14-நான் முகம் பார்த்த கண்ணாடிகள்… – ராஜேஷ் குமார்


கோவையிலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பெரிய நாயக்கன் பாளையத்தில் செயல்பட்டு வந்த ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பி.எட் படித்து முதல் வகுப்பில் தேறி நான் வெளியே வந்ததும் எனக்கு உடனே அரசு வேலைக்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்தது .

பவானிசாகரில் இருந்த செக்கண்டரி பேஸிக் ட்ரைனிங் ஸ்கூலில் சயின்ஸ் அசிஸ்டன்ட் போஸ்ட் .ஆசிரியர் பயிற்சி என்பதால் மாணவர்களின் எண்ணிக்கை 100-க்கும் குறைவாகத்தான் இருந்தது . காலையில் ஒரு மணி நேரம், மதியம் ஒரு மணி நேரம் வகுப்பு எடுத்தால் போதும் .மற்ற நேரம் முழுவதும் ஓய்வு என்பதால் எனக்குள் உறங்கிக் கொண்டிருந்த எழுத்து ஆர்வம் மெல்ல எழுந்து உட்கார்ந்து சோம்பல் முறித்தது .

என்னுடைய மனதை எந்தெந்த நிகழ்ச்சிகள் பாதித்ததோ அவைகளை அடிப்படையாக வைத்து சிறுகதைகளாக்கி அனுப்பி வைத்தேன். அப்போதைய தினமணி கதிரில் என்னுடைய சிறுகதைகள் ஒன்றிரண்டு பிரசுரமாயிற்று. மனதுக்குள் உற்சாகம் ததும்பியது. இந்த மகிழ்ச்சி நிறைய நாட்கள் நீடிக்கவில்லை. அடுத்த ஆறு மாதத்துக்குள்ளேயே எனக்கு ட்ரான்ஸ்பர் ஆர்டர் வந்தது. பண்ருட்டிக்குப் பக்கத்தில் பாலூர் என்ற கிராமத்தில் உள்ள உயர்நிலை பள்ளியில் போஸ்டிங் .

பவானிசாகரில் நான் குடியிருந்த வீட்டைக் காலி செய்துக்கொண்டு அந்த ஊரைவிட்டு பிரிய மனமில்லாமல் பிரிந்து பாலூருக்குப் புறப்பட்டேன் .

கோவையிலிருந்து நீலகிரி எக்ஸ்ப்ரஸ் மூலமாய் புறப்பட்டு மறுநாள் காலை ஏழு மணிக்கு அரக்கோணம் வந்து சேர்ந்தேன். அரக்கோணத்தில் இருந்து பாசஞ்சர் ரயில் மூலமாய் செங்கல்பட்டு வந்து சேர்ந்து, அங்கிருந்து பஸ் மூலமாய் பயணப்பட்டு பண்ருட்டி பஸ் நிலையம் வந்து சேர்ந்தபோது மாலை ஐந்து மணி. பண்ருட்டியில் இருந்து ஒரு பாடாவதி பஸ்ஸில் பயணம் செய்து பாலூர் போய்ச் சேர்ந்தபோது ராத்திரி ஏழு மணி .

பஸ்ஸிலிருந்து லக்கேஜோடு இறங்கினேன். பஸ் என்னை மட்டும் இறக்கிவிட்டு போக நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு வெளிச்சப் பொட்டு கூட இல்லை. ஏதோ ஒரு வேற்று கிரகத்தில் இறக்கிவிட்டது போன்ற உணர்வில் எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் அப்படியே நின்றேன் .

இரண்டு கைகளிலும் லக்கேஜ்களை வைத்துக் கொண்டு அந்த இருள் சூழ்ந்த பாலூர் கிராமத்தைச் சற்று பயத்தோடு பார்த்தேன்.

ஏதோ பொட்டல் வெளி மாதிரி தெரிந்தது. ‘மினுக் மினுக்’ என்று எரியும் சோகையான தெரு விளக்குகள். மெல்ல நடை போட்டேன். சிறிது நேரம் நடந்ததும் பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் ஒரு டீக்கடை வந்தது. கடையின் முன்புறம் போட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்த நபரிடம் கேட்டேன்.

“பாலூர் இதுதானே?”

அவர் நிமிர்ந்து என்னைப் பார்த்துவிட்டு சொன்னார்.

“இது பாலூர் பிரிவு. கிராமத்துக்கு இன்னும் ஒரு பர்லாங்க் தூரம் போகணும்.”(அப்போதெல்லாம் கிலோ மீட்டர் கிடையாது. தூரத்தைக் குறிப்பிட பர்லாங்க் என்றுதான் சொல்வார்கள்) என்று சொன்னவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு “ஊருக்கு புதுசா?” என்று கேட்டார்.

நான் “ஆமா.” என்றேன்.

“எந்த ஊரிலிருந்து வர்றீங்க?”

“கோயம்பத்தூர் ”

“இந்த ஊர்ல யாரைப் பாக்கணும்?”

நான் விபரம் சொன்னேன்.அவ்வளவுதான். டீ குடித்துக் கொண்டிருந்த நபர் எழுந்து நின்று கொண்டார்.

“ஸ்கூல் வாத்தியாரா….? புதுசா வேலைக்கு சேர வந்தீங்களா தம்பி….?”

“ஆமா ”

“டீ சாப்பிடுங்க ”

“வேண்டாம்…ஸ்கூல் எங்கேயிருக்குன்னு சொல்லுங்க. நான் போய் ஹெட்மாஸ்டரைப் பார்க்கணும் ”

அவர் வழி சொன்னார். நான் கவனமாய் கேட்டுக் கொண்டு நடந்தேன். கெட்டியான இருட்டில் சிறிது தூரம் நடந்ததுமே சில குடிசைகள் பார்வைக்குக் கிடைத்தன. தெரு நாய்கள் குரைத்தன. மண் சாலையின் குறுக்கே ஓடிய சாக்கடைகளை ஜாக்கிரதையாய் தாண்டினேன். மேலும் சில நிமிட நடைக்குப் பின்பு ஒரு சிறிய கடைவீதி குண்டு பல்புகளின் மஞ்சள் வெளிச்சத்தில் சொற்ப ஜனங்களோடு வந்தது. கடை வீதியைக் கடந்ததும் ஒரு பெரிய ஆலமரத்துக்குப் பக்கத்தில் ஒரு பழைய கட்டிடம் பார்வைக்குக் கிடைத்தது.

அரசு உயர்நிலைப்பள்ளி. பாலூர்.

‘இதுவா பள்ளிக்கூடம்?’

ஓடுகள் சரிந்து காம்பெளண்ட் சுவர் இடிந்த நிலையில் சிதிலமாய் தெரிந்தது பள்ளிக்கூடம். வேறு வழியில்லை. பல்லைக் கடித்துக்கொண்டு வேறு ஊருக்கு ட்ரான்ஸ்பர் கிடைக்கும் வரையில் நாட்களை ஓட்ட வேண்டியதுதான்

பள்ளிக்கூடத்தை ஒட்டி இருந்த டைலர் கடையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வீடு எங்கே இருக்கு என்று கேட்டுக்கொண்டு அந்த சந்துக்குள் நடந்தேன். பத்து வீடுகள் தள்ளி ஹெட்மாஸ்டர் வீடு ட்யுப்லைட் வெளிச்சத்தோடு தெரிந்தது. வீட்டுக்கு முன்பு போய் நின்றேன்.

வீடு வராண்டாவில் ஒரு பெரியவர் ஈஸிச்சேரில் சாய்ந்தபடி பேப்பரை புரட்டிப்பார்த்தபடி தெரிந்தார். நான் தயக்கமாய் நுழைந்து அவருக்கு முன்பாய் போய் நின்று “வணக்கம் ” என்றேன்.

“யாரு?” அவர் நிமிர்ந்தார்.

“ஹெட்மாஸ்டரைப் பார்க்கணும். என்னோட பேர் ராஜகோபால். பி.டி அசிஸ்டன்ட் போஸ்ட்ல ஜாயின்ட் பண்ண வந்திருகேன்.”

“நான்தான் ஹெச்செம் ….” பேப்பரை மடித்து வைத்துவிட்டு எதிரில் இருந்த நாற்காலியைக் காட்டினார்.

“உட்காருங்க ”

தயக்கத்தோடு உட்கார்ந்தேன்.

“ரொம்பவும் டயர்டா இருக்கீங்க. காப்பி சாப்பிடறீங்களா?”

“வேண்டாம் ஸார் ….! டிபன் சாப்பிட்டுதான் பண்ருட்டியிலிருந்து பஸ் ஏறினேன் ”

“இதுக்கு முன்னாடி பவானிசாகர் பேசிக் ட்ரெயினிங் ஸ்கூல்ல ஒர்க் பண்ணிடிருந்தீங்க போலிருக்கு ! ”

“ஆமா ”

“உங்களுக்கு ஏன் இந்த ட்ரான்ஸ்பர் ஆர்டர் ?”

“தெரியலை ”

“இந்த 10 ஏ ஒன்ல வேலை கிடைச்சாலே இப்படிப்பட்ட எதிர்பாராத ட்ரான்ஸ்பர் எல்லாம் வரத்தான் செய்யும். அது சரி, வர்ற வழியில கிராமத்தைப் பார்த்தீங்களா….?”

“ம்….பார்த்தேன் ”

“எப்படிருந்தது ?”

“எந்த முன்னேற்றமும் இல்லாத கிராமம். பள்ளிகூடத்தையும் பார்த்தேன். ரொம்பவும் மோசமான நிலையில் இருந்தது.”

“படு மோசமான நிலையிலன்னு சொல்லுங்க ”

நான் ஒன்றும் பேசாமல் மௌனமாய் உட்கார்ந்திருந்தேன்.

சில வினாடிகள் கழிந்து அவரே பேச்சை ஆரம்பித்தார். “உங்களுக்கு என்ன வயசு?”

“இருபத்தஞ்சு ”

“கல்யாணமாயிடுச்ச?”

“இல்லை…”

“இந்த ஸ்கூலில் ஒரு பி.டி அஸிஸ்டெண்டாய் நீங்க ஜாயின் பண்றதுக்கு முன்னாடி சில விஷயங்களை யோசிச்சுப் பார்க்கணும். ஏன்னா ஜாயின் பண்ணிட்டு அப்புறமாய் வருத்தப்படக்கூடாது .”

“சொல்லுங்க ஸார் ….இங்க என்ன பிரச்னை?”

“மொதல்ல தங்கற பிரச்னை. அப்புறமாய் சாப்பாட்டுப் பிரச்னை. இந்த கிராமத்துல தங்கி நீங்க வேலை பார்க்க முடியாது. ஏன்னா இங்க அடிப்படை வசதிகளோடு வீடு வாடகைக்குக் கிடையாது. அப்புறம் நீங்க மூணு வேளையும் சாப்பிட நல்ல ஹோட்டலோ மெஸ்ஸோ இந்த கிராமத்துல கிடையாது. உங்களுக்கு வசதியாய் வீடு வேணும்ன்னா இங்கிருந்து பனிரெண்டு கிலோ மீட்டார் தூரம் தள்ளிருக்கிற நெல்லிக்குப்பத்துக்குத்துக்குதான் போகணும். அங்கிருந்து தினசரி ஸ்கூலுக்கு வந்துட்டுப் போகணும். சாப்பாட்டுப் பிரச்னையையும் பார்க்கணும். இந்த ரெண்டு பிரச்சனையை உங்களால ஃபேஸ் பண்ணமுடியுமா?”

“நம்ம ஸ்கூல்ல மொத்தம் எத்தனை டீச்சர்ஸ் இருக்காங்க ஸார் ?”

“பனிரெண்டு பேர் ”

“அவங்க எல்லோரும் நெல்லிக்குப்பத்துலதான் ஸ்டே பண்ணியிருகாங்களா?”

“ஆமா ”

“நானும் அதே மாதிரி ஸ்டே பண்ணிக்கிறேன் ஸார். சாப்பாட்டுப் பிரச்சனையையும் நான் பார்த்துக்கிறேன்.”

“அப்படீன்னா சரி…நாளைக்கு வந்து ட்யூட்டியில் ஜாயின் பண்ணிக்குங்க… நெல்லிக்குப்பம் போக நிறைய பஸ் இருக்கு. இன்னிக்கு அங்கே போய் ஒரு ஹோட்டல்ல ரூம் எடுத்து ஸ்டே பண்ணிக்குங்க.”

“சரி” என்று சொல்லி நான் எழ முயன்ற வினாடி ஹெட்மாஸ்டரின் மனைவி உள்ளேயிருந்து எட்டிப் பார்த்து, “என்னங்க! அந்த தம்பி கிட்டே அந்த விஷயத்தையும் சொல்லிடுங்க,” என்றார்.

“அதெல்லாம் வேண்டாம்”, என்றார் அவர்.

“எதுக்கும் சொல்லிடுங்க.பின்னாடி ஏன் சொல்லலைன்னு அந்த தம்பி நம்ம மேல வருத்தப்படப் போகுது….!”

நான் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியாமல் கேட்டேன்.

“என்ன ஸார் ! அம்மா ஏதோ சொல்ல வர்றாங்க. நீங்க வேண்டாம்ன்னு சொல்றீங்க…?”

“அது ஒண்ணுமில்ல தம்பி! இந்த கிராமத்துல கொசுத் தொல்லை கொஞ்சம் அதிகம். பகல்லேயே கொசு பறக்கும். இந்த கிராமத்தையும் சேர்த்து மொத்தம் மூணு கிராமத்துல க்யூலக்ஸ் என்கிற கொசுவின் காரணமாய் எளிபெண்டியாசஸிஸ் என்கிற யானைக்கால் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். நாளைக்குப் பகலில் கடை வீதிப் பக்கம் போய் ஒரு அஞ்சு நிமிஷம் நின்று வர போற ஆட்களை கவனிச்சுப் பாருங்க. பத்துபேர் கடந்து போனா அதுல ரெண்டுபேருக்கு யானைக்கால் வியாதி இருக்கும். இது ஒரு குணப்படுத்த முடியாத நோய் என்பதால் நோயாளிகளின் எண்ணிக்கை நிறையவே இருக்கிற மாதிரி தெரியும். இப்படி ஒரு பிரச்னையும் இங்கே இருக்கு. அதைத்தான் என்னோட ஒய்ஃப் சொல்லச் சொன்னா.”

இப்போது என் முகம் மாறி இருப்பது எனக்கே தெரிந்தது. அந்த நிமிஷமே அடிவயிற்றில் ஒரு பயம் உற்பத்தியாக ஹெட்மாஸ்டரின் மனைவி என் பக்கத்தில் வந்தார்.

“தம்பி ! உனக்கு இன்னும் கல்யாணம் வேற ஆகலைன்னு சொல்ற… இந்த கிராமத்துல மூணு மைனஸ் பாயிண்டுகளையும் இவர் சொல்லிவிட்டார். இனி வேலையில் சேர்றதும் சேராததும் உன்னோட இஷ்டம். ”

“நீங்க சொன்ன மூணாவது காரணம்தான் கொஞ்சம் உறுத்தலாய் இருக்கு ஸார்.”

“தம்பி! நான் எதையும் மறைக்கல உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டியது என்னோட கடமை. நான் இன்னும் ஆறு மாசத்துல ரிடையராகிப் போயிடுவேன். சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம். இங்க எப்படியோ சகிச்சுகிட்டு நாட்களை ஓட்டிகிட்டு இருக்கேன். உங்களுக்கு சின்ன வயசு. நீங்கதான் இந்த விஷயத்துல யோசனை பண்ணி முடிவு எடுக்கணும்.”

நான் தலையாட்டிவிட்டு எழுந்தேன்.

அன்று இரவு நெல்லிக்குப்பத்தில் ஒரு ஹோட்டல்லில் தங்கி அங்கேயிருந்து ட்ரங்க் கால் மூலமாய் கால் புக் செய்து அம்மா அப்பாவிடம் பேசினேன். ஹெட்மாஸ்டர் சொன்ன தகவல்களைச் சொன்னதும் என்னுடைய அம்மா பயந்துவிட்டார்.

“உனக்கு அந்த ஊர்ல வேலை வேண்டாம். உடனே ஊர்க்கு புறப்படு. நீ அப்படி ஒன்னும் சம்பாதிக்க வேண்டாம்!”

அப்பா மட்டும் பதற்றமடையாமல் நிதானமாய் பேசினார்.

“நல்ல யோசனை பண்ணி ஒரு முடிவுக்கு வா. போஸ்டிங் போட்ட இடத்துல நீ ஜாயின் பண்ணலைன்ன அந்த வேலை யார்க்காவது போயிடும். அப்புறம் வேலை கிடைக்கிறது கஷ்டம். ”

“இல்லை…. ஒரு மாசம் வெயிட் பண்ணினா எப்படியும் வேற ஊர்ல போஸ்டிங் வாங்கிடலாம்!”

“உனக்கு அந்த நம்பிக்கை இருந்தா புறப்பட்டு வா !”

நான் ஊருக்குப் புறப்பட்டேன்.

கோயம்பத்தூர் போய்ச் சேர்ந்ததும் முதன்மை மாவட்ட கல்வி அதிகாரி (C.E.O)யைப் போய்ப் பார்த்தேன். அதற்கு C.E.O சொன்ன பதில்,

“நீங்க போட்ட போஸ்டிங்க்ல ஜாயின் பண்ணாததினால இனிமே உங்களுக்கு ரெண்டு வருஷத்துக்கு போஸ்டிங் போட முடியாது!”

நான் ஏமாற்றத்தோடு வீடு திரும்பி அம்மாவிடம் விஷயத்தை சொன்னேன். அம்மா சர்வ சாதாரணமாய் அதை எடுத்துக்கொண்டு சொன்ன வார்த்தைகள் இப்போதும் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

“நடக்கறதெல்லாம் நன்மைகேன்னு நெனச்சுக்கோ! இந்த வாத்தியார் வேலையை காட்டிலும் வேற எதோ ஒரு பெரிய வேலை கிடைக்கும். அதுல உனக்கும் பேரும் புகழும் கிடைக்கும், போய் மொதல்ல சாப்பிடு !”

அம்மா சொன்னது எவ்வளவு சக்தி மிகுந்த வார்த்தைகள் என்பது நான் ஒரு எழுத்தாளனாக உருவானபோது உணர்ந்தேன்.

(தொடரும் )

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s