15-நான் முகம் பார்த்த கண்ணாடிகள்… – ராஜேஷ் குமார்


2000-ம் வருஷத்தின் ஆரம்பங்களில் சிறிது கூட ஒய்வு என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காமல் எல்லா வார இதழ்களிலும் மாற்றி மாற்றி தொடர்கதைகளையும் மாத நாவல்களையும் எழுதிக் கொண்டு இருந்தேன். உறவினர் வீட்டின் முக்கியமான நிகழ்ச்சிகளுக்குக் கூட என் மனைவியை மட்டுமே அனுப்பி வைத்து நேரில் பார்க்கும்போது ‘ஸாரி’ கேட்டு உறவுகளுக்கு இடையே நட்பை மெய்ன்டைன் செய்துக் கொண்டிருந்தேன்.

என்னுடைய மூத்தமகன் கார்த்திக்குமார் B.E, MBA படிப்புகளை முடித்து ஒரு வங்கியில் வேலைக்குச் சேர்ந்த நேரம் அது. என் இளைய மகன் ராம்பிரகாஷ் B.E படிப்பை முடித்துவிட்டு பி.எஸ்.ஜி.கல்லூரியில் M.E வகுப்பில் சேர்ந்து படிப்பைத் தொடங்கியிருக்க நான் எழுத்துப் பணியை வழக்கம் போல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

2002-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு காலை நேரம். நாவல் ஒன்றை எழுதுவதில் தீவிரமாய் இருந்த என்னை என் மனைவியின் குரல் கலைத்தது.

“என்னங்க!”

“சொல்லு ”

“உங்களைப் பார்க்க ஒருத்தர் வந்து வெயிட் பண்ணிட்டிருக்கார்”

“யார்ன்னு கேட்டியா?”

“கேட்டேன். எஸ்.கே.பி.ன்னு சொல்லுங்க தெரியும்ன்னு சொன்னார் ”

“எஸ்.கே.பி. யா….! அப்படி யாரையும் எனக்குத் தெரியாதே” குழப்பமாய்த் தாடையைத் தேய்த்தேன்.

“போய்ப் பாருங்க….போய்ப் பார்த்தால்தானே யார்ன்னு தெரியும்!”

மாடியிலிருந்து இறங்கி கீழே வந்தேன். சோபாவில் ஒரு வயதானவர் உட்கார்ந்திருந்தார். பளீர் வழுக்கை. காதோரங்களில் மட்டும் நரைமுடி தெரிந்தது. தளர்ந்த உடம்பு.

“வாங்க வணக்கம்….!” சொல்லிக் கொண்டே அவருக்கு எதிரில் போய் உட்கார்ந்தேன்.

அவர் சிரித்தார்.

“என்ன ராஜகோபால்….! நீ ராஜேஷ்குமாராய் மாறினதும் உனக்கு என்னை அடையாளம் தெரியலை போலிருக்கு!”

நான் குழப்பமாய் அவருடைய முகத்தைப் பார்த்தேன்.

“ஸாரி ! நீங்க யார்ன்னு எனக்குத் தெரியலையே?”

“நான் எஸ்.கே.பி….”

“எஸ்.கே.பி.ன்னா ?”

“அடப்பாவி! நான் எஸ்.கே. பழனிசாமிடா. உனக்கு பி.எஸ்.ஸி.யில் க்ளாஸ்மேட் ”

என் மூளையில் சுரீர். பளிச்சென்று அந்த பிளாஷ்பேக் நினைவுக்கு வந்தது.

‘1968-ல் கோவை அரசினர் கல்லூரிக்கு பைக்கில் தலை கொள்ளாத கேசத்தோடு ஆர்ப்பாட்டமாய் வரும் எஸ்.கே.பழனிச்சாமியா இவன்?’

நான் எஸ்.கே.பி.யை அதிர்ச்சியோடு பார்த்தேன். அவன் தோளைத் தட்டினேன்.

“டேய்..! எஸ்.கே.பி..! என்னடா 50 வயசுக்குள்ளே காந்தி தாத்தா மாதிரி ஆயிட்டே?”

“என்ன பண்றது! அப்பாவோட ஜீன் வழுக்கை, சுகர், பி.பி, மூணும் கைகோர்த்துகிட்டா உடம்பு என்னத்துக்கு ஆகும்? சரி, கல்யாணத்துக்கு வந்து சேரு,” சொல்லிக்கொண்டே எஸ்.கே.பி தன் கையில் வைத்து இருந்த பையைப் பிரித்து ஒரு கல்யாண அழைப்பிதழை எடுத்து நீட்டினான்.

“யார்க்கு கல்யாணம்?”

“என்னோட மகனுக்கு! பி.ஈ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சுட்டு ஒரு ஐ.டி. கம்பனிக்கு வேலைக்குப் போயிட்டிருக்கான். ரெண்டாவதா ஒரு பொண்ணு. காலேஜ்ல பி.காம் பண்ணிட்டிருக்கா.”

நான் எஸ்.கே.பி.யையேப் பார்த்தேன்.

அவன் என்னுடைய கைகளைப் பற்றிக் கொண்டான்.

“ராஜகோபால்! இன்னிக்கு நீ தமிழ்நாட்ல ஒரு பெரிய எழுத்தாளன். செலபரேட்டி. நான் சாதாரண ஒரு மிடில் கிளாஸ் பேமிலிமேன். என்னோட வீட்டுக் கல்யாணத்துக்கு நீ வருவியா?”

நான் அவனை நெருங்கி உட்கார்ந்து தோளை அணைத்துக் கொண்டேன்.

“என்ன….எஸ்.கே.பி… இப்படிக் கேட்டுட்டே….? நான் ராஜகோபாலாய் இருந்தாலும் சரி, ராஜேஷ்குமாராய் இருந்தாலும் சரி, என்னிக்குமே நான் உன்னோட நண்பன்தான். கண்டிப்பாய் உன் பையன் கல்யாணத்துக்கு வர்றேன். நீ இவ்வளவு தூரம் வந்து கல்யாணத்துக்கு கூப்பிட்டதே எனக்குப் பெரிய சந்தோசம்.!” காப்பி சாப்பிட்டு மேலும் ஒரு அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு எஸ்.கே.பி. புறப்பட்டுப் போனதும், எனக்கும் ரொம்பவும் வயதாகிவிட்டது போன்ற உணர்வு. கண்ணாடி முன் வந்து நின்றேன். அதுநாள் வரைக்கும் என்னுடைய கண்களை ஏமாற்றிக் கொண்டிருந்த கண்ணாடி இப்போது என் முகத்தில் இருந்த சில உண்மைகளைச் சொல்ல ஆரம்பித்தது. முகத்தை அப்படியும் இப்படியுமாகத் திருப்பி காலம் செய்து இருக்கும் வேலைகளை வேவு பார்த்தேன்.

“கண்ணாடி முன்னாடி நின்னுகிட்டு அப்படியென்ன அஷ்டகோணலாய் ஒரு சேஷ்டை?”

என் மனைவியின் குரல் முதுகுக்குப் பின்னால் கேட்டது திரும்பினேன்.

“ஒண்ணுமில்லை,” என்று சொல்லிவிட்டு நான் மௌனமாய் மாடிப்படியேறிப் போக மனைவி என்னைப் பார்த்த பார்வையில் ஒரு வித கேலி தெரிந்தது.

***

என்னுடைய கல்லூரிகால நண்பன் எஸ்.கே.பி வந்துவிட்டு போனதிலிருந்து எனக்குள் ஒரு ரசாயன மாற்றம். என் பார்வையின் கோணங்கள் சில டிகிரிகள் மாறியிருப்பது எனக்கே தெரிந்தது. டார்க் கலர் சர்ட்டுகளைத் தவிர்த்துவிட்டு வெளிர் நிறங்களில் அணிய ஆரம்பித்தேன். கோவிலுக்கு வேஷ்டி கட்டிக் கொண்டு போனேன்.

என் இரண்டு மகன்களும் என் முதுகுக்குப் பின்னால் ரகசியமாய்ப் பேசிக் கொண்டார்கள்.

“என்னடா! அப்பா… இப்படியாயிட்டார் ?”

“அதான் எனக்கும் புரியலை. மொட்டை மாடியில் கிரிகெட் விளையாடக் கூப்பிட்டா வரமாட்டேன்னு சொல்லிட்டார்.”

“பூஜை ரூம்ல நிறைய நேரம் இருக்கார். போன வாரம் நானும் அப்பாவும் தண்டு மாரியம்மன் கோவயிலுக்குப் போனோம். எனக்கு ஏன்டா போனோம்ன்னு ஆயிடுச்சு!”

“ஏன் ?”

“ஒவ்வொறு சாமி சிலைக்கும் முன்னாடி நின்னு அஞ்சு நிமிஷதுக்கு குறையாம முணு முணுன்னு ஸ்தோத்ரம் சொல்ல ஆரமிச்சிட்டார் ”

என் மனைவியின் மனத்தாங்கல் வேறு மாதிரியாக இருந்தது. ஒரு மாலை நேர வாக்கிங் போகும்போது எனக்கும் என் மனைவிக்கும் நடந்த உரையாடல் இது.

“என்ன காசியா…,ரிஷிகேஷமா?”

“நீ என்ன கேட்கிறே?”

“அந்த ரெண்டு இடத்துல எங்கே சாமியாராய்ப் போக உத்தேசம்?”

“நான் எதுக்காக சாமியாராய்ப் போகணும்?”

“பின்னே ஏன் இப்படி நடந்துக்கிறீங்க?”

“எப்படி…?”

“எதோ கவர்ன்மென்ட் உத்தியோகத்திலிருந்து ரிடையரான பர்சன்ஸ் நடந்துகிற மாதிரி ! ”

“எனக்கு வயசாகலையா என்ன?”

“வயசானா என்ன….? இதோ பாருங்க வயசுங்கிறது உடம்புக்கு மட்டும்தான். மனசுக்குக் கிடையாது ”

“எனக்கும் அது நல்லாவே தெரியுது . காலமும் இயற்கையும் நமக்கு கொடுக்கிற பதவி உயர்வுகளை நாம வேண்டாம்ன்னு சொல்ல முடியாது. பத்து வயசுல சிறுவன், இருபத்தஞ்சு வயசுல இளைஞன், அப்புறம் ஒரு பெண்ணுக்கு கணவன், அதுக்கப்புறம் குழந்தைகளுக்கு அப்பா, கடைசில பேரக் குழந்தைகளுக்கு தாத்தா. இதெல்லாம் நாம கேட்காமலே கிடைக்கக் கூடிய பதவி உயர்வுகள். இப்ப நீயும் நானும் எந்த ஸ்டேஜில் இருக்கோம்ன்னு தெரியுதா?”

“தெரியுது! ஒரு பொண்ணுக்கு நான் மாமியாராகவும் நீங்க மாமனராகவும் இருக்க வேண்டிய ஸ்டேஜ்.”

“அதுக்கு வேண்டிய முயற்சிகளை எடுத்துக்க வேண்டாமா…? என்னோட ஃப்ரண்ட் எஸ்.கே.பி. நம்ம வீட்டுக்கு வந்துட்டுப் போனதிலிருந்து நான் எழுத்தாளன் என்கிற கிரீடத்தைக் கழற்றி வெச்சுட்டு குடும்பஸ்தன் என்கிற அங்கவஸ்திரத்தை எடுத்து தோளில் போட்டுகிட்டேன். இப்பெல்லாம் கல்யாண வீட்டுக்குப் போனாலும் சரி, கோயிலுக்குப் போனாலும் சரி, அழகான இருபது வயசு பெண்களைப் பார்க்கும் போது நம்ம வீட்டுக்கு வரப் போகிற மருமகப் பொண்ணு இப்படியிருப்பாளோன்னு நினைக்கத் தோணுது. ஒரு வயசு, ரெண்டு வயசு குழந்தைகளைப் பார்க்கும்போது நமக்குப் பிறக்கப் போகிற பேரன் பேத்திகள் ஞாபகம் வருது. உடம்புக்குதான் வயசு, மனசுக்குக் கிடையாதுன்னு நீ சொன்னே. அது தப்பு. மனசுக்கும் வயசாகணும். அப்பத்தான் ஐம்பது வயசுக்கு மேல் வாழ்க்கை இனிப்பாய் இருக்கும்… ”

என்னை என் மனைவி பார்த்த பார்வையில் ஒரு பிரமிப்பு தெரிந்தது. .

“அடேயப்பா! உங்களோட எழுத்து என்கிற கற்பனை உலகத்தையும் கடந்து உங்களுக்குள்ளே இவ்வளவு ஆசைகள் இருக்கா?”

“ராஜேஷ்குமார் என்கிற எழுத்தாளனுக்கு இந்த சமூகத்துல வேறு வேறு ஆசைகள் இருக்கலாம். ஆனால் நான் இப்ப சொன்னதெல்லாம் ராஜகோபால் என்கிற ஒரு குடும்பஸ்தனின் நியாயமான ஆசைகள்”

“நாளைக்கு என்ன கிழமை?”

“புதன்கிழமை”

“அஷ்டமி, நவமி, கரி நாள் எதுவும் கிடையாதே?”

“கிடையாது. நாளைக்கு நல்ல முகூர்த்த நாள், பஞ்சமி, வளர்பிறை. எதுக்காக கேட்கிறே?”

“நாளையிலிருந்து நம்ம பெரிய பையனுக்கு மும்முரமாய் பெண் பார்க்கப் போறோம் ”

“எஸ்.கே.பி. வாழ்க!” என்றேன்.

****

என்னுடைய கல்லூரி கால நண்பர்களில் வெகு சிலரை மட்டும் நான் இப்போதும் அரிதாக சந்தித்து வருகிறேன். அப்படி அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் ஏதாவது ஒன்றை, எனக்குத் தெரியாத விஷயத்தை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்கிறேன். சிலர் இன்னமும் டாக்டர்களாக பொறியாளர்களாக பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

இத்தனை பேர்களைச் சந்தித்தாலும் என்னுடைய அடிமனதில் பிரபாகரன் என்கிற அந்த நண்பனைப் பற்றிய நினைவுகள் வெகு ஆழமாய் இருந்ததால் அவனைச் சந்திக்க முயற்சிகள் எடுத்து வந்தேன். இதில் நான் இவ்வளவு ஆர்வம் எடுத்துக்கொள்ளக் காரணம் ‘எனக்குக் கதை எழுதத் தெரியும் !’ என்று தமிழ்ப் பேராசிரியரிடம் போட்டுக் கொடுத்து அவரும் அதை நம்பியதின் விளைவுதான் நான் எழுத்தாளனாக பரிமாணம் பெற்றது.

அந்த பிரபாகரன் இப்போது எந்த ஊரில் இருப்பான் என்பதை தெரிந்துகொள்ளும் முயற்சியில் நான் ஈடுப்பட்டு இருந்தபோது சில வருடங்களுக்கு முன்பு அந்தப் பிரபாகரனுக்கு வெகு நெருக்கமாய் கல்லூரி நாட்களில் நண்பனாய் இருந்த ஜோதிவேல் என்பவரை எதேச்சையாய் சந்திக்க நேர்ந்தது. அவரைப் பார்த்ததுமே எனக்குள் சந்தோசம் கரை புரண்டது.

ஆர்வமாய்க் கேட்டேன்.

“பிரபாகரன் இப்போ எந்த ஊர்ல என்ன பண்ணிட்டிருக்கான்?”

ஜோதிவேல் என்னையே மௌனமாய்ப் பார்த்தான்.

“என்ன பேச்சையே காணோம்?”

அவர் கம்மிப்போன குரலில் சொன்னார்.

“பிரபாகரன் இப்போ உயிரோட இல்ல!”

நான் அதிர்ந்தேன்.

“ஏ…ஏ…ஏன்….என்னாச்சு?”

“நாலு வருஷத்துக்கு முன்னாடி பெங்களூர் ரயில்வே ஸ்டேஷனில் ரயிலிலிருந்து கீழே இறங்கும் போது தவறி விழுந்து ஸ்பாட்லயே போயிட்டான்!”

ஜோதிவேல் சொன்ன அந்த அதிர்ச்சியான செய்தியிலிருந்து மீள எனக்கு பல மாதங்கள் தேவைப்பட்டது.

கல்லூரி நாட்கள் இனிமையானவை. அந்த நினைப்பிலேயே நான் இருந்து கொள்ள வேண்டும்.

அதுதான் சுகம்.

இப்போதெல்லாம் என்னுடைய கல்லூரி கால நண்பர்களைச் சந்திக்க சிறிது தயக்கமாய் இருக்கிறது. அவர்கள் நல்ல செய்திகளைச் சொல்லவேண்டுமே என்று கவலையாகவும் இருக்கிறது!

– தொடரும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s