அந்த சாம்பார் வடை எங்கே? – ஜராசு


சாம்பார் வடையைச் சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம்.

ஐந்து ரூபாய் பெறுமான பிளாஸ்டிக் கிண்ணத்தில் (மூடியோடு கூடியது) ஒரு சாம்பார் வடை பார்சலாக வாங்கி வந்து ஆற அமரச் சாப்பிட்டால் மத்தியான சாப்பாடே வேண்டாம். வயிறு திண்ணென்று நிரம்பி விடுகிறது.

ஒரு சாப்பாடு (அளவுச் சாப்பாடு) விலை ஓட்டலில் 65 ரூபாய். வயிறு சிலருக்குச் சுமாராகவே நிரம்பும்.

சாம்பார் வடையை சில ஓட்டல்களில் ஏனோ தானோ என்று சாதா வடை சைஸில் தயாரிப்பார்கள் (வீடுகளில்கூட அப்படித்தான்)

ஓட்டல் சாம்பார் வடை நன்றாக ஊறிக் கொடுத்து மிதந்து கொண்டிருக்கும்.

ஓட்டலில் பிளேட்டில் சாப்பிடுவதைவிட ‘பார்சல்’ என்று கேட்டால் ஒரு பெரிய பிளாஸ்டிக் கிண்ணம் நிறைய சாம்பாரில் ஊறிய மெதுவடையைப் போட்டுத் தருவான். சாம்பாரில் பெரிய வெங்காயத்தை அரிந்து போட்டிருப்பார்கள். அது ஒரு அலாதி ருசி.

சாம்பார் வடைக்குச் சட்டினி தேவையில்லை. அது இணைந்தால் மொத்த ருசியும் அவுட். இனிய புல்லாங் குழலுக்கு முரட்டுத் தப்பட்டை பக்க வாத்தியமாக வைத்தால் குழலின் இனிமையை ரசிக்க இயலாது. ஆகவே சாம்பார் வடை என்பது சாம்பாரும் வடையுமே தவிர அந்த கெமிஸ்ட்ரியை வேறு பண்டம் சேர்த்துச் கெடுத்துவிட வேண்டாம்.

சிலர் நல்லெண்ணெய் போட்டுக் கொள்வார்கள். பழைய காலத்தில் புரசைவாக்கம் ராக்ஸி கபேக்கு இட்லி – வடை – சாம்பார் சாப்பிடவே பெரிய மனிதக் கும்பல் ஒன்று வரும். ரெண்டு இட்லி, ஒரு வடையை ஸ்பூனால் கச்சிதமாக வெட்டி பக்கெட் சாம்பாரை சப்ளையர் மனசார ஊற்றிச் சுடச்சுட மேஜைமீது வைத்துவிட்டு நகருவான். எல்லாவற்றுக்கும் சேர்த்து விலை ஒரே ரூபாய்.

விடியற்காலையில் கோஷ்டியாகச் சென்று சாப்பிடுவோம்.

கட்டுப்பாடு இல்லாத கமகம சாம்பார். (பெரிய குவளைகளில் பல ரவுண்டுகள் விசாரிப்பார்கள்.)

நாம் நன்றாக ருசித்துச் சாப்பிட்டால் சப்ளையர்களுக்கு சந்தோஷம். கல்லாவில் இருக்கும் முதலாளிக்கு சந்தோஷம். அவரே எழுந்து வந்து உபசரிப்பார்.

”அண்ணாவுக்கு ஒரு மசால்வடையையும் சேர்த்துப் போடுடா! இன்னிக்கு மசால்வடை வெகு ஜோர்!” என்பார் முதலாளி.

எங்கே அந்த சாம்பார் வடைகளும் முதலாளிகளும்! எங்கே அந்த காசைக் கடந்த கலா ரசனை!

Advertisements

One thought on “அந்த சாம்பார் வடை எங்கே? – ஜராசு

  1. Cuddalore Ramji November 28, 2015 at 12:58 AM Reply

    புல்லாங்குழல் உதாரணம் அருமை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s