ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்: மீனம் – ஏ.எம்.ஆர்.


(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி முடிய)

குடும்பம்:

குருபகவான், சனி ஆகிய இரு முக்கிய கிரகங்களும் அனுகூலமில்லாத நிலைகளில் சஞ்சரிக்கும் இத்தருணத்தில், ராகு நன்மை செய்யும் விதமாக, சிம்ம ராசியில் பிரவேசித்திருப்பது, பசியினால் தவிக்கும் ஒருவருக்கு, தக்க தருணத்தில் ‘பிரசாதம்‘ கிடைப்பதற்கு சமமாகும்! குருபகவான் உங்கள் ராசிக்கு அதிபதியாவதால், அவரால் சிரமங்கள் ஏற்படாது. சமாளிக்க இயலாத அளவிற்குச் செலவுகள் ஏற்படும்போது, ராகுவின் உதவிக்கரம் சமய சஞ்சீவியாகக் கைகொடுத்து உதவும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண உதவி கிடைக்கும். முயற்சிகள் பலனளிக்கும். வீண் அலைச்சல்கள் குறையும். கவலையளித்து வந்த முக்கிய குடும்பப் பிரச்சினை ஒன்று நல்லபடி தீரும்.

கணவர்-மனைவியரிடையே ஏற்பட்டு வந்த கருத்து வேற்றுமை நீங்கும். கேதுவினால் பணம் விரயமானாலும், அதனை சமாளித்துவிட ராகுவின் சஞ்சார நிலை உதவும். சிலருக்கு வீடு மாற்றம் அல்லது உத்தியோகம் காரணமாக, ஊர் மாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. திருமண முயற்சிகளில் சிறிது தாமதமும், நிச்சயமற்ற நிலையும் தோன்றி, கவலையளிக்கும். நீதிமன்ற வழக்குகள் இருப்பின், எவ்வித முடிவும் இன்றி, நீடிப்பது கவலையளிக்கும்.

உத்தியோகம்:

வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். நிர்வாகத்தினர் மற்றும் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிறு ஊதிய உயர்வையும் எதிர்பார்க்கலாம். நிர்வாகத்திறன் ஓங்கும். வங்கிகளில் பணப் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் சற்று விழிப்புடன் செயல்பட வேண்டும். ராணுவ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பல கலகங்கள், போராட்டங்கள் ஆகியவற்றை சமாளிக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். புதிய வேலைக்கு முயற்சித்து வரும் மீன ராசியினருக்கு வேலை கிடைப்பதில் சிறிது தாமதம் ஏற்படும். வெளிநாடுகளில் பணியாற்றிவரும் அன்பர்களுக்கு நிறுவன மாற்றம், கூடுதல் பொறுப்புகள், அதிக உழைப்பு, அலைச்சல் ஏற்படக்கூடும் என்பதைக் கிரகநிலைகள் எடுத்துக்காட்டுகின்றன,

தொழில், வியாபாரம்:

முன்னேற்றம் தடைபடாது. ஆயினும், பல பிரச்சினைகளையும், தடங்கல்களையும் நீங்கள் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். உற்பத்திச் செலவுகள் அதிகரிக்கும். லாபம் திருப்தி தரும் என்றாலும், நிதி தட்டுப்பாடு ஏற்பட்டு, சமாளிக்க நேரிடும். அதிக அலைச்சலும், அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமும், அதனால் உடற்சோர்வும், ஆயாசமும் உண்டாகும். சிம்ம ராசியில் ராகு அமர்வதால், அரசாங்க அதிகாரிகளினால் சிரமங்கள் உண்டாகும்.

மாணவமணிகள்:

படிப்பில் முன்னேற்றம் தடைபடாது. ஆசிரியர்களின் ஆதரவும், உதவியும் கிடைக்கும். விளையாட்டுகள், போட்டிகள் ஆகியவற்றில் வெற்றி பெறுவது கடினம். நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற பாடுபட வேண்டியிருக்கும். தசா, புக்திகள் அனுகூலமற்று இருப்பின், சக மாணவர்களால் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள நேரிடும். மனதில் தேவையற்ற கவலைகள், குழப்பங்கள், சபலங்கள் ஏற்படக்கூடும்.

பெண்மணிகள்:

குடும்ப நிர்வாகத்தில் கவலையளிக்கும் அளவிற்குப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை. வருமானமும் ஓரளவு நல்லபடியே இருப்பதால், கவலையில்லாமல் இருக்கலாம். ராகுவும் அனுகூலமாக இருப்பதால், குடும்பச் சூழ்நிலை திருப்திகரமாகவே இருக்கும். கணவரின் அன்பும், ஆதரவும் ஆறுதலை அளிக்கும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் திருப்தி தரும். வேலை பார்க்கும் பெண்மணிகளுக்கு அலுவலகப் பணிகளில் உழைப்பும், பொறுப்புகளும் அதிகரிக்கும். சக ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோரின் ஒத்துழைப்பு கிட்டும். திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண்களுக்கு வரன் அமைவதில் தாமதமும், தடங்கலும் ஏற்பட்டு, அதன்பிறகே வரன் அமையும். வேலைக்கு முயற்சித்து வரும் பெண்களுக்கு நல்ல வேலை கிடைப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டு, அதன்பின்பு வேலை கிடைக்கும்.

பொருளாதாரம்:

வரும் ஒன்றரை ஆண்டுகளுக்கு பணக் கஷ்டம் இருப்பதற்கு வாய்ப்பில்லை. காரணம், வருமானம் நல்லபடி இருப்பதே ஆகும். இருப்பினும், வரவிற்கு ஏற்ப செலவுகளும் இருப்பதால், சேமிப்பிற்கு வாய்ப்பில்லை. திட்டமிட்டுச் செலவு செய்தால், கவலையின்றி இருக்கலாம். சில தருணங்களில் பணம் தேவைப்படும்போது, ராகுவின் சஞ்சார நிலை கைகொடுக்கும்.

ஆரோக்கியம்:

பொதுவான கோள்சார விதிகளின்படி, ராசிக்கு ருண, ரோக, சத்ரு ஸ்தானமாகிய 6-ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிக்கும்போது, ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். ஆனால், குருபகவான் மீன ராசிக்கு அதிபதியாகத் திகழ்வதால், தற்போது சிம்ம ராசியில் உலவும் குருவினால் உங்கள் உடல்நலனுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

ராகுவின் நிலையினால், அனைத்து காரியங்களிலும், அதிக உழைப்பும், அலைச்சலும் இருக்கும். அதனால், உடலில் சோர்வு உண்டாகும். மற்றபடி, வரும் ஒன்றரை வருட காலத்திற்கு உடல்நலன் திருப்திகரமாகவே இருக்கும்.

அறிவுரை:

1. கூடியவரையில், வீண் செலவுகளைத் தவிர்க்கவும். திட்டமிட்டுச் செலவு செய்தல் நல்லது.

2. வீண் அலைச்சலைக் குறைத்துக் கொள்ளுங்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஒய்வு எடுத்துக்கொள்ளவும்.

3.Regulate Life‘ அதாவது கட்டுப்பாடான உணவு, உறக்க பழக்கங்கள் நல்லது. குறிப்பிட்ட நேரத்தில் உண்பது, அளவோடு உண்பது, இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல், குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச் செல்வது ஆகியவை நன்மை தரும். உடல் நலனைப் பாதுகாத்துக் கொள்வதில் உதவும்.

பரிகாரம்:

1. ஆலங்குடி, மணக்கால், ஐயம்பேட்டை (திருப்பெருவேளூர்), ஸ்ரீ வாஞ்சியம், உப்பிலியப்பன் சந்நிதி தரிசனம் ராகு, குருவிற்கு ப்ரீதியாகும்.

2. வசதியிருப்பின், ராமேஸ்வரம், சேது (திருப்புல்லாணி) சமுத்திர ஸ்நானம் மிகவும் உகந்த பரிகாரமாகும்.

3. மாணவ, மாணவியர் செட்டிப்புண்யம் திருத்தலம் சென்று, அவதார புருஷர் ஸ்ரீமத் நிகமாந்த வேதாந்த தேசிகனால் ஆராதிக்கப்பெற்ற, கல்விக்கு அதிபதியான ஸ்ரீ யோக ஹயக்ரீவரை தரிசித்து வருவது நல்ல பலனை அளிக்கும்.

4. குரு, ராகு கூட்டுச்சேர்க்கையும், விரய ஸ்தானத்தில் கேதுவும், ஒன்பதில் சனியும் இருப்பதால், திருவல்லிக்கேணி ஸ்ரீருக்மிணி சமேத ஸ்ரீபார்த்தசாரதி ஸ்வாமியையும், ஸ்ரீ யோக நரசிம்மரையும், வியாழன், சனிக்கிழமைகளில் தரிசிப்பது விசேஷ நற்பலனை அளிக்கும்.

5. தினமும் இஷ்ட தெய்வத்தையும், பித்ருக்களையும் பூஜித்து வரவும்.

6. சக்தி வாய்ந்த பூவரசன்குப்பம் சென்று ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை ஒரு முறை தரிசித்துவிட்டு வரவும்.

–நன்றி குமுதம் ஜோதிடம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s