ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்: தனுசு – ஏ.எம்.ஆர்.


(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் முடிய)

குடும்பம்:

கேது மற்றும் குருபகவானால் நன்மைகள் ஏற்படும். ராகு மற்றும் சனி பகவானால் நன்மை ஏற்பட வாய்ப்பில்லை. ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் தனது சுபப்பார்வையினால், கேதுவினால் ஏற்படும் நன்மைகளை அதிகரிக்கச் செய்கிறார். குடும்பச் சூழ்நிலை திருப்திகரமாக உள்ளது. கணவர்-மனைவியரிடையே ஒற்றுமையும், பரஸ்பர அன்பும் மேலிடும். திருமண முயற்சிகள் கைகூடும். ஒரு சிலருக்குச் சொந்த வீட்டிற்கு மாற்றம் செய்யும் வாய்ப்பும் உள்ளது. புதிய பொருட்கள், வஸ்திர சேர்க்கை ஆகியவற்றிற்கு வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நிகழும். சுபச்செலவுகள் அதிகமாக இருப்பினும், சமாளிப்பதில் பிரச்சினை எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை.

உத்தியோகம்:

ஏழரைச் சனியின் ஆரம்பக்கட்டத்திலிருப்பதால், வேலை பார்க்குமிடத்தில் உழைப்பு கடுமையாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பது சந்தேகம். எத்தனை பாடுபட்டு உழைத்தாலும், மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பது கடினம். ஆதலால், பணிகளில் உற்சாகம் குறையும். விரக்தியும் உண்டாகும். தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் தாமதப்படும். வெளிநாடுகளில் வேலை பார்த்துவரும் தனுர் ராசியினருக்கு வேலை பார்க்குமிடத்தில் பல நிர்ப்பந்தங்கள் உண்டாகும். எத்தகைய சூழ்நிலையிலும், நிதானத்தை இழந்து விடவேண்டாம். கிரக நிலைகள் அவசர முடிவுகளில் கொண்டு விடக்கூடும். ஆதலால், உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பது அவசியம்.வெளிநாடு செல்ல முயற்சிக்கும் தனுர் ராசியினர், ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்புள்ளதைக் கிரகநிலைகள் குறிப்பிட்டு, எச்சரிக்கை செய்கின்றன.

தொழில், வியாபாரம்:

போட்டிகள் அதிகரிக்கும். லாபம் ஒரே சீராக இருக்கும். வெளியூர் பயணங்கள் நன்மையளிக்கும். சக கூட்டாளிகளினால் பிரச்சினைகள் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் பகையுணர்ச்சி மேலிடும். ஏற்றுமதி-இறக்குமதித் துறையினருக்கு வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதமேற்படும். அரசாங்க அதிகாரிகளின் தலையீடுகளினால் பணம் விரயமாகும். தேர்தல் வருவதால், அரசியல் கட்சிகளின் நிர்ப்பந்தம் பண விரயத்தை ஏற்படுத்தும். விஸ்தரிப்புத் திட்டங்களை ஒத்திப்போடுவது நல்லது.

மாணவமணிகள்:

படிப்பில் முன்னேற்றம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. ஆசிரியர்களின் ஆதரவு கிட்டும். சகவாச தோஷம் எதுவும் ஏற்படாமல், குருபகவானின் சஞ்சார நிலையும், சுபப்பார்வையும் மாணவ-மாணவியரைப் பாதுகாக்கின்றன. பாடங்களில் மனம் உற்சாகத்துடன் ஈடுபடும். உயர்கல்விக்கு உங்கள் விருப்பப்படி இடம் கிடைப்பதற்குச் சற்று பாடுபட வேண்டியிருக்கும். மற்றபடி பிரச்சினை எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. வெளிநாடுகளில் விசேஷ கல்வி பயின்று வரும் மாணவ, மாணவியர் அவர்களது ப்ராஜெக்ட்களைக் குறித்த காலத்தில் செய்து முடிப்பதற்குச் சிறிது பாடுபட வேண்டியிருக்கும். மற்றபடி வரும் ஒன்றரை வருட காலத்திற்கு கல்வி முன்னேற்றம் எவ்வித பாதிப்புமின்றி நீடிக்கும்.

பெண்மணிகள்:

குருபகவான் மற்றும் கேது ஆகியோரின் அனுகூலமான சஞ்சார நிலைகளினால், குடும்ப நிர்வாகத்தில் எவ்வித சிரமமும் இருக்காது. குடும்பத்தில் அன்னியோன்யம் ஓங்கும். திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண்களுக்கு நல்ல வரன் அமையும். உத்தியோகம் பார்க்கும் பெண்களுக்கு பொறுப்புகள் கூடும்.

பொருளாதாரம்:

அடுத்து வரும் ஒன்றரை வருடங்களுக்கு பணப் பிரச்சினை ஏற்படாமல், பார்த்துக்கொள்வார் குருபகவான். சற்று திட்டமிட்டுச் செலவு செய்தால், சேமிப்பிற்கும் சாத்தியக்கூறு உள்ளது. எத்தருணத்திலும் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட வாய்ப்பில்லை.

ஆரோக்கியம்:

இந்த ஒரு விஷயத்தில் தனுர் ராசி அன்பர்கள் சற்று ஜாக்கிரதையாக இருத்தல் அவசியம். செவ்வாயின் ராசியான விருச்சிகத்தில் சனிபகவான் பலம் வாய்ந்து இருப்பதால், உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. தேவையற்ற அலைச்சல், சக்திக்கு மீறிய உழைப்பு ஆகியவை ஆரோக்கியத்தை பாதிக்கும்.

அறிவுரை:

1. உடல்நலனில் கவனம் தேவை.

2. இரவு நேர பயணங்களின்போது விழிப்புடன் இருப்பது அவசியம்.

3. கண்ட கண்ட இடங்களிலும், கண்ட கண்ட நேரத்திலும், தரக்குறைவான உணவகங்களிலும் உண்பதைத் தவிர்க்கவும்.

4. கட்டுப்பாடான வாழ்க்கை, நேரத்தில் உண்பது, உறங்கச் செல்வது ஆகியவை ஆரோக்கியத்தைப் பார்த்துக்கொள்ள உதவும்.

பரிகாரம்:

1. தினமும் காலையில் நீராடிய பின்பு, ஆதித்ய ஹ்ருதயம், மிருத்யுஞ்சய ஸ்தோத்திரம், தன்வந்திரி ஸ்தோத்திரம் ஆகியவற்றைப் படித்து வரவும்.

2. அருகிலுள்ள ஆலயம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறிது பசுநெய்யும், சனிக்கிழமைகளில் சிறிது எள் எண்ணெயும் தீபத்தில் சேர்த்து வரவும்.

3. ஸ்ரீ வாஞ்சியம், பூவரசன்குப்பம், அஹோபிலம், பரிக்கல், சிங்கிரி கோயில், சிங்கப்பெருமாள் கோயில் ஆகிய க்ஷேத்திர தரிசனம் ஏழரைச் சனி மற்றும் ராகுவினால் ஏற்படும் உபாதைகளைப் போக்கும் சக்தி வாய்ந்தவை ஆகும்.

4. மாலையில் ஸ்ரீ கந்தர் சஷ்டிக் கவசம், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆகியவற்றைச் சொல்லி வரவும்.

5. தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 108 அல்லது 1008ராமநாமஜெபம் செய்து வருவது அளவற்ற சக்தி வாய்ந்த பரிகாரமாகும்.

6. திருவண்ணாமலை க்ஷேத்திர தரிசனமும் நல்ல பலன் தரும்.

–நன்றி குமுதம் ஜோதிடம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s