11-நான் முகம் பார்த்த கண்ணாடிகள்… – ராஜேஷ் குமார்


Rajesh Kumar

நான் பார்த்து ஆச்சர்யப்பட்ட எழுத்தாளர்கள் பலர். அதில் வெகு சிலரே என்னை பிரமிக்க வைத்தார்கள். அந்த வெகு சிலரில் என் மனதில் முதல் இடத்தைப் பிடித்தவர் திரு ரா.கி.ரங்கராஜன் அவர்கள்.

அபாரமான எழுத்தாற்றல் கொண்ட திரு ரா கி ர அவர்களை நான் முதன் முதலில் சந்தித்தபோது அவர்தான் திரு ரா கி ர என்று எனக்குத் தெரியாது. அப்படித் தெரியாத காரணத்தால் நான் அவரோடு சின்னதாய் சண்டையும் போட்டுவிட்டேன்.

1976-ம் ஆண்டு நடந்த சம்பவம் அது.

பிஸினஸ் விஷயமாய் நான் வடநாட்டு நகரங்களுக்குச் செல்லும்போது அங்கே நான் பார்க்கும் சம்பவங்களை கற்பனை கலந்து சிறுகதைகளாய் எழுதினேன். கோவையில் இருந்து பம்பாய்க்கு 48 மணி நேரப் பயணம். இந்தப் பயண நேரத்தைப் பயன்படுத்தி சூட்கேசை எனக்கு முன்னால் ஒரு மேஜையைப் போல் உருவாக்கிக் கொண்டு கதைகளை எழுதிக் கொண்டே போவேன். பம்பாய் போய்ச் சேர்ந்ததும் அங்கிருந்தபடியே சென்னை பத்திரிகைகளுக்கு போஸ்ட் செய்வேன். விகடன், குமுதம் வார இதழ்களுக்கு நிறைய கதைகள் அனுப்பி வைத்தாலும், அதில் ஒன்று கூட பிரசுரமாகாதது எனக்குள் ஒரு இனம் புரியாத கோபத்தை உண்டாக்கியிருந்தது.

ஒரு தடவை பம்பாயிலிருந்து கோவை திரும்பும்போது சென்னையில் இறங்கினேன். க்ளாக் ரூமில் என்னுடைய லக்கேஜ்களைப் போட்டுவிட்டு புரசைவாக்கம் ஹைரோட்டில் இருந்த குமுதம் ஆபீஸுக்கு பஸ் பிடித்துப் போனேன்.

முதன் முதலாக ஒரு பத்திரிகை அலுவலகத்தை அப்போதுதாஏன் நான் பார்த்தேன். கேட்டின் வாசலில் இருந்த வாட்ச்மேன் ஒருவர் என்னை உள்ளே விட மறுத்துவிட்டார். நான் ஒரு எழுத்தாளன் என்று எவ்வளவு சொல்லியும் அவர் கேட்பதாய் இல்லை. அப்போது ஒடிசலாய் உயரமாய் ஒருவர் கக்கத்தில் இடுக்கிய தோல்பையோடு வந்தார் (பின்னாளில் அவர்தான் பால்யூ என்பதைத் தெரிந்து கொண்டேன்).

நான் யார்… எதற்காக வந்திருக்கிறேன் என்பதை விசாரித்துவிட்டு உள்ளே கூட்டிப் போனார். “இந்த ஒரு தடவை சரி, இனிமேல் இப்படியெல்லாம் திடீர்னு புறப்பட்டு வராதீங்க. நேரா உள்ளே போங்க. முன்னாடி இருக்கிற ரூம்ல ரெண்டுபேர் இருப்பாங்க. ஒருத்தர் ஜ ரா சுந்தரேசன், இன்னொருத்தர் புனிதன். ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தரைப் பாருங்க. உங்க பிரச்சினையை ஒரு அஞ்சு நிமிஷத்துக்குள்ளே பேசிட்டு உடனே வந்துடுங்க.”

அவருக்கு நன்றி சொல்லி தலையாட்டிவிட்டு ஒரு பெரிய புளிய மரத்துக்குப் பின்னால் இருந்த கட்டிடத்தை நோக்கிப் போனேன். பால்யூ சொன்னதுபோல் முதல் அறையில் ஜ ரா சுந்தரேசனும் புனிதனும் மேஜைகளுக்குப் பின்னால் ஏதோ எழுதியபடி பார்வைக்குக் கிடைத்தார்கள். ஜ ரா சு என்னை ஏறிட்டார்.

“யாரு?”

“ஸார்… என் பேரு ராஜேஷ்குமார். ஆரம்ப கால எழுத்தாளன்”

“சரி”

“கோயம்புத்தூர்லருந்து வர்றேன்” “ஆசிரியரைப் பார்க்கணும்”

“உள்ளே இருக்கார்… போய்ப் பாருங்க…!”

சொல்லிவிட்டு அவர் மறுபடியும் எழுத ஆரம்பித்துவிட, நான் தயக்கமாய் நடைபோட்டு பக்கத்து அறைக்குள் நுழைந்தார்.

கதர் வேட்டி, கதர்ச் சட்டையில் தடிமனாய் கண்ணாடி போட்டுக் கொண்டு சுவர் அலமாரியில் எதையோ தேடிக் கொண்டிருந்தவர்தான் ரா கி ர என்று தெரியாமல் மெல்ல அவரை நெருங்கி நின்றேன்.

அவர் திரும்பிப் பார்த்தார்.

“யாரு…?” கணீரென்ற குரல். நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர் செல்ஃபில் தேடுவதை நிறுத்தாமல், “என்ன விஷயம்.. சொல்லுங்க” என்றார்.

“குமுதத்துக்கு கதைகள் அனுப்பிக்கிட்டே இருக்கேன். ஒண்ணுகூட பிரசுரமாகலை ஸார்”

“நீங்க எழுதி அனுப்பின கதைகள் நல்லாயிருந்திருந்தா கண்டிப்பாய் பிரசுரமாகியிருக்கும்!”

“நான் எழுதினது எல்லாமே நல்ல கதைகள்தான்”

“காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு”, என்று சொல்லிவிட்டு அவர் சிரிக்க, எனக்கு லேசாய் வருத்தம் ஏற்பட்டது. நான் ஒன்றும் பேசத் தோன்றாமல் அப்படியே நின்றேன். அவர் தொடர்ந்து பேசினார்.

“கதை எழுதறதுக்கு பேப்பரும் பேனாவும் மட்டும் இருந்தா போதாது. அதுக்கு தனிப்பட்ட திறமை வேணும். போய் வித்தியாசமாய் சிந்திச்சு முயற்சி பண்ணுங்க. அந்தக் கதைகளை குமுதத்துக்கு அனுப்பி வையுங்க. கதை நல்லாயிருந்தா குமுதத்துல வரும். கதை பிரசுரமாகலையே என்கிற காரணத்துக்காக கோயம்புத்தூரிலிருந்து புறப்பட்டு வந்துடாதீங்க.”

நான் மனசில் ஏற்றிக் கொண்ட கனத்தோடு போகத் திரும்பினேன். பின்னால் ரா கி ர குரல் கேட்டது.

“ஒரு நிமிஷம்”

நின்றேன்.

செல்ஃபிலிருந்து பார்வையைத் திருப்பாமல் அவர் கேட்டார்.

“குமுதத்துக்கு இதுவரையிலும் எவ்வளவு கதைகள் அனுப்பியிருப்பீங்க. ஒரு பத்து பதினஞ்சு இருக்குமா?”

“இல்ல ஸார்”

“பின்னே?”

“127 கதைகள் ஸார்”

ரா கி ரவின் கையிலிருந்த ஃபைல் நழுவ, அவர் அதிர்ச்சியுடன் என்னைத் திரும்பிப் பார்த்தார். “குமுதத்துக்கு மட்டும் இவ்வளவு கதைகளை அனுப்பியிருக்கீங்களா?”

“ஆமா ஸார்”

“இதுவரைக்கும் ஒரு கதை கூட என்னோட மேஜைக்கு வந்து நான் பார்க்கலையே?”, என்று சொன்னவர் தன் உதவியாளரின் பெயரைச் சொல்லி சத்தமாய்க் கூப்பிட்டார். பக்கத்து அறையிலிருந்து ஒரு இளைஞர் வெளிப்பட்டார். ரா கி ர அவரைப் பார்த்துச் சொன்னார்.

“இவரோட பேர் ராஜேஷ்குமார். கோயம்புத்தூரிலிருந்து வந்து இருக்கார். இதுவரைக்கும் நம்ம பத்திரிகைக்கு நூத்துக்கும் மேற்பட்ட கதைதளை அனுப்பிச்சிருக்காராமே உண்மையா?”

“ஆமா… ஸார்”

“இவரோட கதைகள்ல ஒண்ணு கூட என்னோட டேபிளுக்கு வந்தது இல்லையே?”

“வாரத்துக்கு ரெண்டு அல்லது மூணு கதை அனுப்பறார் ஸார். பிரிச்சுப் பார்க்க நேரமில்லை. எல்லாத்தையும் அலமாரியில் போட்டு வெச்சிருக்கேன்!”

“அது தப்பாச்சே… அவர் எவ்வளவு ஆர்வமாய் எழுதி அனுப்பியிருக்கார். மொதல்ல அந்தக் கதைகளையெல்லாம் என்னோட டேபிளுக்குக் கொண்டு வாங்க. நான் படிச்சுப் பார்த்துடறேன்,” என்று உதவியாளரிடம் சொன்னவர், என்னிடம் திரும்பினார்.

“நீங்க ஊருக்குப் போங்க. நான் நீங்க அனுப்பி வெச்ச எல்லாக் கதைகளையும் படிச்சுப் பார்க்கிறேன். கதை நல்லாயிருந்தா கண்டிப்பாய் குமுதத்துல வரும். கதைகள் பிரசுரமாகலைன்னா அதுக்குக் காரணம் என்னன்னு யோசனை பண்ணுங்க. மத்த எழுத்தாளர்கள் பாணியிலிருந்து உங்கள் படைப்புகள் மாறுபட்டு இருக்கிறது முக்கியம்…!”

நான் நன்றி சொல்லிவிட்டு கோவை திரும்பினேன்.

குமுதம் அலுவலகமும், ரா கி ரவும் மனசுக்குள் இருக்க, நாட்கள் ஓடி இரண்டு வாரமாக மாறியது. குமுதம் இதழிலிருந்து ஒரு சின்ன சத்தம் கூட என் காதுகளை எட்டவில்லை. நான் அனுப்பிய 127 கதைகளில் ஒன்றுகூடவா அவர்களுக்குப் பிடிக்கவில்லை!

வாரங்கள் ஓடி மறைந்தன.

ஒவ்வொரு சனிக்கிழமையும் அன்றைக்கு வந்த குமுதம் இதழை வாங்கிப் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்பேன். ஒவ்வொரு பக்கமாய் புரட்டப்பட சாண்டில்யன், லக்ஷ்மி, சிவசங்கரி, சுஜாதா, இந்துமதி என்ற பிரபலமான எழுத்தாளர்களின் பெயர்கள் என் பார்வைக்குத் தட்டுப்பட்டதே தவிர என் பெயரைக் காணோம்.

ரா கி ர எனக்குச் சொன்ன புத்திமதிகளில் ஒன்று மட்டும் என்னுடைய நினைவில் ஆணியடித்தமாதிரி நிலைத்து இருந்தது.

“மற்ற எழுத்தாளர்களின் பாணியிலிருந்து உங்களுடைய படைப்புகள் மாறுபட்டு இருப்பது முக்கியம்!”

அடுத்த வாரத்தில் இருந்து மற்ற எழுத்தாளர்கள் எழுதி பிரசுரமான கதைகளுக்கும், நான் அனுப்பி வைத்த கதைகளுக்கும் என்ன வித்தியாசம் என்பதை சின்னதாய் ஆய்வு செய்து பார்த்தேன். ஒவ்வொரு எழுத்தாளரிடமும் ஒரு சிறப்பம்சம் இருந்தது. சுஜாதாவின் கதைகளில் இருந்த வேகம், விஞ்ஞானம் என்னை வியக்க வைத்தது. மேலும் எல்லா எழுத்தாளர்களும் கதை சொல்லும் விஷயத்தில் மாறுபட்டு இருந்தார்களே தவிர, ஒரு விஷயத்தில் ஒன்றுபட்டு இருந்தார்கள். அதாவது அவர்கள் எழுதிய கதைகளில் சம்பவம் நடக்கும் இடம் சென்னை நகரத்தை மட்டுமே மையமாய்க் கொண்டிருந்தது. மெரீனா பீச், மயிலாப்பூர், மாம்பலம், மவுண்ட் ரோடு, தேனாம்பேட்டை, வண்ணாரப்பேட்டை, அடையார், தியாகராய நகர், பனகல் பார்க், ராயப்பேட்டை என்று இந்தப் பகுதிகளையே சுற்றி வந்தது. அரிதாக ஒரு சில எழுத்தாளர்கள் மட்டும் மதுரை, திருச்சி போன்ற நகரங்களை வைத்து கதைகளை எழுதினார்கள்.

இதிலிருந்து நான் மாறுபட வேண்டும் என்று நினைத்தேன். நான் என்னுடைய பிசினஸ் விஷயமாக பல வட நாட்டு நகரங்களில் பயணம் செய்ததால் அந்த நகரங்களையும், அவைகளின் கலாச்சாரங்களையும் பிரதிபலிக்கும் வகையில் கதைகளை எழுதினால் இந்த எழுத்துத் துறையில் வெற்றிப் பெற முடியும் என்று நினைத்தேன். அந்த நினைப்பைச் சோதித்துப் பார்க்க உடனடியாய், புனே ரயில்வே ஸ்டேஷனில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து, ‘இது நியாயமா?’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதி குமுதம் இதழுக்கு அனுப்பி வைத்தேன்.

இரண்டு வாரங்கள் கழித்து வந்த குமுதத்தில் அந்தக் கதை பிரசுரமாகியிருந்தது. அந்த சிறுகதைக்கு வர்ணம் அவர்கள் ஓவியம் போட்டிருந்தார்கள். குமுதத்திற்கும் எனக்கும் நடந்த காகிதப் போரில் நான் பெற்ற அந்த சிறு வெற்றி எனக்கு அற்புதமாய்த் தெரிந்தது.

‘இது நியாயமா?’ சிறுகதை பிரசுரமான 5-ம் நாள், ரா கி ர அவர்களிடமிருந்து எனக்கு ஒரு தபால் கார்டு வந்தது. அதில் பச்சை மைப் பேனாவில் கிறுக்கலாய் நான்கு வரிகள்.

நண்பரே!

‘இது நியாயமா?’ கதை சிறப்பாய் இருந்தது. குமுதம் இதழுக்கு இதுபோன்ற வித்தியாசமான பின்னணியோடுகூடிய கதைகள்தான் வேண்டும். தொடர்ந்து எழுதி அனுப்புங்கள். சிறுகதை எழுதும் சூட்சமம் உங்களுக்குப் பிடிபட்டுவிட்டது என்று நினைக்கிறேன். இது தொடரட்டும். வெற்றி பெற வாழ்த்துகள்.

ரா கி ர அவர்களின் இந்தக் கடிதம் எனக்கு வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷிப் பட்டம் கிடைத்த மாதிரியான ஒரு உணர்வை ஏற்படுத்தியது.

அதன் பிறகு நான் வட மாநிலங்களில் உள்ள பிரதான நகரங்களான மும்பை, நாசிக், டெல்லி, நாக்பூர், கோலாப்பூர் போன்ற நகரங்களின் பின்னணியில் சிறுகதைகளை எழுதி அனுப்ப குமுதம் இதழும் அதை வாரந்தோறும் வெளியிட்டு எனக்கு எழுத்துலகில் பேரும் புகழும் பெற்றுத் தந்தது.

குமுதம் இதழ் தொடர்ந்து என் கதைகளைப் பிரசுரிக்கவே மற்ற வார இதழ்களும் எனக்குக் கடிதம் எழுதி சிறுகதைகள் கேட்டன. 1977-ல் இருந்து 1980க்குள் எல்லா வார இதழ்களிலும், நாளிதழ்களிலும் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி முடித்தேன்.

1980-ம் ஆண்டு ஜூன் மாதம் ரா கி ர அவர்கள் எனக்கு டெலிபோன் செய்து மாலை மதிக்கு ஒரு நாவல் எழுதி அனுப்பி வையுங்கள் என்று கேட்டார்.

“எனக்கு நாவல் எழுதத் தெரியாதே ஸார்?” என்றேன்.

“அது ஒன்றும் பிரமாதம் இல்லை. இரண்டு மூன்று கேரக்டர்கள், ஒரு சம்பவம் இவைகளின் கலவை ஒரு சிறுகதை. பத்துக்கும் மேற்பட்ட கேரக்டர்கள், நிறைய சம்பவங்கள், விறுவிறுப்பான நடை, கதையின் முடிவில் எதிர்ப்பாராத ஒரு திருப்பம் இவைகளின் கலவை ஒரு நாவல். உங்களால கண்டிப்பாய் ஒரு நாவலை சிறப்பான முறையில் எழுத முடியும். உங்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம். எழுதி அனுப்புங்கள்”. என்று படபடவென பேசிவிட்டு ரிசீவரை வைத்துவிட்டார்.

அவர் போனில் பேசிய வார்த்தைகள் எனக்கு ஒரு யானையின் பலத்தைக் கொடுக்க, நான் 20 நாட்களுக்குள் ‘வாடகைக்கு ஒரு உயிர்’ என்ற தலைப்பில் நாவல் ஒன்றை எழுதி ‘மாலைமதி’ இதழுக்கு அனுப்பி வைத்தேன்.

அந்த நாவல் வாசகர்களிடையில் பெரிய வரவேற்பைப் பெற்றதால் தொடர்ந்து என்னால் நாவல்களை எழுத முடிந்தது.

1983-க்குள் நான் 20-க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி முடித்து இருந்தபோது ரா கி ர அவர்கள் அவருடைய உறவினர் ஒருவரைப் பார்ப்பதற்காக கோவை வந்து இருந்தபோது என் வீட்டுக்கு திடீரென வருகை புரிந்தார். எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. ஆனால் அவரோ வெகு இயல்பாக, “நீங்க உட்கார்ந்து எழுதுகிற அறை எது?” என்று கேட்டார்.

நான் மாடியில் இருந்த என்னுடைய அறைக்குக் கூட்டிக் கொண்டு போனேன். அவர் என்னுடைய அறையைப் பார்த்துவிட்டு, “இதுதான் உங்க எழுத்துல சாம்ராஜ்யமா… நான் உங்க நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளலாமா”, என்று கேட்டுவிட்டு உட்கார்ந்து ஒரு குழந்தையைப் போல் சிரித்து மகிழ்ந்தார்.

எழுத்துலகில் பல சிகரங்களைத் தொட்ட வசிஷ்டர் அவர். அப்படிப்பட்ட ஒரு எழுத்து ஞானி என்னுடைய நாற்காலியில் அமர்ந்தது எனக்குக் கிடைத்த பாக்கியங்களில் ஒன்றாகவே இன்றளவும் நினைத்து வருகிறேன்.

இன்று ரா கி ர நம்மிடையே இல்லை.

ஆனால்- நான் அவரை நினைக்காத நாளில்லை.

ஏனென்றால் அவர் அமர்ந்த நாற்காலியில்தான் இன்றளவும் நான் உட்கார்ந்து எழுதிக் கொண்டு வருகிறேன்.

தொடரும்…

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s