சர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்! -சுதாகர் கஸ்தூரி


மே 1992. மும்பை

அந்த பெரிய கான்ஃபரென்ஸ் ரூமில் நுழைந்ததுமே எனக்கு நடுக்கம் வந்துவிட்டது. நாற்காலிகள் நிறைந்து ஆட்கள். அனைவரும் அந்த பெட்ரோகெமிக்கல் கம்பெனியின் மேலதிகாரிகள். ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் அனுபவமுள்ளவர்கள்.

நான் எனது கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதமாகிறது. எங்கள் கருவியின் தொழில்நுட்பம் குறித்துப் பேசி, விற்பனையை சாதகமாக்க வேண்டும். போட்டியாளர்கள் சீனியர்களைக் கொண்டு வந்திருந்தார்கள். நான் மட்டும் என் கம்பெனியின் சார்பாகப் போயிருக்கிறேன்.

“ஹலோ” என்றார் ஒரு அதிகாரி “சீனியர் யாரும் வரலையா? எங்க மிஸ்டர் அஞ்சன் டே?”

“அவர்..அவர் வேற இடத்துக்குப் போயிருக்கார். அதான் நான்..” மென்று விழுங்கினேன். இவர்கள் முன்னே எப்படி ஒரு மணி நேரம் பேசப்போறேன்?

முதலில் வந்த இருவர் முனைவர் பட்டம் பெற்றவர்கள் அடிப்படை அறிவியலில் தொடங்கி, மாதிரிகளை ஆய்வு செய்ததில் கிடைத்த அறிக்கைகள் எனத் தூள் கிளப்பிக்கொண்டிருந்தனர். என்னிடம் சில ஸ்லைடுகள் , ட்ரான்ஸ்பேரன்ஸி ஷீட்டுகள் இருந்தன. பவர்பாயிண்ட் எல்லாம் வராத 1990-களின் முதன் வருடங்கள்…

”அடுத்தாக ஹிண்டிட்ரான் ஸர்வீஸஸ். சுதாகர்” அறிவிப்பு வந்தது. எழுமுன் டீ வந்துவிட, ஐந்து நிமிடம் அவகாசம் கிடைத்தது. உதடுகள் உலர்ந்து, கால்கள் நடுங்கி நின்றேன். பேசுவது புதிதல்ல. என்னிடம் இருப்பதை பேசிவிடுவேன். கேள்விகள் கேட்டால்? அனுபவமின்மையின் ஆட்டம் தெரிந்துவிடுமே?

சற்றே சலசலப்பு கேட்டது. “மிஸ்டர் கண்ணன்” என யாரோ முணுமுணுத்தார்கள். திரும்பினேன். அவரேதான். எனது கம்பெனியின் டெக்னிகல் டைரக்டர். எனது பிரிவின் மேலதிகாரி.

“இவரா?” என்று வியப்புடன் திகைப்பும் எழ, அவரிடம் விரைந்து சென்றேன். தோளில் தட்டினார்.

“ நீ தனியாக வந்திருப்பதாக அறிந்தேன். அதான் வந்தேன்”

“சார்…இதுக்கெல்லாம் நீங்க வரணுமா?” என்றாலும், என் உற்சாகம் தைரியம் மேலெழுந்தது என்னமோ உண்மைதான்.

“கண்ணன். நீங்க பேசப்போறீங்களா?’ என்றார் நிறுவனத்தின் ஒரு மேலதிகாரி.

“இல்லை” என்றார் கண்ணன். “My boy would talk. பசங்க பேசட்டும். ”

கண்ணனுக்கு அப்பொழுது ஐம்பது வயதிருக்கும்.பெரிய நெற்றி. அதில் ஒல்லியாக தீர்க்கமாக ஸ்ரீசூர்ணம் எப்போதாவது மின்னும். சிரித்த முகம். கனத்த குரல். அவரது அறையில் குறிப்பிட்ட ஊதுபத்தி ஒன்றின் மணம் எப்போதும் கமழ்ந்து கொண்டிருக்கும். மேஜையில் ஒரு பகவத் கீதை. என் பிரிவின் பெரும் அதிகாரிகள் அவரது செக்ரட்டரியிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு நிற்பதைக் கண்டிருக்கிறேன். என் அளவில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதேயில்லை. இப்போது ஏன் திடீரென வந்திருக்கிறார்?

ஒரு உத்வேகத்துடன் எழுந்தேன். ஒரு மணி நேரம் பேச்சு. முடிவில் ஏதோ உளறப் போக, போட்டியாளர் ஒருவர் அதைக் கிடுக்கிப்பிடி போட நான் வாதிக்க ஒரு அமளி. கண்ணன் அமைதியாக அமர்ந்திருந்தார். அனைவரும் அவர் என்ன சொல்லப் போகிறார் எனப் பார்த்திருந்தனர். இறுதி வரை அவர் பேசவில்லை.

Sudhakar Kasturi

நான் அந்த ஒரு பாயிண்ட்டில் மாட்டினேன் என்றாலும், அங்கிருந்த போட்டியாளர்களில் சீனியர்களால் பாராட்டப்பட்டேன். பெரும் ஊக்கமூட்டிய தினமாக அது அமைந்தது.

வெளியே வந்தபோது, கண்ணனின் டிரைவர் அழைத்தார் . “சார் உன்னையும் வண்டியில வரச்சொன்னாங்க”

கண்ணனின் நீல நிற ஃபியட் காரில் அவருடன் பின் சீட்டில் அமர்ந்து வருவது எனக்குக் கனவு போலிருந்தது.

“சார்” என்றேன் மிகத் தயங்கி. “ எப்படிப் பேசினேன்னு சொன்னீங்கன்னா…”

“குட்” என்றார் சுருக்கமாக.

பல நிமிடங்கள் ஒன்றும் பேசாமல் கரைந்தன.

திடீரென “நீ அந்தப் பாயிண்ட் சொன்னது சரின்னு உனக்குத் தோணுதா?” என்றார்.

“ஆமா” என்றேன் திடமாக “இன்னும் தகவல் கிடைச்சிருந்தா எதுத்தாப்புல நின்னு கேட்டவனை ஒரு வாங்கு வாங்கியிருப்பேன்.”

“இதப் பார்” என்றார் “ நீ போனது எதுக்கு?”

“டெக்னிகல் பேச்சு, விற்பனை”

“அதை விட்டுட்டு ஒரு பாயிண்டப் பிடிச்சு விவாதம் பண்றது கேலிக்கூத்து இல்ல?

விழித்தேன். அவர் தொடர்ந்தார்…

“என்ன கர்மம் செய்ய வந்திருக்கமோ, அதுல குறியா இருக்கணும். துரோணன் ஒர் பிராமண உடலில் இருந்த சத்ரியன். விதுரன் ஒரு சூதன் உடலிலிருந்த பிராமணன். நான் ஜாதியச் சொல்லலை. கர்ம வாசனையைச் சொன்னேன். நீ இங்க வந்தது ஒரு வைஸ்ய தருமத்திற்காக. விவாதம் செய்யும் வேதசிரோன்மணியாக இல்லை.. புரியுதா?”

அவர் இதிகாசப் புராணங்களிலிருந்து உவமைகாட்டி மேலாண்மை நெளிவு சுளிவுகளை விளக்குவார் எனக் கேட்டிருக்கிறேன். இன்று எனக்கு முதல் தடவை. அது என்னமோ மனதில் சட்டெனப் பதிந்து போனது. ஆனாலும், அவர் ஏன் வந்தார் என்பது புரியாமலே இருந்தது.

அடுத்தநாள் அவரது அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டேன். கண்ணன் முன்பு என் மேலதிகாரி அமர்ந்திருந்தார். அவர் முகம் வெளுத்திருந்தது.

கண்ணன் தொடங்கினார் “ அஞ்சன் டே, இந்த வியாபாரம் ஒரு போர். தெரியும்ல?”

“தெரியும்” என்றார் அஞ்சன் தீனக்குரலில்.

“தான் சுகமாக இருந்து கொண்டு, படைவீரர்களை மட்டும் போரில் அனுப்பி ஜெயித்த ஜெனரல்கள் இல்லை அஞ்சன்.. அபிமன்யு சக்ரவ்யூகத்தை உடைக்கறேன்-னு போனது அவனுடைய தைரியம். பாண்டவர்கள் அவனைக் காக்காமல் விட்டது, அவர்களது தவறு. “  கண்ணன் நிறுத்தினார்.

“அஞ்சன், இவன் கூட நீயும் போயிருக்கணும். . நான் போனது இவனுக்கு தைரியமூட்ட மட்டுமில்ல, மத்தவங்க”இந்த ஆள் ஏன் வந்தான்?”னு கொஞ்சம் குலைஞ்சு போயிருப்பாங்க. அது முக்கியம்.”  கண்ணன் நிறுத்தினார்

“வியாபாரம்ங்கற போருக்குன்னு சில தருமங்கள் இருக்கு. அவங்கவங்க தன் நிலையில தன் கருமம் என்னன்னு தெரிஞ்சு இயங்கணும்.”

மேசையில் ஹோல்டரில் தலைகுத்தி நின்றிருந்த ஒரு மையூற்றிப் பேனாவால் , சதுரமான சிறிய காகிதத்தில் ஏதோ எழுதினார்.

“இந்த புஸ்தகம் வாங்கிப் படியுங்கள் ” என்றார் இருவரிடமும்.

The Art of War“-என்று எழுதியிருந்தது.

போரில் சாரதியாக வந்த கண்ணனுக்கும் இவருக்கும் அதிக வித்தியாசமில்லை என்று உணர்ந்த தருணம் அது. கண்ணன் சார், ஓய்வு பெற்ற பின்னும் எப்போதாவது பார்க்கும் போது அனைவரைப் பற்றியும், அவர்களது குடும்பங்கள் பற்றியும் கேட்பார். எப்போதாவது தொழில் முறையில் குழப்பங்கள் ஏற்படும்போது அவரிடம் ஆலோசனை கேட்பேன். சமீபத்தில் தொடர்பு விட்டுப் போனது.

இன்று கண்ணன் சாரின் திருமண நாள். எத்தனையோ மேலதிகாரிகள் இருந்திருப்பினும், குருவாக அமைபவர்கள் மிகச் சிலரே. இன்று கிடைக்கும் தூற்றுதல்களும், போற்றுதல்களும்.. போகட்டும் கண்ணனுக்கே.

சர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்!

தமிழில் அறிவியல் சார் சிறுகதைகள் அரிதாகவே எழுதப்பட்டு வருகின்றன. நாவல்கள் அரிதினும் அரிது. இந்தச் சூழலில் 6174 வரவேற்கப்பட வேண்டியது. லெமூரியாவிற்கும் தமிழர்களுக்கும் கடந்த நூராண்டுகளுக்கும் மேலாக ஒரு பிரிக்கமுடியாத தொடர்பு இருந்துவருகிறது. இந்தத் தொடர்பின் நீட்சிதான் இந்த நாவல். லெமூரியாவில் தொடங்கி உலகம் முழுதும் சுற்றி மெக்ஸிகோ நகரத்தில் முடிகிறது. இடையில் பிரமிடுகள், சீலகந்த் மீன்கள், மர்மங்கள் பலவற்றின் முடிச்சு அவிழ்தல். படித்ததும் மறுபடியும் வாசகர்களை படிக்கத் தூண்டும் தமிழின் நல்ல அறிவியல் நாவல்களின் வரிசை ஒன்று தொடங்குவதற்கு சுதாகரின் இந்த முயற்சி தூண்டுகோளாக அமையும் என்று நம்புகிறேன். அவருக்கு எமது வாழ்த்துக்கள்!

– பி.ஏ.கிருஷ்ணன்

21399372

மூளையின் அடித்தள அதிர்வினை , மின்காந்த அலைகளை உருவாக்கி ஆய்வு செய்யும் கருவி கொண்டு குலைத்து நாச வேலைகளை சாதாரண மனிதர்களைக் கொண்டு செய்ய வைக்கிறது ஒரு கும்பல். இதனைத் தடுக்க முயலும் குழுவினரை ஒரு திறமையான போராளியின் உதவியும், மற்றொரு போராளியின் பழிவாங்கும் திட்டங்களும் அலைக்கழிக்கின்றன. மன மாற்றம் செய்யப்பட்ட மனிதர்கள் இருக்கையில் குழுவில் செயல்படுபவர்களில் எவரை நம்புவது?

Advertisements

2 thoughts on “சர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்! -சுதாகர் கஸ்தூரி

 1. nparamasivam1951 January 27, 2016 at 7:47 AM Reply

  பகவத் கீதை படிக்க படிக்க மேலும் மேலும் புதிய தகவல்கள் ஒவ்வொரு முறையும்
  கிடைக்கிறது.

  2016-01-27 9:39 GMT+05:30 Balhanumans Blog :

  > BaalHanuman posted: ” மே 1992. மும்பை அந்த பெரிய கான்ஃபரென்ஸ் ரூமில்
  > நுழைந்ததுமே எனக்கு நடுக்கம் வந்துவிட்டது. நாற்காலிகள் நிறைந்து ஆட்கள்.
  > அனைவரும் அந்த பெட்ரோகெமிக்கல் கம்பெனியின் மேலதிகாரிகள். ஒவ்வொருவரும்
  > கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் அனுபவமுள்ளவர்கள். – நான் எனது”
  >

 2. rjagan49 January 27, 2016 at 9:51 AM Reply

  A wonderful example of a boss! Only a lucky few come across such persons. I too had great bosses at the start of my career. Thanks to Mr. Sudhakar for sharing his experience.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s