ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க அறிவியலே! – பிரபல ஜோதிடர் ஏ.எம். ராஜகோபாலன்


தமிழகத்தில், பணம் சம்பாதிப்பதற்காக போலியான ஜோதிடர்கள் பலர் உலவிக் கொண்டிருக்கும்போது, தனது ஜோதிடத் திறமையைப் பணம் சம்பாதிக்கப் பயன்படுத்தாத ஏ.எம்.ராஜகோபாலன், பலருடைய நம்பிக்கை நாயகனாகத் திகழ்கிறார். அவரை நமது ‘துக்ளக்’ வாசகர்கள், அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள். அந்த கலந்துரையாடலின் தொகுப்பு இங்கே:

சரண்யா: எப்படி உங்களுக்கு ஜோதிடத்தின் மீது நாட்டம் வந்தது?


சரண்யா
ஏ.எம்.ராஜகோபாலன் (ஏ.எம்.ஆர்.): நான் சிறுவனாக இருக்கும்போது, பள்ளி செல்லும் வயதில் என்னுடைய அம்மாவின் சகோதரர் ஸ்ரீனிவாச பட்டாச்சாரியார் ஸ்ரீரங்கத்தில் இருந்தார். அவர் திருச்சியில் புகழ் பெற்ற நேஷனல் காலேஜில் சமஸ்கிருதத் துறைத் தலைவராக இருந்தார். அவர் ஜோதிடத்தில் பெரியஞானி. எனினும், அதை அவர் ஒரு வியாபாரமாகக் கருதவில்லை. இலவசமாகச் செய்தார். ஒருநாள் அவர் வீட்டிற்குச் சென்றபோது விளையாட்டாக, ‘நீங்கள் இப்படிப் பலன் சொல்லிக் கொண்டு இருக்கிறீர்களே, இதனால் சமுதாயத்திற்கு ஏதாவது பயன் இருக்கிறதா?’ என்றும் ‘அறிவியல் என்பது, சமுதாயத்திற்குப் பயனளிக்கும் வகையில் இருந்தால் மட்டும் தானே அதை அறிவியலாகக் கருத முடியும்’ என்றும் கேட்டேன். அதற்கு அவர் ‘ஜோதிடர்கள் இதைச் சமுதாயப் பணியாகவும் செய்ய முடியும், வியாபாரமாகவும் செய்ய முடியும். அது, அந்தந்த ஜோதிடர்களைப் பொறுத்தது’ என்று கூறினார்.

ஜோதிட அறிவியல் என்பது ரிக் மற்றும் அதர்வண வேதத்தில் இருக்கிறது. மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டே இவற்றை மகரிஷிகள் நமக்கு அளித்துள்ளார்கள். அந்தக் காலத்தில் மகரிஷிகள், ஜோதிடத்தை, எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்து வந்தனர்’ என்று ஜோதிடம் குறித்து அவர் இவ்வளவு விளக்கிய பிறகே, அவரிடம் ஜோதிடம் பயில ஆரம்பித்தேன். ஜோதிடத்தின் அடிப்படையை அவர்தான் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். கடலின் ஆழத்திற்குச் செல்லச் செல்ல, நல்ல முத்துக்கள் கிடைப்பது போல, ஜோதிடத்தைப் படிக்கப் படிக்க, இப்படி ஒரு அறிவியல் இருக்க முடியுமா என்ற ஆச்சரியம் ஏற்பட்டது. இதனால் எனக்கு மேலும் மேலும் இதைக் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. என்னுடைய மாமாவின் காலத்திலேயே ஜோதிடத்தின் கணக்கீடு முறைகளை எல்லாம் கற்றுக் கொண்டேன். இதையெல்லாம் புத்தகங்களில் படித்துத் தெரிந்து கொள்ள முடியாது. மிகவும் கடினமாகவும், குழப்பமாகவும் இருக்கும். ஆனால், அவர் எனக்கு, அனைத்தையும் மிகச் சுலபமாகவும், எளிமையாகவும் கற்றுக் கொடுத்தார்.

அண்ணாதுரை:வேதகால மகரிஷிகள் காட்டில் இருந்தவர்கள். நம்மைப் போல சம்சாரத்தில் ஈடுபட்டு சுகதுக்கங்களை அனுபவித்தது இல்லை. ஆனால், அவர்கள் எப்படி சமூகத்தின் அத்தனை விஷயங்களையும் ஜோதிடத்தில் விவரித்திருக்க முடியும்?


அண்ணாதுரை
ஏ.எம்.ஆர்.: அதுதான் அதிசயம். சாதாரணமாக, ஒரு குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்படும் பிரச்னைகளுக்குக் கூட, மகரிஷிகள் ஜோதிட சாஸ்திரத்தில் பலன் எழுதி வைத்துள்ளனர். ‘இந்த கிரஹங்கள் இப்படி இருந்தால், கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்படும். இப்படிப்பட்ட பெண்ணிற்கு இப்படிப்பட்ட பையனைத் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும்’ என்பதையெல்லாம் தெளிவாக எழுதி வைத்துள்ளார்கள். ஒருவன் முன்கோபியாக இருக்கிறான் என்றால், அவனுக்கு முன்கோபியாக இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தால் வாழ்க்கை நன்றாக இருக்காது. அவன் அலுவலகத்திலிருந்து வரும்போதே, ஏதோ ஒரு கோபத்துடன் வந்து, மனைவியிடம் அதைக் காட்டுவான். இந்த இடத்தில் அவனது மனைவியும் கோபப்பட்டால் நிலைமை மோசமாகும். அந்த மனைவி சாத்வீக குணமுடையவளாக இருந்தால், அந்தச் சமயத்தில் எதுவும் பேசாமல் இருந்து, நிலைமையைச் சரி செய்வாள்.

கணவன் மனைவி ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் வாழ, அறிவு மட்டும் இல்லை, விவேகமும் வேண்டும். சிலர் அறிவும் விவேகமும் இரண்டும் ஒன்று என்று நினைக்கிறார்கள். இது தவறு. நன்றாகப் படித்த அறிவாளி ஒரு பிரச்னையை அணுகுவதற்கும், படிக்காத விவேகமான ஒருவன் அணுகுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஜோதிட அறிவியலில் மட்டுமே அறிவு, விவேகம் இரண்டிற்குமான வித்தியாசத்தை அற்புதமாக விளக்கி இருக்கிறார்கள். இதை மகரிஷிகள் தங்களுடைய தபஸ் வலிமையாலும், ஞான திருஷ்டியினாலும், வாழ்க்கையின் அந்தரங்கங்களை எல்லாம் தெரிந்து கொண்டு, புரிந்து கொண்டு, நமக்குச் சுலபமாகப் புரியும் விதத்தில் எழுதி வைத்து இருக்கிறார்கள். என்னுடைய மாமா இதை யெல்லாம் எனக்கு விளக்கிச் சொல்லிக் கொடுத்தார். இவ்வளவு நல்ல கலை இருக்கும்பொழுது, வேறு வேலைக்கு ஏன் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எழுந்தது.


கே.சேஷாத்ரி
நான் ஹிந்து பத்திரிகையில் இருபத்தி இரண்டு வருடங்கள் இருந்தேன். மாதத்தில் இருபது நாட்களுக்கு மேல் பயணம் செய்து கொண்டே இருப்பேன். இந்தியாவில் எல்லா இடங்களுக்கும் சென்றிருக்கிறேன். முக்கியமாக ரிஷிகேஷ், மதுரா, ஹரித்வார் போன்ற இடங்களில் பெரிய மகான்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்களிடமிருந்தும் நிறைய ரகசியக் கணக்கீடு முறைகளை எல்லாம் கற்றேன். அவர்கள் எல்லோரும் எனக்கு விதித்த ஒரே நிபந்தனை ‘இதை வியாபாரமாகச் செய்யக் கூடாது’ என்பதுதான். மனித சமூகத்தின் கஷ்டங்களையும், துக்கங்களையும், வேதனைகளையும், பிரச்னைகளையும் தீர்க்க மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்கள். அவர்கள் அனைவரும் இதை இலவசமாகவே எனக்குக் கற்றுக் கொடுத்தனர். மேலும் இன்னொருவருடைய கண்ணீரைக் காசாக்குவது தவறு என்றும் கூறினார்கள். இன்று வரை அவர்கள் விதித்த நிபந்தனைகளை நான் பின்பற்றி வருகிறேன்.

லட்சுமி வெங்கட்ராமன்: ஜோதிடம் என்பது அறிவியல்தானா?


லட்சுமி வெங்கட்ராமன்
ஏ.எம்.ஆர்.: ஆமாம். ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க அறிவியல்தான். சூரியனைக் கிரஹங்கள் சுற்றி வருகின்றன. சூரியனையும் சேர்த்து ஏழு கிரஹங்கள் உள்ளன. ராகு, கேது என்பது நிழல் கிரஹங்கள். இதைக் கற்பனைக் கிரஹங்கள் என்றும் சொல்லலாம். ஆனால், இந்த இரண்டு கிரஹங்களும் மிகவும் முக்கியம். ஏனென்றால், மற்ற எல்லா கிரஹங்களும் இந்த இரண்டு கிரஹங்களை ஏதோ ஒரு காலகட்டத்தில் தொட்டுச் செல்ல வேண்டும். ஆகையால் இந்த இரு கிரஹங்களின் தாக்கம் மற்ற கிரஹங்களின் மேல் இருக்கும். இந்தக் கிரஹங்களின் சுழற்சி மாறும்போது, அதனுடைய தாக்கம் நமக்கு இருக்கும். மனோ ரீதியாகவும், உடல்ரீதியாகவும் அது நம்மைப் பாதிக்கும். அந்தக் கிரஹங்களின் சுழற்சியில் எப்போது மாறுதல் வரும் என்பதைக் கணித்துக் கூறுவதுதான் ஜோதிட அறிவியல்.

ஒரு முறை, கோவை மிருதுபாஷினி கருத்தரிப்பு மையத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது நான் தினமணியில் எழுதிக் கொண்டிருந்தேன். அந்தக் கருத்தரிப்பு மையத்தின் தலைவர், ‘அறுவை சிகிச்சை மூலமாக நாள், நேரம் பார்த்துக் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது சரியா? ஒரு குழந்தையினுடைய தலைவிதியை ஜோதிடன் நிர்ணயிக்க முடியுமா?’ என்று கேட்டார். அதற்கு நான், ‘இந்தக் குழந்தை, அறுவை சிகிச்சையின் மூலமாக அந்த நேரத்தில் பிறக்க வேண்டும் என்று ஜோதிடத்தில் உள்ளது. அதைத்தான் இந்த ஜோதிடனும் கூறுகிறான். ஆண்டவனின் விருப்பத்திற்கு மாறாக ஏதும் நடக்கவில்லை’ என்று பதில் கூறினேன். அதை அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.


ஜோதிடத்தின் மூலம் இந்த நாள், இந்த நேரம், இன்னது நடக்கும் என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடியும். பதினான்கு வருடங்களுக்கு முன்னால், தினமணி கதிரில் நான், ‘மோடி பிரதமராக வருவார்’ என்று எழுதியிருந்தேன். மோடி என்று நான் பெயர் குறிப்பிடவில்லை. ஆனால், மஹாராஷ்டிரா மற்றும் குஜராத்துக்கு நடுவில் உள்ள ஊரில் பிறந்தவர் பிரதம மந்திரி ஆவார் என்று கூறியிருந்தேன். அக்டோபர் மாதம் பனிரெண்டாம் தேதி எந்த வருடம் என்று ஞாபகம் இல்லை. ராணி சந்திரனும் சாவியின் மருமகனும் அந்த விமானத்தில் சென்றனர். என்னுடைய நண்பர் ஒருவரும் அதில் பயணம் செய்வதாக இருந்தார். வேறு ஒரு விஷயத்திற்காக, அவருடைய ஜாதகத்தை நான் பார்த்தபோது, அன்றிலிருந்து பதினேழாவது நாள் அவருக்கு ஒரு மிகப்பெரிய கண்டம் இருக்கிறது என்று கணித்தேன். எனவே, விமானப் பயணத்தை ரத்து செய்யச் சொன்னேன். அதற்கு அவர், ‘நான் இறக்க வேண்டும் என்று இருந்தால், எங்கு இருந்தாலும் அது நடக்கும். விமான பயணத்தில்தான் உயிர் போகுமா’ என்று கேட்டார்? என்னுடைய பேச்சைக் கேட்காமல் தன்னுடைய விமானப் பயணத்தையும் மேற்கொண்டார். ஆனால், அன்று அவருடைய விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டு விட்டது.


இதற்கிடையில், அவருடன் அந்த விமானத்தில் ஒரு காங்கிரஸ் தலைவர் பயணம் செய்வதாக இருந்தது. அவருக்காக வேறு விமானம் ஏற்பாடு செய்யப் பட்டு, மற்ற பயணிகளையும் ஏற்றி கொண்டு புறப்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த விமானம் சிறியது. 93 பேர் மட்டுமே பயணம் செய்யலாம். மொத்தம் 112 பயணிகள் இருக்கிறார்கள். அவர்களில் 93 பயணிகளை மட்டும் ஏற்றிக் கொண்டு அந்த விமானம் புறப்பட்டது. அந்த விமானம் பறந்த சில மணித் துளிகளில் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. அந்த ஒரு நண்பரின் ஜாதகத்தைக் கொண்டு, அந்த விமானப் பயணம் ஆபத்தானது என்று நான் கணித்தேன். அந்த அளவிற்கு இந்த ஜோதிட அறிவியல் என்பது மிக மிகத் துல்லியமானது. ஆனால், இந்தத் துல்லியம், நமது கணக்கு சரியாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.

கே.சேஷாத்ரி: ராகு காலம், எமகண்டம், மரண யோக நேரங்களில் எதுவும் செய்யக் கூடாதா

ஏ.எம்.ஆர்.: அந்தக் காலத்தில் ஜோதிடத்தை பள்ளிகளில் கட்டாயப் பாடமாக வைத்திருந்தார்கள். அதனால் அனைவருக்கும் ஜோதிடம் குறித்த அடிப்படை அறிவு இருக்கும். நாள் இன்று எப்படி இருக்கிறது என்று அவர்களே பார்த்துக் கொள்வார்கள். அன்றைய தினம் நன்றாக இல்லை என்றால், ராகு காலம், மரண யோகம் போன்ற நேரங்களில் எதுவும் செய்ய மாட்டார்கள். ஆனால், இப்போது நாம் அதையெல்லாம் பார்ப்பது இல்லை. இன்றைக்கு நாள் எப்படி இருக்கிறது என்று பார்க்காமல், ராகு காலம், மரண யோகம் போன்ற நேரங்களில் எதுவும் செய்யக் கூடாது என்று கொண்டு வந்து விட்டோம். உங்களுக்கு நாள் நன்றாக இருந்தால், நீங்கள் ராகு காலம், மரண யோகம், எமகண்டம் போன்ற நேரங்களில் எதுவும் செய்யலாம்.

கே.மகேஷ்: ஒரு மாணவன் என்ன படிக்கலாம் என்பதைக் கூட ஜோதிடத்தில் கணிக்க முடியுமா?


கே.மகேஷ்
ஏ.எம்.ஆர்.: என்ன படிக்கலாம், என்ன வேலைக்குப் போகலாம் என்பதைக் கூட ஜோதிடம் மூலமாகக் கணிக்கலாம். கோவையில் பிரபாவதி என்றொரு பெண். அவளை சிறு வயதிலிருந்தே டாக்டர் ஆக்க வேண்டும் என்று அவளுடைய பெற்றோர் கனவு கண்டனர். வீட்டிற்கு வரும் அனைவரும் கூட ‘டாக்டர் பிரபா’ என்றே அவளைக் கூப்பிட்டனர். இதனால் அவளுக்கு, தான் கண்டிப்பாக டாக்டர் ஆகி விட வேண்டும் என்ற வெறி. ஆனால், பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களால் அவளது கனவு கலைந்து, மனநிலை பாதிக்கப்பட்டாள். இந்தச் சமயத்தில் என்னிடம் அந்தப் பெண்ணை அழைத்து வந்தனர். அவளுடைய ஜாதகத்தைப் பார்த்த நான், அவளுக்கு மருத்துவப் படிப்பு என்றைக்குமே கிடைக்காது என்று கணித்தேன். மேலும், அவளுக்கான சரியான படிப்பையும் கணித்துக் கூறினேன். இப்பொழுது அந்த படிப்பை முடித்து அவள் நல்ல நிலையில் இருக்கிறாள். இங்கு ஜோதிடம் என்பது உங்களுடைய வாழ்க்கையின் வழிகாட்டியாக இருக் கிறது.

ரேவதி மில்டன்: திருமணத்தில் என்ன என்ன பொருத்தங்கள் பார்க்க வேண்டும்?


ரேவதி மில்டன்
ஏ.எம்.ஆர்.: திருமணம் செய்ய வேண்டும் என்றால் லக்னத்தில் 2,5,7,8 ஆகிய நான்கு இடங்களின் பொருத்தங்களைப் பார்த்துத்தான் செய்ய வேண்டும். இதில் பொருத்தம் இருந்தால் அவர்கள் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருப்பார்கள். இது தவிர, 9,10,11 ஆகிய இடங்கள் பணம், பொருள் போன்றவற்றைக் கொடுக்கக்கூடியது. பாக்ய ஸ்தானம், லாப ஸ்தானம் என்று இதைக் கூறுவார்கள். வாழ்க்கையை இனிமையாக அனுபவிக்க வேண்டும் என்று சொன்னால், இந்த லக்னம் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்ய வேண்டும். காசு இருந்தால் கார் வாங்கலாம், வீடு கட்டலாம். ஆனால், ஒரு அன்பான மனைவி இல்லையென் றால் இதையெல்லாம் யாராலும் இனிமையாக அனுபவிக்க முடியாது. எத்தனையோ பேர் அலுவலகம் முடிந்ததும் கிளப்புக்குச் செல்கிறார்கள். அதே சமயம், ஒரு சாமான்யன், மதியம் 12 மணி வெயிலில் வேலை செய்து களைத்து, மரத்தடியில் இருக்கும்போது, அவனுடைய மனைவி மண் பாத்திரத்தில் கஞ்சி கொண்டு வருவாள், அதை அவன் சந்தோஷமாகச் சாப்பிடுவான். இந்தச் சந்தோஷம்தான் வாழ்க்கை என்பது. கடையில் சென்று ‘ஐந்து கிலோ சந்தோஷம் கொடு, எட்டு கிலோ நிம்மதி கொடு’ என்று கேட்டு வாங்க முடியாது. எனக்கு வரும் கடிதங்களில் ‘எனக்குப் பணமே வேண்டாம்; நிம்மதியாக வாழ வழி சொல்லுங்கள்’ என்றுதான் பலர் கேட்கிறார்கள். இதை அடைவதற்கு ஜோதிடத்தைத் தவிர, நம்பகமான வழிகாட்டி கிடையாது. பையனுக்கோ, பெண்ணுக்கோ நல்ல குணங்கள் இருக்கிறதா என்பதை ஜாதகத்தைக் கொண்டு கணிக்க முடியும். ஜாதகத்தைக் கொண்டு ஒருவனுடைய பலம், பலவீனம் குறித்தும் அறிய முடியும். அந்தப் பலத்தை எப்படி பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்றும் ஜோதிடம் மூலமாகக் கணிக்கலாம். ஆனால், இந்தக் காலத்தில் ஜோதிடத்தை அவ்வளவு ஆழமாகப் பலர் பார்ப்பதில்லை.

தொகுப்பு : எஸ்.ஜே. இதயா,
படங்கள்: பேஜர் கிருஷ்ணமூர்த்தி

(இந்தியாவின் ஜாதகப்படி இங்கு ஹிந்துக்கள் மைனாரிட்டியாகிவிட வாய்ப்பு இருக்கிறதா? கைரேகை, எண்கணிதம், வாஸ்து, ஏடு, சோழி உருட்டுதல் ஆகியவற்றை எந்தளவுக்கு நம்பலாம்? தாலியை உண்டியலில் செலுத்துவது சரியா? ஜாதகம் என்பது இந்தியர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா, அல்லது அமெரிக்க, ஆஸ்திரேலியக் குழந்தைகளுக்கும் பொருந்துமா? எல்லோரும் ஜோதிடர் ஆக முடியுமா? என்பது முதலான இன்னும் பல கேள்விகளுக்கான பதில்கள் அடுத்த வாரம்)


எஸ்.ஜே. இதயா

சந்தித்த வாசகர்கள் :
எம். அண்ணாதுரை, புதுப்பாளையம்,
உடுமலை (சுயதொழில்)
லட்சுமி வெங்கட்ராமன், சென்னை
(குடும்பத் தலைவி)
கே.மகேஷ், சென்னை(தனியார் துறை)
ரேவதி மில்டன், மதுரை (குடும்பத் தலைவி)
எஸ்.சரண்யா, சென்னை (குடும்பத் தலைவி)
கே.சேஷாத்ரி, சென்னை (தனியார் துறை)
–நன்றி துக்ளக்
Advertisements

3 thoughts on “ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க அறிவியலே! – பிரபல ஜோதிடர் ஏ.எம். ராஜகோபாலன்

 1. Balakannan December 9, 2015 at 8:53 AM Reply

  ivarin address matrum mobile number kidaikkuma

 2. BaalHanuman December 9, 2015 at 3:21 PM Reply

  ஆசிரியர்
  குமுதம் ஜோதிடம்
  151, புரசைவாக்கம் நெடுஞ்சாலை,
  சென்னை – 600 010

 3. nparamasivam1951 December 9, 2015 at 5:08 PM Reply

  இதை அறிவியல் பாட திட்டத்தில் சேர்க்காமல் விட்டது மாபெரும் தவறு என உணர்கிறேன். ஆயின் ஒன்று, பிறக்கும் நேரம் சரியாக கணிக்கப்பட வேண்டும் என அறிகிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s