கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு – பிரபல ஜோதிடர் ஏ.எம். ராஜகோபாலன்


தமிழகத்தில், பணம் சம்பாதிப்பதற்காக போலியான ஜோதிடர்கள் பலர் உலவிக் கொண்டிருக்கும்போது, தனது ஜோதிடத் திறமையைப் பணம் சம்பாதிக்கப் பயன்படுத்தாத ஏ.எம்.ராஜகோபாலன், பலருடைய நம்பிக்கை நாயகனாகத் திகழ்கிறார். அவரை நமது ‘துக்ளக்’ வாசகர்கள், அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள். அந்த கலந்துரையாடலின் இறுதிப்பகுதி இங்கே:

ரேவதி மில்டன்: ஒரு பெண்ணிற்கு நல்ல நேரம் பார்த்துத் திருமணம் செய்து தாலி கட்டுகிறார்கள். அதே பெண், தன்னுடைய கணவனுக்கு உடம்பு சரி இல்லை என்றால், ஸ்வாமியிடம் வேண்டிக் கொண்டு அந்தத் தாலியை உண்டியலில் செலுத்துகிறாள். இது சரியா?

ஏ.எம்.ஆர்.: இதுபோல் செய்தால், நம்முடைய தோஷம் நிவர்த்தி ஆகும் என்ற நம்பிக்கையின் பேரில் பலர் இதைச் செய்கிறார்கள். இதெல்லாம் கற்பனையான விஷயங்கள். இப்படியெல்லாம் செய்யக் கூடாது. வேத காலத்தில் திருமாங்கல்யம் என்பதே கிடையாது. பிற்காலத்தில் அந்நியர்கள் வந்து நம்முடைய பெண்களை இழுத்துச் செல்லும் போது, திருமணமான ஹிந்துப் பெண்களெல்லாம் வியாதி இருக்கு என்று சொல்லித் தப்பித்து கொண்டார்கள். அதனால், அந்நியர்களும் திருமணமான பெண்களைத் தொட மாட்டார்கள். இந்தச் சமயத்தில்தான், தாலி கட்டும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டது.


ஒரு பெண் ஆதரவின்றி இருந்தால், அவளைச் சகோதரியாக ஏற்று, ரக்க்ஷா பந்தன் கட்டுவதும் அப்போது வந்ததுதான். திருமாங்கல்யத்தை மஞ்சள் கயிறில் ஏன் போடுகிறார்கள்? எந்தக் கஷ்டம் வந்தாலும் அதை ஒன்றும் செய்யக் கூடாது என்று தான். இதுவே அந்தத் தாலிச்சரடு தங்கத்தில் இருந்தால், கஷ்ட காலங்களின் அதை விற்கவோ அல்லது அடமானம் வைக்கவோ தோன்றும். தங்கத்தில் தாலிச்சரடு என்பதும் பிற்காலத்தில் வந்ததுதான். திருமணம் என்பது, அந்தப் பெண் மற்றும் ஆணின் வாழ்க்கையில் ஒரு முறை நடக்கும் பெரிய விசேஷம். அதனால், நம்முடைய ஆசைக்காகத் தங்கத்தில் தாலி அணிந்து கொள்கிறோம். உண்மையான தாலி என்பது, மஞ்சள் கயிறு தான். தாலியை உண்டியலில் போடும் பரிகாரம் எந்த ஜோதிட சாஸ்திரத்திலும் கூறப்பட வில்லை.

சரண்யா சுமங்கலியாக இருக்கும் பெண்கள் திருப்பதி சென்று மொட்டை அடிப்பதாக வேண்டிக்கொள்கிறார்கள். இந்த வேண்டுதல் சரியா? தவறா?


ஏ.எம்.ஆர்.: இதுவும் எந்த ஜோதிட சாஸ்திரத்திலும் பரிகாரமாகச் சொல்லப்படவில்லை. அவசியமும் இல்லை. பஹவான் பக்திக்குக் கட்டுப்பட்டவன். அந்த பக்தியை நீங்கள் திடமாக வைத்திருந்தால், அவன் உங்களைக் காப்பாற்றி விடுவான். நாம் அவசரப்படுகிறோம். ஒரு நேர்மையான அதிகாரி லஞ்சமே வாங்க மாட்டார் என்றால் கூட, நாம் அவருக்கு லஞ்சம் கொடுத்தால், வேலை விரைவாக முடியும் என்று நம்புகிறோம். அதேபோல பஹவானிடமும், நாம் இதைச் செய்தால், அவர் நமக்கு இதைச் செய்வார் என்று நினைக்கிறோம். இதெல்லாம் நம்முடைய கற்பனையான நினைப்பு மட்டுமே.

கோயிலுக்குச் சென்று நம்முடைய பெயரில் அர்ச்சனை செய்வதே தவறு என்று பெரியவா சொல்லி இருக்கிறார். ஒரு குழந்தை தன்னுடைய தாயிடம், ‘நான் உனக்கு இதைத் தருகிறேன் அதற்குப் பதில் நீ எனக்குப் பால் கொடு’ என்று கேட்பது எவ்வளவு அபத்தமானது? பஹவானின் அன்பிற்கு எதை ஈடாகக் கூறுவது என்று ஆழ்வார்கள் பஹவானிடமே கேட்டார்கள். அதற்கு ‘இதைவிட ஒரு அன்பு இருக்க முடியாது என்று ஒன்று இருந்தால், அதைவிட உயர்ந்தது என்னுடைய அன்பு’ என்று கூறினாராம் பஹவான். எப்படி ஒரு தாய், தான் பெற்ற குழந்தையைப் பார்த்துக் கொள்கிறாளோ, அது போல் பஹவான் எல்லோரையும் பார்த்துக் கொள்கிறார். அவனிடம் கேட்டால் போதும் கிடைத்து விடும். ஆனால், அந்த நம்பிக்கை நமக்கு வேண்டும். கலியினுடைய தோஷத்தினால், நமக்கெல்லாம் பஹவானிடம் நம்பிக்கை குறைந்து வருகிறது.

அண்ணாதுரை:வாஸ்து சாஸ்திரம் என்பதும் ஒரு அறிவியல்தான் என்று கூறுகிறார்களே! அது உண்மையா?


ஏ.எம்.ஆர்.: ஜோதிட சாஸ்திரத்தின் ஒரு பகுதிதான் வாஸ்து சாஸ்திரம். பல கோயில்களிலே, ஒரு குறிப்பிட்ட நாளில், பஹவானின் மீது சூரிய வெளிச்சம் விழுகிறது. இது எப்படிச் சாத்தியம்? பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. அந்தப் பூமியின் மேல் கட்டப்பட்டிருக்கும் ஒரு கோயிலில், சூரியக் கதிர்கள் விழவேண்டும் என்றால், இந்த வேகத்தில் பூமி சுற்றும்போது எந்தக் கோணத்தில் (angular inclination)சூரியக் கதிர் வந்துவிழும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள் ளது. ஜோதிடத்தில் கூட, ‘டிகிரி சுத்தமாக’ என்ற வார்த்தையை நான் அடிக்கடி உபயோகிப்பேன். சந்திரன், பூமி, சுக்கிரன் ஆகிய மூன்று கிரஹங்களும் வெவ்வேறு கோணங்களில் சுற்றி வருகின்றன. இந்த மூன்று கிரஹங்களும் ஒரே நேர்கோட்டில் வரும் பொழுதுதான், திருமணம் நிச்சயமாகும். அதேபோல் புதன், சூரியன், சந்திரன் ஆகிய இந்த மூன்று கிரஹங்களும் ஒரே நேர்கோட்டில் வரும் பொழுது தான், குழந்தையின் படிப்பு நன்றாக அமையும். இந்த கிரஹங்களின் வேகத்தைக் கணக்கிடுவதுதான் வாஸ்து சாஸ்திரம்.


ஆனால், ‘வாஸ்து’ என்பது இடத்திற்கு இடம் மாறுபடும். கடலின் அருகே இருக்கின்ற ஒரு ஊருக்கும், மற்ற ஊருக்கும் வாஸ்து மாறுபடும். சென்னையில் வடக்கே பார்த்து வீடு இருக்கலாம். ஆனால், கோயம்புத்தூரில் வடக்கே பார்த்த வீடு இருக்கக்கூடாது. ஏனென்றால், அந்தந்த ஊரின் கோணத்தைப் (angular inclination) பொருத்துத்தான் வாஸ்துபலன் அமையும். தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளில் தெற்கு திசையைப் பார்த்து அமைந்த வீடு நல்ல பலனைக் கொடுக்கும். அதனால், வாஸ்து என்பதைப் பொதுமைப்படுத்திக் கூறமுடியாது.

சேஷாத்ரி:தினமும் காலையில் சில ஜோதிடர்கள் தொலைக் காட்சிகளில் ராசி பலன் கூறுகிறார்கள். காலண்டர்களில் தின பலன் போடுகிறார்கள். இது எப்படிச் சரியாக இருக்கும்? அவரவர் ஜாதகத்தைப் பொருத்துத்தானே அன்றைய பலன் இருக்கும்?


ஏ.எம்.ஆர்.: மனசாட்சிப்படிச் சொல்ல வேண்டுமென்றால், வார ராசி பலன், தினசரி பலன் இவை யெல்லாம் பொய்தான். வார ராசிபலன் சொல்லுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. சிம்ம ராசி என்று எடுத்துக் கொண்டால், ஒரு ஊரிலேயே குறைந்தது ஐயாயிரம் நபர்களாவது இருப்பார்கள். எல்லோருக்கும் ஒரே விதமாக அந்த நாள் அமையுமா? அமையாது. ஆனால், சமீபத்தில் ஒரு ரஷ்ய விமானத்தில் பயணம் செய்த இருநூற்று முப்பது நான்கு பேரும் இறந்து விட்டார்கள். அப்படி என்றால் அவர்கள் அனைவரது ஜாதகமும் ஒன்றா? நம்முடைய நாட்டில் எமெர்ஜென்ஸி காலத்தில், எல்லா சட்டங்களையும் ரத்து செய்தது போல், ‘விபரீத யோகம்’ என்று ஜோதிடத்தில் சொல்லி இருக்கிறார்கள். இந்த விபரீத யோகத்தில், எந்த ஜாதக விதிகளும் செயல்படாது.

அண்ணாதுரை:அரசியல், மருத்துவம் என்று எல்லாத் துறைகளும் தரம் தாழ்ந்து வருகின்றன. அதே போல ஜோதிட சாஸ்திரத்திலும் உண்மையான விஷயம் தெரிந்த பெரியவர்கள் மிக மிகக் குறைவு. பெரும்பாலானவர்கள் போலியான பரிகாரங்கள் கூறி ஏமாற்றி வருகிறார்கள். இது போன்ற ஒரு சூழ்நிலையில், உங்களைப் போன்றவர் ஏன் ஜோதிடத்தைப் பற்றி ஒரு புத்தகம் எழுதக் கூடாது?

ஏ.எம்.ஆர்.: இதில் ஒரே ஒரு பிரச்னைதான் இருக்கிறது. ஜோதிடம் என்பது புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்ளும் விஷயம் அல்ல. புத்தகத்தைப் படித்தாலும் புரியாது. ஒரு குருவின் பாதத்தடியில், சிஷ்யனாக அமர்ந்து கற்றுக் கொள்ள வேண்டிய கலை இது. அதனால்தான் குருகுல வாசம் என்று அந்தக் காலத்தில் வைத்தார்கள். உண்மையில், குருவின் மூலம் கற்றுகொண்டால், அவ்வளவு சுலபமான விஷயம் இது.

கே.மகேஷ்:உங்களுடைய பரிகாரத்தில் கோயில்களுக்கு ஏதாவது உதவி செய்யச் சொல்கிறீர்கள். இதனால் கவனிப்பாரற்று இருந்த பல கோயில்கள் செப்பனிடப்பட்டுப் புதுப்பொலிவு பெற்றுள்ளன. இப்படி பரிகாரம் சொல்லுவதற்கான உந்துதல் என்ன?


ஏ.எம்.ஆர்.: முதலில் கோயில்கள் எதற்காக ஏற்பட்டுள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நமது கர்மாக்களினால் பலவிதமான கஷ்டங்கள் நமக்கு வருகின்றன. இந்தக் கர்மாக்களினால் வரும் கஷ்டத்தைப் போக்கப் பலவிதமான பரிகாரங்களும், மந்திரங்களும் இருக்கின்றன. ஜோதிடம் என்பது ரிக் வேதத்தில் இருக் கிறது. பரிகார மந்திரம் என்பது அதர்வண வேதத்தில் இருக்கிறது. இத்தகைய பரிகாரங்களை எல்லாம் நாம் வீட்டில் வைத்துச் செய்ய முடியாது. அந்த மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அதனால், அந்தப் பரிகாரங்களைக் கோயிலில் செய்யலாம் என்று கூறியுள்ளார்கள்.

சரண்யா:சோழியை உருட்டிப் பலன் சொல்லுவது உண்மையா?

ஏ.எம்.ஆர்.: ஜோதிடத்தைப் பொறுத்தவரை ஏழு கிளைகள் இருக்கின்றன என்று கூறலாம். அதில் ஒன்று தான், பணிக்கர்கள் பார்க்கும் பிரசன்னம். அதுவும் தெய்வீகமானதுதான். நீங்களும் நானும் இத்தனை வருடங்களாக இந்தச் சென்னையிலேயே இருந்தும், இன்றுதான் நாம் சந்திக்கும் வாய்ப்பும், நேரமும் அமைந்திருக்கிறது. இந்தச் சந்திப்பும் கூட, இறைவனுடைய அனுக்ரஹம் இருந்தால்தான் நடக்கும். இப்படி நடக்கும் என்று நான் கிரஹங்களின் நிலையை வைத்துக் கூறுவேன். இதையே சோழிகளின் மூலமாகக் கூறுவதுதான் – பிரசன்னம். கேரளாவில் பெரிய கோயில் காரியங்கள் எல்லாமே பிரசன்னம் கேட்டுத்தான் நடத்துகிறார்கள். அது உண்மையான ஒன்றுதான்.

ரேவதி மில்டன்: ராசிகளுக்கு ஏற்ற கற்கள் அணிவதால், வாழ்க்கையில் கஷ்டம் நீங்கி சுபிக்க்ஷம் அடையலாம் என்று கூறுகிறார்களே? இது உண்மையா?


ஏ.எம்.ஆர்.: இதுவும் உண்மைதான். ஆனால், இப்பொழுது கொடுக்கப்படும் கற்கள் எல்லாம் போலியானவை. அதனால் உரிய பலன் கிடைப்பதில்லை. உதாரணமாக, நல்ல ஜுரத்திற்கு அதற்குரிய மருந்தைக் கொடுக்காமல், வேறு மருந்தைக் கொடுத்து ‘உடம்பு சரியாகவில்லை’ என்று கூறுவது எவ்வளவு முட்டாள்தனமோ, அப்படித்தான் போலியான கற்களை அணிந்து கொண்டு, தங்களுடைய கஷ்டம் தீரவில்லை என்று கூறுவதும்.

கே.மகேஷ்: ஜாதகம் பார்க்கும் ஜோதிடராக எல்லோரும் ஆக முடியுமா அல்லது அதற்கும் ஜாதகத்தில் ஏதாவது விசேஷ அமைப்பு இருக்க வேண்டுமா?

ஏ.எம்.ஆர்.: ஜாதகத்தில் புதன், லக்னத்திலேயோ அல்லது ஐந்தாம் இடத்திலோ இருந்தால், அவர்களுக்கு ஜோதிடம் நன்றாக வரும். குறைவாகக் கற்று கொண் டால் கூட அது அவர்களுக்குப் பலிக்கும். ஏனென்றால், லக்னத்திலும் ஐந்தாம் இடத்திலும் புதன் இருப்பவர்கள், நேர்மையாளராக இருப்பார்கள். ஜோதிடம் என்பது நாம் கற்றுக் கொள்ளும் கலை என்பதையும் தாண்டி, அதைக் கற்றுக் கொள்ளும் நபருடைய ஒழுக்கம், மற்றும் வாழ்வியல் முறையும் அவருடைய வாக்குப் பலிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

லட்சுமி வெங்கட்ராமன்: ஹிந்துக்களில் பெரும்பாலோர் குழந்தை பிறந்த தேதியை வைத்துதான் ஜாதகம் கணிக்கிறார்கள். ஆனால், சில பேர் பெண் ருதுவான நேரத்தை வைத்து ஜாதகம் கணிக்கிறார்கள். இது சரியா?


ஏ.எம்.ஆர்.: இரண்டும் ஒன்றுதான். ஜனனகால ஜாதகத்தைக் கணித்திருந்தால், அந்தப் பெண் ருதுவாகக் கூடிய நேரத்தையும் அப்போதே கூறியிருப்பார்கள். பிறந்த இடத்தின் ஏழாம் இடத்தைப் பார்த்தாலே, அது ருது ஜாதகம்தான்.

சரண்யா:பத்துப் பொருத்தங்கள் பார்த்துச் செய்யும் திருமணங்கள் கூட முறிவது ஏன்?

ஏ.எம்.ஆர்.: அந்த ஆண் மற்றும் பெண்ணின் ஜாதகத்தில் ஏதேனும் தவறு இருந்திருக்கலாம். அந்த ஜாதகத்தைப் பார்த்தவர் தவறாகப் பார்த்து இருக்கலாம். பொதுவாக ஜோதிட அறிவியல் என்பது பொய்யாகாது.

லட்சுமி வெங்கட்ராமன்: பாவங்கள் ஒரு குடும்பத்தில் உள்ள ஆண் குழந்தைகளையும், அவர்களுடைய ஆண் வாரிசுகளையும் மட் டுமே பாதிக்கும். பெண் குழந்தைகளைப் பாதிக்காது என்று கூறப்படுவது உண்மையா ?

ஏ.எம்.ஆர்.: இல்லை. இரண்டு பேரையுமே பாதிக்கும். எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில், ஒரு பெண் சம்பாதிக்கிறாள் என்ற காரணத்திற்காகவே அந்தப் பெண்ணிற்கு அவளது தந்தையே திருமணத்தைச் செய்யாமல் இருக்கிறார். அந்தப் பெண் ஒரு பெரிய பாவத்தைச் செய்ததால்தான் இப்படி ஒரு தந்தைக்கு மகளாகப் பிறந்து இருக்கிறார். ஒரு ஜீவனுடைய கர்ப்ப வாசம் என்பது பனிரெண்டு மாதங்கள். தந்தையின் கர்ப்பத்தில் இரண்டு மாதங்களும், தாயின் கர்ப்பத்தில் பத்து மாதங்களும் இருக்கிறது. நம்முடைய மறுபிறவி என்பதை, நாம்தான் நம்முடைய செயல்களினால் தீர்மானிக்கிறோம். பிறப்பு மற்றும் மறுபிறப்பு என்பது, நம்முடைய பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அமைகிறது.

தொகுப்பு : எஸ்.ஜே. இதயா

–நன்றி துக்ளக்

 

Advertisements

4 thoughts on “கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு – பிரபல ஜோதிடர் ஏ.எம். ராஜகோபாலன்

 1. Balakannan December 17, 2015 at 5:20 AM Reply

  ivarin address mattrum phone number kidaikkuma ?

 2. BaalHanuman December 17, 2015 at 6:36 AM Reply

  ஆசிரியர்
  குமுதம் ஜோதிடம்
  151, புரசைவாக்கம் நெடுஞ்சாலை,
  சென்னை – 600 010

 3. பி.கே.ஜீவன் December 31, 2015 at 3:18 AM Reply

  பிரபல ஜோதிடர் ஏ.எம். ராஜ கோபாலன் துக்ளக் இதழில்,விவி.ஐ.பி. மீட் மூலம் அளித்த பதில்கள் அவரது நேர்மையையும், ஜோதிடக் கலை மீது அவருக்குள்ள பக்தியையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. அரிய ஜோதிடக் கலையை, இன்றைய தலைமுறையினர் காசுக்காக விற்பனை செய்வதையும், வியாபாரமாக்குவதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டது அவரது நற் சிந்தனையைக் காட்டுகின்றது.

 4. சி. கார்த்திகேயன் December 31, 2015 at 3:19 AM Reply

  ‘விவி.ஐ.பி. மீட்’ பகுதியில் ஜோதிடர் ஏ.எம்.ராஜகோபாலன் அனைத்து விதமான ஆன்மீக,ஜாதக சந்தேகங்களுக்கும் தெளிவாகப் பதில் கூறியிருந்தார். முக்கியமாக ‘ராசிபலன்களைப் பார்த்து தினமும் பயப்பட வேண்டாம். எல்லாம் அவரவரின் பிறந்த நேரத்தை வைத்தே கணிக்கப்படுகிறது’ என்று கூறியுள்ளார். அதற்குப் பின்னரும் நாம் தினமும் காலண்டரில் தேதியைக் கிழிக்கும் போது தங்கள் ராசியில் சோகம் என்றால், சோகமாகத் திரிய வேண்டாம் என்பது உண்மைதான். கோவிலுக்குச் சென்றால் தன் பெயரில் அர்ச்சனை செய்வது தவறு என்பவை உள்ளிட்ட பல விளக்கங்களை துக்ளக் மூலமாகத் தெரிந்து கொண்டோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s