2-அருளே அறிவே அமுதே! – சுப்பு ஆறுமுகம்


இதன் முந்தைய பகுதி…

காஞ்சிபுரத்தில் நடந்து கொண்டிருந்த ஆஹம, சிற்ப சதஸில், மேடையை நோக்கியபடி மஹா சுவாமிகள் அமர்ந்திருக்க, நான் மேடையில் இருந்தபடியே அவரை வணங்கியதற்கு ஒரு விளக்கம் கொடுத்தேன்.

“கோபுரத்தை நாம் தூரத்தில் இருந்துதான் கும்பிடுகிறோம். கிட்டே போய் தொட்டுக் கும்பிடுவதில்லை; அதே போலத்தான் இங்கிருந்தபடியே பெரியவாளை மனதார தொழுகிறேன்” என்று சொல்லி, அவர் அமர்ந்திருந்த திசை நோக்கி கைகளைக் கூப்பி வணங்கினேன். அடுத்த கணம், “தந்தனத்தோம் என்று சொல்லியே…” என்று ஆரம்பித்து வில்லில் நாவுக்கரசரது கதையைச் சொல்லத் தொடங்கினேன்.

கதை சொல்லும்போது ஒரு பக்கம் காமாட்சியும், மறுபக்கம் பெரியவாளும் இருப்பதாக நினைத்துக் கொண்டேன். அப்போது கடவுளிடம் வேண்டியதாக ஒரு சிந்தனை. “அன்பர்களே, கட வுளிடம் நாம் எதையும் கேட்கக்கூடாது. கடவுள் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார். காமாட்சி தாயே, பக்தர்கள் உன்னை வணங்க வரும்போது ஏதேதோ கொண்டுவந்து சமர்ப்பணம் செய்கிறார்கள். நான் உனக்காகக் கொண்டு வந்திருப்பது என்ன தெரியுமா? இந்தச் சமூகத் தைப் பற்றிய, இந்த நாட்டைப் பற்றிய, இந்த உலகத்தைப் பற்றிய கவலைகளைத்தான். பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் உனது இடது கால் பெருவிரலுக்கு அபாரமான சக்தி உண்டு. உன்னுடைய அந்தக் கால் பெருவிரலால் நான் உன் காலடியில் வைத்த ‘கவலை’ என்பதன் இடையில் இருக்கும் ‘வ’னாவை மட்டும் அழித்துவிடு தாயே! அதை நீ அழித்தபின் படித்துப் பார்த்தேன். ‘கலை’ என்று வரும். அந்தக் கலைகள் மூலமாக இந்த உலகம் வளம் பெறட்டும்” என்று குறிப்பிட்டேன். மொத்தத்தில் அன்றைய நிகழ்ச்சி மனத்துக்கு நிறைவாக அமைந்தது.

மறுநாள் சென்னைக்குப் புறப்படும் முன், மஹா சுவாமிகளைத் தரிசிக்கச் சென்றேன். வணங்கி எழுந்தபோது அந்த மஹான் சொன்ன வார்த்தைகள்: “வ’னாவை அழிச்சுட்டாடா!” அவர் சொன்னதை கற்பூரம் மாதிரி சட் டென புரிந்து கொள்ளாவிட்டாலும், ஒரு சில வினாடிகளில் புரிந்து கொண்டேன். வார்த்தைகள் ரத்தினச் சுருக்கமாக வந்தாலும், அவை என்னை மெய்சிலிர்க்க வைத்தன.

“லோகத்துல இருக்கிற எல்லார் கவலைகளிலும் உள்ள ‘வ’னாவை யும் அழிக்கணும்” என்று நான் சொல்ல, “லோகக்ஷேமம் பத்தி பேசறையா? கோவில் இருக்கிற எல்லா ஊர்லயும் உன்னைக் கூப்பிடுவா. நீ போய் பாடு! கோவில் இல்லாத ஊர்ல கூப்பிட்டாலும் அங்கேயும் நீ போய் பாடு! அங்கயும் கோவில் வந்துடும்டா!” என்று அருள் புரிந்தார். நெகிழ்ந்து போய் நின்றேன்.

ஒரு நாள், மஹா சுவாமிகளைத் தரிசிக்கச் சென்றிருந்தபோது, “நீ நெஜமா சிரிக்கறடா!” என்றார். நான் அப்பாவியாக, குழந்தைபோல “பொய்யா சிரிக்கிறவங்ககூட உலகத்துல இருப்பாங்களா சாமி?” என்று கேட்டுவிட்டேன்.

பெரியவாள் தொடர்ந்தார், “நேத்து வந்து பார்த்தப்போ என்ன சொன்னே? எதுக்கு காஞ்சிபுரத்துக்கு வந்தேன்னு சொன்னே?”

“என் டாக்டரோட கம்பவுண்டர் வீட்டுக் கல்யாணத்துக்கு வந்தேன்னு சொன்னேன்.”

“அப்புறம் என்ன சொன்னே? அப்படியே பெரியவாளைத் தரிசனம் பண்ண வந்தேன்னு சொன்னியோலியோ?” என்றார்.

“ஆமாம்.”

“எல்லாரும் அப்படி சொல்ல மாட்டா! பட்டுப்புடைவை வாங்க வந்தவா கூட பரமாச்சாரியாளைப் பார்க்கணும்னு வந்ததா சொல்லுவாடா. நீ நெஜத்தை பேசுவே! நெஜமா சிரிப்பே! உனக்கு ஒரு குறையும் வராது!” அந்தக் கணத்தில், இப்பிறவி எடுத்ததன் முழுப் பயனையும் பெற்றுவிட்டாற்போல உணர்ந்தேன்.

வில்லுப்பாட்டில் ஆதிசங்கரர் கதையைச் சொல்ல உத்தரவானபோது, அவரே கதையை எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்றும் அருள்மொழிந்தார். “காலடியில கதை ஆரம்பிக்குமே! அதை எப்படிச் சொல்லுவே?” என்று கேட்டார். “திருவனந்தபுரம்னு ஆரம்பிச்சா சரியா இருக்காது. திருவாங்கூர் சமஸ்தானம்னு ஆரம்பிக்கலாமா?” என்று நான் கேட்க, அவரிடம் அமைதி. அவருக்கு அதில் சம்மதமில்லை என்று புரிந்து கொண்டு, “சேரநாடுன்னு சொல்லலாமா?” அதற்கும் ஒப்புதல் கிடைக்கவில்லை. அடுத்து என்ன சொல்வது என்ற குழப்பத்தோடு நிற்கிறேன். “பரசுராம க்ஷேத்திரம்னு ஆரம்பி” அவரது ஆழ்ந்த சிந்தனை என்னை ஆச்சரியப்படுத்தியது.

ஒரு நாள் மாலை வேளையில் பெரியவாளைத் தரிசிக்கச் சென்றேன். கிணற்றடியில், சிவஸ்தானம் என்று நினைவு. கிணற்றின் அந்தப் பக்கத்தில் அவர். இந்தப் பக்கம் நான். பக்கத்தில் இருப்பவரையே தெளிவாகக் காணமுடியாதபடி இருள். அவர் கேட்க, நான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

திடீரென்று, “ஏண்டா! கச்சேரி பண்ணறா மாதிரி பேசிண்டே இருக்கியே! நான் இங்கே இருக்கறது நோக்குத் தெரியறதாடா?”

பெரியவாள் உருவம் தெளிவாகத் தெரியாத சூழ்நிலையில், “ஓ! நல்லா தெரியுதே!” என்று நான் பொய் சொல்லமுடியாது; அதே சமயம் இத்தனை நேரம் சரளமாக உரையாடியபின்பு, “தெரியவில்லை” என்றும் பதில் சொல்ல என் மனம் இடம் தரவில்லை.

“நான் சென்னைல இருந்தாலே என் கண்ணுக்குக் காட்சி தருவீங்களே!” என்றேன். அவர் கைகளை உயர்த்தி ஆசீர்வதிப்பதை மானசீகமாக உணர்ந்தேன். “இங்க வா!” என்று அழைத்தார். கிணற்றைச் சுற்றிக் கொண்டு அந்தப் பக்கம் போனேன். பிரசாதம் கொடுத்துவிட்டு, அடுத்து இன்னும் எதையோ வழங்கினார். அது ஏதோ ஒரு படம் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.

வெளிச்சமான இடத்துக்கு வந்ததும் அது என்ன படம் என்று ஆர்வத்துடன் பார்த்தேன். மஹா பெரியவாள் சாந்த ஸ்வரூபியாக பூஜை செய்துகொண்டிருக்கும் அற்புத படம். என் வீட்டுப் பூஜை அறையில் வைத்தேன். படத்தின் முன்னே அமர்ந்தேன். என்னையும் அறியாமல் என் உதடுகள் உச்சரித்தன “ஜெய ஜெய சங்கர.. ஹர ஹர சங்கர!

S. Chandramouli

எழுத்தாக்கம்: எஸ். சந்திரமௌலி

படங்கள் : ‘கல்கி’ களஞ்சியம்

–நன்றி கல்கி

One thought on “2-அருளே அறிவே அமுதே! – சுப்பு ஆறுமுகம்

 1. nparamasivam1951 February 16, 2016 at 8:39 AM Reply

  கலப்படம் இல்லாத உண்மையான எழுத்தோட்டம். அருமை.
  ந.பரமசிவம்.

  2016-02-16 7:18 GMT+05:30 Balhanumans Blog :

  > BaalHanuman posted: ” காஞ்சிபுரத்தில் நடந்து கொண்டிருந்த ஆஹம, சிற்ப
  > சதஸில், மேடையை நோக்கியபடி மஹா சுவாமிகள் அமர்ந்திருக்க, நான் மேடையில்
  > இருந்தபடியே அவரை வணங்கியதற்கு ஒரு விளக்கம் கொடுத்தேன். “கோபுரத்தை நாம்
  > தூரத்தில் இருந்துதான் கும்பிடுகிறோம். கிட்டே போய் தொட்டுக் கும்பிட”
  >

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s