நூல் அறிமுகம்: GTD எனும் மேஜிக் – என்.சொக்கன்


GTD

Getting Things Done‘ என்பதன் சுருக்கம்தான் இது. டேவிட் ஆலென் என்பவர்தான் GTD-யை உருவாக்கியவர். இந்தத் தலைப்பில் அவர் ஒரு புத்தகம் எழுதி வெளியிட, அடுத்த சில ஆண்டுகளுக்குள், இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன. முப்பது மொழிகளில் இது வெளியாகியிருக்கிறது. இதனை மையமாக வைத்து எண்ணற்ற வீடியோக்கள், பயிற்சி வகுப்புகள், மொபைல் அப்ளிகேஷன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதில் இன்னொரு சிறப்பம்சம், GTD-யைப் பின்பற்ற பெரிய கருவிகளெல்லாம் தேவையில்லை. மிக எளிமையாக, ஒரு பேப்பர், பென்சிலை வைத்துக்கொண்டு, உங்கள் வேலைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம்.

GTD புத்தகத்தை இன்றைய நவீன யுகத்துக்கேற்ப திருத்தி எழுதி, 2015-ம் ஆண்டுக்கான புதிய வடிவத்தை வெளியிட்டிருக்கிறார் டேவிட் ஆலென். இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்துவதற்காக, முதன்முறையாக இவர் இந்தியாவிற்கு வந்திருக்கிறார். இதற்காக பெங்களூரில் நடைபெற்ற விழாவில் வாசகர்களைக் கட்டிப்போடும்படி அற்புதமான உரையொன்றை நிகழ்த்தினார். அதிலிருந்து சில முக்கிய டிப்ஸ் இங்கே:

இருக்கிற நேரத்துக்குள் நம்மால் எல்லா வேலைகளையும் செய்ய இயலவில்லையே என்று ஏங்காதவர்கள் யாருமே இல்லை. இது எல்லாருக்கும் உள்ள பிரச்னைதான், கவலைப்படாதீர்கள். இந்தப் பிரச்னை இருந்தால், நீங்கள் முன்னேறுகிறீர்கள் என்று அர்த்தம். சில எளிய நுட்பங்களின் மூலம், நேரத்தை உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம், சிரமமில்லை.

இதில் ஐந்து படிநிலைகள் உண்டு. இவை ஒவ்வொன்றையும் கவனமாகத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

முதல் படிநிலை: நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்கிற ஒரு பட்டியலைத் தயாரிக்க வேண்டும். இது ஒரு பெரிய விஷயமா என்று நினைக்காதீர்கள். உங்கள் மனதில் அங்கும் இங்குமாக ஓடிகொண்டிருக்கிற வேலைகளைத் தொகுத்து ஒரே இடத்தில் எழுதி வைத்தால், ஒரு மிகப் பெரிய திருப்தி கிடைக்கும். இவ்வளவுதான், இதைச் செய்தால் போதும் என்று உணரத் தொடங்குவோம்.

ஆனால், இந்தப் பட்டியல் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். சில வேலைகளைச் செய்து முடித்து விடுவோம். சில வேலைகள் புதிதாக வரும். இன்னும் சில வேலைகள் திரும்பி வரும். அவற்றை அவ்வப்போது இந்தப் பட்டியலில் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க வேண்டும்.

இரண்டாவது படிநிலை: பட்டியலில் உள்ள ஒவ்வொரு விஷயமாக எடுத்துக்கொண்டு அதை யார் செய்யவேண்டும், என்ன செய்யவேண்டும் என்று யோசிப்பது. ஒருவேளை அதை நீங்கள்தான் செய்ய வேண்டும் என்றால், இரண்டு நிமிடங்களுக்குள் செய்யக்கூடியவற்றை உடனே செய்துவிடுங்கள். மற்றவை பட்டியலில் இருக்கட்டும். ஒவ்வொன்றாகச் செய்யலாம்.

மற்றவர்கள் செய்யக்கூடிய விஷயங்களை அவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். அதேபோல், நீங்கள் எதற்காகவேணும் காத்திருந்தால், அந்த வேலைகளைத் தனிப்பட்டியலில் வையுங்கள். இதுபோன்ற விஷயங்களை அகற்றுவதன்மூலம், நீங்கள் உடனே செய்ய வேண்டியவை என்னென்ன என்கிற தெளிவு உங்களுக்குக் கிடைக்கும்.

மூன்றாவது படிநிலை: உங்கள் பட்டியலில் உள்ள விஷயங்களைக் குழுக்களாகப் பிரிப்பது. உதாரணமாக: யாருக்கெல்லாம் ஃபோன் செய்ய வேண்டும் என்பதை ஒரு தனிப் பட்டியலாக்கலாம். கடையில் வாங்கவேண்டியவற்றை ஒரு தனிப்பட்டியலாக்கலாம். கம்ப்யூட்டரில் செய்ய வேண்டியவற்றை ஒரு தனிப்பட்டியலாக்கலாம்.

நான்காவது படிநிலை: இந்தப் பட்டியலை அவ்வப்போது ஆராய்வது. அதில் உள்ள விஷயங்களை முக்கியத்துவத்தின் அடிப்படையில் அடுக்குவது. பெரும்பாலானோர் தங்களுக்குத் தரப்படும் புதிய வேலைகளை உடனுக்குடன் செய்து கொண்டிருப்பார்கள். இதனால், சில பழைய, ஆனால் முக்கியமான விஷயங்கள் பின்னணிக்குச் சென்றுவிடும். ஒரு கட்டத்தில் அதை மறந்தே போய்விடுவார்கள். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க வேண்டுமென்றால், பட்டியலுக்குள் குதித்து விடாமல், அதற்கு வெளியே இருந்தபடி அதில் உள்ள விஷயங்களை ஆராய வேண்டும். எதற்கு என்ன முக்கியத்துவம் தரவேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இதனை வாரம் ஒரு முறையாவது செய்யவேண்டும். அதன்பிறகு, அந்த வாரம் முழுக்க அந்தப் பட்டியலைத் தொடர்ந்து பின்பற்றினால் போதும்!

ஐந்தாவது படிநிலை: வேலைகளைச் செய்வது. இப்போது உங்கள் பட்டியலில் உள்ள விஷயங்கள் ஒவ்வொன்றும் நன்கு சிந்தித்து எழுதப்பட்டிருப்பவை என்பதால், உங்கள் மனம் அலைபாயாது. இதற்குப்பிறகு இது என்கிற தெளிவோடு வரிசையாக வேலைகளைச் செய்வீர்கள். முக்கியமான எதையோ செய்யாமலிருக்கிறோமோ என்கிற டென்ஷன் ஏற்படாது.

GTD என்பது நம்மைத் தெளிவாகச் சிந்திக்கச்செய்கிறது. அதன்மூலம் நம்முடைய பணிகளைச் சிறப்பாகச் செய்யவைக்கிறது.

இப்போதே அரைமணிநேரம் செலவழித்து உங்களுடைய வேலைகளைப் பட்டியலிட்டு, அவை ஒவ்வொன்றும் என்னென்ன என்று சிந்தித்து, ஒழுங்குபடுத்திப் பாருங்கள்.அவற்றைச் செய்துவிடலாம் என்கிற தன்னம்பிக்கை உங்களுக்குள் வருவதைக் காண்பீர்கள். அதை ஒரு வாழ்நாள் பழக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள்!

–நன்றி குமுதம்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s