13-நான் முகம் பார்த்த கண்ணாடிகள்… – ராஜேஷ் குமார்


1960-களில் பள்ளி மாணவனாய் இருந்தபோது எனக்குப் பிடித்தமான வார இதழ் கல்கண்டாய் இருந்தது. கல்கண்டு வார இதழில் இடம்பெறும் சங்கர்லால், வகாப், இந்திரா, மாணிக்கம், கத்தரிக்காய் கூட்டணி பாத்திரங்களாய் மாறி கலக்கும் துப்பறியும் தொடர்கதைகளுக்கு நான் அடிமை.

‘சங்கர்லால் வழக்கம்போல தன் இரண்டு கால்களையும் தூக்கி ஸ்டூலின் மேல் தூக்கிப் போட்டுக் கொண்டு மாது கொண்டு வந்து கொடுத்த தேநீரை கோப்பையிலிருந்து துளித்துளியாய்ப் பருகிக் கொண்டிருந்தார்’ என்ற தமிழ்வாணன் அவர்களின் ஆரம்ப வரிகள் மறக்க முடியாதவை.

அவருடைய மர்மக் கதைகளுக்கு அடுத்தபடியாய் என் மனதில் இடம் பிடித்தது அவருடைய கேள்வி பதில்கள். அறிவியல், சினிமா, குடும்பம் பற்றிய கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதில்கள் சிரிக்கவும் வைக்கும் சிந்திக்கவும் வைக்கும்.

நான் எஸ்எஸ்எல்சி படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் கல்கண்டு வார இதழில் என் பெயர் வரவேண்டுமே என்பதற்காக தமிழ்வாணன் அவர்களின் கேள்வி பதில் பகுதிக்கு ஏதாவது ஒரு கேள்வி கேட்டு தபால் கார்டில் எழுதிப் போடுவேன். அப்போது தபால் கார்டின் விலை 5 பைசா என்பதால் ஒரு வாரத்தில் மூன்று கார்டுகளாவது அனுப்புவேன்.

1963-லிருந்து 1968 வரை கேள்விகளைக் கேட்டு அனுப்பிக் கொண்டே இருந்தேன். ஆனால் ஒரு கேள்வியைக் கூட தமிழ்வாணன் அவர்கள் தேர்ந்து எடுத்து என்னுடைய கேள்விகளுக்கு பதில் அளிக்காதது எனக்கு ஒரு பெரிய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது. லேசாய் கோபம் கூட வந்தது. அந்த கோபத்தின் காரணமாக சில வாரங்கள் வரை கல்கண்டு வார இதழை வாங்காமல் புறக்கணித்தேன். ஆனால் என்னால் தொடர்ந்து அப்படி இருக்க முடியவில்லை. அதன் பிறகும் என்னுடைய முயற்சியைத் தொடர்ந்தேன். ஆனால் என்ன காரணத்தாலோ நான் கேட்டிருந்த எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. அச்சில் என் பெயரைப் பார்க்கும் அதிர்ஷ்டமும் எனக்குக் கிடைக்கவில்லை. 1970 வரைக்கும் முயற்சித்துப் பார்த்துவிட்டு ‘ச்சீ ச்சீ… இந்தப் பழம் புளிக்கும் என்கிற நரியின் மனோபாவத்துக்கு என்னை மாற்றிக் கொண்டேன்.

ஆனால் 1970-க்குப் பிறகு நான் ஒரு சிறுகதை எழுத்தாளராக மாறி எல்லா வாரப் பத்திரிகைகளிலும் என்னைடைய கதைகள் வெளியே வந்து 1980-ல் ஒரு நாவலை எழுதி முடித்தபோது, அதே வருடம் கல்கண்டு வார இதழில் எனக்கு தொடர்கதை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அதாவது தமிழ்வாணன் அவர்கள் அமரராகிவிட்ட பின்புதான் அங்கே எனக்குக் கிடைத்தது.

ஒரு கேள்வியாவது பிரசுரமாகி, என்னுடைய பெயர் கல்கண்டில் வராதா என ஏங்கிய எனக்கு தொடர்கதை எழுதும் வாய்ப்பு அதே கல்கண்டில் கிடைத்தபோது என்னைால் என்னையே நம்ப முடியவில்லை.

lena-tamilvanan

தமிழ்வாணன் என்கிற சக்கரவர்த்தி ஆட்சி செய்த ராஜாங்கத்தில் அல்லவா காலடி எடுத்து வைத்திருக்கிறேன். கல்கண்டு வார இதழில் நான் தொடர்கதை எழுத ஒப்புக் கொண்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் என்னை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் லேனா தமிழ்வாணன். வெகுநாள் பழகிய ஒரு நண்பரைப் போல் பேசினார்.

“அப்பா மட்டும் அரியாசனம் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த கல்கண்டு எனும் கோட்டைக்குள் நுழைந்த முதல் எழுத்தாளர் நீங்கள்தான். உங்களிடம் இருந்து நான் நிறைய எதிர்ப்பார்க்கிறேன். இப்போது கல்கண்டு வார இதழ் இரண்டரை லட்சம் பிரதிகள் விற்பனையாகிறது. நீங்கள் எழுதப் போகும் தொடர்கதையின் மூலம் இந்த விற்பனை எண்ணிக்கை உயரவேண்டுமே தவிர குறைந்து போய்விடக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.”

நான் சொன்னேன். “தங்களின் தந்தையாரோ என்னை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அவர் எழுதிய துப்பறியும் தொடர்களை விரும்பிப் படித்த விசிறி நான். அவர் எல்லாம் தெரிந்த ஒரு எழுத்து விஞ்ஞானி. கல்கண்டு இதழில் இப்படியொரு வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்று நான் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை. அந்த வாய்ப்பை நான் மிகச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வேன்.”

லேனா தமிழ்வாணன் தொடர்ந்து பேசினார். “நீங்கள் தொடர்கதை எழுதுவது சம்பந்தமாய் நான் ஒரு யோசனையைச் சொல்லலாமா?”

“வித் ப்ளஷர்… தாராளமாய்”

“உங்களுடைய முதல் தொடர்கதையே வித்தியாசமான தலைப்போடும், மாறுபட்ட தலைப்போடும், எதிர்பாராத சம்பவங்களோடும், யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு முடிவோடும் இருந்தால் இப்போதுள்ள வாசகர்களால் நீங்கள் பெரிய அளவில் கவனிக்கப்படுவீர்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.”

“நன்றாகவே புரிகிறது. நான் எழுதப் போகும் தொடர் பத்தோடு பதினொன்றாக இருக்கக் கூடாது. அதானே?”

லேனா சிரித்தார். “சரியாகவே புரிந்து கொண்டீர்கள். ஆனாலும் நீங்கள் எது மாதிரியான கதையை எழுதப் போகிறீர்கள் என்பதை எங்களின் ஆசிரியர் குழுவில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். எனவே இன்னும் ஒரு வாரத்துக்குள் தொடர்கதையின் சுருக்கத்தையும், தலைப்புகளையும் அனுப்பி வையுங்கள். ஆசிரியர் குழு அதைப் பரிசீலித்துப் பார்த்து தங்களின் முடிவைத் தெரிவிப்பார்கள்.”

அவர் இப்படிச் சொன்னது எனக்கு ஒரு சின்ன அதிர்ச்சியாக இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் “அதனால் என்ன… தாராளமாய் அனுப்பி வைக்கிறேன்,” என்றேன்.

அவரிடம் அப்படிச் சொல்லிவிட்டேனே தவிர, நான் உள்ளுக்குள் கலவரமானேன். ‘வித்தியாசமான ஒரு கதையோடும், எதிர்ப்பாராத சம்பவங்களோடும், திடுக்கிடும் முடிவோடும், அனைவரையும் கவரும் தலைப்போடும் என்னால் ஒரு தொடர்கதையை கல்கண்டு வார இதழுக்குத் தர முடியுமா?’

tamilvanan

யோசித்துக் கொண்டே இருந்ததில் இரண்டு நாட்கள் காணாமல் போயிற்று. அன்றைய காலகட்டத்தில் நான்கைந்து பிரபல எழுத்தாளர்கள் க்ரைம் நாவல்களையும், மர்மத் தொடர்களையும் எழுதுவதில் பேரும் புகழும் பெற்று இருந்தார்கள். அவர்கள் எழுதிய நாவல்களையெல்லாம் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். அந்த நாவல்கள் எல்லாமே படிக்க சுவையாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தாலு் கதை சொல்லும் பாணியில் ஒரே நேர்க்கோட்டில் நின்றார்கள்.

அதாவது ஒரு கொலை, அது நடைபெற்ற விதம், அது சம்பந்தமான போலீஸ் விசாரணை. அதைத் தொடர்ந்து சில திகிலான சம்பவங்கள். கடைசியில் துப்பறியும் போலீஸ் அதிகாரியின் திறமையால் கொலையாளி பிடிபடும் விதம். அப்படி எல்லோரும் ஒரே பாணியில் க்ரைம் கதைகளை எழுதியிருந்தார்கள்.

இவர்கள் யாருமே சொல்லாத ஒரு விஷயத்தை எழுதப் போகும் கல்கண்டு தொடரில் எப்படிச் சொல்வது?

மேலும் இரண்டு நாட்கள் யோசிப்பில் கரைந்து போயிருந்த நிலையில், அன்றைய தினம் வந்த காலை நாளிதழில் பல்வேறு பரபரப்பான செய்திகளுக்கு நடுவில் அந்த சிறிய பெட்டிச் செய்தி என்னுடைய பார்வைக்குத் தட்டுப்பட்டது.

படித்துப் பார்த்தேன்.

‘இரண்டாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த உலோகப் படிவங்கள் மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே கண்டுபிடிப்பு’

இந்தப் பெட்டிச் செய்திக்குக் கீழே பிரசுரமாகியிருந்த இரண்டு பத்திகளைப் படித்தேன். செய்தி இப்படி சொல்லியிருந்தது.

நாசிக் அருகே உள்ள மன்மாட் என்கிற கிராமத்தை ஒட்டியிருந்த ஒரு காட்டுப் பகுதியில் ஆர்க்கியாலஜி டிப்பார்ட்மென்ட்டைச் சேர்ந்த புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வுக்காக குறிப்பிட்ட இடத்தைத் தோண்டியபோது இருபதடி ஆழத்தில் மண்ணோடு மண்ணாய் பிசைந்து காணப்பட்ட நிலையில் சில உலோகப் படிவங்கள் கண்டு எடுக்கப்பட்டன. அந்தப் படிவங்களை வேதியியல் பொருள்கள் கொண்டு சோதித்துப் பார்த்ததில் அவைகளை 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் பயன்படுத்தியிருக்கக் கூடும் என்று தெரிய வந்தது. இந்த உலோகப் படிவங்கள் எல்லாமே விநோதமான வடிவங்களில் காணப்பட்டன. இவைகளில் ஆறு மட்டும் டெஸ்ட் ட்யூப் வடிவம் கொண்டவை. இந்த டெஸ்ட் ட்யூப்களை அந்தக் காலத்தில் வாழ்ந்த மருத்துவர்கள் தங்களுடைய ஆராய்ச்சிக்காக பயன்படுத்தியிருக்கலாம் என்பது புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கருத்து.

இந்த செய்தியில் என்னைக் கவர்ந்த ஒரு விஷயம் அந்த ஆறு டெஸ்ட் ட்யூப்கள்தான். உலோகத்தாலான அந்த ஆறு டெஸ்ட் ட்யூப்களில் எது மாதிரியான சோதனைகள் எல்லாம் நடந்து இருக்கலாம் என்பதை கற்பனை செய்துப் பார்த்தேன். என்னுடைய கற்பனையில் கதை ஒன்று விரிந்தது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விஞ்ஞானி ஒருவர் இந்த உலோக டெஸ்ட் ட்யூப்களில் ஏதோ ஒரு ரசாயனத்தை ஊற்றி அதில் சாதாரண கண்ணாடிக் கற்களைப் போட்டு அவைகளை விலை உயர்ந்த வைரக் கற்களாய் மாற்ற முயற்சிக்கிறார். ஒவ்வொரு டெஸ்ட் ட்யூப்பும் ஒவ்வொரு வகையான அரிதான உலோகத்தில் தயாரிக்கப்பட்டவை என்பதால் சாதாரண கண்ணாடி கற்களை அந்த டெஸ்ட் ட்யூப்கள் வைரக் கற்களைாய் மாற்றுகின்றன. இந்த சோதனை வெற்றிப் பெற மொத்தம் ஏழு டெஸ்ட் ட்யூப்கள் வேண்டும். ஆனால் இப்போது கிடைத்து இருப்பதோ ஆறு டெய்ஸ்ட் ட்யூப்கள்தான். ஏழாவது டெஸ்ட் ட்யூப் எங்கே என்பதைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர்கள் வெற்றிப் பெற்றார்களா இல்லையா? என்பதுதான் கதை. கதையின் தலைப்பு ‘ஏழாவது டெஸ்ட் ட்யூப்‘.

எனது கற்பனையில் உருவான இந்தக் கதையை அப்படியே சுருக்கி ஒரு ‘Synopsis‘ ஆக மாற்றி லேனாவுக்கு அனுப்பி வைத்தேன்.

அதை அவர் படித்துவிட்டு உடனே எனக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் நான் எதிர்பார்க்காத பல விஷயங்கள் சொல்லப்பட்டு இருந்தன. அவர் எனக்கு எழுதிய கடிதம் இதுதான்.

அன்பு நண்பரே!

தொடர்கதைக்கான கருவும் சரி, தலைப்பும் சரி என்னை மலைக்க வைத்தது. பொதுவாக க்ரைம் கதை என்றால் ஒரு கொலை நடக்கும், அந்த கொலைக்கான மோட்டீவ், கொலையாளி யார் என்கிற போக்கில் கதை செல்லும். ஆனால் நீங்கள் க்ரைம் தொடருக்கு ஒரு புது கதைக் களத்தைத் தேர்ந்து எடுத்துள்ளீர்கள். தொடரின் முதல் அத்தியாயத்திலிருந்து படிக்க ஆர்வமாக உள்ளேன். கல்கண்டு தீபாவளி மலரில் தொடர்கதையை ஆரம்பிக்கும் நீங்கள் கல்கண்டின் பொங்கல் மலருக்கு முன்னதாய் தொடரை முடிக்கும்படியாக அத்தியாயங்களை அமைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் நண்பர் என்ற முறையில் உங்களோடு நான் ஒரு கருத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஒரு பத்திரிகையாளர்க்கும் எழுத்தாளர்க்கும் இடைப்பட்ட உறவு இனிமை நிறைந்ததாக இருக்க வேண்டுமென்றால் அந்த எழுத்தாளர் தொடர்கதை எழுதும்போது வாராவாரம் உரிய நேரத்துக்கு முன்னரே அத்தியாயங்கள் வராதபட்சத்தில் உங்கள் பெயர்க்கு பாதிப்பு ஏற்படுவதோடு பத்திரிகையின் விற்பனையும் பாதிக்கப்படும். எனவே தொடரின் அத்தியாயங்களை உரிய நேரத்துக்கு அனுப்பி வையுங்கள். மற்ற பத்திரிகைகளுக்கு தொடர் எழுதும்போதும் நான் சொன்னதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களின் எழுத்துலக வளர்ச்சிக்கு என் யோசனை பக்கபலமாய் இருக்கும்.

இப்படிக்கு
அன்புடன்
லேனா.

நண்பர் லேனாவின் கடிதம் எனக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது. அதற்குப் பிறகு அவர் எழுதும் ஒவ்வொரு கருத்திலும் ஏதாவது ஒரு உபயோகமான செய்தி இருக்கும். அந்தச் செய்தியை தெரியப்படுத்தும் விதத்திலும் ஒரு பண்பாடு இருக்கும். அவர் எனக்குத் தந்த யோசனைகள்படியே நடந்து கொண்டதால் பத்திரிகையுலகில் என்னால் நிலையாய் நின்று நல்ல பெயரைச் சம்பாதிக்க முடிந்தது. ராஜேஷ்குமாரின் தொடர்கதையை ஆரம்பித்தால் நம் பத்திரிகைக்கு அத்தியாயங்கள் தாமதம் இன்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு உண்டாக்கினேன். அண்மையில் சகோதர எழுத்தாளர் ஒருவர் எனக்கு போன் செய்து, “எழுத்துலகில் உங்களுக்கு ஒரு செல்லப் பெயர் இருக்கு. அது என்ன தெரியுமா ராஜேஷ்குமார்?” என்று கேட்டார்.

நான், “தெரியாது” என்று சொன்னேன்.

அதற்கு அவர் சொன்ன பதில்..

“பத்திரிகையாளர்களின் டார்லிங்”

தொடரும்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s