1-ஞானானந்தம் – வழக்கறிஞர் ஜி.மணிவண்ணன்


IMG_4107

கபீர்தாசரின் கீர்த்தனையைக் கேட்டு, தோதாபுரி, கண்ணாடிச்சில்லால் குருதேவர் ராமகிருஷ்ணரின் நெற்றியில் கீறி ஏகாக்ரசிந்தை வழங்கிய அற்புதத்தைப் பார்த்து, சீரடி சாயிநாதனின் அதிசயங்களை நேரடியாகக் கண்டு, ரமண மகரிஷி பத்து வயதுச் சிறுவனாக இருந்தபோது மீனாட்சியம்மன் கோயில் கிளிக் கூண்டுக்கு அருகே தியானத்தில் உறைந்து இருந்ததைக் கண்டு, லோகமான்ய திலகருக்கு சுயராஜ்யம் கிடைக்கும் என்று ஆசி தந்து… இப்படி ஞானானந்தகிரி ஸ்வாமிகளின் திவ்ய சரித்திரம் காலப்பிரமாணங்களின் கட்டுப்பாட்டைத் தகர்த்து எறிகிறது.

இது, திருக்கோயிலூர் அருகே உள்ள தபோவனம்: ஞானானந்தகிரி சுவாமிகளின் முன்பு அமர்ந்திருந்தார் ஒருவர். மகா நாத்திகர்! எனக்கு, கடவுள் நம்பிக்கை இல்லை சுவாமி!” – கொஞ்சம் கர்வமாக, ஆனால் வெள்ளந்தியாக ஞானானந்த பிரபுவிடம் சொல்கிறார் அந்த நாத்திகர்.

அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே! மோசமில்லை” என்று சிரித்தபடி சொன்ன சுவாமிகள், ஒரு நொடி கழித்து திரும்பக் கேட்டார்: உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறதோ?”

இல்லை ஸ்வாமி. அதுவும் பல சமயம் இல்லை!”

ஐயோ! இதுதான் மிக மிக மோசம். தன்னம்பிக்கை இல்லாது தெய்வ நம்பிக்கை எப்படி வரும்?” – இது குருநாதரின் கேள்வி.

இந்தக் கேள்வி பதில், இக்கட்டான வழக்கில் சொல்லப்பட்ட இனிமையான தீர்ப்பா இல்லையா?

ஒரு பிரபலமான வழக்கறிஞர்.

சுவாமியின் பக்தரான அவரது நண்பருடன், சும்மா வேடிக்கை பார்க்க தபோவனத்துக்கு வந்தார். சுவாமியைப் பார்த்தார். உத்தேசமாக 50 வயது இருப்பது போல்தான் சுவாமியின் தேகம் அவருக்குத் தோன்றியது.

இவர் ஞானியாம்! 140 வருஷமாக வாழ்ந்து வருகிறாராம்! கதை விடுகிறார்கள்! அப்படியே 140 வருஷம் வாழ்ந்து, இந்த ஞானிகள் என்னதான் சாதிக்கப் போகிறார்களோ!” – இது வக்கீலின் மன ஓட்டம்! அப்போது பக்கத்தில் ஒரு கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. கொத்தனார் மணலையும் சிமென்டையும் குழைத்து கலவை ஆக்கிக் கொண்டிருந்தார்.

சுவாமிகள், வக்கீலைக் கூர்ந்து பார்த்துச் சொன்னார்: மனிதர்கள் மணல் மாதிரி! ஞானிகள் சிமென்ட் மாதிரி” – அவ்வளவுதான்! விவாதம் இல்லை. உபன்யாசம் இல்லை. கல்மிஷங்களுடன் பிறந்த ஐயங்களுக்கெல்லாம் ஒரே பதில்! இதுதான் ஞானானந்த வாரி!

உபதேசம் என்ற பேரில், ஆகாத போகாத விஷயங்களை குருநாதர் சொன்னதில்லை! அந்த குருமணி, தன்னை அண்டி வந்தவரை தன் விழிகளின் கருமணி போல் போற்றி காருண்ய அஞ்சனம் தீட்டி வளர்த்து சீராட்டியதுதான் வரலாறு!

ஒரு சமயம் ஒரு வெளிநாட்டுப் பெண்மணி வெள்ளந்தியாக ஒரு சந்தேகத்தையும் கவலையையும் சுவாமியிடம் தெரிவித்துக் கேட்டார்:

எல்லா புனிதத் தலங்களுக்கும் போய் வந்தேன்! தங்களைப் போன்ற மகான்களைத் தரிசித்துவிட்டு இறுதியாக தங்களையும் தரிசிக்கிறேன்! எனக்கு இன்னும் ஆத்மசித்தி ஞானம் கிட்டவில்லையே!” – அடிமனத்திலிருந்து பரிபூரண அக்கறையுடன் எழுந்த கேள்வி!

சுவாமி தன் முன்னால் மஞ்சள் மயமாகி பழுத்திருந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்துக் காண்பித்தபடி சொன்னார்:

இது பழுத்த மஞ்சளாகி கனியாகி விட்டது! முன்பு பச்சையா காயா இருந்தது! அப்போ கசந்தது! அதற்கும் முன்பு வேறு வண்ணத்தில் பூவா இருந்தது. அப்போது துவர்த்தது. பூவைக் காயா ஆக்கி காயைக் கனியாய் ஆக்கிய காருண்யன், உன்னையும் காலப்போக்கில் பழுக்க வைக்க மாட்டானா என்ன? பொறு. காலம் அதைச் செய்யும்!”

இந்த ஒத்தடம் கொடுக்கும் ஞான வரிகளில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு செய்தி இருக்கிறதுதானே!

தபோவனப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்ட மெய்யன்பர்கள் சிலருக்கு, தாங்கள் பூஜைகளிலும் பஜனைகளிலும் ஈடுபட முடியவில்லையே! நமக்கு இறைவன் அருள் கிடைக்காதோ என்று நியாயமான சந்தேகம்! தங்களுக்குள் இதைப் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென அங்கே தோன்றி தாய்போல அமர்ந்து பேசினார் குருநாதர்! என்ன இது? இங்கே பாருங்கள். பெத்த தாய் முதல் நாளே அரிசியை ஊற வைத்து விடியற்காலையில் எழுந்து அரைத்து மாவாக்கி, பின்பு எல்லாக் குழந்தைகளுக்கும் இட்லி ஆக்கிப் போடுகிறாள்! குழந்தைகள் இட்லியைச் சாப்பிட்டு சந்தோஷமாக இருந்தால் போதாதா? அம்மாவைப் போல அவர்களும் கஷ்டப்பட வேண்டுமா என்ன?”

குருநாதனின் பிரார்த்தனையின் வீச்சு எத்தனை நெடுக வளர்ந்துள்ளது என்பதை இது பிரகடனம் செய்கிறதா இல்லையா! அந்தக் கருணை, ஸ்தூல எல்லைகளையும் காலவரம்புகளையும் கடந்தது. நினைத்தாலே சிலிர்க்க வைக்கும் ஒரு சம்பவம்!

சித்தலிங்க மடம்! – இங்கே தங்கி இருந்தார் சுவாமிகள்! பல மைல் தூரத்தில் தபோவன கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த சமயம்!

மடத்தில் பக்தர்களுடன் பேசிக் கொண்டிருந்த சுவாமி பதைப்புடன், ‘தேவா’ என்று கதறியபடியே எழுந்தார்! நடுங்கிப் போனார்கள் அன்பர்கள். ‘ஒரு குடும்பத்தையே போட்டுப் புதைத்துக் கொண்டிருக்கிறார்களே தேவா!’

தபோவனக் கட்டிடத்துக்கு விரைந்து போன குருநாதர் மேஸ்திரியைப் பார்த்து, நியாயமா நீ செய்வது? தபோவனம் கட்டித்தரச் சொன்னால் ஒரு குடும்பத்தைப் புதைத்து அதன்மேல் தபோவனக் கட்டிடம் கட்டுகிறாயே” என்று இரைந்தார். ‘குடும்பத்தைப் புதைத்தேனா? என்ன இது?’ மேஸ்திரி புரியாமல் விழித்தார். மதில் சுவர் கட்ட, செங் கற்களை வைத்து பாதி உயரம் ஈரச்சுவர் எழும்பி இருந்தது. நகர்த்து அந்தச் சுவரை மெதுவாக!” அடுத்த கட்டளை! தாம்புக் கயிறு கட்டி சுவரை நகர்த்தினார்கள்! கீழ் உள்ள பள்ளத்தில், இரண்டு சர்ப்பங்கள் சில குட்டிகளுடன் நெளிந்த படி பரிதவிப்புடன் வெளியே வந்தன! பாம்புகளின் அருகில் சென்ற சுவாமிகள் சொன்னார்: மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் இருப்பது தெரியாமல் இந்தத் தவறு நடந்துவிட்டது. தயவுசெய்து கோபப்படாமல் வெளியே வேறு இடம் செல்லுங்கள் அப்பா!”

நன்றி குருதேவா, நன்றி!” – பேச முடிந்திருந்தால் அந்தப் பாம்புகள் இப்படிச் சொல்லி இருக்கும்.

திருத்திப் பணி கொள்ளும் தெய்வம் என்பார்கள்! ஞானானந்தகிரி சுவாமிகள் திருத்திப் பணி கொண்ட சம்பவங்கள் நூற்றுக்கணக்கில்! முத்தாப்பான ஒரு சம்பவம்!

தற்போது தபோவனம் அமைந்திருக்கும் பகுதி, அதற்கு முன்பு ஒரு பாழ்மண்டபம் ஆக இருந்தது. வழிப்பறிக் கொள்ளையர்களின் பதுங்கு குழி அது! ‘வானாவரம்’ என்ற ஒருவன் அக்கொள்ளையர் தலைவன்!

ஞானானந்த பிரபு அங்கே காடு திருத்திக் கழனியாக்கும் திருப்பணியில் ஈடுபட்டதால், கொள்ளையர்களுக்கு தொழிலில் இடையூறு வந்தது!

தபோவன இடத்தில் ஒரு சிறு குடிசை கட்டி அதிலே வசித்தார் அப்போது நம் குருமகான்! ‘பொழைப்பத்த இந்த சாமி இங்கு வந்ததாலே, நம் பிழைப்பு போனதே!’ ஆத்திரம் அவர்களுக்கு! ஒரு இரவில், குருமகான் இருந்த குடிசை மேல் எண்ணெயைக் கொட்டி தீ வைத்தார்கள் கொள்ளையர்கள். அதிசயம்! எண்ணெய் மட்டும் பற்றி எரிந்தது. ஓலைக்கூரையை அக்னியால் தொடக்கூட முடியவில்லை! திரிபுரமும் எரிய, குடிசைக்கு உள்ளிருந்து ஞானாக்னிப் பிழம்பாய் சிரித்தபடியே வெளிவந்த குருநாதர் கொள்ளையர்களைப் பார்த்து மிருதுவாகக் கேட்டார்: ஏன் இப்படிச் செய்தீர்கள்? நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?”

இரண்டு வரி கேள்விகளில் அரண்டு போனது வானாவரம் என்ற கொள்ளையனின் கும்பல்! குருநாதனின் காலில் விழுந்து தங்கள் குலத்தொழில் ஆன கொள்ளையடிப்பு, குருநாதரால் முடங்கிப் போனதை சொல்லிப் புலம்பினார்கள். அவர்கள் முன் நிதானமாக அமர்ந்து கருணையுடன் பேசத் துவங்கினார் சுவாமிகள். அது ஒரு ஆன்மீக சோஷலிச பேரம்!

ஓஹோ! சோற்றுக்கு வழி இல்லாததால் இந்த ஈனத் தொழிலா? சரி, நமக்குள் ஒரு பேரம். பின்னால் உள்ள நிலத்தை உங்களுக்குத் தருகிறேன். உழையுங்கள், உண்ணுங்கள். மீதி இருந்தால், ஆசிரமத்துக்குத் தரமுடியும் என்றால் தாருங்கள்!”

நெக்குருகி நெகிழ்ந்து நீராகக் கரைந்து போனான் கொள்ளையன் வானாவரம். பின் நடந்தது என்ன? கொள்ளையர்கள் விவசாயிகள் ஆனார்கள். மாஜி கொள்ளையர் தலைவன் வானாவரம், தன் இறுதி மூச்சுவரை ஞானானந்தகிரி சுவாமிகளின் அடிநிழலில் அடியார்களில் ஒருவனாகக் கிடந்து சுகம் பெற்றான்!

காஞ்சி பரமாச்சார்யாள் ஒரு சமயம் கிண்டியிலிருந்து நகர் மையத்துக்கு விஜயம் செய்தபோது – ஊர்வலத்தில் பஜனை செய்து கொண்டு சென்ற ஹரிதாஸ்கிரி சுவாமிகளையும் நாமானந்தகிரி சுவாமிகளையும் அழைத்து, நீங்கள் பாடிய குருகீர்த்தனையில் வரும் ஞானானந்தகிரி சுவாமிகளை அறிவீர்களா?” என்று கேட்டாராம். ‘அவரது சீடர்கள் நாங்கள்’ என்று அவர்கள் பணிந்து சொன்னவுடன், பரமாச்சார்யார் திருநாவில் உதித்த வாக்கு இது: ஆஹா! புளியங்கொம்பைப் பிடித்துவிட்டீர்கள். பூர்வஜன்ம புண்ணியம் அது!” நல்ல உவமை! சம்சாரப் புயலில் தள்ளாடும் கொடிகளான நமக்குக் கிடைத்த சங்கீர்த்தனக் கொம்புதானே அவர்!

ஞானானந்தகிரி சுவாமிகளின் திவ்ய சரிதம் என்று இதுவரை எவருக்கும் எழுதத் தோன்றவில்லை. முடிவுற்ற பிறகுதானே சரிதம் என்று வரும். ஞானானந்தம்தான் இன்னும் தபோவனத்தில் நம்மோடு இருக்கிறதே! நாம் பாக்கியவான்கள்!

தொடரும்…

–நன்றி தீபம் – கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s