முறைப்படி பொருத்தம் பார்த்து மணமுடித்தால் விவகாரத்து வராது! – பிரபல ஜோதிடர் ஏ.எம். ராஜகோபாலன்


தமிழகத்தில், பணம் சம்பாதிப்பதற்காக போலியான ஜோதிடர்கள் பலர் உலவிக் கொண்டிருக்கும்போது, தனது ஜோதிடத் திறமையைப் பணம் சம்பாதிக்கப் பயன்படுத்தாத ஏ.எம்.ராஜகோபாலன், பலருடைய நம்பிக்கை நாயகனாகத் திகழ்கிறார். அவரை நமது ‘துக்ளக்’ வாசகர்கள், அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள். அந்த கலந்துரையாடலின் தொடர்ச்சி இங்கே:

சேஷாத்ரி: பல காலத்திற்கு முன்னால், இந்தியா அகண்ட பாரதமாக இருந்தது. இப்பொழுது இந்தியாவில் மதமாற்றம் என்பது அதிகளவில் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் ஜாதகப்படி ஹிந்துக்கள் சிறுபான்மையினராக மாறிவிடும் வாய்ப்புள்ளதா என்று கணிக்க முடியுமா?

ஏ.எம்.ராஜகோபாலன் (ஏ.எம்.ஆர்.):இந்தியாவின் ஜாதகப்படி ஒரு மன்னரின் கீழ் இந்தியா இருந்த காலம் குறைவு. அங்கங்கே சிற்றரசர்களின் ஆட்சி இருந்து வந்தது. தசரத மன்னன் கோசல நாட்டை ஆண்டு வந்தான். மிதிலையை ஜனகர் ஆண்டு வந்தார். தென்னிந்தியாவில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள். இத்தனை ராஜாக்கள் மற்றும் ராஜ்ஜியங்கள் இருந்தும் கூட, எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்தது ​வேத தர்மம். இந்த ஹிந்து தர்மம் என்ற ஒன்றினால்தான், இந்தியா ஒன்றாக இருந்தது. பல்​வேறு காரணங்களால் அவர்களிடையேயும் போர் மூண்டது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அந்நியர்களால் இந்தியாவில் நுழைய முடிந்தது. அந்நியர்களை ஒற்றுமையுடனிருந்து எதிர்க்க நாம் தவறி விட்டோம். இந்தியாவின் ஜாதகப்படி, எதிர்காலத்திலும் ஒரு உள்நாட்டுப் போர் வந்துதான் இத்தகைய விஷயங்கள் சரியாகும்.

அண்ணாதுரை:உலகளவில் இந்தியாவில்தான் புத்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ரமண மகரிஷி போன்ற பெரிய ஞானிகள் தோன்றி இருக்கிறார்கள். உலகத்தில் உள்ள ​வேறு கண்டங்களிலோ அல்லது நாட்டிலோ இந்தளவு ஞானிகள் பிறந்திருக்கிறார்களா? இவ்வளவு ஆன்மீகச் செல்வங்கள் இருக்கின்றனவா?


ஏ.எம்.ஆர்.: குருஷேத்ர யுத்தம் முடிந்ததும்,வியாசர் பவிஷ்ய புராணம் எழுதினார். அதில் இதைப் பற்றியெல்லாம் கூறியுள்ளார். பாரதம் இப்படியெல்லாம் ஆகும் என்றும் கூறியுள்ளார். ‘எதுவுமே ​வேண்டாம்’ என்று சொல்லும் மகான்களை நாம் இங்கு மட்டுமே காணலாம். மற்ற நாடுகளில் உள்ளவர்கள் பணம் மற்றும் ஐஸ்வர்யம் மேலும் ​வேண்டும் என்றுதான் சொல்லுவார்கள். ஒரு முறை ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் ஒருவன் சென்றான். ‘உங்களுடைய அனுக்ரஹம் ​வேண்டும்’ என்று கேட்டான். ‘எதற்கு என்னுடைய அனுக்ரஹம் ​வேண்டும்’ என்று அவர் கேட்டார். ‘நான் சொந்த வீடு வாங்கப் போகிறேன். அதற்கு உங்களுடைய ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் ​வேண்டும்’ என்று அவன் கூறினான். அதற்கு ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ‘அந்த வீடு இன்று ஒருவனுக்குச் சொந்தமாக இருக்கிறது. நாளை உனக்குச் சொந்தமாகும். ​வேறொரு நாள் மற்றொருவனுக்குச் சொந்தமாகி விடும். இந்த உலகமே நமக்குச் சொந்தமில்லை. பிறகு எப்படி ஒரு வீடு மட்டும் உனக்குச் சொந்தமாகும்?’ என்று கேட்டார். இதுபோல் இந்த உலக வாழ்க்கை நிரந்தரம் இல்லை என்ற எண்ணத்தையே, நமக்குச் சொல்லி வாழ்க்கையின் ரகசியத்தை உணர்த்திய மகான்கள் இந்தியாவின் தனிச்சிறப்புக்குச் சொந்தக்காரர்கள்.

கே.மகேஷ்:ஜாதகம், கைரேகை, எண் கணிதம் இந்த மூன்றிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?

ஏ.எம்.ஆர்.: ஜோதிடம் என்பது ​வேதத்தில் இருக்கிறது. பஹவானே ​வேதமாக இருக்கிறார். ​வேதங்கள் யாராலும் எழுதப்படவில்லை. கைரேகை மற்றும் எண்கணிதம் பிற்காலத்தில் வந்தது. நான், ஜோதிடத்தை உயர்வாகக் கூற ​வேண்டும் என்பதற்காக இதைக் கூறவில்லை.எண் கணிதம் மற்றும் கைரேகை சாஸ்திரத்தில் நிறைய வரம்புகள் உள்ளன. முப்பது வயதில் கைரேகை பார்த்தால், அப்பொழுது என்ன கைரேகை இருக்கிறதோ அதை வைத்தே பலன்கள் கூறப்படுகின்றன. இதை அந்தக் கைரேகை நிபுணர்களே ஒப்புக் கொள்கின்றனர். நாற்பத்தி இரண்டு வயதில் கைரேகை புதிதாக வரும் அல்லது அழிந்து போகும். அதனால் அப்போதைய பலன் மாறும் என்று கூறுகின்றனர். ஆனால், ஜோதிடத்தில் அப்படி இல்லை. வாழ்க்கை ஆரம்பித்தது முதல் முடிவது வரை ஒரே பலன்தான்.

இரண்டாவது, எண் கணிதம். இந்த எண் கணிதத்தில் பல மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கின்றன. எனது பெயர் ராஜகோபாலன். எனக்குப் பத்து லட்சம் ரூபாய் கடன் இருக்கிறது என்று வைத்துக் கொள்​வோம். என்னுடைய பெயரை ராஜகோபால் என்று மாற்றினால் என்னுடைய கடன் தொல்லை தீரும் என்று கூறுவதை எப்படி நம்ப முடியும்? கடன் வாங்கியது ராஜகோபாலன். பெயரை மாற்றுவதால் ஒரு பிரச்னை தீரும் என்பது பகுத்தறிவுக்கே ஏற்றதாக இல்லை. ஆனால், மக்களோ ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’என்பது போல, கஷ்டங்கள் வரும்போது இத்தகைய விஷயங்களில் ஈடுபடுகிறார்கள். பொதுவாக, நான் எந்தத் துறையையும் குறை கூறுவதில்லை. இதெல்லாம் அவரவர் நம்பிக்கையைப் பொறுத்த விஷயம். ஜோதிடம் நம்பகமானது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஏனென்றால், அது ​வேதத்தில் இருக்கிறது.

சரண்யா: ஜாதகம் பார்ப்பதிலேயே இரண்டு முறை இருக்கிறது. கட்டம் போட்டுப் பார்ப்பது மற்றும் பிறந்த நேரத்தை வைத்துக் கணிப்பது (வாக்கியப் பஞ்சாங்கம் மற்றும் திருக்கணிதப் பஞ்சாங்கம்). ஏன் இந்த மாறுபாடு?


ஏ.எம்.ஆர்.: கிரஹங்களில் வக்ரம், அதிசாரம் என்று உண்டு. குரு கிரஹம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதற்கு ஒரு வருடம் ஆகும். அது​வே செவ்வாய் கிரஹம் என்றால் மிகவும் ​வேகமாக நகரக் கூடியது. செவ்வாயின் ஈர்ப்பு சக்தி, குருவின் ஈர்ப்பு சக்தியை விட அதிகம். அந்தச் செவ்வாய் கிரஹமானது குரு கிரஹத்திற்கு மிக அருகில் வரும்போது, தனது ஈர்ப்புச் சக்தியால் குரு கிரஹத்தை இழுக்க முற்படும். இந்தச் சமயத்தில் குருவின் ​வேகம் மாறுபடும். இந்த மாறுதலையே வக்ரம் (மெதுவாகச் செல்லுதல்), அதிசாரம் (​வேகமாகச் செல்லுதல்) என்று கூறுகிறோம். இதுபோன்ற சமயங்களில், அது இருக்கின்ற ராசியின் பலனைக் கொடுக்காமல், அதற்கு அடுத்த ராசியின் பலன்களையே கொடுக்கும். இந்த அதிசார, வக்ர பலன்கள் சனி, சுக்ரன், புதன் மற்றும் குரு ஆகிய கிரஹங்களுக்கே உண்டு. வாக்கியப் பஞ்சாங்கம் இந்த மாறுபட்ட பலன்களைக் கணக்கிட்டு வரும். என​வே, திருக்கணிதப் பஞ்சாங்கம் என்பது வானியலாளர்களுக்கு. வாக்கியப் பஞ்சாங்கம் என்பது ஜோதிடத்திற்கு. அதனால் ஜாதகம் கணிப்பதை வாக்கியப் பஞ்சாங்கம் மூலம் தான் செய்ய ​வேண்டும்.

அண்ணாதுரை:இந்தியாவைச் சுற்றிப் பின்னப்பட்ட இந்த ஜாதகம் எல்லாம், ஆஸ்திரேலியாவில் பிறந்த குழந்தைக்கும், அமெரிக்காவில் பிறந்த குழந்தைக்கும் இருக்குமா?

ஏ.எம்.ஆர்.: உலகத்தில் உள்ள அத்தனை குழந்தைகளுக்கும் ஜாதகம் உண்டு.

லட்சுமி வெங்கட்ராமன்: ஒரே ஜாதகத்தை இரண்டு ஜோதிடரிடம் காட்டும்பொழுது, இரண்டு நபர்களும் வெவ்​வேறு மாதிரிக் கணித்துக் கூறுகிறார்களே?


ஏ.எம்.ஆர்.: ஜோதிடம் என்பது மிகவும் துல்லியமான அறிவியல். ஆனால், இப்பொழுதெல்லாம் அதில் நிறையப் போலிகள் வந்து விட்டார்கள். அவர்களிடம் காட்டினால், அது தவறாகத்தான் போகும். ஜோதிடத்தை முறையாகக் கற்றுக் கொண்ட பத்து ஜோதிடர்கள் பார்த்தால், பத்து பலனும் ஒன்றாக​வே இருக்கும். முன்பெல்லாம் கிராமத்தில் இருக்கும் ஜோசியர்கள், தங்களுக்கு முன்னால் ஒரு பித்தளைத் தட்டுடன் பலன் சொல்ல அமர்ந்து கொள்வார்கள். அதில் என்ன சன்மானம் விழுகிறது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஜோதிடர்கள் அதைப் பார்க்க மாட்டார்கள். எல்லோருக்கும் பலன் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். சூரிய அஸ்தமனத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக எழுந்து, சுவாமியின் அருகில் அந்தத் தட்டை வைத்து ​வேண்டிக் கொண்ட பின்தான், அதிலுள்ள பணத்தை எண்ணியே பார்ப்பார்கள். அவர்கள் கணிக்கும் பலன்கள் என்றும் தவறியதில்லை. ஆனால், இப்பொழுதெல்லாம் ஜோதிடத்தை முறையாகக் கற்றுக் கொள்ளாமல்,நிறையப் போலி ஜோதிடர்கள் உருவாகி விட்டார்கள்.

சேஷாத்ரி:ஏடு பார்ப்பது என்பது நம்பகமானதா?

ஏ.எம்.ஆர்.: அப்பொழுதெல்லாம் இரண்டே பேர்தான் இந்த ஏடு பார்ப்பதைச் செய்தார்கள். காரைக்குடியில் ஒருவரும், வைத்தீஸ்வரன் கோயிலில் ஒருவரும் செய்தார்கள். அவர்களிடம் கூடக் கடந்த காலச் சம்பவங்கள் சரியாக இருக்குமே தவிர, எதிர்காலத்தை அவ்வளவு துல்லியமாகக் கணித்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், இப்போது தமிழ்நாடு முழுவதும் இத்தகைய ஏடுகள் பார்க்கும் இடங்கள் இருக்கின்றன. கோடம்பாக்கத்தில் சந்திற்குச் சந்து இருக்கிறது.

ரேவதி மில்டன்: திருமணப் பொருத்தம் எப்படிப் பார்க்க ​வேண்டும்?


ஏ.எம்.ஆர்.: ஒரு ஜாதகத்திற்குப் பொருத்தம் பார்ப்பது என்றால், திருமணத்திற்காக மட்டும் பொருத்தம் பார்க்கக் கூடாது. குறைந்தபட்சமாக, முப்பது அல்லது நாற்பது வருடங்களுக்குப் பலன்களைப் பார்த்துச் சொல்ல ​வேண்டும். அப்படித்தான் பார்க்க ​வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இந்த முறையில் பொருத்தம் பார்த்தால், எந்தத் திருமணமும் விவாகரத்து வரை போகாது. ‘ஜாடிக்கேத்த மூடி’ என்று சொல்லுவது போல, மனம் பொருந்தி வாழ்வார்கள்.

ஐந்தாம் இடப் பொருத்தம் இருப்பது புத்ரபாக்கியத்திற்கு மிக முக்கியம். கணவனும், மனைவியும் அமாவாசை, பிரதமை, அஷ்டமி மற்றும் நவமி ஆகிய நாட்களில் சேர்ந்து இருக்கக் கூடாது என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படிச் சேர்ந்தால் என்ன நடக்கும் என்பதும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தையின் ஜாதகம் என்பது, அந்தக் குழந்தையினுடைய தாயின் கருவறையில் உருவாக ஆரம்பிக்கும் நொடியிலிருந்தே கணக்கில் கொள்ளப்படும். அந்த நொடியிலிருந்தே அந்தக் குழந்தையின் பூலோக வாசம் ஆரம்பித்து விட்டது. அன்றிலிருந்தே கிரஹங்களின் ஆதிக்கத்தில் அந்தக் குழந்தை வந்து விடுகிறது. அதனால்தான் அந்தக் குழந்தை வளருகிறது. மேலும் அந்தக் குழந்தை உண்டான நொடியிலிருந்து, இத்தனை காலம் வரையில்தான் அது அந்தக் கருவறையில் இருக்க முடியும், அதன்பிறகு வெளியில் வந்தே தீரும். இந்தக் கணக்குகளை எல்லாம் ஜாதகத்தில் சரியாக எழுதிவிட்டால், அந்தக் குழந்தைக்கு எந்த நாள் எந்த நொடி என்ன நடக்கும் என்பதைத் துல்லியமாகக் கூற முடியும். கணவன், மனைவி சேருவதை ஆபாசம் என்றோ, அருவருக்கத்தக்கது என்றோ ஜோதிடத்தில் கூறவில்லை. ஆனால், அது நல்ல நேரத்தில் நடக்க ​வேண்டும் என்று கூறுகிறார்கள்.


ஏகாதசி அன்று தம்பதிகள் சேர்ந்து, குழந்தை பிறந்தால் அது பக்திமானாக இருக்கும் என்று கணித்துள்ளார்கள். நவமி அன்று சேர்ந்து குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தைக்கு ஊர் சுற்றும் தொழில் அமையும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அலைந்து கொண்டே இருக்க ​வேண்டிய நிலையில் இருக்கும். உதாரணத்திற்கு அந்தக் குழந்தை ஒரு மெடிக்கல் ரெப் ஆகப் போகலாம். இப்படி ஒவ்வொரு நாளுக்கும் பலன் கணித்து வைத்திருக்கிறார்கள். இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், என்று ​வேண்டுமானாலும் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொண்டால், நமக்கு வரும் பாதிப்பை விடக் குழந்தைக்குத்தான் அதிகம். குழந்தைகள் நன்றாக இருந்தால்தான் பெற்றோருக்கு மகிழ்ச்சி. ஒரு குழந்தை மனநலம் பாதிக்கப்பட்டு பிறக்கிறது என்றால், அந்தப் பெற்றோரின் நிலையை யோசித்துப் பாருங்கள். இன்றைய காலக்கட்டத்தில் கணவன் மனைவி இருவரும் ​வேலைக்குச் செல்கிறார்கள். குழந்தை பிறப்பைத் தள்ளிப் போட மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். இதனால் குழந்தை பிறப்பிற்குத் தேவையான ஏழு ஹார்மோன்களின் அளவில் மாற்றம் ஏற்பட்டு, குழந்தை ஏதோ ஒரு குறைபாட்டுடன் பிறக்கிறது. இதெல்லாம் ஆயுர்​வேத அறிவியலில் கூறப்பட்டுள்ளது. இது அத்தனையும் ஜோதிட சாஸ்திரத்திலும் கூறப்பட்டுள்ளது

அண்ணாதுரை:அப்படியானால், எல்லோருமே நாள் பார்த்து சேர்ந்தால், குறைபாடில்லாத குழந்தைகள் பிறக்கும் என்று கூறலாமா?

ஏ.எம்.ஆர்.: அதாவது, லக்னத்தில் இருந்து ஐந்தாம் இடத்தை, பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று கூறுவார்கள். குழந்தை குறைபாட்டுடன் பிறக்க ​வேண்டும் என்று அவர்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்தால், அந்தக் கணவன், மனைவி இது போன்ற சேரக் கூடாத நேரத்தில்தான் ஒன்று சேருவார்கள். ஆனால் இதையெல்லாம் எப்படித் தவிர்க்க முடியும் என்று வழி சொல்லி இருக்கிறார்கள். ‘கர்மா’ என்பதைப் பத்தொன்பது விதமாகப் பிரித்து இருக்கிறார்கள். சட்டத்தில் எல்லாக் குற்றத்திற்கும் தூக்குத் தண்டனை வழங்குவதில்லை. அதுபோல, நமது கர்மாவின்படி நாம் இந்த வாழ்க்கையில் சுகதுக்கங்களை அனுபவிக்கிறோம். சில கர்மாக்களுக்கு நமக்கு மன்னிப்பு உண்டு. அதற்குத்தான் நான் பரிகாரம் சொல்கிறேன். இந்த இந்தப் பரிகாரம் செய்வதால், இதை இதையெல்லாம் மாற்றலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

தொகுப்பு : எஸ்.ஜே. இதயா,
படங்கள்: பேஜர் கிருஷ்ணமூர்த்தி


(ராசிக்கேற்ப கற்கள் அணிவதால் பலன் உண்டா? யார் ​வேண்டுமானாலும் ஜோதிடர் ஆகி விட முடியுமா? தினப்பலன், வார ராசிபலன் ஆகியவை நம்பத் தகுந்தவையா? மொட்டை போடுவதால் பலன் உண்டா? வாஸ்து சாஸ்திரம் அறிவியல் பூர்வமானதா? என்பது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கான பதில்கள் அடுத்த வாரம்)

–நன்றி துக்ளக்
Advertisements

3 thoughts on “முறைப்படி பொருத்தம் பார்த்து மணமுடித்தால் விவகாரத்து வராது! – பிரபல ஜோதிடர் ஏ.எம். ராஜகோபாலன்

 1. nparamasivam1951 December 11, 2015 at 6:33 AM Reply

  அருமையாக இருந்தது. ஜோதிடம் முறையாக கற்கும் ஆவல் எழுந்துள்ளது. எப்படி என்பது பற்றி யாராவது அவரிடம் கேட்கிறார்களா என ஆவலுடன் உள்ளேன்.

 2. BaalHanuman December 11, 2015 at 3:54 PM Reply

  இந்த வயதிலும் ஜோதிடம் கற்க நினைக்கும் உங்கள் ஆர்வத்திற்கு தலை வணங்குகிறேன்!

 3. பொன்.முத்துக்குமார் December 11, 2015 at 10:10 PM Reply

  அன்பு பால்ஹனுமான், ஒரு வேண்டுகோள் ! உங்களது மின்னஞ்சல் முகவரி தர இயலுமா ? இல்லையெனில் எனது முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப முடியுமா, தயவு செய்து ?

  அன்புடன்
  முத்து

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s