திண்டுக்கல் பால் பன்!


சுற்றச் சுற்ற சுண்டி இழுக்கும் சுவை

அழகான மலைத் தொடர்களும், பச்சைப்பசேலென வயல்களும், ஏக்கர் கணக்கான வாழை மரங்களும், பன்னீர் திராட்சைத் தோட்டங்களும் நிறைந்த ஒரு ரம்மியமான சூழலைக் கற்பனை செய்துபாருங்கள்! ஆம், இப்போது நான் ரசித்துக் கொண்டிருக்கும் அழகிய ஊர் மதுரைக்கு அருகில் இருக்கும் திண்டுக்கல்! ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே மிக்க பெருமையும், கீர்த்தியும் பெற்ற ஒரு ஊர். இம் மலையில் அமைந்திருக்கும் மலைக்கோட்டை 1605-ஆம் வருடம் மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டது. இம் மலை ஒரு பெரிய ‘திண்டு’ போல் இருப்பதால்தான், இந்த ஊர் ‘திண்டுக்கல்’ என அழைக்கப்பட்டது.

திண்டுக்கல்லில் மெயின் ரோட்டில் உள்ள கோபால்பட்டி, ‘திண்டுக்கல் பால் பன்’னுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. அங்குள்ள தேநீர்க் கடைகளில் இருக்கும் ஒரு வித்தியாசமான பணியாரம் ‘பால் பன்’. நான் மனத்தில் பால் பன்னை ஒருவிதமாகக் கற்பனை செய்து கொண்டே அங்குள்ள மாரிமுத்து டீ ஸ்டாலுக்குச் சென்று, அக்கடையின் பால் பன் எக்ஸ்பர்ட் நாகராஜை சந்தித்தேன். பால் பன் செயல்முறையை அவர் எனக்கு விளக்கினார்.

கெட்டியான தயிர், தரமான மைதா மாவு, சோடா மாவு, தரமுள்ள எண்ணெய் இவைகளை நன்கு கலக்கினார். அரை மணி நேரம் அந்தக் கலவை நன்கு ஊறியவுடன், அந்த மாவு ‘புஸுபுஸு’ என்று வந்தது. இந்தக் கலவையைப் பொரித்து எடுக்க அவர் உபயோகிக்கும் பெரிய அடுப்புக்கு வேர்க்கடலைத் தோலை எரிபொருளாகப் பயன்படுத்துகின்றனர். இது என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. திண்டுக்கல் வேர்க்கடலையும் மிகவும் பிரசித்தி பெற்றது.

வேர்க்கடலை தோல் அடுப்பில், பெரிய எண்ணெய்க் கடாயில் எண்ணெய் காய்ந்ததும், மாவுக் கலவையைச் சிறு சிறு பந்து போல்கையால் எடுத்துப் போடுகிறார். அரைவேக்காடு ஆனவுடன், அப்பந்துகளை, வடிதட்டில் கொட்டி விடுகிறார். பக்கத்தில் உள்ள பெரிய பாத்திரத்தில் நம் குலாப் ஜாமூனின் ஜீரா பதத்தில், சர்க்கரைப்பாகு தயாராக உள்ளது. முதலில் பொரித்து எடுத்த சிறு பந்து உருண்டைகளை மறுபடியும், இரண்டாவது முறையாக, எண்ணெயில் போட்டு, ‘தங்கக் கலரி’ல் எடுக்கிறார். எண்ணெய் மிதமான சூட்டில் இருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று. உள்ளேயும், வெளியேயும் நன்கு வெந்து எடுத்த தங்க உருண்டைகளை சர்க்கரைப் பாகில் போட்டு, பெரிய ஜல்லிக் கரண்டியால் நன்கு அமுக்கி விடுகிறார்.

இங்கு நான் கவனித்த இருவிஷயங்கள் முக்கியமாவை. முதலில் இது நம் பேக்கரி பன் போல் ‘பேக்’(Bake) செய்யப்பட்டதல்ல. ‘பால் பன்’ என்று பெயர் இருந்தாலும், பாலிலிருந்து வரும் தயிரையே இந்தப் பன்னுக்கு உபயோகப்படுத்து கின்றனர். சூடாக இரண்டு அல்லது நான்கு பன்களை பிளேட்டில் வைத்து, சுவைத்துச் சாப்பிட்ட போது, ஊறியிருந்த பன்னின் சர்க்கரைப்பாகு தொண்டையில் இறங்கி, ‘பன்’ வழுக்கிக் கொண்டு போனது. ஆஹா என்ன ஒரு அபாரமான ருசி!

இந்தச் சுவையுள்ள ‘பால் பன்’ வேறெங்கும் கிடைப்பதில்லை. சிறு மலைப் பழம், பன்னீர் திராட்சை, பெரிய தலைவாழை இலை, இவைகளுடன் மாரிமுத்து டீ ஸ்டாலின் பால் பன்னையும் வாங்கி, ருசித்து மகிழுங்கள்!

அனுபவம் : ராகேஷ் ரகுநாதன்

எழுத்து : ரமா ரகுநாதன்

-நன்றி மங்கையர் மலர்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s