புது ராகம் படைப்பதாலே… ஸ்ரீதர் சுப்ரமணியம்


இளையராஜாவின் ரசிகன் நான் என்பதை சொல்ல வேண்டியதில்லை. சுமார் 35 வயதிற்கு மேற்பட்ட எந்தத் தமிழனுமே இளையராஜாவின் ரசிகனாகவே இருந்திருக்க முடியும். ஏனெனில் எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகள் முழுவதிலும் அவரைத் தவிர வேறு கதி நமக்கு இருக்கவில்லை. சாதாரணமாக ஒரு இனக் குழுவில் பத்து வருடங்களில் டஜன் கணக்கான இசைக் கலைஞர்கள், இசைக் குழுக்கள் உதயமாவார்கள். தமிழகத்தில் மட்டும் ஒரு பத்து வருடங்களுக்கு வேறு யாரும் தலையே எடுக்க முடியாத அளவுக்கு அவர் இயங்கினார். அதற்கு அவரின் அசாத்தியத் திறமை ஒரு காரணமாக இருந்தாலும் வந்த எல்லா வாய்ப்புகளையும் அவர் ஏற்றுக் கொண்டு வேலை செய்தார் என்பதும் முக்கிய காரணம். அதனால் எந்த தயாரிப்பாளருக்குமே வேறு எந்த இசை அமைப்பாளரையும் தேட மனம் வந்திருக்கவில்லை. ராஜா கொஞ்சம் பிடிவாதமாக நடந்திருக்காவிட்டால் பாலசந்தர், மணிரத்தினம் கூட ஒரு ரஹ்மானைத் தேடி அலைந்திருக்க மாட்டார்கள்.

அது ஒரு புறம் இருக்க, இளையராஜாவின் இசையை மீறி அவரைப் பற்றிய புள்ளி விபரங்கள்தான் என்னை மிகவும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றன. அவரின் கேரியர் உச்சத்தில் இருந்த காலத்தில் வருடத்துக்கு 35 முதல் 40 படங்கள் பண்ணி இருக்கிறார். ஒரு சராசரிக்கு 35 என்றே எடுத்துக் கொண்டால் ஒரு படத்துக்கு 5 பாடல்கள் என்ற மேனிக்கு எடுத்தால் கிட்டத் தட்ட ஒரு நாளைக்கு ஒரு பாடல் என்ற கணக்கு வருகிறது. இது தவிர பின்னணி இசை, How To Name It, Nothing But Wind, அம்மன் பாடல்கள் என்று தனி ஆல்பங்கள் வேறு. இது மனித உழைப்பு என்பதையும் மீறி அசாதாரணமானது. ஒரு ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமானால் ஆங்கில பாப் / ராக் இசையில் ஜாம்பவான்கள் என்று கருதப்படும் பீட்டில்ஸ் (Beatles) அவர்கள் வாழ்நாள் முழுதும் உருவாக்கிய பாடல்கள் 275 மட்டுமே. பிங்க் ஃபிளாய்ட் (Pink Floyd) 158, கிரேஃட்புல் டெட் (Grateful Dead) 184. இருப்பதிலேயே மிக அதிகமான எண்ணிக்கை பாப் டிலன் (Bob Dylan) 460. இளையராஜாவின் பாடல்கள் இந்நேரம் 5000த்தை தாண்டி இருக்கும்.

இதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அன்று போலவே இன்றும் வேலை செய்து வருகிறார். அன்று போல 40 படங்கள் அவருக்கு கிடைப்பதில்லை என்றாலும் வருடத்துக்கு 10 முதல் 15 ஆல்பங்கள் வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறார். மலையாளப் படங்கள் நிறையவும், கொஞ்சம் தெலுங்கு, கன்னடம் என்றும் செய்து கொண்டு இருக்கிறார். இப்போதும், 70 வயதாகியும்,  ஒப்பீட்டளவில் இன்று கேரியர் உச்சத்தில் உள்ள எந்த இசை அமைப்பாளரை விட அதிக ஆல்பங்கள் ராஜாதான் வெளியிடுகிறார்.

இதைக் கண்டு அதிசயப்படும் அதே நேரத்தில் ஒரு கேள்வி வருகிறது: 5000-மோ 6000-மோ, இந்த மாபெரும் இசைக் கிடங்கில் எத்தனை பாடல்கள் குப்பை ரகத்தில் வரும்? கடந்த பதினைந்து வருடங்களில் அவர் இசை அமைத்த பாடல்களில் நல்ல பாடல்கள் எத்தனை? மொத்த பாடல் எண்ணிக்கையில் ஹிட் ஆன பாடல்களின் விகிதாசாரம் எவ்வளவு (Total no. of songs composed : No. of hit songs). அவர் பாடலுக்காகவே ஓபனிங் கிடைத்த படங்கள் எவ்வளவு?

இன்றைக்கு இளையராஜாவின் திறமைக்கேற்ற content அமையவில்லை என்று சொல்பவர்களுக்கு நினைவிருக்கும். ஒரு காலத்தில் அவர் முகத்துக்காகவே படங்கள் ஓடின. பூ விலங்கு, கொக்கரக்கோ, பன்னீர் புஷ்பங்கள், கீதாஞ்சலி போன்ற படங்கள் பெரிய ஹீரோக்கள் இல்லாமலே பாடல்கள் ஹிட் ஆகி ஓடின. ராமராஜன், ராஜ் கிரண் போன்றவர்களை பெரிய ஸ்டார் ஆக்கியவர் அவர்தான். அம்மன் கோயில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தாள் போன்ற படத்தின்  பாடல்களை ராஜா இசைத்துக் கொடுத்ததற்கு அப்புறம்தான் கதையையே  உட்கார்ந்து எழுதியதாக ஆர் சுந்தரராஜனே ஒரு மேடையில் குறிப்பிட்டு இருக்கிறார். அன்று அப்படி இருந்த ராஜாவுக்கு இன்று content மற்றும் இயக்குனர்கள் முக்கியமாய்ப் போனது ஏன் என்கிற கேள்வி எழுகிறது.

இன்றும் கூட இளையாராஜா பற்றி சொன்னதும் அதீதமாக கோபப்பட்ட எத்தனை தீவிர ரசிகர்கள் அவரின் சமீபத்திய பாடல்களை எல்லாமே கேட்டிருக்கிறார்கள் என்ற கேள்வி எனக்கு வருகிறது. இளையராஜா என்றதும் நமக்கு ‘பருவமே புதிய பாடல் பாடு’, ‘காதலின் தீபம் ஒன்று’, அந்தி மழை பொழிகிறது’ இதெல்லாம் தானே நினைவுக்கு வருகிறது. தாரை தப்பட்டை-க்கு முன்பு போன வாரம் கூட ஒரு தெலுங்கு பட ஆல்பம் வெளியானது – ‘அம்மாயிதோ அப்பாயி’. கொஞ்ச நாள் முன்பு ஒரு ஐயப்பன் ஆல்பம் வந்தது. ஒரு சாய் பாபா பஜன் வந்தது. ‘கிடா பூசாரி மகுடி’, ‘ஒரு ஊர்ல’ என்றெல்லாம் தமிழ்ப் பட ஆல்பங்கள் வந்தது. அன்று பட்டையை கிளப்பிய ஆர் சுந்தர ராஜனே திரும்பி வந்து இயக்கி ராஜா இசை அமைத்த ‘சித்திரையில் நிலா சோறு’ என்ற படம் வந்தது. இளையராஜா ரசிகர்கள் எத்தனை பேர் இந்த ஆல்பங்கள் கேட்டிருக்கிறீர்கள்?

நான் கேட்டிருக்கிறேன். கேட்டு மிகவும் வருத்தப்பட்டிருக்கிறேன். இளையராஜாவுக்கு இந்த எந்த ஆல்பங்களுக்கு இடையில் எல்லாம் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. ஐயப்பன் ஆல்பத்திலும் ஓரிரு சுமாரான பாடல்கள் இருந்தன. சமீபத்திய ரமணர் ஆல்பத்திலும் பாம்பே ஜெயஸ்ரீயை வைத்து கர்நாடக சங்கீதத்தில் ஒரு பாடல் கொஞ்சம் வசீகரிக்கும் விதத்தில் இருந்தது (மாத்ரு பூதேஸ்வரி). ஆனால் separating wheat from the chaff  என்று சொல்வார்கள். அந்த மாதிரி தேடித் தேடி படு சுமாரான பாடல்களுக்கு நடுவில் பழைய இளையராஜாவை தேடுவது மிகவும் களைப்பாக இருக்கிறது. இந்த மாதிரி சாய்பாபா பாடல்களோ, அம்மாயிதோ அப்பாயிகளோ கேட்கும் போது அவரின் ‘உறவெனும் புதிய வானில்’ அல்லது ‘சங்கீத ஜாதி முல்லை’ நினைவுக்கு வந்து தொலைக்கிறது. அது இன்னமும் சோகத்தை தருகிறது. தாரை தப்பட்டையும் அதே மாதிரிதான் இருந்தது.

அதுவுமின்றி அவரை இன்னமும் கொண்டாடிக் கொண்டிருப்பது 35 வயதை தாண்டியவர்கள்தாம். இன்றைய இளைஞர்கள் பெரும்பாலோரோ அவரை தாண்டிப் போய் வெகு காலம் ஆகிறது. எனக்கு எம்எஸ்வி பாடல்கள் எப்படி அந்நியமாகவே இருந்தனவோ அதே மாதிரி அவர்களுக்கும் இளையராஜா அந்நியப்பட்டுத்தான் இருக்கிறார்.

அவரை தூக்கிக் கொண்டாடும் நிறைய பேர் அவர் தன் முந்தைய ஆளுமையின் உலர்ந்த பிம்பமாக மாறி வருகிறார் என்பதை உணர வேண்டும். ஒரு கலையின்  தாக்கம் என்பது எண்ணிக்கையில் அல்ல என்பதை உணர வேண்டும். நிர்வாணா குழுவின் கர்ட் கோபைன் (Kurt Cobain) இரண்டே ஆல்பத்தில் மேற்கத்திய இசையின் போக்கையே பாதித்தார். மைக்கேல் ஜாக்சனின் மொத்த பாடல்கள் ஐம்பதையே தாண்டாது. ஆயிரக் கணக்கில் நாவல்கள் எழுதிய ராஜேஷ் குமாரை விட மூன்றே நாவல்கள் எழுதிய சுந்தர ராமசாமியைத்தான் கொண்டாடி வருகிறோம். எண்ணிக்கையில் ரெகார்ட் செய்வதோ, அரை மணி நேரத்தில் ஒரு பாடல் கம்போஸ் பண்ணி விட்டேன் என்பன போன்ற விஷயங்களோ எண்பதுகளில் அதிசயமான விஷயங்களாக இருந்திருக்கலாம். இப்போது அதையெல்லாம் யாரும் சீரியசாக எடுத்துக் கொள்வதே இல்லை. அப்படி எடுத்துக் கொள்ள வேண்டுமானால் நீங்கள் அரை மணியில் கம்போஸ் பண்ணிய பாடல் ‘போவோமா ஊர்கோலம்’ ரேஞ்சுக்கு இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அந்த ‘அரை மணி நேர கோர்வைகளால்’ வரும் சலிப்பு அற்புதமான பழைய காவியங்களின் பிம்பங்களையும் பாதிக்கும். அது அந்தக் காவியங்களின் நிழலில் வளர்ந்த என் போன்றவர்களுக்கு பெரும் மன வருத்தத்தையே அளிக்கும். அப்படிப்பட்ட மன வருத்தத்தின் பாதிப்பில் தோன்றிய எண்ணம்தான் அவர் ரிடையர் ஆகிப் போய் விட்டால் மரியாதையாக இருக்குமே என்று பதிவு போட்டதன் காரணம்.

ஆனால் அவர் இசையை சுத்தமாக விடுத்து போய் திருவண்ணாமலை ரமண ஆசிரமத்தில் செட்டில் ஆகி விட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ‘சித்திரையில் நிலா சோறு’, ‘ஒரு ஊர்ல’, ‘கிடா பூசாரி மகுடி’ போன்ற யாருமே கேட்காத ஆல்பங்களை தயாரிக்காமல் இருக்கலாம். இன்றும் கூட அவர் நேரம் எடுத்துக் கொண்டு, கொஞ்சம் மெனக்கெட்டு தயாரித்த ஆல்பங்கள் ஓரளவு நன்றாகவே இருக்கின்றன. ‘திருவாசகம்’, ‘நீதானே என் பொன் வசந்தம்’ போன்றவை உதாரணங்கள். சினிமாவை விட்டு விட்டு தனியாக ஒரு How To Name It அல்லது திருவாசகம் போன்ற கோர்ப்புகளை உருவாக்க முயற்சிக்கலாம். அவருக்கு இதயத்துக்கு மிகவும் உகந்த மேற்கத்திய செவ்வியல் (western classical) இசையில் ஏதாவது பரிசோதனை முயற்சி செய்யலாம். அதுவுமின்றி இப்போது அவர் ‘சோளம் விதைக்கையிலே’ பாடிய ‘இளைய’ ராஜா இல்லை.ஒரு ‘முதிய’ ராஜாதான். அவருக்கென்று ஒரு அந்தஸ்து இருக்கிறது. ஒரு குரு ஸ்தானம் இருக்கிறது. அதனை பயன்படுத்தி புதிய தலைமுறைக்கு அவர் உதவலாம். ராஜா இசை கற்றுக் கொடுக்கிறேன் அல்லது இசையில் ஒரு நிலை அடைந்தவர்களுக்கு உதவுகிறேன் என்று அறிவித்தால் நீண்ட கியூவில் நிற்பார்கள்.

இது எல்லாவற்றும் மேலாக, முக்கியமாக, அவரின் பழைய catalogueஏ பராமரிப்பின்றி இருக்கிறது. அவரின் முக்கியமான ஆல்பங்கள் இப்போது எங்குமே கிடைப்பதில்லை. சாவன், ஐ-டியூன்ஸ் என்று எங்குமே கிடைப்பதில்லை. யூ டியூபில் படு மோசமான ஆடியோ தரத்தில்தான் அவை இருக்கின்றன. உறவெனும் புதிய வானில், அந்தி மழை பொழிகிறது போன்ற பாடல்கள் படு மோசமான ஒலித் தரத்தில்தான் இருக்கின்றன. அவற்றை அவரே டிஜிட்டல் ரீ-மாஸ்டர் செய்யலாம். அவரே ஒரு வலைத் தளம் நிறுவி அவரின் எல்லாப் பாடல்களையும், பின்னணி இசைகளையும் உயர்தர MP3 வடிவத்தில் வழங்கலாம். ஒரு ட்ராக்-குக்கு 10-15 ரூபாய் வைத்து டவுன்லோட் வசதி, இணைய வர்த்தக வசதி (payment gateway) எல்லாம் வைத்து வழங்கலாம். கூகுல் நிறுவனத்தைக் கேட்டாலே அந்த தளத்தில் நல்ல தேடல் வசதியை அமைத்துத் தருவார்கள். கண்டிப்பாக சுந்தர் பிச்சையும் ராஜா-வைக் கேட்டேதான் வளர்ந்தவராக இருப்பார். அவரே கூட இதில் தனி முனைப்பு எடுத்து வேலை செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த மாதிரி தன் catalogue-ஐ நல்ல தேடல் வசதி மற்றும் தரமான MP3 யோடு வெளியிட்டால் பெரும் விற்பனை நடக்கும் வாய்ப்பு இருக்கிறது. எண்பதுகளில் ஆளாளுக்கு கேசட்டில் அவர்களுக்குப் பிடித்த ராஜா பாடல்களை வரிசைப் படுத்தி ரெகார்ட் பண்ணிக் கொண்டு தங்கள் வீட்டில் கேட்டு கேட்டு மகிழ்ந்திருக்கிறார்கள். தெருவுக்கு தெரு காயத்ரி ஆடியோ, ராகதேவன் சவுண்ட்ஸ் என்று ரெகார்ட் கடைகள் இருந்தன. அதையே திரும்பி இன்றும் செய்வதற்கு நிறையப் பேர் தயார்தான். என்ன, காயத்ரி ஆடியோ கடைக்கு பதில் இன்று வலைத்தளம் தேவைப்படுகிறது. அதை இளையராஜாவே செய்தால் அந்த தளத்துக்கு ஒரு  நம்பகத்தன்மையும் இருக்கும். அவருக்கும் சிதறாமல் வருமானம் கிடைக்கும்.

இந்த மாதிரி எல்லாம் நிறைய செய்யலாம். இதைத்தான் இன்று அவரிடம் எதிர் பார்க்கிறோம். அனிருத் அல்லது சந்தோஷ் நாராயணுடன் போட்டி போட்டு அவர் ஜெயிக்க வேண்டும் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை. அவர்களே கூட அப்படி யோசிக்க மாட்டார்கள். இளையராஜா மனித இசைக் கலைஞர்களை மீறிய ஒரு அதிசயம். அந்த அதிசயத் தன்மையை நினைத்து கேட்டு கேட்டு வியந்து கொண்டிருக்கவே என் போன்ற அவர் ரசிகர்கள் விரும்புகிறோம். அதை அவர் கவனமாக பரிசீலிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

11 thoughts on “புது ராகம் படைப்பதாலே… ஸ்ரீதர் சுப்ரமணியம்

 1. காரிகன் December 31, 2015 at 12:47 PM Reply

  What goes up must come down. இந்த விதி புரியாதவர்கள் இளையராஜா ரசிகர்கள். வம்படியாக இரா-வை இன்னமும் அளவுக்கு மீறிப் புகழ்வதில் அவர்களுக்கு மனதிருப்தி கிடைக்கிறது. திரும்பிவராத இளையராஜாவின் எண்பதுகளை அசைபோடும் இன்பத்தில் இப்படிச் செய்வதாக எடுத்துக்கொள்ளலாம்.

  மிகத் தெளிவாக இன்றைய இளையராஜா பற்றிய கருத்தை எழுதியிருக்கிறீர்கள். அவரது ஆத்மார்த்த விசிறிகளின் எண்ணமும் அதுவாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. அவர் இப்போது மற்றவர்களை ஆசீர்வதிக்கும் இடத்திற்கு வந்துவிட்டார். இன்னமும் போட்டியில் இருக்கவேண்டும் என்று இமான், கிப்ரான் போன்றவர்களோடு ரேஸ் ஓட நினைப்பது … என்னத்தை சொல்ல?

  • BaalHanuman December 31, 2015 at 4:10 PM Reply

   நன்றி காரிகன் உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும்… நண்பர் அமுதவன் தளம் மூலம் உங்கள் அறிமுகம் கிடைத்தது பற்றி இங்கே நினைவு கூறுகிறேன்….

 2. Ganesh Mathrubootham December 31, 2015 at 4:13 PM Reply

  Great article. But please make sure internet ராஜா வெறியர்கள் don’t see this 🙂 They already made James Vasanthan shut down his twitter account.

 3. k.s.mani January 1, 2016 at 4:26 PM Reply

  not agree

  • BaalHanuman January 3, 2016 at 4:28 PM Reply

   Sure Sir. Feel free to disagree 🙂

 4. xavier raja January 5, 2016 at 6:33 AM Reply

  Excellent article… I have quoted this article in Karigan’s blog too..

  • BaalHanuman January 6, 2016 at 2:23 AM Reply

   Thanks Xavier for your appreciation!

 5. charles January 7, 2016 at 6:43 PM Reply

  இளையராஜா இசையமைத்த சமீபத்திய திரைப்படங்களின் பாடல்கள் ஹிட் ஆகாமல் போனதாலோ ராஜாவின் ரசிகர்களுக்கும் பிடிக்காமல் போனதாலோ அவருடைய இசைத்திறனும் இசையறிவும் மழுங்கிப் போனதாக அர்த்தம் இல்லை. அவருடைய எண்பதுகளை மட்டுமே மனசுக்குள் அழுத்தமாக பதிய விட்டுக் கொண்டு அதை மட்டுமே ரசிக்கும் மனப்பான்மை இருந்தால் பிடிக்காமல்தான் போகும். இன்றைய இளைஞர்கள் பலருக்கு ராஜாவின் இசை நுணுக்கங்கள் புரியவில்லை. ராஜாவிற்கு பின் வந்தவர்களின் பலநாட்டு கலவை இசையில் போதையேறி மதி மயங்கிக் கிடக்கும் இளைஞர்கள் அதைதான் புதுமையான இசை என நினைக்கிறார்கள். இளையராஜாவின் இசை அமுதை அனுபவித்தவர்கள் தகுந்த விதமாக எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வார்கள். அல்லது தானாகவே கேட்டும் புரிந்துகொள்வார்கள்.

  இளைஞர் கூட்டம் வரவேற்காததால் , FM களில் அதிகமாய் ஒலிபரப்பாததால், எண்பதுகளில் கேட்டதைப் போல இல்லாததால், எப்போதோ கேட்ட மாதிரியான பிம்பத்தை ஏற்படுத்துவதால் , அந்தப் பாடல்கள் எல்லாம் சலிப்பூட்டுவதாய் தோற்றமளிக்கின்றன. கூர்ந்து கேட்டால் அதிலும் அவரின் கலைவண்ணம் தெரியும். ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் இசையில் புது மாதிரியான பாணியை ராஜா கடைபிடிக்கிறார். அதை எத்தனை பேர் கவனிக்கிறார்கள்? உதாரணமாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஆனந்த் என்பவர் பாடிய ‘ நான் கடவுள் ‘ படத்தின் ‘ கண்ணில் பார்வை போன பின்பும் ‘ என்ற பாடலை அங்கிருந்த நடுவர்கள் கூட கேட்டதில்லை என்று சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் மீண்டும் பாடச் சொல்லி கேட்டார்கள்.

  ஒரு வருடத்தில் அதிகப் படங்களை இளையராஜா இப்போதும் கொடுத்துக் கொண்டிருப்பதற்கு பெரும்பான்மையான இயக்குனர்களும் தயாரிப்பாளர்களுமே காரணம் . மீண்டும் வைரங்களும் வைடூரியங்களும் கொடுத்து விட மாட்டாரா என்ற நப்பாசைதான் காரணம். யானை படுத்தாலும் குதிரை மட்டம்தான்!

 6. G. Kailas January 8, 2016 at 3:43 PM Reply

  நான் என்ன மனதில் நினைத்துக்கொண்டிருந்தேனோ அதை அப்படியே எழுதியுள்ளீர்கள். நான் இளையராஜாவின் மிகத் தீவிர ரசிகன். ஆனால் he is a pale shadow of himself. இதை மறுக்க முடியாது

 7. கிரி January 23, 2016 at 5:53 PM Reply

  செம்ம கட்டுரை 🙂

  மிகவும் எதார்த்தமாக எழுதப்பட்டுள்ளது. ஸ்ரீநிவாசன் இது நீங்கள் எழுதியதா?

  “இன்றும் கூட அவர் நேரம் எடுத்துக் கொண்டு, கொஞ்சம் மெனக்கெட்டு தயாரித்த ஆல்பங்கள் ஓரளவு நன்றாகவே இருக்கின்றன. ”

  இதைத் தான் நான் முன்பு இருந்தே கூறுகிறேன். அந்தக் காலத்தில் அவருக்கு இருந்த திறமை / இளமை வேகம் காரணமாக குறைந்த காலத்தில் சிறப்பான இசையைக் கொடுத்தார்.

  கால மாற்றத்தில் அதே போல கொடுக்க முடியாது. இது தான் எதார்த்தம். எனவே அப்போது அரை மணி நேரத்தில் ஒரு சிறப்பான இசையை உருவாக்க முடிந்தது என்றால், தற்போது இரண்டு நாட்கள் ஆகலாம்.

  இந்த எதார்த்த நிலையை அவர் உணர வேண்டும். இது ஒன்றும் தகுதிக் குறைவல்ல. இன்னும் தான் அப்படியே தான் இருக்கிறேன் என்று நிரூபிக்க அதே போல குறைந்த காலத்தில் இசையமைத்து அவரது ரசிகர்கள் கூட கேட்காத இசையை கொடுத்து கொண்டு இருக்கிறார் என்பது தான் உண்மை.

  இதனால் அவர் சாதிக்கப்போவது என்ன? அவருடைய ரசிகர்கள் ஏமாறுகிறோம் என்று தெரிந்தும் ஏமாற மட்டுமே உதவுகிறது.

  இளையராஜா அவர்கள் சாதிக்காதது ஒன்றுமில்லை.. இன்னமும் அவர் 80′ பாடல்களை தான் விருப்பமாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறேன். ஆனால் இந்தக் கால இளைஞர்கள் நமக்கு 80 பாடல்கள் எப்படி இனிமையாக தோன்றுகிறதோ அதை “போர்” என்று கடந்து விடுகிறார்கள்.

  இரண்டு நாட்கள் முன்பு வானொலியில் இளையராஜா (80’s) பாடலை என் அக்கா வைத்தார். என் அக்கா பையன் அம்மா! இது போர் அடிக்குது புது பாட்டு வைங்க என்கிறான்.

  இதையே இப்படி இவன் கூறினால், நமக்கே பிடிக்காத தற்கால இளையராஜா பாடல்களை என்ன கூறுவான் என்று நினைத்துப் பாருங்கள்.

  சமீப வருடங்களில் இசைத்த நான் கடவுள், விருமாண்டி, ஹே ராம், பிதாமகன் போன்ற படங்களின் பாடல்கள் இன்றும் இனிமையாக உள்ளது. இது போல இப்பவும் கொடுக்க முடியும் ஆனால், அதற்கு அவரின் கர்வத்தை விட்டுக் கொடுத்து காலம் எடுத்து இசைக்க வேண்டும்.

  ராஜா ரசிகர்கள் புகழும் நீங்கள் நன்றாக உள்ளது என்று கூறிய நீதானே என் பொன்வசந்தம் கூட எனக்கு திருப்தியளிக்கவில்லை.. பிடிக்கவில்லை என்பது தான் சரி.

  தலைவர் கூறியது போல யாராக இருந்தாலும் கீழே வந்து தான் மேலே செல்ல முடியும். மேலேயே தொடர்ந்து இருக்க முடியாது.

  கால மாற்றத்துக்கு ஏற்ப நாம் மாறவில்லை என்றால் கால மாற்றம் நம்மை அடித்துச் சென்று விடும்.

  சிறப்பான கட்டுரைக்கு வாழ்த்துகள் 🙂

 8. BaalHanuman January 24, 2016 at 9:00 PM Reply

  நன்றி கிரி உங்கள் விரிவான பதிலுக்கு…. இது என் நண்பர் எழுதிய கட்டுரை. இங்கே பகிர்ந்து கொண்டேன் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s