ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்: விருச்சிகம் – ஏ.எம்.ஆர்.


(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை முடிய)

குடும்பம்:

ஜென்ம ராசியில் சனிபகவான் நிலைகொண்டுள்ள நிலையில் இந்த ராகு-கேது பெயர்ச்சி ஏற்படுகிறது விருச்சிக ராசி அன்பர்களுக்கு! கோள்சார விதிகளின்படி இந்தப் பெயர்ச்சி விருச்சிக ராசி அன்பர்களுக்கு நன்மை செய்ய இயலாது. இருப்பினும், பிரச்சினைகளும் கடுமையாக இருக்காது. இதற்குக் காரணம், ராகுவுடன் குருபகவான் சேர்ந்திருப்பதும், கேதுவிற்கு குருபகவானின் சுபப்பார்வை கிடைப்பதுவுமே ஆகும். குடும்பச் சம்பந்தமான முயற்சிகளில் தடங்கலும், தாமதமும் ஏற்பட்டு, அதன்பிறகே முயற்சிகள் கைகூடும். திருமண முயற்சிகளில் நீங்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். முக்கிய கிரகங்களான குரு, சனி, ராகு, கேது ஆகிய நான்குமே அனுகூலமில்லாத நிலைகளில் சஞ்சரிப்பதால், திருமணத்திற்கு தவறான வரன்கள் அமைந்துவிடக்கூடும். ஆதலால், திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது, வரும் ஒன்றரை வருடக் கிரக நிலைகளைத் தீர கணித்து, ஆராய்ந்து பார்த்து, அதன்பின்பே வரனை நிச்சயிப்பது மிகவும் அவசியமாகும்.

குடும்பத்தில் வீண்செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். கணவர்-மனைவியரிடையே சிறு, சிறு வாக்குவாதங்களும், தேவையில்லாத பிரச்சினைகளும் உண்டாகும். நீதிமன்ற வழக்குகள் இருப்பின், நிச்சயமற்ற சூழ்நிலை உருவாகும். குழந்தைகளினால் பிரச்சினைகள் ஏற்படும். மனஅமைதி குறையக்கூடும்,

உத்தியோகம்:

ராசிக்கு தொழில் ஸ்தானமாகிய சிம்ம ராசியில் குரு, ராகு சேர்க்கை ஏற்பட்டிருப்பது, கடின உழைப்பையும், அலைச்சலையும், அலுவலக சம்பந்தமான வெளியூர் பயணங்களையும் குறிப்பிடுகிறது. எத்தனைதான் பாடுபட்டு உழைத்தாலும், மேலதிகாரிகளை திருப்திப்படுத்த முடியாது. அதனால், பணிகளில் உற்சாகம் குறையும். விரக்தியும், வேதனையும் மேலிடும். இத்தகைய கிரகநிலைகள் உருவாகும்போது, பிரச்சினைகள் எதுவும் கடுமையாக உருவாகாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை ஜோதிடக்கலை விளக்கியுள்ளது. இத்தகைய வழி காட்டுதலுக்காகவேதான் வேதகால மகரிஷிகள் நமக்கு அற்புதமான இக்கலையை அளித்துச் சென்றுள்ளனர்.

மேலதிகாரிகளுடன் கருத்து வேற்றுமை ஏற்படும்போது, வாக்குவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. இன்று வளைந்து கொடுத்தால், நாளை நிமிர்ந்து நிற்கலாம்! அவசர முடிவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். ஒரு சிலருக்கு, மனதிற்கு பிடிக்காத இடமாற்றம் ஏற்படக்கூடும். ஏற்றுக்கொள்வது நல்லது. முக்கியமாக அரசாங்க பணியாளர்கள் தங்கள் பணிகளில் கவனமாக இருப்பது அவசியம். வங்கி போன்ற நிதிநிறுவனங்களில் பொறுப்புள்ள பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் பண விஷயங்களில் எவரையும் முழுமையாக நம்பி விடக்கூடாது.

தொழில், வியாபாரம்:

ராசிக்கு தொழில் ஸ்தானமாகிய சிம்ம ராசியில் குருபகவானும், ராகுவும் சஞ்சரிக்கின்றனர். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும் அரசாங்க அதிகாரிகளினால் சிரமங்களும், பண விரயமும் ஏற்படக்கூடும். உற்பத்திக்கு அத்தியாவசியமான மூலப்பொருட்களின் விலை பல மடங்கு உயர்வதால், லாபம் பாதிக்கப்படும். இருப்பினும் நஷ்டம் ஏற்படாது. சக கூட்டாளிகளிடையே கருத்து வேற்றுமை ஏற்படக்கூடும். கொடுக்கல்-வாங்கலில் பகையுணர்ச்சி மேலிடும். ஏற்றுமதி-இறக்குமதித் துறையினருக்கு எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைப்பதில் தடங்கலும், தாமதமும் ஏற்பட்டு, அதன்பிறகே கிடைக்கும். ஒருசிலர் வெளிநாடு சென்று வரும் சாத்தியக்கூறும் உள்ளது.

மாணவமணிகள்:

படிப்பில் நாட்டம் குறையும். சக மாணவர்களுடன் நெருங்கிப் பழகாமல், தான் உண்டு, தன் படிப்புண்டு என்று இருப்பது உங்கள் எதிர்கால கல்வி முன்னேற்றத்திற்கு உதவும். விளையாட்டுகள், போட்டிகள் ஆகியவற்றில் அரும்பாடுபட்டு வெற்றி பெற முடியும். வெளிநாடுகளில் உயர்கல்வி பயின்று வரும் மாணவ-மாணவியர் தங்கள் ‘ப்ராஜெக்ட்’களை குறித்த காலத்திற்குள் முடிப்பதில் தடங்கல் ஏற்படலாம். வெளிநாடு சென்று உயர்கல்வி பயில வேண்டுமென்ற விருப்பம் இருப்பின், அதற்கான விசா கிடைப்பதில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதைக் கிரகநிலைகள் எடுத்துக்காட்டுகின்றன,

பெண்மணிகள்:

குடும்ப நிர்வாகத்தை ஏற்றிருக்கும் பெண்மணிகளுக்கு சிறு, சிறு பிரச்சினைகள் கவலையளிக்கும். திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண்களுக்கு வரன் அமைவதில் தாமதமேற்படும். வேலை பார்க்கும் பெண்களுக்கு அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும். மேலதிகாரிகளின் கண்டிப்பினால், எதிர்காலம் பற்றிய அச்சம் மேலிடும்.

பொருளாதாரம்:

அடுத்துவரும் ஒன்றரை ஆண்டுகளுக்கு பண பிரச்சினை இராது. ஆனால் வரவும், செலவும் சமமாகவே இருக்கும். கூடியவரையில் திட்டமிட்டுச் செலவு செய்வது நன்மையளிக்கும்.

ஆரோக்கியம்:

வீண் அலைச்சலும், பிரயாணங்களும், கடின உழைப்பும் அசதியை ஏற்படுத்தும். இருப்பினும் கவலைப்படும் அளவிற்கு உடல்நலன் பற்றிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை.

அறிவுரை:

1. கைப்பணத்தை எண்ணி, எண்ணிச் செலவழிக்கவும்.

2. கூடியவரையில் அலைச்சலையும், உழைப்பையும் அளவோடு வைத்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம்:

1. ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் ‘குரு ஸ்தோத்திர‘த்தைத் தினமும் சொல்லி வரவும்.

2. வியாழக்கிழமைகளில் பகல் உணவு ஒரு பொழுது மட்டும் உண்டு, இரவில் உபவாசம் இருத்தல் சிறந்த நற்பலனையளிக்கும்.

3. குடும்பத்தினருடன் ஒரு முறை ஆலங்குடி, திருநாகேஸ்வரம் திருத்தலங்களைத் தரித்து வரவும்.

4. வசதி இருப்பின் ஒரு முறை கங்கையில் சங்கல்ப ஸ்நானம் செய்து வருவதும் நல்ல பலனளிக்கும்.

5. பெண்மணிகள் தினமும் ஸ்ரீ அபிராமி அந்தாதி, ஸ்ரீ மீனாட்சி பஞ்சரத்னம், ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்திரம் ஆகியவற்றைச் சொல்லி வருவது சிறந்த பரிகாரமாகும்.

6. நவபிருந்தாவன தரிசனமும் நன்மையைத் தரும்.

–நன்றி குமுதம் ஜோதிடம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s