12-நான் முகம் பார்த்த கண்ணாடிகள்… – ராஜேஷ் குமார்


Rajesh Kumar

ராஜகோபால் என்ற எனக்குள்ளே ஒளிந்து இருந்து கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்த ராஜேஷ்குமாரை கண்டுபிடித்து வெளியே கூட்டி வர காரணமாய் இருந்தது என் ‘அம்மாதான்’ என்று இப்போது சொன்னால் அது பலர்க்கு ஆச்சர்யமாய் இருக்க கூடும். ஆனால் அதுதான் உண்மை.

என்னுடைய ஆரம்ப பள்ளி நாட்களில் காக்கா வடையைத் திருடிக் கொண்டு போன கதையை என் பாட்டி சொன்னபோதும் சரி, அம்புலி மாமாவில் நான் படித்த கதைகளும் சரி.. என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. ஆனால் என்னுடைய அம்மா சொன்ன சில வித்தியாசமான கதைகள் அந்த வயதில் என்னை பிரமிக்க வைத்தன. படுக்கையில் தூங்காமல் விழித்திருக்கும்போது அசை போட வைத்தன.

கோவைக்குப் பக்கத்தில் உள்ள மருதமலைக்கு அம்மாவோடு நான் போகும்போது மலையின் உச்சியில் இருக்கும் மூன்று தனித்தனிப் பாறைகளைக் காட்டி, ‘அது என்ன தெரியுமா?’ என்று கேட்பார் அம்மா. நான் ‘அது பாறை’ என்று சொன்னால், அம்மா சீரியஸான முக பாவனையோடு “அது பாறைகள் அல்ல.. மூன்று திருடர்கள்” என்று சொல்வார். அது எப்படி என்று கேட்டால், அம்மா சொல்லும் கதை இதுதான். ”

இப்போது பாறைகளாய் உருமாறியிருப்பவர்கள் ஒரு காலத்தில் திருடர்களாய் இருந்தவர்கள். மருதமலைக் கோயிலில் இருக்கும் உண்டியல் பணத்தைத் திருடுவதற்காக மூன்று திருடர்கள் வந்த போது முருகன் கிழவர் வேடத்தில் வந்து எச்சரிக்கை செய்ததாகவும், அவர்கள் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் உண்டியலை உடைத்துப் பணம் திருடியதால் மருதமலை முருகன் அவர்களை பாறைகளாய் மாற்றிவிட்டதாகவும்” அம்மா சொன்னபோது எனக்குள்ளே இருந்த க்ரைம் ராஜேஷ்குமார் எழுந்து உட்கார்ந்து சோம்பல் முறித்துக் கொண்டான்.

அந்தத் திருடர்கள் கதை மட்டுமல்ல, என்னுடைய தாத்தாவும் பாட்டியும் குல தெய்வக் கோயிலுக்குப் போக மாட்டு வண்டியில் காட்டுப் பாதை வழியே பயணம் செய்தபோது அவர்களுக்கு என்னென்ன கஷ்டங்கள் ஏற்பட்டது, அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதை அம்மா சொல்லும் பொழுதே எனக்குள் இருந்த அந்த எழுத்து விதை அப்போதே துளிர்விட்டிருக்க வேண்டும்.

அம்மாவுக்கு நான் தலைமகன். எனவே என் மீது அம்மாவுக்கு கொஞ்சம் அதிகப்படியாக பாசம். என் உடம்புக்கு ஏதாவது ஒன்று என்றால் தூங்கவே மாட்டார்கள். ராத்திரி நேரத்தில் கண்விழித்துப் பார்க்கும் பொழுது அம்மா எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொசு கடிக்காமல் இருக்க விசிறியால் வீசிக் கொண்டு இருப்பார்கள். சிறுவயது முதலே அம்மா என்மீது கொட்டிய பாசத்தின் காரணமாக நான் படித்து வளர்ந்து ஒரு நிலைமைக்கு வந்த பிறகு அம்மாவின் மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும், அவர்கள் எப்போதும் சந்தோஷமாய் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

எனக்குத் திருமணமானதும் என் மனைவியிடம் நான் சொன்ன முதல் வார்த்தை இதுதான். “எனக்கு என்னுடைய அம்மா என்றால் ரொம்பவும் பிரியம். அவர்கள் உன்னிடம் எப்படி நடந்து கொண்டாலும் சரி, நீ அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல், நீ அன்போடு நடந்து கொள்ள வேண்டும். மேலும் என் அம்மாவை நீ அத்தை என்று கூப்பிடாமல் ‘அம்மா’ என்றுதான் கூப்பிட வேண்டும்.”

என் மனைவியும் நான் சொன்னதை வேதவாக்காய் எடுத்துக் கொண்டு நான் சொன்னதுக்கும் ஒரு படி மேலாகவே நடந்து கொள்ள, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு ஒரே ஆச்சர்யம்.

ஒரு மாமியாரும் மருமகளும் இவ்வளவு ஒற்றுமையாய் இருக்கமுடியுமா என்று வியந்தார்கள். எங்கள் பகுதிக்குப் புதிதாய் குடி வருபவர்கள் என்னுடைய அம்மாவையும் மனைவியையும் பார்த்து தாய், மகள் என்றும் நான்தான் மருமகன் என்றும் நினைத்த அதிசயமும் உண்டு.

இன்றைக்கு நான் தமிழகம் அறிந்த ஒரு எழுத்தாளராக உருவாகியிருக்கிறேன் என்றால் அதற்கு முழுக் காரணம் என் தாய்தான். ஒரு வருட காலம் வேலை கிடைக்காமல் நான் சோர்ந்து இருந்த போதும் ஒரு நாள் கூட நான் வேலை இல்லாமல் இருந்ததைப் பற்றி ஜாடை மாடையாகக் கூட அம்மா பேசியதில்லை. அப்பாவும் அப்படித்தான். என் தேவை அறிந்து அம்மா பாக்கெட் மணி கொடுபார்கள். சற்று சோர்வாய் உட்கார்ந்திருந்தால், ‘வா… கோயிலுக்குப் போயிட்டு வரலாம்’ என்று பக்கத்திலிருக்கும் ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலுக்கு கூட்டிக் கொண்டு போய் வருவார்கள். “வேலை கிடைக்கும் போது கிடைக்கட்டும். நீ சந்தோஷமாய் இரு. உனக்கு கதை எழுதப் பிடிக்குதா எழுது. யார் என்ன சொன்னாலும் அதையெல்லாம் காதுல போட்டுக் கொள்ளாதே,” என்று அம்மா சொல்லி என் தலையை வருடிவிடும்போது உடம்புக்குள் ஒரு யானையின் பலம் வந்தது போல் இருக்கும்.

தூக்குத் தூக்கி என்னும் திரைப்படத்தில் பிரபலமான வசனம் ஒன்று இடம் பெற்றிருக்கும்.

1. கொண்டு வந்தால் தந்தை
2. கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
3. சீர் செய்தால் சகோதரி
4. உயிர் காப்பான் தோழன்
5, கொலையும் செய்வாள் பத்தினி

மேற்கண்ட ஐந்தில் இரண்டாவதாக உள்ள கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய் என்ற வாசகம் என் தாய்க்கு நூறு சதவீதம் பொருந்தும். நான் படித்துவிட்டு வேலை இல்லாமல் மற்றவர்களின் கேலியான பார்வைக்கு ஆளாகியிருந்தபோது, என் மீது எந்த அளவுக்குப் பாசத்தைப் பொழிந்தார்களோ, அதே அளவு பாசம்தான் நான் ஆயிரம் நாவல்களை எழுதி முடித்து ஒரு எழுத்தாளனாக உருவாகி வசதியோடும் வளமையோடும் இருக்கின்ற இந்தக் காலத்திலும் என்மீது காட்டினார்கள்.

மற்றவர்களுக்கு நான் ராஜேஷ்குமார். என்னுடைய அம்மாவுக்கு அவர்களுடைய வாழ்க்கையின் கடைசி நிமிஷம் வரை நான் ‘கோபால்’தான்.

எனக்கு ஒரு பேரன் பிறந்த போது அம்மா பட்ட சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. கொள்ளுப் பேரனின் கைகளால் கனகாபிஷேகம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்த ஆசையை நான் நிறைவேற்றியபோது அம்மாவின் முகத்தில் ஒரு பரிபூரண வாழ்க்கையை வாழ்ந்துவிட்டோம் என்ற நிறைவு தெரிந்தது. அதற்குப் பிறகு சரியாய் ஒரு வருடம்தான் அம்மா உயிரோடு இருந்தார்கள்.

2005 அக்டோபர் 22-ம் தேதி, உலகத்துக்காக விடிந்தபோது அது அம்மாவின் இறந்த நாளாக இருக்கப் போகிறது என்று எனக்குத் தெரியாது. அம்மா வழக்கம் போல் காலையில் ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து சமையலறை வேலைகளில் மூழ்கி இருந்தார். உடம்பில் எந்த உபாதையும் இல்லை. மரணம் வரப் போவதற்கான அறிகுறி சிறிதும் இல்லை. பேரன்களோடு கேலி பேசி, கொள்ளுப் பேரனைக் கொஞ்சி எல்லோருக்கும் காலை உணவு பரிமாறி, மதிய உணவு சமைத்துச் சாப்பிட்டு தூங்கி எழுந்து மாலை 4 மணிக்கு எல்லோருக்கும் டீ போட்டுக் கொடுத்து, மாலையில் பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றி கடவுளை வழிபட்டு, இரவு உணவைத் தயார் செய்ய சமையலறைக்குள் நுழைந்தார். நாங்கள் அன்று இரவு (அம்மா அப்பாவைத் தவிர) மொத்தக் குடும்பமும் பாண்டிச்சேரி செல்ல தயாராகிக் கொண்டு இருந்தோம். 8 மணிக்கு அம்மா எல்லோருக்கும் தோசை வார்த்துக் கொடுக்க, சாப்பிட்டோம். நான் அம்மாவிடம் வாழைப் பழம் கேட்க, அம்மா ஒரு பழத்தை எடுத்து தோலுரித்துவிட்டுக் கொடுக்க நான் கோபித்துக் கொண்டேன். “என்னம்மா… இது! வாழைப்பழத் தோலை நான் உரித்துக் கொள்ள மாட்டேனா… ! இதைக் கூடவா நீ செய்யணும்?”

“இல்ல கோபால்… பழத்தோட நுனி கொஞ்சம் கருப்பாய் இருந்தது. தெரியாம நீ எங்கே அதைச் சாப்ட்டுட்டுவியோ என நினைச்சி அதை கிள்ளி எடுத்துக் கொடுத்தேன்,” என்றார் அம்மா.

எல்லோரும் சிரித்தார்கள்.

பத்து மணிக்கு சேரன் எக்ஸ்பிரஸ்.

ஒன்பது மணிக்கெல்லாம் ஸ்டேஷனுக்குப் புறப்பட்டுப் போக கால் டாக்ஸி வாசலில் வந்து நின்றது. லக்கேஜ்களை எடுத்து வைத்துக் கொண்டு புறப்படத் தயாரானோம். அம்மா வாசலில் வந்து நின்று எல்லோருக்கும் டாட்டா சொல்லி, என்னிடம் மட்டும் “பேரனை பத்திரமாய் பார்த்துக் கொள். பாண்டிச்சேரி போய்ச் சேர்ந்ததும் உடனே போன் பண்ணு”, என்று சொன்னார்.

அம்மா சொன்ன கடைசி வார்த்தை அதுதான். எங்களுக்கு டாட்டா காட்டிவிட்டு உள்ளே போன அம்மாவுக்கு சடன் மாஸிவ் அட்டாக்.

நாங்கள் தெருமுனை கூடத் தாண்டியிருக்க மாட்டோம்.

பத்தே நொடியில் அம்மா மரணம்.

பக்கத்து வீட்டுக்காரர்கள் எங்களுக்கு செல்போனில் தகவல் சொல்ல நாங்கள் பதறியடித்து வந்தோம்.

படுக்கையில் அம்மா உயிரற்ற உடம்பாய்.

சில நிமிடங்களுக்கு முன் எங்களுக்கு தோசை வார்த்துக் கொடுத்து எனக்கு வாழைப்பழம் உரித்துக் கொடுத்து சிரித்துப் பேசி டாட்டா காட்டிய அம்மா இப்போது எந்த அசைவும் இல்லாமல் கிடப்பதைப் பார்த்து என் மனம் இரும்புக் குண்டாய் கனத்துப் போயிற்று.

மரணம் கொடியது என்று தெரியும். இவ்வளவு கொடூரமானதா?

குடும்பத்தின் மொத்தப் பேரும் அதிர்ச்சியில் உறைந்துபோனோம்.

அம்மாவின் மரணத்தை இன்னமும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அம்மா மறைந்து பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் எல்லாமே நேற்று நடந்தது போலிருக்கிறது. என் மனைவி என்னை ‘என்னங்க’ என்று கூப்பிடுவது வழக்கம். என் மகன்களும் மருமகள்களும் என்னை ‘அப்பா’ என்றும், என் பேரன் பேத்திகள் ‘தாத்தா’ என்றும், என் நண்பர்கள் என்னை ‘டேய் கேயார்’ என்றும், என் வாசகர்கள் என்னை ‘ஆர் கே’ என்றும், என் சக எழுத்தாளர்கள் ‘ராஜேஷ்’ என்றும் அழைப்பார்கள். இப்போதும் அப்படித்தான் அழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் என்னுடைய இயற்பெயரான ராஜகோபாலில் இருந்து கோபாலை மட்டும் பிரித்து எடுத்து ‘கோபால்’ என்று தாய்க்கே உரித்தான உரிமையோடும் வாஞ்சையோடும் கூப்பிடும் அம்மா இப்போது உயிரோடு இல்லை.

இன்னொரு ஜென்மம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படி இருந்தால் என்னுடைய அம்மாவின் வயிற்றில் மறுபடியும் பிறந்து அந்த எல்லையற்ற அன்பையும், பாற்கடல் போன்ற பாசத்தையும் அனுபவிக்க விரும்புகிறேன்.

A Rose Is A Rose Is A Rose… என்று சொல்வார்கள். அதைப் போலவேதான், A Mother Is A Mother Is A Mother.

என்னுடைய அம்மா மறைந்துவிட்டதாக நான் நினைப்பது இல்லை. ஒரு ஆன்மாவாய் வானத்தில் இருந்து கொண்டு என் எழுத்துக்கு துணையாய் இருந்து ஆசிகளை வழங்கிக் கொண்டே இருக்கிறார். அதனால்தான் என்னால் சிறப்பாக எழுத முடிகிறது.

விருதுகள் என்னைத் தேடி வருவதற்கும், இனிமேல் வரப் போகிற சிறப்புகளுக்கும் காரணம் என்னுடைய அம்மாவின் ஆசிகள்தான் என்று உறுதியாக நம்புகிறேன். என் தாய் என்னோடவே இருக்கிறார் என்பதற்கு ஒரு உதாரணம்.

அண்மையில் ஒரு முதியோர் இல்லத்துக்கு சிறப்பு அழைப்பாளராய் போயிருந்தேன். அங்கிருந்த தாய்மார்கள் எல்லோரும் என்பது வயதைக் கடந்தவர்கள். நான் என்னுடைய அம்மாவின் சாயலில் இருந்த வயதான பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தேன்.

“அம்மா! நான் யார்ன்னு உங்களுக்குத் தெரியுமா?”

அந்த அம்மாள் நடுங்கும் குரலில், “தெரியாம என்ன.. நீ கதை எழுதற ராஜேஷ்குமாரு. நான் உன்னோட விசிறி!” சொன்னவர் தலையணையை எடுத்தார்.

தலையணைக்குக் கீழே –
பத்துக்கும் மேற்பட்ட அளவில் என்னுடைய நாவல்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s