5-நான் முகம் பார்த்த கண்ணாடிகள்… – ராஜேஷ் குமார்


Rajesh Kumar

1980 முதல் 1990 வரை எத்தனையோ இளம் எழுத்தாளர்கள் உருவாகி அன்றைய வார இதழ்களிலே சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் எழுதிக் கொண்டிருந்தார்கள். அந்த வட்டத்தில் நானும் ஒருவன்.

இப்படியொரு எழுத்தாளர் படை உருவாக காரணமாய் இருந்தவர் திரு சாவி அவர்கள்.
அவர்களுடைய முழுப் பெயர் சா விஸ்வநாதன். அவர் எந்த நேரத்தில் தன்னுடைய பெயரைச் சுருக்கி சாவி என்று வைத்துக் கொண்டாரோ தெரியவில்லை. பல இளம் எழுத்தாளர்களின் இதயப் பூட்டுகளுக்கு விடுதலை கொடுத்து கற்பனைப் பறவைகள் சிறகடிக்கப் பறக்கக் காரணமாயிருந்தார்.
அவரிடம் வெகு நெருக்கமாய் பழகிய மிகச் சில எழுத்தாளர்களில் நானும் ஒருவன். அவர் எப்போது கோவை வருவதாக இருந்தாலும் சரி, எனக்கு முன்கூட்டியே கடிதம் எழுதிவிடுவார். கோவையில் அவர் எங்கெங்கு செல்வாரோ அங்கேயெல்லாம் என்னையும் அழைத்துப் போய்விடுவார். கோவைக்கு வந்தால் அவர் ஹோட்டல்களில் தங்குவது இல்லை. கோவையின் பீளமேட்டில் உள்ள மில் அதிபர் ஜிஆர்டி அவர்களின் கெஸ்ட் அவுஸில்தான் தங்குவார்.
அன்றைய காலகட்டத்தில் சாவி ஸார்க்கும் எனக்கும் வயது வித்தியாசம் பெரிய அளவில் இருந்தாலும் (எனக்கு 34, அவருக்கு 75 வயது) என்னிடம் ஒரு நண்பனைப் போலவே பழருவார். எதையுமே வெளிப்படையாகவே பேசி தன்னுடைய மனதில் உள்ள எல்லா விஷயங்களையும் என்னோடு பகிர்ந்து கொள்வார்.
ஒரு முறை அவர் கோவை வந்து இருந்தபோது, தான் தங்கியிருந்த இடத்திலிருந்து எனக்கு போன் செய்து பேசினார்.
“ராஜேஷ்குமார்! வீட்டிலிருந்து என்னைப் பார்க்கப் புறப்பட்டுட்டீங்களா?”
“புறப்பட்டுக்கிட்டே இருக்கேன் ஸார்!”
“உங்களால எனக்கு ஒரு உதவியாகணுமே?”
“சொல்லுங்க ஸார்”
“கோயமுத்தூர் தேர்முட்டி வீதியில் ‘விஸ்வநாத ஐயர் ஸ்வீட்ஸ்’ கடை இருக்காமே?”
“ஆமா.. ஸார்..!”
“அந்தக் கடையில் ஜிலேபி ரொம்பவும் ஃபேமஸ்னு கேள்விப்பட்டேன்…”
“உண்மைதான் ஸார்.. ஜிலேபியை அவுங்க தயாரிக்கும்போது அந்த வீதியே மணக்கும்…”
“இந்த விஷயத்தை நீங்க என்கிட்ட சொல்லவே இல்லையே…? எத்தனை வாட்டி மீட் பண்ணியிருக்கோம்…”
“ஸாரி ஸார்… இந்த ஜிலேபி விஷயம் எனக்கு ஒரு பெரிய விஷயமா படலை…”
“சரியா போச்சு… எனக்கு இது மாதிரியான விஷயங்கள்தான் பெரிய விஷயம். நான் மாயவரத்துக்குப் போனா அங்கே இருக்கிற ‘பிராமணாள் கபே‘ ஹோட்டலில் நெய் ரவா தோசை சாப்பிடாமே வர மாட்டேன். நம்ம தமிழ்நாட்டிலேயே அது மாதிரியான ரவா தோசை எங்கேயும் கிடைக்காது. அதே மாதிரி விருது நகர்ல ஒரு ஹோட்டலில் முந்திரி வெண் பொங்கல் சூப்பராய் இருக்கும். அந்தப் பொங்கலில் பொடிப்பொடியாய் நறுக்கிப் போட்ட முந்திரித் துருவல் நம்ம நாக்குக்கு கடைசி வரைக்கும் கிடைச்சிட்டே இருக்கும். ரெண்டு ப்ளேட் பொங்கல் வாங்கிச் சாப்பிட்டாலும் திகட்டாது. அப்புறம் சேலத்துல ‘மலபார் கபே‘-ன்னு ஒரு சின்ன ஹோட்டல். நீங்க ஒரு தடவை அங்கே ‘பாதாம் அல்வா’வை சாப்பிட்டுவிட்டீங்கன்னா அதுக்கப்புறம் உங்களுக்கு எங்கேயும் பாதாம் அல்வாவைச் சாப்பிடப் பிடிக்காது!”
சாவி ஸார் ஒரு குழந்தையைப் போல பேசிக் கொண்டே போக, நான் வியப்பில் கரைந்து போனேன். சாவி ஸார்க்கு அப்படி ஒரு கலாரசனை கொண்ட ‘அப்சர்வேஷன் பவர்’ இருந்த காரணத்தினால்தான் அவரால் மண்வாசனை மணக்க மணக்க வாஷிங்டனை மையமாக வைத்துக் கொண்டு, ‘வாஷிங்டனில் திருமணம்’ என்ற மகோன்னத நகைச்சுவைத் தொடரை எழுத முடிந்திருக்கிறது.
சாவி ஸார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தேர்முட்டி வீதியில் இருந்த விஸ்வநாத ஐயர் கடைக்குப் போய் ஒரு கிலோ ஜிலேபியை வாங்கிக் கொண்டு சாவி ஸாரிடம் போனேன். ஸ்வீட் அட்டைப் பெட்டியை அவரிடம் நீட்டினேன்.
அவர் வாங்கிக் கொள்ளாமல் கேட்டார். “எவ்வளவு ஆச்சு…?”
“பரவாயில்ல ஸார்…”
நான் கேட்ட கேள்விக்கும், நீங்க சொன்ன பதிலுக்கும் கொஞ்சம் கூட பொருந்தவில்லையே.. இந்த ஒரு கிலோ ஜிலேபிக்கு என்ன விலை கொடுத்தீங்கன்னு கேட்டேன்…!”
நான் மெல்லச் சிரித்தபடி சொன்னேன். “ஸாரி ஸார்! இதுக்கு விலை கிடையாது. நீங்க பிரியப்பட்டு கேட்டீங்க. அதை நான் என்னோட அன்புப் பரிசாய் வாங்கிட்டு வந்திருக்கேன்.”
“ஓ…! இது உங்க அன்புப் பரிசா?”
“ஆமா… ஸார்…”
“நீங்க ஒரு அன்புப் பரிசு கொடுத்த மாதிரி, நானும் உங்களுக்கு ஒரு அன்புப் பரிசு கொடுக்கலாமில்லையா…?”
“எனக்கு எதுக்கு ஸார் பரிசு?”
“உங்களுக்கு மட்டும்தான் அன்பு இருக்கலாம். எனக்கு இருக்கக் கூடாதா?”
சாவி சாரிடம் பேசி ஜெயிக்க முடியாது என்கிற காரணத்தால் ஒரு புன்முறுவலோடு, “சரி… பரிசு குடுங்க!” என்று சொன்னேன். அவர் உடனே தனக்கு அருகில் இருந்த கைப்பையை எடுத்து அதிலிருந்து நூறு ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்றை எடுத்து என்னிடம் நீட்ட நான்அதிர்ந்து போனவனாய், அவரைப் பார்த்தேன்.
“என்ன ஸார்… இவ்வளவு பணம் தர்றீங்க?”
“இது என்னோட அன்புப் பரிசு”
“எனக்கு இவ்வளவு பணம் பரிசா எதுக்கு ஸார்….வேண்டாம்”
“அப்படின்னா இதிலிருந்து ஒரு கிலோ ஜிலேபி வாங்க நீங்க எவ்வளவு பணம் செலவழிச்சீங்களோ அதை மட்டும் எடுத்துக்குங்க…”
நான் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, சாவி ஸார் தனக்கே உரிய சிரிப்போடு சொன்னார்.
“எனக்காக நீங்க வாங்கிட்டு வந்த ஜிலேபி உங்களோட அன்புப் பரிசுன்னா… இந்த ரூபாய் நோட்டுக் கட்டு என்னோட அன்புப் பரிசு. பரஸ்பரம் மாத்திக்கலாமா…?”
“வே… வேணாம் ஸார்…”
“அப்படீன்னா ஒரு கிலோ ஜிலேபிக்கு நீங்க எவ்வளவு பணம் கொடுத்தீங்களோ, அந்தப் பணத்தை எடுத்துக்கங்க.. நான் இந்த ஜிலேபியை வாங்கிக்கறேன்…”
“ஸார்.. இந்த ஒரு கிலோ ஜிலேபியோட விலை ஐம்பது ரூபாய்தான்”
“அப்ப… இதிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை மட்டும் எடுத்துக்கிட்டு மீதி ஐம்பது ரூபாயை எனக்குக் குடுத்துடுங்க. நான் ஜிலேபியை வாங்கிக்கறேன். அப்படிச் செய்ய உங்களுக்கு மனசு இல்லாத பட்சத்தில் பரிசுகளை பரஸ்பரம் மாத்திக்குவோம். அதாவது நீங்க இந்த ரூபாய் நோட்டுக் கட்டை எடுத்துக்கங்க. நான் நீங்க வாங்கிட்டு வந்த ஜிலேபி பாக்கெட்டை எடுத்துக்கறேன்.”
சாவி ஸார் சொல்லிவிட்டு என்னையே புன்னகையோடு பார்க்க, நான் வேறு வழியில்லாமல் அந்த நோட்டுக் கட்டிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்த பின்தான் ஸ்வீட் பாக்கெட்டையே வாங்கிக் கொண்டார் சாவி ஸார். இந்த சம்பவத்தின் மூலம் சாவி அவர்களின் மேல் நான்வைத்திருந்த மதிப்பு பன்மடங்கு உயர்ந்துவிட்டது.
அவரைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் அவர் ஒரு முன்கோபி என்ற ஒரு குற்றச்சாட்டை சுமத்துவார்கள். ஆனால் அந்த கோபத்தில் நியாயம் இருக்கும் என்கிற உண்மை அவர்களுக்குத் தெரியாது.
ஒரு முறை நானும் அவரும் சென்னை அமைந்தகரை சாவி அலுவலகத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, அன்றைக்கு மிகவும் பிரபலமாயிருந்த ஓவியர் ஒருவர் சாவி இதழில் வரப் போகும் சிறுகதைக்கான ஓவியம் ஒன்றை வரைந்து தன் உதவியாளர் மூலம் அனுப்பியிருந்தார். உதவியாளர் உள்ளே வந்து ஓவியத்தை பவ்யமாய் நீட்ட, சாவி வாங்கிப் பார்த்துவிட்டு லேசாய் முகம் மாறினார். ஒரு கோபப் பார்வையோடு உதவியாளரை ஏறிட்டார்.
அந்த ஓவியரின் பெயரைக் குறிப்பிட்டு, “அவருக்கு ஏதேனும் உடம்பு சரியில்லையா?” என்று கேட்டார். “நல்லாத்தான் இருக்கார் சார்” “பின்னே ஏன் இந்த ஓவியம் நல்லாயில்லை…?” உதவியாளர் ஒன்றும் பேசாமல் மவுனமாய் நின்றார்.
சாவி கோபத்தில் வெடித்தார்.
“அவர் இந்த ஓவியத்தை உட்கார்ந்துகிட்டே வரைஞ்சாரா.. நடந்துகிட்டே வரைஞ்சாரா..? ஒரு கத்துக்குட்டி ஆர்ட்டிஸ்ட் கூட இப்படி வரையமாட்டான். அவர் பிஸியாய் இருக்கலாம். அதுக்காக ஏதோ ஒரு படத்தைக் கிறுக்கி அனுப்பிடறதா…? எந்த ஒரு தொழிலைச் செய்யறதாய் இருந்தாலும் அதுல ஒரு பயபக்தி வேணும். அப்பத்தான் அவரும் நல்லா இருப்பார். பத்திரிகையும் நல்லா இருக்கும்”.
அந்த உதவியாளர் வியர்த்துப் போனார்.
“சரி ஸார். நான் போய் அவர்கிட்டே விஷயத்தைச் சொல்றேன்!”
“அப்படியே நான் இப்பப் பண்ணப் போறதையும் சொல்லிடுங்க!” ஏறக்குறைய கர்ஜித்த சாவி, தன் கையில் வைத்திருந்த ஓவியத்தை இரண்டாய், நான்காய் கிழித்து தனக்குப் பக்கத்தில் இருந்த குப்பைக் கூடையில் போட்டார்.
உதவியாளர் அரண்டு போனவராய் அறையைவிட்டு வெளியேற, நான் சாவி அவர்களின் செய்கையால் அதிர்ந்து போயிருந்தேன்.
‘அவர் எவ்வளவு பெரிய ஓவியர்!’ ‘அவர் வரைந்த ஓவியத்தை அவருடைய உதவியாளருக்கு முன்பாகவே கிழித்துப் போட்டுவிட்டாரே?’ ‘இதனுடைய பின் விளைவுகள் எப்படியிருக்கும்?’
நான் உதைத்துக் கொண்டிருக்கிற இதயத்தோடு பதைபதைப்பாய் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, சாவி ஸார் எதுவுமே நடக்காதது பேல என்னை ஒரு புன்னகையோடு பார்த்தார்.
“ரெண்டு இஷ்யூ கழிச்சு சாவியோட பொங்கல் மலர் வருது. அந்த பொங்கல் மலர்ல நீங்க தொடர்கதை எழுதறீங்க. ஒரு நல்ல தலைப்பா சொல்லுங்க… வரப்போற இஷ்யூவில் அனௌன்ஸ்மென்ட் வெச்சிடுவோம்…!”
நான் சட்டென்று அந்தத் தலைப்பைச் சொன்னேன். “முள் நிலவு”
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s