4-அருளே அறிவே அமுதே! – சுப்பு ஆறுமுகம்


இதன் முந்தைய பகுதி…

ஆன்மிக அன்பர்கள் காலடி முதல் காஞ்சி வரை” கதை கேட்பதற்கு திரளாக வந்து காத்திருக்க, நானும் என் குழுவினரும் மடத்தில், மஹா பெரியவாளுடைய உத்தரவுப்படி, கதை சொல்லி முடித்தபோது இரவு மணி ஒன்பது இருக்கும். பக்தி பிரவாகத்தில் பெரியவாளையே பார்த்துக் கொண்டு இருந்தேன். என் கண்களில் ஆனந்தக் கண்ணீர். ஞான ஸ்வரூபியாக தென்பட்ட மஹா பெரியவாளின் முகம், அடுத்த கணம் ஒரு ஞானக் குழந்தைபோல தோன்றியது. அதிலே அன்பு பிரவாகமெடுத்துக் கொண்டிருந்தது. அவருடைய ஒரு முகத்தை பல முகமாக உணர்ந்தேன். அந்த வினாடி, அவரைப் பற்றி திருப்புகழ் சந்தத்தில் ஒரு ஆசுகவி பாட வேண்டும் என்று ஆசை பிறந்தது. அடுத்த கணமே, தெய்வ அருளால் கவிதையொன்றைச் சொன்னேன்.

அந்த வரிகள் இதுதான்.

அம்மையிடம் வரம் கேட்கும் குழந்தை முகம் ஒன்று!

அன்பருக்கு அருள் கூட்டும் குருவின் முகம் ஒன்று!

செம்மையுறு இந்துமதத் தலைவர் முகம் ஒன்று!

சித்தாந்த ஒளிநல்கும் ஞானமுகம் ஒன்று!

தம்மையே தாம் இழந்த தியாக முகம் ஒன்று!

தாபோல கருணை தரும் அன்பு முகம் ஒன்று!

நம்மிடையில் காட்சிதரும் ஆறுமுகம் என்று

நமஸ்காரம் புரிகின்றோம் பெரியவரை இன்று!

ஏறுமயில் ஏறிவிளையாடும்முகம் ஒன்று” (திருப்புகழ்) பாணியில் இப்படிப் பாடியதைக் கேட்டு மஹா பெரியவாள் புன்னகை புரிந்து, அவனே ஆறுமுகமோன்னோ! அதனால என்னை ஆறுமுகம்னு பாடறானோ!” என்று சொல்லி ஆசீர்வதித்ததை இன்று நினைத்தாலும் மெசிலிர்க்கும்.

ஜனங்கள் எல்லோரும் கதை கேட்பதற்காக காத்துக்கொண்டிருப்பார்களே!” என்று பரபரப்பாக, மடத்திலிருந்து புறப்பட்டபோது, நமஸ்காரம்! உங்க வில்லுப்பாட்டு அற்புதமா, அபாரமா இருந்தது! என்றார் மஹா பெரியவாளின் ஆத்மார்த்த பக்தரான, பிரபல கடம் வித்வான் விக்கு விநாயகராம். அடுத்து, இன்னொரு இடத்தில் கதை சொல்லப்போறீங்கன்னு சொன்னா! நீங்க கதை சொல்லும்போது, நானும் கூட உட்கார்ந்து கடம் வாசிக்கட்டுமா?” என்று கேட்டார். ‘இதுவும் பெரியவாள் அனுக்கிரஹம் போலும்’என்று நினைத்துக் கொண்டு, தாராளமா வாசியுங்க! அது என் பாக்கியம்” என்று சொல்ல அவரும் எங்களோடு புறப்பட்டார்.

கதை சொல்லும் இடத்தை அடைந்தபோது, கூட்டமான கூட்டம். ஆண்களும், பெண்களும், பெரியவர்களும், நடுத்தர வயதினரும், இளைய தலைமுறையினரும், சிறுவர்கள், சிறுமிகளுமாக ஜாதி பேதமில்லாமல் உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். உட்கார இடம் கிடைக்காதவர்கள் ஓரமாக நின்று கொண்டிருந்தார்கள். நேரே மேடைக்குப் போனோம். மேடையில், மஹா சுவாமிகள் படம் பெரிதாக வைக்கப்பட்டிருந்தது. மேடையில், அவருக்கு சமமாக அமர்ந்து கதை சொல்ல மனசு ஒப்பவில்லை. நிகழ்ச்சி நிர்வாகிகளிடம் சொல்லி, படத்தை, சற்று உயரமான பீடம் ஒன்றில் வைக்கும்படிக் கேட்டுக் கொண்டேன். அவர்களும் அதன்படியே செய்ய, கதை சொல்ல ஆரம்பித்தேன். நிகழ்ச்சி முடிந்தபோது இரவு இரண்டு மணி.

மஹா பெரியவாளுடைய பக்தகோடிகளில், முன்னால் பிரதமர் இந்திராகாந்தி உள்ளிட்ட பலரும் உள்ளடக்கம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர் மீது ஆத்மார்த்தமான பக்தி கொண்ட மிக சாமானிய மனிதர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் உண்டு. அப்படிப்பட்ட எனக்குத் தெரிந்த ஒரு எளிமையான பெண்மணியைப் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

அவர்தான் காஞ்சிபுரத்தில் வசித்த சிவா பாட்டி என அழைக்கப்பட்ட முதிய பெண்மணி. மஹா பெரியவாள், அதிகாலையில் எழுந்து, நீராடி, காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்வது வழக்கம். அவர் செல்லும் வழியில் ஒரு தெருவில் வசித்தவர் சிவா பாட்டி. அவர் தினமும் அதிகாலையில் எழுந்து, மஹா பெரியவாள் செல்லும் வழியில் கோலமிடுவார். காஞ்சிபுரத்துக்கு சென்று கதை சொல்லிவிட்டு, இரவு அங்கேயே தங்க நேரும் சமயங்களில், அதிகாலையில் நாங்களும் எழுந்து, குளித்துவிட்டு, மஹா பெரியவாள் காமாட்சி கோவிலுக்கு செல்லும்போது, பின்னாலேயே சென்ற பாக்கியம் உண்டு. அப்போது, சிவா பாட்டி இட்ட கோலங்களை பார்த்திருக்கிறேன். மஹா பெரியவாளால், அறுபத்து நாலாவது நாயன்மார்” என்றே சொல்லி, ஆசீர்வதிக்கப்பட்டவர் அந்தச் சிவா பாட்டி.

மஹா பெரியவாளை முதல் முறையாக தரிசிக்கச் சென்றபோது, அதிகப்பிரசங்கித்தனமாக, என்னை நானே அறிமுகம் செய்துகொண்டேன் என்றாலும், நாளடைவில், அவர் முன் மௌனம் காத்து, அவர் பேசுவதை – என்னிடம் பேசுவது மட்டுமில்லாமல், மற்றவர்களோடு பேசுவதையும் கேட்பதுதான் ஞானம் என்பதை உணர்ந்து கொண்டேன். எனவே, அவர் முன் நின்றுவிட்டால், காதுகள் கூர்மையாகிவிடும்; வாய் மௌனமாகிவிடும்; மனமோ அமைதியாகிவிடும்.

அது எனக்கு ஆத்ம பலத்தைக் கொடுப்பதையும் உணரத் தொடங்கினேன்.

கடந்த வருடம் மியூசிக் அகாடமி ஏற்பாட்டில், சங்கீத கலாநிதி விருது பெற்ற சஞ்சய் சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, என்னிடம், வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளில், வெகு சரளமாக பல விஷயங்களைச் சொல்லுகிறீர்கள்! கதைக்கு தொடர்புடைய விஷயங்கள் மட்டுமில்லாமல், நேரடியாக தொடர்பில்லா விஷயங்களைக் கூட, சாதுரியமாக நுழைத்து, மக்களுக்குச் சொல்கிறீர்களே! இது எப்படி?” என்று ஒரு கேள்வி கேட்டார்கள். அவர்களுக்கு சொன்ன பதில் என்ன தெரியுமா? நான் மெத்தப் படித்த பண்டிதன் இல்லை. ஆனாலும், என் பேச்சாற்றலுக்குக் காரணம், சிந்தனை ஓட்டத்துக்குக் காரணம், புதிய விஷயங்களை தங்கு தடையில்லாமல் சொல்வதற்குக் காரணம் நான் மஹா பெரியவாள் முன்பு மௌனமாக இருந்ததுதான். அங்கே மௌனமாக இருந்தால், நிறைய கற்றுக் கொள்ளலாம்; அறிவு விருத்தியாகும்; மனசு விசாலப்படும்; அதாவது அங்கே மௌனமாக இருந்தால், இங்கே பேசலாம்”

ஒரு முறை காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நூறு ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு திருமணம் செய்துவைக்க காஞ்சி மடத்திலிருந்து ஏற்பாடு செயப்பட்டிருந்தது. அங்கே எனக்கு கதை சொல்ல உத்தரவானது. கதை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, மஹா பெரியவாள் வந்து விட்டார். அவரை நமஸ்கரித்துவிட்டு, கதை சொல்ல ஆரம்பித்தேன். கதை சொல்கிறபோது, நான் குறிப்பிட்ட ஒரு விஷயம் ஒரு சர்ச்சையை ஏற்பட்டுவிட் டது. தேசத்தைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தபோது,

பாரதம் என்பது பாரினிலே உயர் பண்புத்திருநாடு

விரோதி என்றாலும் விருந்திடவே தேடும் புராதன நன்நாடு”

என்று ஆரம்பிக்கும் பாடல் மூலமாக பாரத தேசத்தின் பெருமையைச் சொல்லும்போது, ஒரு நாட்டின் வளம் என்பது அங்கே உள்ள இயற்கை வளமும், பூகோள வளமும் மட்டுமில்லை; இங்கே பிறந்த மேதைகளும் கூட தேசத்துக்கு வளம்தான்” என்று குறிப்பிட்டேன்.

அதில் இந்த தேசத்துக்குப் பெருமை சேர்த்த மேதைகளுடைய பெயர்களை பட்டியல் போட்டுக்கொண்டே வந்தேன். உலகப் பொது மறை கொடுத்த வள்ளுவர், கம்பர், அருள் பிரகாச வள்ளலார், மஹா கவி பாரதியார் என்று பெரிய பட்டியலை சொல்லிக் கொண்டே வந்து, கடைசியாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பெயரையும் சொன்னேன். என்.எஸ்.கே. பெயரைச் சொன்னது, கோவில் தக்காரை கோபப்படுத்திவிட்டது. நிகழ்ச்சி முடிந்ததும், அதெப்படி, கோவில் நிகழ்ச்சியில், நாஸ்திகரான என்.எஸ்.கிருஷ்ணனைப் புகழ்ந்து சொல்லலாம்?” என்று கேட்டார்கள். நான், நான் எப்போதும் மனசில் பட்டதை, தயக்கமில்லாமல் சொல்லிவிடுவேன்; அவர் பெயரை சொன்னதற்கு உள்நோக்கம் ஏதுமில்லை” என்று சொன்ன விளக்கத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

மறுநாள் மஹா பெரியவாளை தரிசிக்க மடத்துக்குச் சென்றபோது, சற்றும் எதிர்பாராத வகையில் அவராகவே, நேத்து என்.எஸ். கிருஷ்ணன் பத்தி நீ சொன்னயோல்லியோ! அவர் கர்ணன் மாதிரி!” என்று சொன்னபோது, ‘சினிமாவில் நகைச்சுவை நடிகரான, பகுத்தறிவுக் கொள்கைக்காரரான என்.எஸ். கிருஷ்ணனை, மஹா பெரியவாள் மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் ஒரு நல்ல மனிதராக கர்ணனாகவே பார்க்கிறாரே!’ என்று நான் மிகுந்த வியப்புக்கு ஆளானேன்.

(அருள் பொழியும்)

S. Chandramouli

எழுத்தாக்கம் : எஸ். சந்திரமௌலி

–நன்றி கல்கி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s