நருக் மொருக் நேந்திரம் சிப்ஸ்..!


மதுரை இட்லி, விருதுநகர் வீச்சு பரோட்டா, திருநெல்வேலி அல்வா… அப்படியே கொஞ்சம் தெற்கு நோக்கி வந்தா நாகர்கோவில்… ஒவ்வொரு ஊருக்கும் ஓர் அடையாளம் இருக்கே, நாகர்கோவிலுக்கும் இருக்குமேன்னு யோசிச்சப்போதான், அந்த நேந்திரம் பழ சிப்ஸ் நினைவுக்கு வர, அதுல என்னதான் ஸ்பெஷல்னு தெரிஞ்சுக்கலாம்னு கிருஷ்ணன் கோயில்ல இருக்கிற ஸ்ரீ துர்கா ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் சுரேஷை சந்தித்தோம்…

‘சொல்லுங்கண்ணே இந்த ஊர் சிப்ஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?’ என்று கேட்டு முடிப்பதற்குள்…

கடைக்கு வந்தவர், ‘அண்ணே, ஒரு கிலோ சிப்ஸ் கொடுங்கண்ணே…’ன்னு கேட்க, இந்த சிப்ஸ்ல ஏதோ ஸ்பெஷல் இருக்குன்னு அழுத்தமாக எனக்குத் தோன்றியது…

அண்ணே ஒவ்வொரு ஊர்லயும் ஒரு ஸ்பெஷல் கண்டிப்பா இருக்கும். அதுபோல தான் இந்த ஊர்ல நேந்திரம்பழ சிப்ஸ். அதுக்கு முதல் காரணமே இந்த ஊரோட மண்வாசந்தான். அதுக்கப்புறமா எப்படி செய்யறாங்கங்கிறதையும் பொருத்து இன்னும் சுவையாவும் இருக்கும்…” என்றவர் பேசியபடியே ஒரு கிலோ சிப்ஸை பேக் செய்து கொடுத்தார்.

சிப்ஸைப் பொருத்தவரைக்கும் ஏத்தங்காதான் முக்கிய மூலப் பொருள். இந்த ஊர்ல விளையற ஏத்தங்காய் கன்னை வேற எங்கு கொண்டு போய் நட்டாலும் இங்கவுள்ள காயோட டேஸ்ட் வரவே வராது. அது ஒரு விதத்துல ப்ளஸ் பான்ட். அதோட நிறைய இடங்கள்ல ஏத்தங்காயோட தடிமன் குறைவா இருக்கும். சந்தையில எங்களுக்குன்னு பிரத்யேகமா, சைஸ்ல பெரிதா இருக்கற ஏத்தங்காகளைத்தான் சப்ளை பண்ணுவாங்க. இதோட ரேட்டும் கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும். ஆனால் சூப்பர் டேஸ்டோட சீக்ரெட் இந்த சைஸ்லயும் இருக்கு” என்றவரிடம்…

‘இந்த சுவையான நேந்திரம்பழ சிப்ஸ் செய்முறைப் பக்குவம் எப்படின்னு சொல்லுங்களேன்?’ என்றதும்…

டேஸ்ட்டான சிப்ஸ் செய்யறதுல பெரிய வித்தையெல்லாம் இல்ல. நல்லவிதமான பெரிய ஏத்தங்காகளைத் தேர்ந்தெடுத்து அதன் தோலைச் சீவிகாகளைத் தனியா ஒரு கூடைல சேகரிச்சிடுவோம். அப்புறமா காகளை ரொம்ப மெல்லிசா சீவிப் போடாம, மீடியமான தடிமனில் சீவிப் போடறதால சாப்பிடுவதற்கு ரொம்ப மெல்லிசாவும் இல்லாம, ரொம்ப கடினமாகவும் இல்லாம சிப்ஸ் ஒரு சாஃப்டான நிலையில் கிடைக்கும்.

பொதுவா இப்படி சீவப்பட்ட காய்களை ஒரே அடுப்பிலேயே வேகப்போட்டு எடுத்துடுவாங்க. ஆனா நாங்க சீவிப்போடுகிற காகளை இரண்டு விதமான அடுப்பில் வேகவைக்கிறோம். முதல் அடுப்பில் மிதமான சூட்டில் ஓரளவு வரை வேக வெச்சிடுவோம். அப்புறமா, அதிக வெப்பநிலை கொண்ட அடுத்த அடுப்பில் தட்டி, அந்த அடுப்பின் சூட்டின் அளவு மாறாதபடி அப்பப்போ தண்ணீர் தெளிச்சு சூட்டின் அளவைச் சமநிலையில் வெச்சுட்டு வேகவைப்போம். இப்படிச் செய்தால், அந்தச் சிப்ஸில அதிகமான நரம்புகள் புடைக்காம, பார்க்கறதுக்கு நல்லா இருக்கும். அப்புறமா ஒரு கூடையில கொட்டி, எண்ணெய் வடியும் வரை வெச்சிருந்து, அதன் பிறகு பாயில் அதைக் குவிந்திருக்கறபடி கொட்டிவிடுவோம். அப்படிக் குவிக்கும்போது வேகாமல் இருக்கிற சில சிப்ஸ்களும் அந்தச் சூட்டிலேயே வெந்துடும்.”

‘அடுத்து, மிளகாய்ப் பொடியோட மிக்ஸிங் தானா?’ என்று நாம் கேட்டதும்,

அவசரப்படாதீங்க… சூட்டோடு பொடிகளைத் தூவி விரவும்போது பொடி எல்லாமே சிப்ஸில் ஒட்டிக்கொள்ளும். அதனால சிப்ஸோட சூடு தணியும் வரை அதைப் பரத்திவிட்டு பிறகுதான் பொடிகளைத் தூவி விரவுவோம். அதுல மிக்ஸ் பண்ற பொடின்னு பார்த்தீங்கன்னா, மிளகாய்ப் பொடிதான் ஹைலைட்னு சொல்லவே முடியாது. மிக்ஸிங்ல அதோட அளவு கம்மியாதான் இருக்கும். சிப்ஸோட டேஸ்ட்டக் கொடுக்கறதுல நல்ல மிளகுத் தூளுக்குத்தான் முதலிடமே. நல்ல மிளகுத்தூள், பெருங்காயம், வத்தல் பொடி, உப்பு இவைகளைத் தான் மிக்ஸ் பண்ணி பொடியா பயன்படுத்துறோம். 400 கிராம் வத்தல் பொடிக்கு 700 கிராம் நல்ல மிளகுப் பொடிங்கற அளவுல கலந்து போடும்போது அதோட டேஸ்ட் அதிகமா இருக்கும்” என்று அவர் சொல்லும்போதே நாக்கில் எச்சில் ஊறியது.

‘இவ்வளவு டேஸ்ட்டா இருக்கற இந்த சிப்ஸ்ஸை எத்தனை நாள் வரைக்கும் வெச்சிருந்து சாப்பிட முடியும்?’

பொதுவா, தேங்கா எண்ணெயில் பண்ற சிப்ஸ்ஸா இருந்தா டேஸ்ட் நல்லா இருக்கும். அதே நேரம் 2-3 நாள்தான் அந்த டேஸ்ட் மாறாம இருக்கும். அதுக்கப்புறம் அதோட டேஸ்ட் மாறிடும். ஆனா இது கடலெண்ணெல பண்ற சிப்ஸ். ரொம்பத் திறந்து மூடாம ஒரு டப்பால போட்டு ஃப்ரிட் ஜில வெச்சு உபயோகித்தால் 15-20 நாட்கள் வரை சுவை மாறாம அப்படியே இருக்கும். மாலை நேர ஸ்நாக்ஸா மட்டுமில்லாம சாப்பாட்டுக்குத் தொட்டுக்கவும் எங்க சிப்ஸை பலரும் உபயோகிக்கிறாங்க” என்று சொல்லி முடித்தார்.

அதுக்குள்ள, சூடான தேநீர் வந்தது. கூடவே, ஒரு தட்டுல சைட்-டிஷ்ஷா ‘சுறுசுறு மொறுமொறு’ சிப்ஸ்ஸும் வந்தது. சிப்ஸை அள்ளி வாயில போட்டு சுவைத்தபடியே, ஒரு மடக்கு தேநீரையும் உறிஞ்சினப்போ… ஆஹா… பிரமாதம்! எங்க அனுஷா மேடமுக்கும் அரை கிலோ சிப்ஸ் பேக் பண்ணிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

சந்திப்பு : மணிகண்டன்

-நன்றி மங்கையர் மலர்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s