10-கடவுளைத் தேடி… பாலகுமாரன்மனிதர்களோடு வாழ்வின் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், குருவினுடைய அருளால், அவருடைய தீண்டுதலால் உள்மன வெளிச்சம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. ஆனால், “என்னை ஏன் காப்பாற்றிக்கொள்ள முடிய வில்லை. எதனால் நான் அடிக்கடி தண்டிக்கப்படுகிறேன்’ என்று கேட்டதற்கு, “பூர்வஜென்ம வினை என்று ஒன்று உண்டு. ஒன்றின் தொடர்ச்சியாகத்தான் மற்றொன்று நடக்கிறது. ஒரு ஊசல் இடப்பக்கம் போவதால்தான் வலப்பக்கம் பயணிக்கிறது. வலப்பக்கம் போவதால்தான் இடப்பக்கம் நகர்கிறது. ஏதோ ஒரு கணத்தில் இந்த ஊசல் எதனாலேயோ நின்றாகவேண்டும். நீ, உன்னுடைய வாழ்வு, உன்னுடைய வாழ்வின் தொடர்ச்சி, உன் போனஜென்மத்து வினை, அதற்கு முந்திய ஜென்மத்து வினை என்று மட்டும் யோசிக்காதே. இந்த ஊசல் விஷயத்தை பிரபஞ்சத்தினுடைய எல்லா அசைவுகளுக்கும் ஒப்புமை வைத்துப் பார். அதோ, அந்த மாடு, இந்த நாய், அந்த பாறாங்கல்லைப் புரட்டினால் அதற்கு அடியில் இருக்கின்ற தேள் குடும்பம் எல்லாமும் முன்வினையைத் தொட்டுத்தான் உருவாகியிருக்கின்றன. இதுதான் பரிணாம வளர்ச்சி. இதுதான் சுழல். இதுதான் சக்கரம். உன்னைக் காட்டிலும் கடுமையாக தண்டிக்கப்பட்டவர் எத்தனை பேர். நேற்று கொடிபறக்கப் போய்விட்டு, இன்றைக்கு தோல்வியுற்று துணிப்பையோடு மல்லாந்து கிடக்கிறவர் எத்தனை பேர். எது வெற்றி, எது தோல்வி, எது தண்டனை, எது பாராட்டு. இது மிகப்பெரிய கணக்கு பால்குமார். மிகப்பெரிய பிரமிப்பை கொடுக்கின்ற கணக்கு.

ஆனால் இது அறிந்துகொள்ள முடியாத விஷயமல்ல. தன்னை விட்டுவிட உலகம் தெரியும். உலகத்தை விட்டுவிட பிரபஞ்சம் புரியும். இதற்குப்பிறகு வேறு என்னென்னவோ புரியும்.” அவர் வெறுமே பேசவில்லை. செயலிலும் காட்டினார்.

வலப்பக்கம் அந்த ஏழரை மணி நேரம் ஒரு சந்திர உதயம் நடந்துகொண்டிருந்தது. அநேகமாக அது பௌர்ணமிக்குப் பிறகான பிரதமையாக இருக்கலாம். இரண்டு பனை உயரத்திற்கு சந்திரன் பால்போல காய, ஊர் அடங்க, நான் அவருக்கு நிலவை சுட்டிக்காட்டினேன். “பகவான், இட்ஸ் மூன். அங்கே நிலவு” என்பதாகப் பேசினேன். “ஆமாம். நிலவு” என்று அவர் எதிரொலித்தார். வேறேதோ பேச்சில் ஈடுபட்டு கிழக்கிலிருந்து மேற்குப் பக்கம் பார்வை திரும்ப, மலைக்கு சற்று மேலே இன்னொரு நிலவு இருந்தது. நான் அதிர்ந்துபோனேன். கண்ணில் ஏதாவது கோளாறா. இரண்டு நிலவுகள் தோன்றுகின்றனவே. பார்வை பிரிவுபட்டுவிட்டதா என்று கிழக்கும் மேற்குமாகப் பார்க்க, அவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். “இன்னொரு நிலவு தெரிகிறது. அனதர் மூன் பகவான்.” நான் உரக்க கத்தினேன். “தேர் ஆர் செவன் பால்குமார்.” அவர் பதில் சொன்னார். எவருமே அருகே இல்லாத அந்த இருள் கவிழ்ந்த மாலைப்பொழுதில், அவர் வீட்டு வாசற்படியில் அமர்ந்துகொண்டு, கிட்டத்தட்ட என் கையை அவர் முழங்காலில் பதித்துக்கொண்டு ஒரு நண்பரைப்போல அவரோடு உரையாடினேன்.

“நான் முன்பு வெகுகாலம் தங்கியிருந்த புன்னை மரத்தடிக்குப் போய் பார்த்துவிட்டு வா.” அவர் துரத்துவார். வேறொரு இடம் நோக்கி பார்த்துவிட்டு வரச் சொல்வார். வராண்டாவில் ஒருக்களித்துப் படுத்துக் கொள்வார். நான் கால் பிடித்துவிடுவேன். விரலால் ஒவ்வொரு இடமாக மிகச் சரியான விகிதத்தில் அழுத்துவேன். அன்பும் ஒருமுகப்பட்ட அக்கறையும் இணைபிரியாதவை. எங்கு அன்பு இருக்கிறதோ அங்குஅக்கறை இருக்கும். எங்கு அக்கறை இருக்கிறதோ அங்கு அன்பு இருக்கிறது என்று அர்த்தம். என்னுடைய விரல்களின் அசைவில் அவர் ஆழ்ந்து தூங்குவார். “சகலமும் அறிந்த சாந்தம் யோகி ராம்சுரத்குமாரம்‘ என்ற வரிகளோடுதான் நான் அவரை பார்ப்பேன். சென்னை பற்றிய எந்த செய்தியும் திருவண்ணாமலையில் இருக்கும் எனக்கு எட்டாது. எட்டாதவாறு அவர் பார்த்துக்கொண்டார் என்றே தோன்றுகிறது.

ஆனால் அவர் விடை கொடுத்து சென்னைக்கு கிளம்பும்போதே, அங்கே போய் ஈடுபடவேண்டியவற்றில் மனம் தத்தளிக்கும். இந்தப் படம், அந்தப் படம், இந்த வேலை, அந்த வேலை என்று எழுத்துப் பணியும், திரைப்படத்துறையில் வசனகர்த்தா வேலையும் மிக விரைவாகவும் முழுதாகவும் நடைபெற்றன. உழைப்புக்கேற்ற ஊதியம் என்று சொல்ல முடியாது. டிராக்டர் கம்பெனியைவிட அதிகமான ஊதியம் கிடைத்தது.

வீட்டில் குருவின் படங்களே முக்கியமாக இடம்பெற்றன. எல்லா பக்கமும் அவர் முகமே அலங்கரித்தன.

குருவே தெய்வம். தெய்வம் என்பது குருவே என்று என் வீடு மாறிற்று. பல பண்டிகைகள் வருகின்றன. கொண்டாடுவதற்கு விருப்பம் இருக்கிறது. குழந்தைகளை அது குதூகலப்படுத்துகிறது. வீட்டிலுள்ள பெண்களும் விருப்பப்படுகிறார்கள்.

குரு என்று வந்தபிறகு இந்த மாதிரியான கொண்டாட்டங்கள் என்ன அர்த்தப்படும். எல்லா கேள்விகளுக்கும் எந்தவித தயக்கமுமின்றி உடனடியாக பதில் சொல்வார். “எந்த பண்டிகை வேண்டுமானாலும் கொண்டாடு. ராமா, கிருஷ்ணா, இயேசு, அல்லா, சிவன், முருகன் என்று ஏதாவது சொல். ஆனால் மனம் மிகப்பெரிய அந்த சக்தியை நோக்கி வியப்போடு இருக்கட்டும். அவர் தொழக்கூட சொல்லவில்லை. அந்த பெரும் சக்தியை வியப்போடு அவதானிப்பதே மிக முக்கியம்” என்றார். அதுவே உன்னுள் இருப்பது என்றும் சுட்டிக்காட்டினார்.

உன்னைப் பார்க்கிறபோது நீ உன்னை என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறாயோ அது அழியும். அது அழிந்தபிறகு உண்மை தோன்றும். கண்டதைக் கண்டு கண்டதை அழி. எது பார்க்கிறதோ அதைப் பார். அப்போது பார்க்கவேண்டாதது அழிந்துபோகும். எது பார்க்கிறது. எது சிந்திக்கிறது. எது யோசிக்கிறது. எவரால் இந்த எண்ணங்களெல்லாம் எழுகின்றன. இந்த எண்ணங்களின் மூலகாரணம், இருப்பு எது. ஒவ்வொரு முறையும் விதம்விதமாக இந்த விஷயத்தை பேச்சாலும் செய்கையாலும் அவர் தொட்டுக் காட்டினார்.

எனக்கு நெருங்கிய நண்பரிடம், நான் வீடு வாங்க ஆறு லட்ச ரூபாய் முன்பணமாகக் கொடுத்தேன். இன்னும் பத்து லட்ச ரூபாய் தரவேண்டும். இரண்டு பெரிய படுக்கை அறைகள், ஒரு நீண்ட ஹால், ஒரு டைனிங் டேபிள் போடக்கூடிய இடம், சிறிய கிச்சன், இரண்டு சிட் அவுட், கார் பார்க்கிங் என்று பல்வேறு விஷயங்கள் இருந்தன. வீடு ஈசான்யத்தில் இருந்தது. கிழக்குப் பக்கம் திறந்து மேற்குப் பக்கம் மூடியிருந்தது. வடக்கத்தி காற்று அழகாக உள்ளே வந்தது. கிழக்குப் பக்கம் திறந்து தெற்குப் பக்க அறைக்கதவையும் திறந்து வைத்தால் காற்று உள்ளுக்குள்ளே சுழன்று வெளியேறிற்று. தரையில் சலவைக்கல் போடப்பட்டிருந்தது. நல்ல கண்ணாடி அலமாரிகள், பீரோக்கள் இருந்தன. பதினாறு ரூபாய் என்பது சரியான விலை. மலிவு என்றுகூட சொல்லலாம். நான் அடுத்தபடியாக பத்து ரூபாய் புரட்ட எனக்கு நாக்கு தள்ளிப்போயிற்று. எந்த வங்கியும் கடன் கொடுக்க முன்வரவில்லை. சினிமாக்காரனுக்கு எப்படி கடன் கொடுப்பதென்று மறுதலித்தார்கள். கொஞ்சம் கூடுதல் வட்டியோடு ஒரு தனி நபருடைய கம்பெனிக்குப் போக, அங்கு பத்து ரூபாய் கிடைத்தது. பத்திரங்கள் கைமாறின.

ஒருமுறைகூட கடனை அடைப்பதில் நான் தாமதம் செய்ததில்லை. ஒரு மாதம்கூட பிணங்கியதில்லை. மிகச் சரியாக ஐந்து தேதிக்குள் திரைப்படத்தில் வேலை செய்ததால் அடைத்தேன். சிறிய படமோ, பெரிய படமோ- மிக உயர்ந்த டைரக்டரோ, புதுமுகமோ, நான் அந்த வேலையை மிக உண்மையாகச் செய்தேன். “பாலகுமாரனை கூப்பிடுங்க. நல்லா சீன் சொல்லுவாரு, வேற ஒண்ணுமே பண்ண வேணாம்.

அவுட் லைன் கொடுத்துட்டா போதும். கதை போட்டுக் கொடுத்துடுவாரு’ என்று திரைப்படத்துறையில் பேசினார்கள். அதற்காகவே அழைத்தார்கள்.

“ஹீரோ ஒரு பொறுக்கி. கதாநாயகி அந்த ஊரில் இருக்கிற பணக்கார வீட்டுப் பொண்ணு. அந்தப் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஒரு அரசியல்வாதி பையனுக்கு ஆசை. அந்த அரசியல்வாதிக்குக்கூட பையனுக்கு அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிவைக்க ணும்னு எண்ணம். சம்பந்தம் பேச வர்றாங்க.

ஆனா அந்த அரசியல்வாதி பையனை அவளுக்குப் பிடிக்கல. அவன் அலட்டல் பிடிக்கல. நல்லவனதான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறபோது அவ கண்ணுக்கு ஹீரோ தென்படறான். அவன் பொறுக்கி மாதிரி இருந்தாலும் ரொம்ப நல்லவன்னு அவளுக்குப் புரியுது. எப்படி லவ் பண்றாங்க. எப்படி மீட் பண்றாங்க. எப்படி கதை போகுது. நீங்கதான் தீர்மானம் செய்யணும்.’

மொட்டை அடித்து காது குத்திய குழந்தையை, வீறிடும் மழலையை மடியில் போட்டுவிட்டுப் போவார்கள். சமாதானப்படுத்தி மெல்ல மெல்ல அலங்காரம் செய்யவேண்டும். “மொட்டை குட்டி, பார்க்க அழகா இருக்கியே’ என்று பேசும்படியாகவும் வைக்கவேண்டும். நான் செய்திருக்கிறேன். அறையில் நான் காட்சியை விவரித்துச் சொல்ல, என்னிடம் கேட்டுவிட்டு உடனே ஹாலுக்குப் போய், “இன்னிக்கு காலைல ஒரு சீன் புடிச்சேன். சொல்லட்டுமா” என்று தானே அந்தக் காட்சியை உருவாக்கியதாய் சொல்லக்கூடிய இளைஞர்களையும் நான் அங்கு பார்த்திருக்கிறேன். இதுதான் விதி. அதுதான் அங்கு ரூல். அப்படித்தான் அங்கு நியமம். இப்படி சொல்வதற்குத்தான் எனக்கு காசு.

கார் வாங்க முடிந்தது. ஆனால், “கார் ஓட்டக்கூடாது. அப்படியென்றால் கார் வாங்கலாம். நீ கார் ஓட்டத்தான் வேண்டுமென்றால் இந்தப் பிச்சைக்காரனிடம் வந்து அனுமதி கேட்க வேண்டாம்.” கடைசி வரை நான் கார் ஓட்ட அவர் அனுமதிக்கவே இல்லை. “கார் ஓட்ட ஆளா கிடைக்காது.

அதுபற்றி கவலைப்படாதே. நீ உன்னுடைய வேலையில் மூழ்கிக் கொண்டிரு. பயணப்படு” என்று ஆறுதலாகச் சொன்னார்.

உள்ளே கவனிப்பதற்கு கார் பயணம் ஒரு நல்ல வழி. கண்கள் எதிரே இடப்பக்கம் அல்லது வலப்பக்கம் பயணப்படும்போது கடந்து போனவற்றைப் பார்த்துக்கொண்டி ருக்கும். பார்வை எதன்மீதும் நிற்காது. எதிலும் நிலைக்காது. ஆனால் பார்வையிலிருந்து எதுவும் மறையாது. கண் என்ன பார்க்கிறதோ அது மனதில் பதியாது. மனம் என்ன செய்கிறதோ அது மூளையில் பதியும்.

தியானத்தில் ஏற்பட்ட இந்த நிலை உட்கார்ந்து எதிரே இருக்கின்ற விஷயத்தைப் பார்க்கின்றபோது ஏற்பட்டது. ஆழ்ந்து உள்ளே ஏதோ சிந்திக்கின்ற ஒரு சுகம் இதில் இருந்தது. ஒரு கதையை கோர்வையாக நெய்கின்ற திறன் இருந்தது. அதைத் தாண்டி எதுவும் இல்லாமல் ஒரு வெறுமையில் மனம் உட்கார்ந்துகொள்ளும். நினைப்புகள்அத்தனையும் மடங்கி, சுருங்கி, சுருண்டு காணாதுபோய் வெறுமே கண் பார்த்துக் கொண்டிருக்கும். இது விழிப்பில் தூக்கம். நான் கார் ஓட்டியிருந்தால் இந்த விழிப்பில் தூக்கம் எனக்கு எளிதில் லபித்திருக்காது. முட்டி மோதி மற்றவரையும் கொன்று நானும் செத்துதான் போயிருப்பேன். “நீ ஓட்டக்கூடாது’ என்று அதட்டியதன் அர்த்தம்பிற்பாடுதான் தெரிந்தது. மனம் உறங்குவது போல அமைதியாய் இருந்தது. ஆனால்விழித்துக்கொண்டிருந்தது. எப்படி விழிப்பில் தூக்கம் இருந்ததோ, அதேபோலதூக்கத்தில் விழிப்பு இருந்தது. உடம்பு தூங்கியது நன்றாகத் தெரிந்தது. ஆனால் மனம் தூங்கவில்லை. மனம் தூங்குகின்ற உடம்பை, அந்த வெறுமையை அனுபவித்துக் கொண்டிருந்தது. எல்லா சாதகர்க்கும் இது ஒரு முக்கியமான விஷயம். இதை தாண்டாது தியானத்திற்குள் நகரவே முடியாது.

நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர் எனக்கு செய்த உதவிகள் அனந்தம். இது என்னுடைய பயிற்சியினால் அல்லது என்னுடைய முயற்சியினால் வரவில்லை. சட்டென்று என்னுள் நான் கரைந்து காணாமல் போவதென்பது அவருடைய அருளினால்தான் நடைபெற்றிருக்கவேண் டும். அவர்தான் என்னை ஆழ அமிழ்த்தியிருக்கவேண்டும். அலையலும், மனக் குழப்பமும், ஓயாத பேச்சும் கொண்டிருந்த என்னை அவர் அமைதியாக்கினார்.

நண்பர்களிடமிருந்து நான் விலகியிருந்தது உண்மை எனினும், நண்பர்கள் இல்லையே என்ற ஏக்கமும் அவ்வப்போது கொண்டிருந்தேன். உயிர் நண்பன் என்று ஒருவரை ஒருவர் உரசிக்கொண்டும், பாராட்டிக் கொண்டும் இருப்பதைப் பார்த்து, “இது ஏன் நமக்கு லபிக்கவில்லை’ என்று வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒரு சத்திய சந்தனுக்கு நண்பர்கள் தேவையே இல்லை. எந்த உறவும் அவசியம் இல்லை. ஆனால் எல்லா உறவுகளோடும் சௌஜன்யமாக இருக்கலாம். “தாமரை இலையில் தண்ணீர்’ என்பது சாதாரண உவமானமாயினும் மிகச் சரியான உவமானம். ஒட்டாத மனம் என்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம்.

ஒரு மடாலயத்தில் சிஷ்யன் இறந்து போனான். குரு விம்மி விம்மி அழுதார். ஊர் மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஒரு சன்னியாசி, ஒரு மடாதிபதி இப்படி அழுகிறாரே என்று வருத்தப்பட்டார்கள். சரியா என்று விவாதித்தார்கள். அவரிடம் விசாரித்தார்கள். “எனக்கு அழுகை வருகிறது. அழுகிறேன், அவ்வளவே” என்று பதில் சொன்னார். அவர் அழுதாலும், சிரித்தாலும், அமைதியாக இருந்தாலும் ஒன்றுதான். உள்ளுக்குள் நாடகம் இல்லாது இருக்கிறார்.

பொய்த் தோற்றம் தருவதில்லை. பொய்த் தோற்றம் தருகின்ற புத்திசாலித்தனத்தைஅவர் ஏற்கவில்லை.

ஒரு மடாலயத்திலிருந்து ஒரு குரு வருகிறார்.

சீடனை அழைத்து அந்த மடாலயத்தின் குரு தோட்டத்தை செப்பனிடச் சொன்னார். சீடன் ஓடினான். ஒரு இலை, ஒரு சுள்ளிகூட இல்லாது தோட்டத்தை சுத்தம் செய்தான். ஓடிவந்து குருவிடம் “சுத்தமாகிவிட்டது” என்றான். குரு எட்டிப் பார்த்துவிட்டு, “இல்லை. மறுபடியும் சரி செய்” என்றார். அவன் மறுபடியும் ஓடினான்.

இரண்டு, மூன்று இலைகள் விடுபட்டிருந்தன. மறுபடி வந்து நின்று, “சுத்தம் செய்தாகிவிட்டது” என்றான். எட்டிப் பார்த்து மிக கவனமாக ஒவ்வொரு இடமாக உற்றுப் பார்த்து, “இல்லை. தோட்டம் சரியாக இல்லை” என்று குரு சொல்ல, அவன் மறுபடியும் ஓடினான்.

ஒரே ஒரு பழுத்த இலை புற்களுக்கு நடுவே இருந்தது. அவர் கண்ணுக்கு எப்படித் தெரிந்தது என்று ஆச்சரியத்தோடு, இலையை எடுத்து குப்பைக் கூடைக்குள் போட்டான். வந்து நின்றான். குரு கொஞ்சம் கோபமான நடையோடு தோட்டத்திற்கு வந்தார். ஒரு மரத்தை உலுக்கினார். பனித்துளிகள் கீழே விழுந்தன. இலைகள் உதிர்ந்தன. பூக்களை மரம் சொரிந்தது. இன்னொரு மரத்தை உலுக்கினார். வேறொரு மரத்தை உலுக்கினார். எல்லா மரமும் பூக்களையும் இலைகளையும் பனித்துளிகளையும் உதிர்த்திருந்தன. தோட்டம் வாசனையாக இருந்தது. அவர் ஆழ்ந்து மூச்சுவிட்டுக்கொண்டு, “இப்போது விருந்துக்கு தோட்டம் தயாராகிவிட்டது” என்று உரக்கச் சொன்னார். இயல்பாக இருத்தலே மிக முக்கியம். அதுவே அழகு. வலுக்கட்டாயமான, முரட்டுத்தனமான ஒழுக்கம் உன்னை எங்கேயும் கொண்டுபோய் சேர்க்காது.

இன்னொரு சந்திப்பில் பகிர்ந்துகொண்டபோது அவர் மிகுந்த குதூகலத்தோடு என்னோடு பேசத் துவங்கினார். அப்பொழுதெல்லாம் சன்னிதித் தெரு வீட்டில் பேசுவதில்லை. வேறொரு லாட்ஜில் அந்த அறையிலுள்ள நாற்காலி, கட்டில்களை அப்புறப்படுத்திவிட்டு, தரையில் பாய் விரித்தபடி அமர்ந்து எங்களையும் உட்காரச் சொல்வார். என்னுடைய மலர்ச்சியை உணர்ந்த என் தாயார் தன்னுடைய அலட்டலைவிட்டு அவரிடம் சரணடைந்தார். என் குடும்பமே அவரை உள்ளங்கையில் தாங்கிற்று. நானும் பகவான் யோகி ராம்சுரத்குமாரும் நிறைய பேசினோம். எனக்கு ஏற்பட்ட பல சந்தேகங்களை அவர் பேசியும் பேசாமலும் தீர்த்திருக்கிறார். அயண் ராண்ட்டை மறுத்ததும், ரமணரைப் பாராட்டியதும் அந்த மாதிரியான இடத்தில் நடந்தன. “இன்றைக்கு பிரபந்தம் தொடர்ந்து படிப்போம்” என்று உட்கார்ந்து என்னை படிக்கச் சொல்லி, ஸ்ரீகௌரியை பாடச்சொல்லி கேட்பார். இன்னொரு நாள் தேவாரம் என்று போவோம். சித்தர்கள் பாடல் பற்றி பேசுவோம். இவற்றை விளக்கினால் கட்டுரை வெகுவாக நீளும். அதுமட்டுமல்லாது,அப்படி பேசி சல்லாபித்தது மேலும் ஆழ்ந்துபோக உதவி செய்ததே தவிர, சம்பாஷணைகள் முற்றிலுமாய் என் ஞாபகத்தில் இல்லை. அது எங்கோ வழுக்கி காணாமல் போய்விட்டது. தேவையில்லை என்பதால் மூளையினுடைய பதிவிலிருந்து நகர்ந்துவிட்டது. சந்திப்பில் பலமுறை பலமுறை அவரால் தீண்டப்பட்டு, முதுகு தடவப்பட்டு, தலையில் கை வைக்கப்பட்டு நான் அலறியிருக்கிறேன். குண்டலினி உச்சியில் எழுந்து, மேல் கபாலத்தைப் பிளந்துகொண்டு வெளியேறிய வேதனையையும் அனுபவித்திருக்கிறேன்.

எதிரே உட்கார்ந்திருந்த ஒரே கூட்டிற்குள் இருந்த உயிர்த் துளியை உணர்ந்திருக்கிறேன்.

அவர் இன்னார் என்று தெரிந்து, அவரை நோக்கி ஆறுதலாகவும் பிரியமாகவும் சிரித்திருக்கிறேன். இந்த மனிதன் கோழைதான். என்ன செய்வது. பாவம். நசுக்கப்பட்டவன். எனக்குத் தெரிந்தது. “என்ன பொய்களடா பாவி. எதற்கு சொல்கிறாய். என்ன கர்வம். எல்லாம் அழியுமடா.’ இன்னொருவரைப் பார்த்தும் சிரித்திருக்கிறேன்.

என்ன வேண்டும் உனக்கு. உனக்கு கேட்கவே தெரியவேயில்லை. உன்னை நீ கேட்டுக்கொள்ளவே இல்லை. மனைவி கேட்டதை, தாய் கேட்டதை, மைத்துனன் கேட்டதை, மைத்துனி கேட்டதை, தங்கை கேட்டதை இங்கு கொண்டுவந்து கொட்டுகிறாய். உனக்கு என்ன வேண்டும் தெரியவே இல்லை.

“மாம்பலத்துல ஒரு வீடு இருக்கு. மைலாப்பூர்ல ப்ளாட் இருக்கு. கும்பகோணத்துல நாலு ஏக்கர் நிலம் இருக்கு” என்று ஒருவர் சொல்லிக்கொண்டே வர, மகா பெரியவர், “உனக்குன்னு என்ன சம்பாதிச்ச” என்று கேட்க, அவர் மறுபடியும் வேறு சில சொத்துகளைச் சொல்ல, “நான் கேட்கறது உனக்குன்னு நீ சம்பாதிச்சது என்ன” என்று கேட்க, அவருக்குப் புரிந்துபோய் விக்கி விக்கி அழ, “”எதுவுமே சம்பாதிக்கவில்லை” என்று கைவிரிக்க, “போ. போய் உனக்குன்னு ஏதாவது சம்பாதி” என்று அவர் திருப்பி அனுப்பிய கதை எனக்கு ஞாபகம் இருக்கிறது.

“மகாபெரியவா இந்த பிச்சைக்காரனைப் பார்த்து, “நீ சூரிய வம்சமா’ என்று கேட்டார். நான் “ஆமாம்’ என்று பதில் சொன்னேன். அவர் முன்பு சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்தேன். அப்படியே காணாமல் போனேன். நான் எழுந்திருக்கவே இல்லை. என்னைப் பார்த்து பெரியவா மெல்ல சிரித்தபடி நகர்ந்து போய்விட்டார் என்று பிற்பாடு கேள்விப்பட்டேன். யாரோ சிரமப்பட்டு எழுப்பி உட்காரவைத்து சுவரோரம் சாய்த்து வைத்தார்கள். நான் அப்படியே இருந்தேன்.” பகவான் பேசினார்.

“பால்குமார், குரு நமஸ்காரம் என்பது காணாமல் போவதுதான்.” எனக்கு அழுவதைத் தவிர, வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை. இன்னும் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறேனே என்ற வெட்கம்தான் என்னைத் தாக்கியது. “இட் ஈஸ் இன்னர் சர்கிள் பால்குமார். நீங்களெல்லாம் நெருங்கியவர்கள். இது முந்தைய ஜென்மத்து தொடர்பு. மறுபடி மறுபடி தொடர்பு கொள்வோம். அதுதான் விதி. அப்படித்தான் நடக்கும். பால்குமார், இஃப் அட் ஆல் தேர் ஈஸ் எனி ரீ பர்த், திஸ் பெக்கர் ஈஸ் லைக் டு வித் பாலகுமாரன்” என்று பத்து பன்னிரண்டு முறை முணுமுணுப்பாகவும், உரத்த குரலிலும் என்னிடமும், அங்குள்ள நண்பர்களிடமும் சொன்னார். “ஒருவேளை இந்த பிச்சைக்காரனுக்கு மறுஜென்மம் என்று இருந்தால், அவன் பாலகுமாரனோடு இருக்க விரும்புகின்றான்’ என்று பறையறிவிப்பதுபோல பேசினார். அது ஒரு சத்தியவாக்கு போல எல்லார் முன்பும் வைக்கப்பட்டது.

அவருக்கு மறுபிறவி உண்டா. இல்லை. இருக்காது. எனக்கு பிறவி உண்டு. அந்த பிறவியின் ஆரம்பத்தில் நான் அவருடைய விஷயத்தை உள்வாங்கி, வேறுவிதமான ஒரு உன்னதமான வாழ்க்கையை நடத்துவேன் என்று தோன்றியது. அதற்கான பயிற்சிகள்தான் இந்த ஜென்மத்தில் நடந்துகொண் டிருக்கின்றன என்ற எண்ணம் ஏற்பட்டது.

“எப்போதோ நடந்த காரியம். முழுவதும் உண்மை. ஒரு பொல்லாப்பும் இல்லை’ என்ற யாழ்ப்பாணத்து யோகர் ஸ்வாமிகளின் மகாவாக்கியங்கள் என்னுள் கத்தியைப்போல சொருகப்பட்டன. அந்த வாக்கியங்களின் முழு கனம் எனக்கு முற்றிலும் புரிந்தது.

(தொடரும்)

–நன்றி நக்கீரன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s