2-கடவுளின் குழந்தை – ஆர்.வெங்கடேஷ்


யோகி ராம்சுரத்குமாரின் சேவையில் தன் காலத்தைப் பயனுடையதாக மாற்றிக்கொண்ட எஸ்.பார்த்தசாரதி தொடர்ந்து தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்:

சாமி ஒவ்வொரு பக்தர்களையும் விதவிதமாய் ஹாண்டில் பண்ணுவாங்க. முரட்டு பக்தர்களை ஒரு மாதிரி நடத்துவார், ரொம்ப கேர்ஃபுல்லா பட்டும் படாமையும் இருக்கிற பக்தர்களை ஒரு மாதிரி நடத்துவார், உண்மையான பக்தர்களை வேற மாதிரி நடத்துவார். நான் இதைச் செய்யறேன், அதைச் செய்யறேன் என்று அவர் சொன்னதே இல்லை. ஆனால், அவர்கிட்ட வர்றவங்க, ‘அவர் என்னைப் பார்த்தார், அதனால உடனே இந்திராகாந்தி என்னக் கூப்பிடுவாங்க, ஃபுட் கார்ப்பரேஷன் அஃப் இந்தியாவுல நான் டைரக்டரா ஆகப்போறேன்‘ என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், இதையெல்லாம் சாமி அனுமதிச்சதே இல்லை.

ஒருமுறை இதுமாதிரி ஒரு பக்தர் குரு பூர்ணிமா அன்னிக்கு சாமியைத் தரிசனம் பண்ண வந்துட்டார். குரு பூர்ணிமா அன்னிக்கு தன்னைத் தொழ வர்ற எந்த பக்தர்களையும் குரு தடுக்கமாட்டார். இதைத் தெரிஞ்சுக்கிட்டு வந்தவர், நேரா சாமியோட காலில் போய் விழுந்துட்டார். சாமி சட்டுன்னு காலை நகர்த்திக்கிட்டாங்க. பார்வையாலேயே போகச் சொல்லிட்டாங்க.

வெளியே வந்தவர், ‘சாமி என்னை போன்னு சொல்லிட்டாங்க, அப்போ யாரோ என்னை வான்னு கூப்பிடப் போறாங்க’ன்னு மூடநம்பிக்கையோட பேச ஆரம்பிச்சுட்டார். சாமி ஒண்ணும் சொல்லல. எதையும் அவர் கொடுக்கமாட்டார். அவர் எப்பவும் இதைத்தான் சொல்வார், என்னோட அப்பாவை நீ எப்பவெல்லாம் நினைச்சுக்கிட்டு இருக்கிறீயோ, அவர் யாராவது ஒருவரை உதவிக்கு அனுப்பி வைப்பார்.”

சாமிக்குப் பிடிக்காத ஒரு விஷயம் நடந்துதுன்னா, ஓ..ஆல்ரைட், மை ஃபாதர்ஸ் வில். வாட் டு டு” என்று மட்டும் சொல்வார். அதே அவருக்குப் பிடித்த விஷயம் நடந்துதுன்னா, ஓ, மை ஃபாதர் பிளஸஸ் யு மை சன்…யு ஹாவ் டன் அ கிரேட் ஜாப், யு ஹாவ் டன் மை ஃபாதர்ஸ் ஜாப்,” என்று கொண்டாடுவார். அவருடைய குரல்லேயும் எக்ஸ்பிரஷன்லேயும் அவ்வளவு உற்சாகம் பீறிட்டுக் கிளம்பும்.

ஒருமுறை நான்கைந்து நாட்கள் அவரோடவே இருந்தேன். பல சமயங்கள்ல, ஒருவாரம் பத்து நாள் கூட கூடவே இருந்திருக்கேன். ஒருமுறை ஒரு மாசம் அவரோடவே இருந்தேன். அப்போ நான் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகிட்டு இருந்தேன். அங்கே ஒரு மனஸ்தாபம். கோபத்தில் சட்டென்று வேலையை விட்டுட்டு, திருவண்ணாமலை வந்துட்டேன். சாமி கேட்டார், உன்னாலதான் அங்க இருக்க முடியல இல்லையா, அப்புறம் ஏன் இங்கே வந்தே?”

இல்ல சாமி. நான் குழப்பத்துல இருக்கேன்,” என்று பதில் சொன்னேன். சரி, அப்படின்னா, இங்கேயே இரு.” ஒரு மாசம். காலையிலேருந்து நடுராத்திரி வரைக்கும் அங்கேயே இருப்பேன். அவரோட பேசறது, அமைதியா அவர் சொல்றதைக் கேக்கறது. நாமம் சொல்றது. பாட்டுப் பாடறது என்று நேரம் போய்க்கிட்டு இருந்தது. நான்தான் அவருடைய ஆஸ்தான பாடகன். அவர் மேல எழுதின பாடல்களை எல்லாம் பாடிக்கிட்டே இருப்பேன். ராத்திரி இரண்டு, மூன்று மணிவரைக்கும் கூட பாடல்களும் நாமமும் ஒலித்துக் கொண்டு இருக்கும்.

சாமி எழுந்துகொண்டு, பார்த்தசாரதி, நேரம் என்ன?” என்பார். நாலு மணி சாமி” என்று சொன்னால், சரி, ரொம்ப களைச்சு போயிருப்பே. நாடார் சத்திரத்துல போய்த் தூங்கிட்டு, காலையில வா” என்று அனுப்பிவைப்பார். சத்திரத்துக்கு வருவேன். அப்படியே படுத்துக்கொள்வேன். மனசில் வேறு எண்ணங்களே ஓடாது. சாமியுடைய நாமம் மட்டும் தான் ஓடும். தூங்கவும் முடியாது. பேப்பர் எடுத்துப் படிச்சா, கண்ணுல எழுத்து மட்டும்தான் தெரியும். அதனோட அர்த்தம் தெரியாது. அப்படியே எழுந்து கொண்டு, குளித்துவிட்டு, காலை தரிசனத்துக்குத் திரும்பவும் போய் நிற்பேன்.

என்ன பண்ணே பார்த்தசாரதி” சாமி கேட்பார்கள். சும்மா படுத்துக் கிடந்தேன்.” ஓ, நீ தியானம் பண்ணிக்கிட்டிருந்தியா?” மெடிடேஷன் என்றாலே என்னவென்று எனக்குத் தெரியாது. உள்ளுக்குள் சாமியின் நாமம் மட்டும் ஓடிக்கொண்டே இருக்கும். யார் சொல்கிறார்கள், எங்கேயிருந்து ஒலிக்கிறது என்றெல்லாம் முன்பு யோசிக்கத் தோன்றும். இப்போ அதெல்லாம் கூட இல்லை. பல சமயங்களில், நாமம் ஓடுவது நின்றுவிடும். ஓடினாலும் சுகமாக இருக்கும், நின்றுபோனாலும் சுகமாக இருக்கும்.

ஒரு மாசம் ஆச்சு. மனசு அவ்வளவு பக்குவப்பட்டது. தப்பு என்று ஒன்றுமே இல்லை. எதற்கு அநாவசியமாகக் கோபப்பட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. எல்லாத்தையும் மறந்துட்டு, திரும்பியும் நானே போய் மன்னிப்பு கேட்டேன். திரும்பியும் வேலையில் சேர்ந்துட்டேன். சாமிக்கு ரொம்ப சந்தோஷம். எனக்கு என்றில்லை, குழப்பம் என்று அவர் சரண்புகுந்த அனைவருக்குமே தெளிவை வழங்கிய மகான் அவர்.

இதேபோல், உங்கள் மனத்துக்குள் நிறைய வேலை செய்வார் சாமி. என்ன செய்வார், ஏது செய்வார் என்று புரியாது. ஆனால், உள்ளுக்குள் பெரிய மாற்றம் நடந்துகொண்டே இருக்கும். ஒருமுறை வேதங்கள், யாகங்கள், ஹோமங்கள் பற்றி சாமியுடன் முருகேஷ்ஜியும் சிவசங்கரனும் நானும் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது நண்பர் முருகேஷ்ஜி, சட்டென்று ஒரு வார்த்தையை விட்டுட்டார். இந்த யு.எஸ். மக்கள் எங்கெங்கோ போறாங்க. சந்திரனுக்குப் போறான், என்னென்னமோ செய்யறான். நாம என்னடான்னா, ஹோமம் பண்ணிக்கிட்டே உட்கார்ந்துக்கிட்டிருக்கோம். நம்மள இப்படியே பழக்கிட்டாங்க சாமி, நாம் என்னத்தை சாதிக்கப் போறோம்” என்று சொல்லி, ஒரு குறிப்பிட்ட பகுதியினரைக் குற்றம் சொல்வது மாதிரி பேசினார். சாமிக்கு நம்முடைய பாரம்பரியத்தை, கலாசாரங்களைக் குறைசொன்னால் பிடிக்காது. யாரைப் பழித்துப் பேசினாலும் பிடிக்காது. அதற்குப் பின்னர், மாநிலப் பிரிவினை, நாடுகளிடையேயான சண்டை பற்றியெல்லாம் பேச்சு நடந்து கொண்டே இருந்தது. சாமி எந்த டிஸ்கஷனிலும் கலந்து கொள்ளவில்லை.

சிறிது நேரம் கழித்து சாமி என்னைப் பார்த்து, பார்த்தசாரதி, நீ எப்படி இதையெல்லாம் பார்க்கற? என்ன தீர்வு சரியா இருக்கும்னு நினைக்கற” என்று கேட்டார். நிர்வாகரீதியா இந்தியாவை நாலா பிரிச்சுக்கிட்டு நிர்வாகம் செய்யறது நல்லது. மாநிலம் மாநிலமாய் பிரிச்சுக்கிட்டு அட்மினிஸ்ட்ரேஷன் செய்யறது ரொம்பக் கஷ்டம் சாமி” என்று என் கருத்தைச் சொன்னேன். அதற்கும் சாமி எந்தப் பதிலும் சொல்லவில்லை. முருகேஷ்ஜி சொன்னது சாமிக்குப் பிடிக்கவில்லை என்பது மட்டும் புரிந்தது.

கொஞ்ச நேரம் கழித்து, சாமி என்னை மட்டும் அவருக்குப் பக்கத்தில் இருந்த பாயில் வந்து உட்காரச் சொன்னார். நான் உட்கார்ந்தவுடனே, என் கையைப் பிடித்துத் தடவிக்கொண்டே, காதருகே நெருங்கி வந்து, எல்லாம் சரியாயிடும் பார்த்தசாரதி…” என்றார். சரி சாமி.” இரண்டு நிமிஷத்துக்கு ஒருமுறை என் காதருகே வந்து, எனக்கு மட்டும் கேட்கும் குரலில் இதே வரியைக் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் சொல்லிக் கொண்டே இருந்தார். எனக்கு ஒண்ணுமே புரியவில்லை. எதிரே முருகேஷ்ஜியும் சிவசங்கரனும் ஒருவித பொறாமையோடு, எரிச்சலோடு பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

பின்னர் வேறு யாரோ நண்பர்கள் வந்தார்கள். எங்களைப் பின்னால் போகச் சொன்னார். சன்னிதி தெரு வீட்டுக்குப் பின்னால் போனேன். கூடவே முருகேஷ்ஜியும் சிவசங்கரனும் வந்தார்கள். அங்கே அப்போது ஒரு வாய்க்கால் உண்டு. நான் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தேன். உடனே முருகேஷ்ஜி சிவசங்கரனிடம், யோவ் நீ கால பிடியா, நான் தலைய பிடிக்கிறேன். இவனை இந்த வாய்க்கால்ல போட்டு அமுக்கிடலாம். உண்மையச் சொல்லிடு, சாமி உன்கிட்ட என்ன சொன்னார்?” என்று மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள். ஒண்ணுமில்லையா…எவ்ரிதிங் வில் பி ஆல்ரைட்” என்றுதான் சொன்னார் என்று சொன்னால், நம்பவே இல்லை. கிட்டத்தட்ட அரை மணிநேரம். அழாத குறை. ரொம்ப பூடகமாய் சாமி காரியம் செய்தார். நாம் அவரைக் கோபப்படுத்தினோம் இல்லையா, நம்மைக் கோபப்படுத்திப் பார்க்கிறார் சாமி என்று பின்னால் யோசித்தபோது புரிந்தது.

யாரையும் ஒதுக்கக் கூடாது, துவேஷம் பாராட்டக் கூடாது, விலக்கக்கூடாது என்பதைப் புரியவைத்த லீலை இது. எங்களுக்குள் பொறாமையை வரவைத்து, உண்மையைப் புரியவைத்தார் சாமி.

இதெல்லாம் முடிந்து திரும்பியும் உள்ளே வந்தால், சாமி எங்களைப் பார்த்துச் சிரிக்கிறார் சிரிக்கிறார்…அப்படிச் சிரிக்கிறார். முருகேஷ்ஜி அதன் பிறகு யாரையும் தப்பாகப் பேசுவதை நிறுத்தி விட்டார். இதுக்குக் காரணம் சொல்லும்போது, சாமி, நான் எல்லார்கிட்டயும் கடவுள் இருக்கார்னு சொல்லும்போது, அவங்ககிட்டயும்தானே சாமி இருக்காங்க. அவங்களை மட்டும் எப்படி பிரிச்சு துவேஷம் பாராட்டலாம்” என்று கேட்டார். அதுதான் படிப்பினை.

(அனுபவம் தொடரும்)

–நன்றி கல்கி

190 பக்கங்கள். விலை ரூ. 150/-

நூல் கிடைக்குமிடம் :

சூரியன் பதிப்பகம்
229, கச்சேரி ரோடு,
மயிலாப்பூர், சென்னை – 600004
தொலைபேசி : 044-42209191

ஆன்லைனில் வாங்க:

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s