ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்: கும்பம் – ஏ.எம்.ஆர்.


(அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் முடிய)

குடும்பம்:

உங்கள் ராசிக்கு பரம சுபக்கிரகமான குருபகவான், சுபத்துவ பாதையில் தனது நட்பு வீடான சிம்ம ராசியில் சஞ்சரிக்கும்போது, ராகு, சிம்மத்திற்கு மாறியுள்ளது மிகவும் நல்லது. ஏனெனில், உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமாகிய கன்னி ராசியில் ராகு சஞ்சரித்த சென்ற சுமார் ஒன்றரை வருட காலம் மிகவும் போதாத காலம் என்றே புராதன ஜோதிட கிரந்தங்களில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய 8-ம் இடத்திலிருந்து விலகி, சப்தம ஸ்தானமாகிய சிம்மத்திற்கு மாறியது நல்லதே. அதற்கு மற்றொரு முக்கிய காரணமும் உண்டு. அதாவது, ராகுவிற்கு சிம்ம ராசியில் குருபகவானின் சேர்க்கை ஏற்படுவதே ஆகும்.

‘குருபகவானுடன் சேரும் ராகு தனது பலத்தை இழக்கிறார்..” எனக் கூறுகிறது ‘பிருஹத் சம்ஹிதை‘ என்னும் ஜோதிட கிரந்தம். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பல சிரமங்கள் குறையும். ஜென்ம ராசியில் கேது நிலைகொண்டிருந்தாலும், குருபகவானின் சுபப்பார்வையைப் பெறுவதால், கேதுவினால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை. மோட்சகாரகரான கேதுவுக்கு, ஆத்மகாரகரான குருபகவானின் பார்வை கிட்டுவது நன்மையே. நிதிநிலைமை நல்லபடி நீடிக்கும். குடும்பப் பொறுப்புகள் சம்பந்தமாக அலைச்சலும், உழைப்பும் இருக்கும். இருப்பினும், அவற்றிற்கு பலன் கிடைக்கும். திருமண முயற்சிகளில் தடங்கல் ஏற்பட்டு, அதன்பின் பலன் அளிக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். நீதிமன்ற வழக்குகள் நீடிக்கும். கணவர்-மனைவியரிடையே ஒற்றுமை நிலவும். மனைவியின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.

உத்தியோகம்:

வேலையில் கடின உழைப்பும், சோர்வும் உண்டாகும். சக ஊழியர்களின் பொறாமையினால், உங்கள் நலன் பாதிக்கப்படக்கூடும். மேலதிகாரிகளின் ஆதரவு குறையும். தாற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்தரமாவதில் தாமதமும், தடங்கலும் ஏற்படும். தசா, புக்திகள் அனுகூலமற்று இருப்பின், விருப்பத்திற்கு மாறான இடமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. வெளிநாடுகளில் வேலை பார்த்துவரும் கும்ப ராசி அன்பர்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் பல நிர்ப்பந்தங்கள் உண்டாகும். உணர்ச்சிவசப்படுவதையும், அவசர முடிவுகளையும் தவிர்ப்பது நல்லது. பொறுமை, நிதானம் ஆகியவையும் அவசியம்.

தொழில், வியாபாரம்:

லாபம் ஒரே சீராக நீடிக்கும். வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாவதில் பிரச்சினைகள் ஏற்படும். போட்டிகள் கடுமையாக இருப்பினும், சமாளித்து விடுவீர்கள். இருப்பினும், விஸ்தரிப்புத் திட்டங்களை ஒத்திப் போடுவது நல்லது. நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு குறையும். வெளியூர் பயணங்கள் லாபகரமாக இருக்கும். சக கூட்டாளிகளினால் அவ்வப்போது சிறு, சிறு கருத்து வேற்றுமை ஏற்பட்டு, பின்பு சரியாகும். ஏற்றுமதி, இறக்குமதித் துறையினருக்கு அலைச்சலும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும்.

மாணவமணிகள்:

கல்வி முன்னேற்றம் தடைபடாது. கிரகிப்புத்திறனும், ஞாபகத் திறனும் திருப்திகரமாக உள்ளன. உயர்கல்விக்கு உங்கள் விருப்பப்படி இடம் கிடைக்கும். விளையாட்டுகள், போட்டிகள் ஆகியவற்றில் வெற்றி பெற பாடுபட வேண்டியிருக்கும். வெளிநாடு சென்று உயர்கல்வி பயில விருப்பமிருப்பின், அத்தகைய முயற்சிகளுக்கு தடங்கல்கள் ஏற்பட்டு, அதன் பின்னரே முயற்சி பலன் அளிக்கும்.

பெண்மணிகள்:

ராகுவிற்கு குருபகவானின் சேர்க்கையும், கேதுவிற்கு குருவின் சுபப்பார்வையும் ஏற்படுவதால், இந்த ராசி மாறுதல் கும்ப ராசிப் பெண்களை அதிகமாகப் பாதிக்காது. சிறு, சிறு உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். குடும்பச் சூழ்நிலை திருப்தி அளிக்கும். வருமானம் நல்லபடி இருப்பதால், குடும்ப நிர்வாகத்தில் சிரமம் இராது. உத்தியோகத்திற்குச் சென்று வரும் பெண்மணிகளுக்கு கூடுதல் பொறுப்புகளும், வேலைச்சுமை கூடுதலும், அசதியை ஏற்படுத்தும். விவாகத்திற்குக் காத்திருக்கும் பெண்களுக்கு தடங்கல் ஏற்பட்டு, அதன் பிறகு வரன் அமையும்.

பொருளாதாரம்:

பணத் தட்டுப்பாடு இராது. குரு கொடுப்பதை செலவு செய்யும்படியான சூழ்நிலையை ராகு உருவாக்குவார். ஆதலால் சேமிப்பிற்குச் சாதியமிராது. கடன் ஏற்படாமல் பார்த்துக்கொள்வார் குரு.

ஆரோக்கியம்:

அதிக உழைப்பினாலும், வெளியூர் பயணங்களினாலும், உடல் ஒய்விற்குக் கெஞ்சும். சிறு, சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு, எளிய மருந்துகளினால் குணமாகும். மற்றபடி, கவலை அளிக்கும் அளவிற்கு உடல் நலன் பாதிப்பு எதுவும் ஏற்படாது.

அறிவுரை:

அடுத்துவரும் ஒன்றரை வருடங்களுக்கு கைப்பணத்தை எண்ணிச் செலவழிக்கவும். முடிந்தபோதெல்லாம் ஓய்வெடுத்துக்கொள்ளவும். மனைவியின் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் அனைவருடனும் அனுசரித்து நடந்து கொள்வது அவசியம்.

பரிகாரம்:

1. தினமும் ஒரு தசகம் ஸ்ரீமந் நாராயணீயம் படித்து வருவது, ராகு கேதுவினால் ஏற்படும் தோஷங்களைப் போக்கும்.

2. தினமும் ஒரு சர்க்கம் ஸ்ரீமத் சுந்தர காண்டம் படிப்பதும் ராகு, கேதுவின் சஞ்சார விளைவுகளிருந்து உங்களைப் பாதுகாக்கும்.

3. 24 சனிக்கிழமைகள், உங்கள் வீட்டின் பூஜை அறையில் ராகுவிற்கு பரிகார தீபமாக ஒரு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வரவும்.

அதேபோன்று, கேதுவிற்காக 24 செவ்வாய்க்கிழமைகள் பசுநெய் தீபம் ஏற்றி வர வேண்டும்.

மாலையில் (சந்தியா காலம்) ஏற்றி வருவது அற்புதப் பலனை அளிக்கும்.

4. முன்னூர் ஸ்ரீ அருளாளப் பெருமான் திருக்கோயில் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும். தீபத்தில் சிறிது பசுநெய் சேர்த்து தரிசித்தால், அதிக நற்பலன் கிடைக்கும்.

5. நாமக்கல் ஸ்ரீ விஸ்வரூப சுந்தர ஆஞ்சநேயர் தரிசனம், ராகு, கேது தோஷங்களைத் தரிசித்த வினாடியே போக்கக்கூடிய சக்தி கொண்டது.

6. தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் ஸ்ரீராமநாமத்தை ஜெபிப்பது எளிய ஆனால் சக்தி வாய்ந்த பரிகாரமாகும். அனுபவத்தில் இதனைக் காண முடியும்.

–நன்றி குமுதம் ஜோதிடம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s