ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்: துலாம் – ஏ.எம்.ஆர்.


(சித்திரை 1,2, ஸ்வாதி, விசாகம் 3 பாதம் முடிய)

குடும்பம்:

இதுவரை உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமாகிய கன்யா ராசியில் நிலை கொண்டிருந்த ராகு, அந்த இடத்தை விட்டு உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமாகிய சிம்ம ராசிக்கு மாறுவது சிறந்த யோக பலன்களைக் குறிக்கிறது.

ஏற்கனவே, சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவானின் சேர்க்கையும் ராகுவிற்கு ஏற்படுகிறது. “நல்லோரைக் காண்பதுவும் நன்று; அவரோடு இணங்குவதும் நன்றே…” என்பது ஆன்றோர் வாக்கு. ஆதலால், குருபகவானோடு சேர்ந்துள்ள ராகுவும் நன்மை செய்யும் திருவுள்ளத்தைச் சற்று அதிகமாகவே கொண்டுவிடுகிறார். இதேபோன்று, கும்ப ராசிக்கு மாறியுள்ள கேதுவிற்கு குருபகவானின் சுபப்பார்வையும் கிடைக்கிறது. இப்போது துலாம் ராசிக்கு லாப ஸ்தானமாகிய சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் ராகு அடுத்து வரும் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பல நன்மைகளை வாரி வழங்கவுள்ளார். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். திருமண முயற்சிகள் எளிதில் கைகூடும். புதிய வஸ்திர சேர்க்கை, சொந்த வீடு அமைதல், பல காலமாக பிரச்சினைகள் ஏற்படுத்தி வந்த கடன் தொல்லைகள் தீர்தல் போன்ற நன்மைகளை இப்போது எதிர்பார்க்கலாம். நீதிமன்ற வழக்குகள் வெற்றி பெறும். கணவர்-மனைவியரிடையே பரஸ்பர ஒற்றுமை நிலவும்.

ராசிக்கு பஞ்சம ஸ்தானமாகிய கும்ப ராசியில் சஞ்சரிக்கும் கேதுவினால், தீர்த்த, தல யாத்திரை சித்திக்கும். குரு, ஆசார்ய மகா புருஷர்கள், மகான்கள், சித்தர்கள் ஆகியோரின் ஆசியும், தரிசனமும் கிட்டும். புண்ணிய காரியங்களில் பணம் செலவழியும்.

உத்தியோகம்:

பல காரணங்களினால் இதுவரை மறுக்கப்பட்டு வந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றை இனி எதிர்பார்க்கலாம். வேலைக்கு முயற்சித்து வரும் துலாம் ராசியினருக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடுகளில் பணியாற்றி வரும் நேயர்களுக்கு பல நன்மைகள் காத்துள்ளன. தேடிவரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைப்பதால் பணிகளில் உற்சாகம் மேலிடும்.

தொழில், வியாபாரம்:

செய்து வரும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உற்பத்தி அதிகமாகும். வெளிநாட்டு ஆர்டர்கள் எளிதில் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார அபிவிருத்தித் திட்டங்கள் இருப்பின், அவற்றை செயல்படுத்துவதற்குக் கிரக நிலைகள் மிகவும் அனுகூலமாக உள்ளன. போட்டிகள் நீடித்தாலும், அவற்றைச் சமாளித்து நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். அரசாங்க ஆதரவையும் இனி எதிர்பார்க்கலாம். ஏற்றுமதி-இருக்குமதித் துறையினர் சிறந்த லாபம் அடைவார்கள். நிதிநிறுவனங்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். கூட்டாளிகளினால் ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் சுமுகமாகத் தீரும்.

மாணவமணிகள்:

கல்வி முன்னேற்றம் எவ்விதத் தடையுமின்றி நீடிப்பதால், மனதில் உற்சாகம் பிறக்கும். பாடங்களில் மனதை ஊன்றிச் செலுத்த முடியும். ஞாபகத் திறனும், கிரகிப்புத்திறனும் கூடும். உயர்கல்விக்கு உங்கள் விருப்பப்படி இடம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று கல்வி பெறும் வாய்ப்பும் கிடைக்கும். தேவையான உதவி மற்றும் விசா ஆகியவை எளிதில் கிடைக்கும்.

பெண்மணிகள்:

குடும்ப நிர்வாகத்தை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியளிக்கும். ஓய்வில்லாத உழைப்பு இருப்பினும், மனதில் மகிழ்ச்சியும், உற்சாகமும் குறையாது. திருமணத்திற்குக் காத்திருக்கும் துலாம் ராசி பெண்மணிகளுக்கு நல்ல வரன் அமையும். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலர் பதவி உயர்வையும், ஊதிய உயர்வையும் எதிர்பார்க்கலாம்.

பொருளாதாரம்:

கிரகநிலைகள் மிகவும் அனுகூலமாக உள்ள நிலையில் ராகுவும் நன்மை செய்யும் மாறுதலைப் பெற்றிருக்கிறார். எந்நிலையிலும் கடன் வாங்கவேண்டிய அவசியம் இராது. சிறிது முயற்சித்தால், பழைய கடன்களைக் கூட அடைத்துவிடும் அளவிற்கு பண வசதி உள்ளதை ராகு மற்றும் கேது ஆகிய இரு சாயா கிரகங்களின் ராசி மாறுதல் எடுத்துக் காட்டுகிறது.

ஆரோக்கியம்:

ஆரோக்கியத்தில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். நிரந்தர நோய்களுக்குத் தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வரும் துலா ராசியினருக்குக் கூட உடல் வேதனைகள் குறையும். அவ்வப்போது அதிக அலைச்சல் இருப்பினும், உடல்நலனைக் கடுமையாகப் பாதிக்காது.

அறிவுரை:

வரும் ஒன்றரை வருட காலத்திற்கு பண வசதி மேம்படும். அதனை ஆடம்பரச் செலவுகளிலும், தேவையற்ற செலவுகளிலும் விரயம் செய்து விடாமல், திட்டமிட்டுச் செலவு செய்து, எதிர்காலத்திற்கு சேமித்து வைத்துக் கொள்ளவும். (இதை ஏன் குறிப்பாகக் கூறுகிறோம் என்றால், துலா ராசி அன்பர்களின் பிறவிக் குணம், கையில் பணம் இருக்கும்போது சற்று தாராளமாகச் செலவழித்து விடுவதே ஆகும்.)

பரிகாரம்:

1) ஒரு ஞாயிற்றுக் கிழமையில் சூரியனார் கோவில் சென்று, கருவறையிலுள்ள தீபத்தில் சிறிது நெய் சேர்த்து தரிசித்து விட்டு வாருங்கள்.

2) மாணவமணிகள் ஒருமுறை கூத்தனூர் சென்று அங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீ சரஸ்வதி தேவியைத் தரிசித்து விட்டு வரவும்.

3) நிரந்தர நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அன்பர்கள் காலையில் ஆதித்ய ஹ்ருதயமும், மாலையில் ஸ்ரீதன்வன்த்ரி ஸ்லோகமும் படித்து வரவும்.

4) வீட்டின் பூஜை அறையில் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும், கூடுதலாக மண் அகலில் நெய் தீபமொன்று ஏற்றி வரவும். அதே மண் அகலை மீண்டும் மீண்டும் உபயோகிக்கலாம்.

5) ஒரு முறை கரூரை அடுத்த தேவர் மலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கதிரி நரசிம்மரை நெய் தீபமேற்றி தரிசித்து விட்டு வரவும்.

 

–நன்றி குமுதம் ஜோதிடம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s