ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்: மகரம் – ஏ.எம்.ஆர்.


(உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2 பாதம் முடிய)

குடும்பம்:

மகர ராசி அன்பர்களுக்கு தற்போது நிகழ்ந்துள்ள ராகு-கேது பெயர்ச்சியினால் நன்மையேதும் ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும், ராசிக்கு லாப ஸ்தானமாகிய விருச்சிக ராசியில் சனி பகவான் அமர்ந்திருப்பது, ஓர் அனுகூலமான கிரகநிலையாகும். வருமானம் திருப்திகரமாக இருப்பினும், “வந்த பணம் எங்கே போயிற்று?” என்று வியக்கும்படி பணம் விரயமாகும். குடும்பப் பிரச்சினைகள் கவலையளிக்கும். நெருங்கிய உறவினர்களிடையே தேவையற்ற வாக்குவாதமும், மனஸ்தாபமும் உண்டாகும். அதனால், மன அமைதி குறையும். அடிக்கடி நிதிப்பற்றாக்குறை ஏற்படுவதால், பிறர் உதவியை நாட வேண்டிய அவசியம் உண்டாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிட்டுவது கடினமாக இருக்கும். நீதிமன்ற வழக்குகள் நீடிக்கும். ஏதாவது ஒரு கவலை மனதை அரித்துக்கொண்டே இருக்கும். அஜாக்கிரதையினால், கீழே சறுக்கி விழுதல் போன்ற விபத்துகள் நேரிடக்கூடும். எதிலும் நிதானம் அவசியம். குழந்தைகளின் கல்வி மற்றும் விவாகம் சம்பந்தமான பிரச்சினைகள் கவலையளிக்கும்.

உத்தியோகம்:

தொழிலுக்கு காரகத்துவம் பெற்ற சனிபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதிகாரிகளின் ஆதரவும், நிர்வாகத்தினரின் பாராட்டுதல்களும் கிட்டும். இருப்பினும், மற்ற முக்கிய கிரகங்கள் அனுகூலமற்று சஞ்சரிப்பதால், அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும். கடின உழைப்பு அசதியை ஏற்படுத்தும். விருப்பத்திற்கு மாறான இடமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. வெளிநாடுகளில் பணியாற்றி வரும் மகர ராசி அன்பர்களுக்கு, நிறுவன மாற்றம் ஏற்படும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு நிலை கொண்டுள்ளதால், அலுவலக சம்பந்தமான வெளியூர் பயணங்களின்போது தேவையற்ற பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள நேரிடும்.

தொழில், வியாபாரம்:

லாபம் ஒரே சீராக இருக்கும். உற்பத்தியும், விற்பனையும் திருப்தி தரும். போட்டிகள் நீடித்தாலும், அவற்றைச் சமாளிப்பதில் சிரமம் ஏதும் இராது. ஏற்றுமதி-இறக்குமதித் துறையினருக்கு லாபகரமான காலகட்டமிது. இருப்பினும், அடிக்கடி நிதி நிறுவனங்களினால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அவ்வப்போது, அரசாங்க அதிகாரிகளின் தலையீடு கவலையளிக்கும். விஸ்தரிப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தடங்கல் உண்டாகும்.

மாணவமணிகள்:

பாடங்களில் மனதை ஊன்றிச் செலுத்த இயலாமல் சபலங்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு கூடாநட்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஞாபக சக்தியும், கிரகிப்புத் திறனும் பாதிக்கப்படும். விளையாட்டுகள், போட்டிகள் ஆகியவற்றில் வெற்றி பெறுவது கடினம். வெளிநாடு சென்று விசேஷ உயர்கல்வி பயில விருப்பம் இருப்பின், அதில் தடங்கல்கள் ஏற்படும். விசா கிடைப்பதில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். ஏற்கனவே வெளிநாட்டில் கல்வி பயின்றுவரும் மாணவ-மாணவியர் ‘ப்ராஜெக்ட்’களை குறித்த காலத்தில் முடிப்பதில் பிரச்சினை ஏற்படும். நேர்முகத் தேர்வுகளில் (Campus Interview) வெற்றி பெறுவது சற்றுக் கடினமாக இருக்கும்.

பெண்மணிகள்:

குடும்ப நிர்வாகத்தை ஏற்றுள்ள பெண்மணிகளுக்குச் சற்று சிரமமான காலகட்டம் இது என்றே கூறவேண்டும். எதிர்பாராத செலவுகளினால் பணப்பற்றாக்குறை ஏற்படக்கூடும். கணவருடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்புள்ளது. நெருங்கிய உறவினர்களின் தலையீடு மன அமைதியைப் பாதிக்கும். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு சனிபகவானின் சுபப் பார்வை இருப்பதால், அலுவலகத்தில் பிரச்சினையேதும் ஏற்படாது. திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண்களுக்கு வரன் அமைவதில் தடங்கலும், தாமதமும் ஏற்படும்.

பொருளாதாரம்:

வீண் செலவுகளைத் தவிர்க்க இயலாது. அஜாக்கிரதையினால் பணம், பொருட்கள் ஆகியவற்றை இழக்க நேரிடும். விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம். நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு உதவி செய்வதற்காக பிறரிடம் பணம் பெற்றுத் தர வேண்டாம். அதனால் பிரச்சினைகள் ஏற்படலாம்.

ஆரோக்கியம்:

ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் குருபகவானும், ராகுவும் நிலை கொண்டிருப்பதால், ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. ஜோதிடக் கலையின் கோள்சார விதிகளின்படி, ராசிக்கு 8-ஆம் இடத்தில் ராகு சஞ்சரிக்கும்போது, சிறு விபத்துகள் ஏற்படக்கூடும். அதிலும் வரும் ஒன்றரை வருட காலத்தில் தசா, புக்திகள் பாதகமாக இருப்பின், விபத்துகளைத் தவிர்க்க இயலாது. அதற்காகவே மகரிஷிகள் உபதேசித்துள்ள சக்தி வாய்ந்த பரிகாரங்களைக் கீழே தந்துள்ளோம். எவ்வித விபத்தும் நேரிடாதபடி இவை உங்களைப் பாதுகாக்கும்.

அறிவுரை:

1. அன்றாட வாழ்க்கையில் அனைத்து விஷயங்களிலும், நீங்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

2. ஒரு சிலருக்கு தரக்குறைவான உணவினால் உடல்நலன் பாதிக்கப்படக்கூடும்.

3. கூடியவரை இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களை ஓட்டுதல், துணையின்றித் தனியாகச் செல்லுதல் ஆகியவற்றை தவிர்ப்பது அவசியமாகும்.

பரிகாரம்:

1. தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் ‘தன்வந்திரி ஸ்தோத்திரம்’ மற்றும் மிருத்யுஞ்சய ஸ்தோத்திரம்’ ஆக்யவற்றைச் சொல்லி வருதல், ராகுவின் அஷ்டம ஸ்தான சஞ்சார தோஷத்தைப் பெருமளவில் குறைத்து விடும்.

2. ஒரு முறை திருநாகேஸ்வரம் சென்று, எள் எண்ணெய் தீபமேற்றி ராகுவை தரிசித்துவிட்டு வரவும்.

3. ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதி அல்லது ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி சந்நிதியில் சனிக்கிழமைகள் தோறும் தீபத்தில் சிறிது நெய் சேர்த்து தரிசித்து வரவும்.

4. ஸ்ரீ வாஞ்சியம், வைத்தீஸ்வரன் கோயில், சிக்கில் ஸ்ரீ சிங்காரவேலன் தரிசனம் நல்ல பலன் அளிக்கும்.

5. திருச்சியை அடுத்துள்ள குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் தரிசனம், அஷ்டம ஸ்தானத்தில் குரு-ராகு சேர்க்கை தோஷத்தைப் போக்க வல்லது.

–நன்றி குமுதம் ஜோதிடம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s