1-கடவுளின் குழந்தை – ஆர்.வெங்கடேஷ்


முருகேசன், சிவசங்கரன், பார்த்தசாரதி ஆகியோர் 1976 முதல் யோகியாரோடு பழகியவர்கள். இவர்கள் அனைவர்களின் வாழ்விலும் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தியவர் யோகியார். யோகியாரின் கட்டளைப்படி இன்றும் திருவண்ணாமலையில் வசித்து வரும் பார்த்தசாரதி தமது அனுபவங்களை ‘அமரகாவியம்’ புத்தகத்தில் எழுதியுள்ளார்.

அரிய ஞானிகளையும் யோகிகளையும் உலகத்துக்கு வழங்கிய அக்னிமேரு திருவண்ணாமலை. அங்கே பகவான் ரமணர், சேஷாத்ரி சுவாமிகள் என்று தொடரும் கருணை அருவிகள், தமிழக ஆன்மிக சாகரத்தின் முக்கிய கருவிகள். அதில் ‘அப்பாவின் பணி’களைச் செய்த அற்புதக் குழந்தை யோகி ராம்சுரத்குமார்.

உத்திரப்பிரதேசம் கங்கைக் கரையில் இருக்கும் நர்தாரா கிராமத்தில் இருந்து 1950களிலேயே திருவண்ணாமலை வந்துவிட்டார் ராம்சுரத் கன்வர். பகவான் ரமணர் மீது ஏற்பட்ட தீராத பக்தியே அவரை திருவண்ணாமலை நோக்கி ஈர்த்தது. சுவாமி ராமதீர்த்தரின் ‘இன் த வுட்ஸ் அஃப் காட் ரியலைசேஷன்’ தொகுப்புகளை வாசித்தது, புதுச்சேரி அரவிந்தரின் தரிசனம், சென்னையில் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் லெக்சர்களைக் கேட்டது என்று அவருடைய ஆன்மிக படிநிலை வளர்ச்சி, கடைசியில் கஞ்சன்கோடு ஆனந்தாஸ்ரமத்தைச் சேர்ந்த பப்பா ராம்தாஸிடமும் மாதாஜியிடம் கொண்டு சேர்த்தது.

பப்பா ராமதாஸ் வழங்கிய ராமநாம தீட்சையில் ராம்சுரத் கன்வர் தன்னிலை மறந்து உன்மத்தநிலை எய்தினார். ராமநாமத்தை இரவுபகலும் இடையறாது உச்சரித்து, நெய்க்குருகி, அழுது, தொழுது பேரானந்த நிலையை எய்தினார் யோகியார். ‘அப்பாவின் பணி’ தொடங்கிய இடமும் அதுதான்.

அந்த நிலையில் மீண்டும் திருவண்ணாமலை திரும்பிய யோகியார் முதலில் புன்னை மரத்தடியிலும், பாத்திரக்கடை வாசலிலும், பின்னர் சன்னிதித் தெரு வீட்டிலும், சுதாமாவிலும், கடைசியாக அக்ரஹாரக் கொல்லை ஆசிரமத்திலும் அன்பர்களுக்கு அருளாசி வழங்கி நாற்பதாண்டுகள் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான அன்பர்களை ஈர்த்த வண்ணம் இருந்தார்.

‘சாமி’, ‘பகவான்’, ‘யோகியார்’, ‘விசிறி சாமியார்’ என்றெல்லாம் அன்பொழுகவும் உணர்ச்சிப் பெருக்குடனும் அழைத்தனர் சாதாரண மக்கள். நெருங்கிப் போய் கண்ணீர் மல்க நின்ற சாதாரணர்கள் உண்டு; கவலைகளை அவர் காலடியில் சமர்ப்பித்த எண்ணற்ற பிரபலங்கள் உண்டு; எல்லோருக்கும் ‘அப்பா’வின் அன்பையும் அருளாசியை அபரிமிதமாகச் சொரிந்தவர் யோகியார்.

அவர் போதித்தவை வாழ்க்கைப் பாடங்கள். மனித நிலையிலேயே உன்னத உயரங்களைத் தொடத் தேவையான அன்பு, கருணை, இரக்கம், பரிவு ஆகியவற்றை மேம்படுத்தியும் தீய உணர்வுகளை சுட்டெரிக்கவும் கற்றுத்தந்த மகான் அவர். பெரும் தத்துவங்கள் அவர் கொடையல்ல; விளக்கங்கள் அவர் பணியல்ல. மனிதத்தன்மையைப் போற்றச் சொல்லிக் கொடுத்ததே அவர் அரும்பணி.

2001ல் அவர் சமாதியானாலும் இன்றும் தமிழகமெங்கும் யோகி ராம் சுரத் குமார் புகழ்பேசும் எண்ணற்ற அமைப்புகள் இயங்கி வருகின்றன. தனிநபர்களும் தம்மால் இயன்ற அருட்பணியில் ஈடுபட்டு, யோகி யாரின் வழிகாட்டுதலில் ஆனந்தமாகப் பயணித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

கடவுளின் குழந்தை’ என்ற இந்தத் தொடரில், அவரோடு நெருக்கமாகப் பேசவும், பழகவும் அவரது அருளாசியை அபரிமிதமாகப் பெறவும் வாய்ப்புப் பெற்ற பாக்கியவான்கள், தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.

யோகியாரின் சேவையில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, இன்றும் அவர் நினைவாகவே திருவண்ணாமலையில் வாழ்ந்து வரும் எஸ். பார்த்தசாரதி தம் அனுபவங்களைச் சொல்ல ஆரம்பிக்கிறார்:

சாமி ஒருமுறை ஒரு கதை சொன்னார். வண்டுகள் ஒவ்வொரு பூவா போய், உட்கார்ந்து அங்கே இருக்கிற தேனை ருசிச்சி குடிக்குமாம். சில வண்டுகள், ஒரே பூவுக்குள்ளேயே உட்கார்ந்து அந்தத் தேனுடைய ருசியிலேயே மயங்கிக் கிடக்குமாம். வேற பூவைத் தேடி கிளம்பவே கிளம்பாதாம். கொஞ்ச நாள்ல அந்தப் பூ மெல்ல மெல்ல மூடிக்கொள்ளும். அதன்மேல காய் உருவாகி, பழுத்து, மரத்திலேருந்து விழுந்தோ, யாரேனும் அந்தப் பழத்தைச் சாப்பிட்டோ கொட்டையைத் தூக்கிப் போட்டுடு வாங்க. ஆனாலும் அதுக்குள்ளே இருக்கும் வண்டு, இன்னும் மயக்கத்தோட, ரொம்ப ஆனந்தத்தோட அப்படியே இருந்துக்கிட்டு இருக்குமாம். இதுக்கு மாம்பழத்து வண்டுன்னு பேரு.

இதுமாதிரிதான் பக்தர்கள். ஒவ்வொரு யோகிகளாக, ஞானிகளாகத் தேடிப் போகிற வண்டுகள் உண்டு. ஆனா, ஒரே சாமிகிட்ட தங்களை முழுசா அர்ப்பணம் செஞ்சுக்கிட்டு, காலம் முழுவதும் அவரோட கருணைநிழல்ல, அன்புப் பெருக்குல வாழும் பாக்கியம் பெற்ற வண்டுகளும் உண்டு. நாங்களெல்லாம் அப்படிப்பட்டவங்க. எங்களையெல்லாம் சாமி தேடித்தேடி சேர்த்துக்கிட்டார். சரியா சொல்லணும்னா, பாத்திரமறிந்து பிச்சையிட்டார் சாமி. அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறத் தகுதியான பாத்திரங்களை அவர் உருவாக்குவார்.

பல பேர் அவருடைய காலைத் தொட்டு கும்பிட வருவாங்க. எல்லாரையும் காலைத் தொட அனுமதிக்க மாட்டார். அவருக்குத் தெரியும். ஒரு சிலர் வந்தா, சட்டுன்னு காலை பின்னாடி நகத்திடுவார். வேட்டியால மூடி மறைச்சுக்குவார். ஒரு சிலர் காலில் விழுந்து அழுவாங்க. பொறுமையா ஏத்துக்குவார்.

அவரோட ஆசீர்வாதம்ங்கறது காது கொடுத்துக் கேக்கறதுதான். சிவகாசியிலேருந்து ஒரு குடும்பம் அவர்கிட்ட வந்துச்சி. கணவன், மனைவி, இரண்டு பிள்ளைங்க, ஒரு பொண்ணு. கார் ஆக்சிடெண்டுல கணவரும் ஒரு பையனும் ஸ்பாட்லே போயிட்டாங்க. அந்தம்மாவுக்குச் சொல்ல முடியாத துயரம். ஒரு நாள் ராத்திரி ஒன்பது மணிக்கு மேல சன்னிதி தெரு வீட்டுக்கு வரச் சொன்னாங்க சாமி.

பக்கத்துல உட்கார வெச்சிக்கிட்டார். என்ன நடந்ததுன்னு சொல்லச் சொன்னார். அந்தம்மா பேசப் பேச, சாமி வாயே திறக்கல… ஒரு மணி நேரம், ரெண்டு மணி நேரம், மூணு மணிநேரம்… அழுகை, சோகம், கேவல், கதறல். சாமி கேட்டுக்கிட்டே இருந்தாங்க. ராத்திரி பன்னெண்டு மணிக்கு அந்தம்மா எல்லா பாரத்தையும் சாமிகிட்ட எறக்கி வெச்சுட்டாங்க.

அமைதி. அப்படியொரு அலாதியான அமைதி, அந்தம்மா முகத்துல. சாமி எல்லாத்தையும் வாங்கிக்கிட்டாங்கங்கற நிம்மதி. இன்னைக்கு வரைக்கும் அந்தம்மா அவ்வளவு ஆனந்தமாய், சந்தோஷமாய், சிரிச்சுக்கிட்டு இருக்காங்க. சாமி ஒண்ணும் கொடுக்கல. ஆனால், அந்தம்மாவுடைய கஷ்டங்களை ஆதரவாய் காது கொடுத்துக் கேட்டாங்க. அதுதான் பேரன்பு. உலகத்தைப் புரிஞ்சுக்க வெக்கற பக்குவம் அதுதான்.

திருவண்ணாமலை தீபம் சமயம் அது. சாமியோட முருகேஷ்ஜியும் நானும் இருக்கோம். ஒருவாரம். வாசக்கதவைச் சாத்திட்டார் சாமி. பேசறோம், பேசறோம் அப்படி பேசறோம். பப்பா ராம்தாஸைப் பத்தி, ஜே. கிருஷ்ணமூர்த்தி பத்தி, அவங்க எழுதின புக்ஸைப் பத்தியெல்லாம் பேசிக்கிட்டே இருக்கோம். ஒரு கப் காபி கூட குடிக்க முடியல. சாமி உத்தரவு இல்லாம வெளியே எழுந்து போகவே முடியாது. வாசல்ல யார் யாரோ பிரபலமான மனிதர்கள் எல்லாம் வந்து நின்னுக்கிட்டு இருங்காங்க. ஐ ஆம் டூயிங் மை ஃபாதர்ஸ் வொர்க். டோண்ட் டிஸ்டர்ப் மி”னு சொல்லிட்டு எங்களோடவே இருக்கார் சாமி.

மெல்ல முருகேஷ்ஜி சாமிகிட்ட, சாமி, பார்த்தசாரதியை அனுப்பி, காபி வாங்கிட்டு வரச் சொல்லலாமா?”ன்னு கேட்டார். நோ, வி ஆர் பிசி வித் ஃபாதர்ஸ் வொர்க். வி ஷுட் நாட் வேஸ்ட் டைம் முருகேஷ்ஜி.” பசி ரொம்ப ஜாஸ்தியா போச்சு. அப்புறம், அங்கே இருந்த ஒரு அலுமினியத் தட்டுல, அவர்கிட்ட இருந்த பொரி, பிஸ்கட்கள், முறுக்கு எல்லாத்தையும் கொட்டி, தேன் பாட்டிலைக் கவிழ்த்து, ஜூஸ் பாட்டிலையும் கொட்டி, வாழைப்பழம், இன்னும் என்னென்ன பழம் இருந்ததோ, அது அத்தனையும் போட்டு, என்னை பிசையச் சொன்னார். கை அழுக்கா இருக்கு, நான் போய் கழுவிக்கிட்டு வர்றேன்”னு சொன்னேன். கையைத் தடவிக் கொடுத்த சாமி, ஓ, யூ ஹாவ் அ வொண்டர்புல் ஹாண்ட்ஸ். யு கான் டு இட் ரைட் நவ்”னு சொல்லி பிசையச் சொல்லிட்டார்.

நான் எல்லாத்தையும் போட்டு நல்லா பிசைஞ்சி, அங்கே இருந்த தாமரை இலையில அதை எடுத்து வெச்சேன். உடனே சாமி, வி ஆர் ஆல் ஃப்ரெண்ட்ஸ். வி நீட் நாட் சீ எனி ஃபார்மாலிட்டி”ன்னு சொன்னார். நாங்க எச்சில் பண்ணிடக்கூடாதேன்னு எங்கப் பக்கத்துல இருந்த அந்தக் கலவையை எடுத்துச் சாப்பிட்டோம். ஆனால், சாமி நாங்க எடுத்துச் சாப்பிட்ட பக்கத்துலேருந்தே அவரும் எடுத்துச் சாப்பிட்டார். அந்த ருசி இருக்கே. தேவாம்ருதம்னா என்னன்னு அன்னிக்குத்தான் தெரிஞ்சுக்கிட்டோம். அப்படிப்பட்ட ஒரு திருப்தி.

கிளம்பும்போதுகூட எதையும் சாப்பிட விடல. எங்கேயும் நிக்கக்கூடாது, சாப்பிடக் கூடாது. நேரா உங்க ஊருக்குப் போய்ச் சேருங்க, வீட்டுக்குப் போய்ச் சேருங்க. அப்புறம்தான் சாப்பிடணும்னு உத்தரவு போட்டுட்டார். நான் திருக்கோவிலூர் போய் இறங்கித்தான் சாப்பிட்டேன். ஏன் இதெல்லாம் நடந்துச்சின்னு அப்போ புரியல.

கரெக்டா ஒரு வருஷம் கழிச்சி, முருகேஷ்ஜி தன்னோட உடம்பைத் துறந்தார். சாமி அவருக்குக் கொடுக்க வேண்டியதெல்லாம் அவ்வளவு அவசரமாய் கொடுத்தார். பக்குவப்படுத்த வேண்டியதையெல்லாம் செஞ்சார். கடைசியில முருகேஷ்ஜி போகும்போது அவ்வளவு அமைதியா போனார். அவர் போன மூணு நாளைக்குப் பின்னாலதான், சாமிக்கு அது தெரிய வந்துச்சி. உடனே சாமி சொன்னார், முருகேஷ்ஜி, ஹாஸ் பிக்கம் மை ஃபாதர். ஹீ நௌ வொர்ஷிப்பபிள்.”

(அனுபவம் தொடரும்)

–நன்றி கல்கி

சாதாரண மானுடராய்ப் பிறந்து, இல்வாழ்க்கையில் ஈடுபட்டு, இறைத் தேடலின் விளைவாய் இல்லறம் துறந்து இந்தியா முழுமையும் சுற்றி, அனுபவம் பெற்று, இறுதியில் தன்னையும் இறைவனையும் உணர்ந்து மகாஞானியாய் முகிழ்த்தவர் பகவான் யோகி ராம்சுரத்குமார். இறைவனை அடைவதற்கு சாதியோ, மதமோ, கல்வியோ, செல்வமோ தடையில்லை. படித்தவர், பாமரர் என அனைவரும் இறைவனை அடைய முடியும். அதற்குத் தேவை இறைவன் மீதான நம்பிக்கையும், சரணாகதியும், அவர் நாமத்தைப் பாராயணம் செய்வதும்தான் என்பதை உலகுக்கு அறிவித்தவர்.

இறைவனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பதே பிரார்த்தனை;
இறைவனின் நாமத்தை சதா சொல்லிக் கொண்டிருப்பதே தியானம்;
இறைவனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பதே சமாதி;
அதுவே சரணாகதி
.
– என்று வலியுறுத்திய யுக புருஷர். தன்னை ஒரு பிச்சைக்காரன் என்று சொல்லிக் கொண்ட வள்ளல். விசிறி, கொட்டாங்குச்சி, தலைப்பாகை, சால்வை என்று மாறுபட்ட தோற்றத்தில் வலம் வந்த மகா சித்தர். அவரது வரலாறும், வாழ்க்கைச் சம்பவங்களும், உபதேசங்களும் இந்நூலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

நூலிலிருந்து…..

———————————————————————————————-
——- பக்தர் கேள்விகளும் பகவானின் பதில்களும்——-
———————————————————————————————-

பக்தர் : முன்னோர்களுக்கு திதி கொடுப்பது மிகவும் அவசியமா ?

பகவான் : இல்லறத்தில் இருக்கும் ஒருவர் தன் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய ’நீத்தார் கடன்’ என்பது மிகவும் முக்கியமானது. திதி கொடுக்க வேண்டியது என்பது ஒவ்வொருவரும் தவறாமல செய்ய வேண்டியதாகும். இராமாயணத்தில் ராமன், ஜடாயுவிற்கும் தசரதனுக்கும் திதி கொடுத்துள்ளான். மகாபாரதத்தில் அர்ஜூனன், கிருஷ்ணன் எல்லோருமே திதி கொடுத்துள்ளனர். ஆகவே திதி அவசியம். திதி கொடுக்கப்படும் நாளில், கொடுக்கப்படும் இல்லத்தில் சூழலே மாறியிருக்கும். ஒருவர் கூர்ந்து கவனித்தால் தங்கள் முன்னோர்களின் வருகையை உணர முடியும்.

190 பக்கங்கள். விலை ரூ. 150/-

நூல் கிடைக்குமிடம் :

சூரியன் பதிப்பகம்
229, கச்சேரி ரோடு,
மயிலாப்பூர், சென்னை – 600004
தொலைபேசி : 044-42209191

ஆன்லைனில் வாங்க:

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s