ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்: மிதுனம் – ஏ.எம்.ஆர்.


குடும்பம்:

மிதுன ராசி அன்பர்களுக்கு இந்த சாயா கிரகங்களின் ராசி மாறுதல் சிறந்த நன்மைகளை அளிக்கக் கூடிய மாறுதல்கள் ஆகும். குரு பகவானின் திரிதீய ராசி சஞ்சார தோஷத்தினால் ஏற்படும் சிரமங்களுக்கு அவ்வப்போது நிவர்த்தியைத் தந்தருள்வார் ராகு. கேதுவும் அனுகூல நிலையில் சஞ்சரிப்பதால், குடும்ப சூழ்நிலை நல்லபடி மாறும். பணத் தட்டுப்பாடு ஏற்படும்போது, சிறு முயற்சியிலேயே உதவிகள் கிட்டும். திருமண முயற்சிகளில் பிரச்சினைகள் ஏற்படும்போது, ராகுவின் சஞ்சார நிலை கைகொடுக்கும். நீதிமன்ற வழக்குகள், சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் ஆகியவற்றில் நியாயம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த ஒற்றுமைக் குறைவு நீங்கும். கணவன்-மனைவியிடையே ஏற்பட்டு வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். இதுவரை குடும்பத்தில் கட்டுக்கடங்காமல் ஏற்பட்டுவந்த வீண் செலவுகள் இனி குறையும். மனதில் ஏற்பட்டுவந்த சஞ்சலங்கள், சபலங்கள், சந்தேகங்கள் ஆகியவை மறையும்.

உத்தியோகம்:

சென்ற பல மாதங்களாக அலுவலகத்தில் ஏற்பட்டுவந்த நிம்மதியற்ற சூழ்நிலையில் தற்போது நல்ல மாற்றம் ஏற்படும். நியாயமாக உங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு இனி கிடைக்கும். உங்களைக் கண்டாலே இதுவரை முகம் சுளித்து வந்த மேலதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்படுவதால், கவலைகள் குறையும். சிலருக்கு இடமாற்றமும், சிறு பதவி உயர்வு ஒன்றும் கிட்டும். சனிபகவானும் அனுகூல நிலையில் சஞ்சரிப்பதால், ராகுவினால் ஏற்படும் நன்மைகள் அதிகரிக்கும். நிறுவன மாற்றத்திற்கு முயற்சித்து வரும் மிதுன ராசி அன்பர்களுக்கு அம்முயற்சியில் வெற்றி கிட்டும். வேலை காரணமாக வெளியூர்கள் சென்றுவர நேரிடும். அதனால் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும்.

தொழில், வியாபாரம்:

இதுவரை தொடர்ந்து தடைபட்டு வந்த தொழில் முன்னேற்றத்தில், அந்நிலை நீங்கி மீண்டும் சிறந்த அபிவிருத்தி உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதித் துறைகளில் உள்ள பாலஹனுமான் வாசக அன்பர்கள் வெளிநாடு சென்றுவரும் வாய்ப்பும், அதன் விளைவாக தொழில் முன்னேற்றமும் ஏற்படும். நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பும் கிட்டும்.

மாணவமணிகள்:

தற்போது நிகழவிருக்கும் இந்த ராசி மாறுதல் உங்களுக்குப் பல நன்மைகளை அளிக்க உள்ளது. வித்யாகாரகரான புதனும் அனுகூலமாக இருப்பதால் உங்கள் கல்வி முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உயர்கல்விக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். கிரகிப்புத்திறனும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும். வெளிநாடு சென்று உயர் கல்வி பயில விருப்பம் இருப்பின், அதற்கான ஆரம்ப முயற்சிகளைத் தற்போது மேற்கொள்ளலாம். தேவையான நிதி உதவி, விசா ஆகியவை சிரமம் இன்றி கிடைக்கும். படிப்பில் மட்டுமின்றி, விளையாட்டுகள், போட்டிகள் ஆகியவற்றிலும் உங்களுக்கு எளிதில் வெற்றி கிட்டும்.

பெண்மணிகள்:

குருபகவானின் சிம்ம ராசி சஞ்சாரத்தினால் பல வகைகளிலும் சிரமப்பட்டு வந்த உங்களுக்கு, ராகு-கேது சாயா கிரகங்களின் தற்போதைய ராசி மாறுதலினால் பல நன்மைகளை எதிர்பார்க்கலாம். மனதில் ஏற்பட்டு வந்த கவலைகளும், குழப்பங்களும் இனி இராது. மனதில் தெளிவு பிறக்கும். உத்தியோகம் பார்க்கும் பெண்மணிகளுக்கும் அனுகூலமான கால கட்டமிது.

பொருளாதாரம்:

பொருளாதாரப் பின்னடைவினால் சென்ற சில மாதங்களாகவே கவலைப்பட்டு வந்த உங்களுக்கு அந்நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும். வருமானம் உயரும். வீண் செலவுகள் குறையும். எதிர்பாராத இடங்களில் இருந்து உதவிகள் கிட்டும். அதன்மூலம் தங்கள் பொருளாதார நிலை சீர்படும்.

ஆரோக்கியம்:

உங்கள் உடல்நலனில் நல்ல முன்னேற்றத்தை இப்போது நீங்கள் காணலாம். இதுவரை ஏற்பட்டு வந்த உடல் உபாதைகள் இனி இராது.

அறிவுரை:

1) தேடிவரும் வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

2) திட்டமிட்டுச் செலவு செய்யவும்.

3) கூடியவரையில் தேவையற்ற அலைச்சலையும், கடின உழைப்பையும் தவிர்க்கவும்.

பரிகாரம்:

1) ஒரு முறை குடும்பத்தினருடன் திருநாகேஸ்வரம் திருத்தலம் சென்று ஸ்ரீ ராகுவிற்கு பால் அபிஷேகம் செய்வித்து, பசுநெய் தீபம் ஏற்றிவைத்து தரிசித்துவிட்டு வரவும்.

2) இதற்கு வசதி இல்லாத அன்பர்கள் தங்கள் வீட்டின் பூஜை அறையில் ஸ்ரீ ராகுவின் படத்தை வைத்து, நெய் தீபம் ஏற்றிப் பூஜித்து வரலாம்.

3) முன்னூர் ஸ்ரீ பிரகன்நாயகி சமேத ஸ்ரீ ஆடவல்லீஸ்வரப் பெருமானை சனிக்கிழமையன்று சென்று தரிசித்துவிட்டு வரவும்.

4) பிரசித்திபெற்ற திருக்கழுக்குன்றம் திருத்தலத்திற்கு ஒருமுறை சென்று ஸ்ரீ வேதகிரீஸ்வரப் பெருமானுக்கு, நெய் தீபம் ஏற்றித் தரிசித்து விட்டு வரவும்.

–நன்றி குமுதம் ஜோதிடம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s