதவர். எப்போதும் வீட்டில் மிகவும் அமைதியாக உட்கார்ந்திருப்பார். ஆனால், என்னை எப்போது கண்டாலும், உடனே, ‘சங்கரா சிவ சங்கரா சிவ சங்கரா சிவ சங்கரா’ என்ற வரியை மட்டும் ராகம் போட்டு, தீர்க்கமான குரலில் திரும்பத் திரும்ப சில தடவை பாடுவார். பாடி முடித்தவுடன் ஒரு அன்பான சிரிப்பை உதிர்ப்பார்.

அவர் ஏன் என்னைப் பார்த்ததும் பாடுகிறார்? ஏன் ஒரே வரியைத் திரும்பத் திரும்பப் பாடுகிறார் என்றெல்லாம் விளங்காது. ஆனாலும், அவரைப் பார்த்து கைகளைக் கூப்பி, வணக்கம் சொல்லிவிட்டு, பதிலுக்குச் சிரிப்பேன்.

உடனே வீட்டுக்குள்ளிருந்து ஆசிரியர், அப்பா பாடிட்டா! ஆறுமுகம் வந்துட்டான்” என்று சொல்லுவார். அதனாலேயே என் ஆசிரியருக்கு என் மீது கூடுதலான பிரியம். வீட்டில் எனக்கு காபி கொடுத்து உபசரிப்பார். என் ஆசிரியர்தான், கோவிலில் குருக்கள் என்று சொன்னேனல்லவா? ஆகவே அவர் காலையில் கோவில் பூஜையை முடித்துவிட்டு, ஸ்கூலுக்கு வந்து பாடங்கள் சொல்லிக் கொடுப்பார். மதிய இடைவேளையின்போது, மறுபடியும் கோவிலுக்குச் சென்று பூஜையை முடித்துவிட்டு வருவார். மீண்டும் மாலையில் கோவிலுக்குப் போய் சாயங்கால பூஜை வேலைகளைக் கவனிப்பார். அவர்தான் எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்தவர்.

அவருக்குத் திடீரென்று உடல் நலமில்லாமல் போவிட்டது. அடிக்கடி இருமல் வரும். அவரை பாளையங்கோட்டை ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டுபோக் காட்டினார்கள். டாக்டர் பரிசோதித்துவிட்டு, அவருக்கு காசநோய் இருப்பதைக் கண்டுபிடித்துச் சொன்னார். அந்தக் காலத்தில், புதுமைப்பித்தன் போன்ற பல பெரிய மனிதர்களை பலிகொண்ட கடுமையான நோய், காசநோய். அப்போது, காசநோய்க்கு நல்ல மருந்து கிடையாது. டாக்டர், சத்தான ஆகாரம் சாப்பிடுங்கள்; நோயின் தீவிரம் கட்டுப்படும்” என்று சொல்லி விட்டார். விஷயத்தைக் கேள்விப்பட்ட என் அம்மா ரொம்ப கவலைப்பட்டார். என் அப்பாவுடன் கலந்து பேசிவிட்டு, எங்கள் வீட்டுத் தோட்டத்துக்குச் சென்றார். அங்கே, எங்களுடைய பதினெட்டு பசுக்கள் நின்று கொண்டிருந்தன. நேரே, ஒரு மாட்டின் கயிற்றை அவிழ்த்து, ஆசிரியர் ராம ஐயர் வீட்டு கொல்லைப் புறத்துக்குக் கொண்டுசென்று, அங்கிருந்த வேப்பமரத்தில் கட்டினார். ஆசிரியரிடம் சென்று, ஐயர்வாள்! உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னும், பாளையங்கோட்டை டாக்டர், உங்களை சத்தான ஆகாரம் சாப்பிடணும்னு சொல்லி இருக்காருன்னும் கேள்விப்பட்டோம்! எங்க மாடு, இனிமே உங்க வீட்லயே இருக்கட்டும்; தினம் ரெண்டு படி பால் கறக்கும். நல்ல பால், தயிர், நெய் எல்லாம் சாப்பிடுங்க! உடம்பு சரியாயிடும்! இன்னைக்கு காலையில நான் பாலை கறக்கல. நீங்க கறந்து எடுத்துக்குங்க” என்று சொல்லிவிட்டு வந்து விட்டார்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், என் ஆசிரியரது உடல்நலம் நாளடைவில் நன்றாகத் தேறிவிட்டது. அதன்பின் ஆரோக்கியமாகத் தொண்ணூறு வயது வரை அவர் நிறைவாழ்வு வாழ்ந்தார். நான் சொந்த கிராமத்தைவிட்டு, சென்னைக்கு வந்த பிறகும், எப்போது எங்கள் கிராமத்துக்குச் சென்றாலும், அவரைப் பார்த்து நமஸ்கரிக்கத் தவறியதில்லை. கடிதங்கள் எழுதும்போதும், மறக்காமல் ஆசிரியர் ராம ஐயர் சௌக்கியமா?” என்று விசாரிப்பேன்.

இந்தச் சம்பவத்தை, ஒருமுறை மஹா பெரியவாளிடம் நான் சொல்லும்படியான ஒரு வாய்ப்பு கிடைத்தது. நான் சொல்லி முடித்தவுடன், அவர், உங்கம்மா சுப்பம்மா பசு மாட்டைக் கொண்டு போய் விடலைடா! லட்சுமியைக் கொடுத்துட்டு, சரஸ்வதியை உனக்காக வாங்கிண்டு வந்துட்டா!” என்றபோது எனக்கு மெய்சிலிர்த்தது.

என்னுடைய வில்லுப்பாட்டுக் குழுவை எப்போதும் மஹா பெரியவா, ‘உன்னோட ட்ரூப்பு’ என்று சொல்லுவார்; அல்லது ‘உன்னோட புரோகிராம்’ல என்று குறிப்பிடுவார். அவரை தரிசிக்கச் செல்லும்போது, அவர் பலதரப்பட்ட விஷயங்களையும் பற்றிப் பேசுவார். நம்மிடம் கேள்விகள் கேட்பார். அவர் நம்மிடம் கேள்வி கேட்டால், அவருக்குப் பதில் தெரியாமல் நம்மிடம் கேள்வி கேட்பதாக நினைத்துக்கொள்ளக் கூடாது. நமக்குப் பதில் தெரியுமா என்று சோதிக்கிற, தெரியாவிட்டால் விளக்கம் தருவதற்காகக் கேட்கப்படுகிற கேள்விகள் தான் அவை. ஒரு தடவை, ஏண்டா! உன்னோட ட்ரூப்ல புல்லாங்குழல் வெச்சிருக்கியோ?” என்று கேட்டபோது, அவர் நான் புல்லாங்குழல் வைத்துக் கொள்ளாததை, ஒரு குறையாகக் குறிப்பிடுகிறாரோ என்று நினைத்து, திருநெல்வேலிக்காரா வில்லுப்பாட்டுக்கு அதை வெச்சுக்கறதில்லை. புல்லாங்குழல் நார்த் இந்தியா வாத்யம்னு விட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன்” என்று பதில் சொன்னேன். சில வினாடிகள் அமைதியாக இருந்த அவர் உதடுகளிலிருந்து, ஆமாமா! அது கிருஷ்ணரோட வாத்யம்தான்!” என்ற வார்த்தைகள் வெளிப்பட்டன.

Sri Radha Krishna

நான் நெகிழ்ச்சியோடு, இந்த வார்த்தைகள்ல இருந்து என் பலஹீனம் தெரிந்தது சாமீ; உங்க பலம் தெரிந்தது. என் பலஹீனம் தெரியத் தெரிய எனக்கு நல்லது; உங்க பலம் தெரியத் தெரிய உலகத்துக்கு நல்லது. புல்லாங்குழல் என்று சொன்னதும், எனக்கு நார்த் இந்தியா என்ற திசை தெரிந்தது; ஆனால், உங்களுக்கு கிருஷ்ணர் என்ற தெய்வம் தெரிந்தார். ஆக, எதை எப்படிப் பார்க்க வேண்டும் என்ற பாடத்தை இங்கே கற்றுக் கொள்ள வேண்டும்” என்றேன்.

மாமண்டூர் பக்கத்தில் ஒரு சின்ன கிராமம். பெயர் சிவதண்டி. அந்தக் கிராமத்து மக்களுக்குப் படிப்பு அதிகம் கிடையாது. பல குடும்பங்களிலும் மாடு இருக்கும்; பால் வியாபாரம் செய்வார்கள். அந்த ஊரின் முக்கியஸ்தர் ஒருவர் நல்ல ஆன்மீகவாதி. அவரது ஏற்பாட்டில்தான் என் நிகழ்ச்சி அங்கே நடந்தது. என்ன கதை? ஆதிசங்கரர் கதைதான். அந்த ஊரில் இந்தக் கதையைச் சொல்ல வேண்டும் என்பதும் அவருடைய தேர்வுதான்.

அந்த ஊருக்குப் போய் இறங்கியபோது, திரண்டிருந்தது மக்கள் கூட்டம். ஆனாலும், கூட் டத்தைப் பார்த்தபோது, இவர்களுக்கு ஆதிசங்கரரைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று எனக்குப் புரிந்துவிட்டது.

தந்தனத்தோம்” சொல்லி கதையை ஆரம்பித்தேன். ‘ஆதிசங்கரர்’ என்று சொன்னால், அவர்களுக்குப் புரியவில்லை. அடுத்து ‘சங்கராச்சாரியார்’ என்று சொல்லிப் பார்த்தேன். ஊஹூம்! ‘மஹா பெரியவா’ என்று சொன்னதற்கும் அதே பலன்தான். ஆனால், எனக்கு எப்போதுமே ஒரு கொள்கை உண்டு. கதை சொல்வது நம் கடமை; அது கேட்கிறவர்களுக்குப் புரிவதும், புரியாததும் அவரவர் அறிவுசார்ந்த விஷயம் என்று விட்டுவிட மாட்டேன். கதை சொன்னால், அது அங்கே கதை கேட்க வந்திருக்கும் எல்லோருக்கும் நன்றாகப் புரியவேண்டும். புரியவில்லை என்றால், நாம் அவர்கள் லெவலுக்கு இறங்கி, அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதில் நான் ஒருபோதும் காம்பிரமைஸ் செய்து கொள்ள மாட்டேன். இவர்களுக்கு, ஆதிசங்கரரையும், பரமாச்சாரியாரையும் எப்படிப் புரிய வைப்பது என்று சிந்தித்த கணத்தில் மனதில் ஒரு பொறி தட்டியது.

நீங்கள்ளாம் காஞ்சிபுரத்துக்கு போயிருக்கீங்களா?” என்று மக்களைப் பார்த்துக் கேட்டதும், போயிருக்கோம்” என்றார்கள்.

யாராவது அதிகாலையில போயிருக்கீங்களா?” என்று அடுத்த கேள்வி. போயிருக்கோம்” என்று பதில் வந்தது. அப்படி அதிகாலையில காமாட்சி அம்மன் கோவில் பக்கத்துல போகிறபோது, வழியில யாரையாச்சும் பார்த்ததும், இவரு கால்ல விழுந்து கும்பிடணும்னு உங்களுக்குத் தோணி இருக்கா?” என்று இன்னொரு கேள்வியைக் கேட்டேன்.

ஒரு சிலர், விடியற்காலையில, ஒல்லியா ஒரு சாமி காமாட்சி அம்மன் கோவிலுக்குப் போவாரு. அவரு கால்ல விழுந்து கும்பிட்டிருக்கோம்” என்றார்கள்.

காவி கட்டின அந்த சாமிதான் சங்கராசாரியார்; மஹா பெரியவா, காஞ்சி காமகோடி பீடாதிபதி” என்று சொன்னதும், மக்கள் முகத்தில் ஒரு தெளிவைப் பார்த்தேன். முதலில் சிறிது நேரம் நான் சிரமப்பட்டாலும், கதையைச் சொல்லி முடித்தபோது, சிவதண்டி கிராமத்து மக்கள் ஆதிசங்கரர் மேன்மைகளையும், அவரது மறு உருவமாக மண்ணில் வந்து உதித்த பரமாச்சாரியாளின் பெருமைகளையும் புரிந்துகொண்டார்கள்.

(அருள் பொழியும்)

S. Chandramouli

எழுத்தாக்கம் : எஸ். சந்திரமௌலி

படங்கள் : கல்கி களஞ்சியம்

–நன்றி கல்கி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s