1-நான் முகம் பார்த்த கண்ணாடிகள்… – ராஜேஷ் குமார்


Rajesh Kumar

நான் இந்த எழுத்துலகில் கால் பதிக்கக் காரணமாக இருந்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றிச் சொன்னால் அது ஒரு மாயாஜாலக் கதை மாதிரி இருக்கும். ‘இப்படியும் ஒரு எழுத்தாளன் உருவாக முடியுமா’ என்கிற மலைப்பு உங்களுக்குள் உருவாகலாம். ‘ஜீபூம்பா’ என்று சொன்னால் பூதம் வந்து நிற்கிற மாதிரி, ‘அண்டா கா கஸம்’ என்று சொன்னால் அலிபாபாவின் குகை தானாய் திறப்பது மாதிரிதான் நான் எழுத்தாளன் ஆனதும்!

 –
அது ஒரு மார்ச் மாதம். 1968வது வருஷம். ‘அட்வான்ஸ்ட் தமிழ்‘ என்ற சிறப்புத் தமிழ் வகுப்பில் மனோன்மணீயம் பாடம் நடத்திக் கொண்டிருந்த தமிழ்த் துறையின் தலைமைப் பேராசிரியர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் வகுப்பு முடிவதற்கு ஐந்து நிமிஷம் இருக்கும்போது அந்தச் செய்தியைச் சொன்னார்.
“இந்த வருடம் நம் கல்லூரியில் தமிழ்த் துறை சார்பாக ஒரு பல்சுவை இதழ், கதைகளோடும், கவிதைகளோடும், கட்டுரைகளோடும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளிவர உள்ளது. பிரசுரிப்பதற்கு கவிதைகளும் கட்டுரைகளும் நிறைய உள்ளன. ஆனால் சிறுகதைகள்தான் கைவசமில்லை. நம்முடைய இந்த வகுப்பில் சிறுகதை எழுதக் கூடிய திறமை யார்க்காவது இருக்கிறதா?”
பேராசிரியர் இப்படிக் கேட்டு முடித்ததும் வகுப்பில் அசாத்திய நிசப்தம். நேர் பார்வை பார்த்துக் கொண்டு மௌனமாய் இருந்தார்கள். யாராவது கைத் தூக்குவார்களா என்று நானும் ஆவலாய் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லோரும் அடம் பிடித்த மாதிரி மௌனம் சாதித்தார்கள். பேராசிரியருக்கு லேசாய் கோபம் வந்தது.
“என்ன… நான் சொன்னது காதுல விழுந்ததா இல்லையா..? உங்கள்ல யார்க்காவது கதை எழுதத் தெரியுமான்னு கேட்டேன்”
அடுத்த விநாடி… எனக்கு நேர்ப்பின்னால் உட்கார்ந்திருந்த பிரபாகர் எனும் மாணவன் என்னுடைய தோளைத் தட்டி, “ஸார்… ராஜகோபால் நல்லா கதை எழுதுவான்..” என்று விளையாட்டுத்தனமாய் சொல்லி வைக்க, ஒட்டு மொத்த வகுப்பும் என்னைத் திரும்பிப் பார்த்தது. நான் பதட்டமடைந்து பிரபாகரை முறைக்க, அவன் கண்ணடித்து கபடமாய்ச் சிரித்தான்.
பேராசிரியர் மீனாட்சி சுந்தரம் குரல் கொடுத்தார்.
“ராஜகோபால்..”
“ஸார்..” எழுந்து நின்றேன்.
“நாளைக்கு வகுப்புக்கு வரும்போது ஒரு சிறுகதையோடு வா…!”
“எனக்கு கதை எழுதத் தெரியாது ஸார்… பிரபாகர் என்னை மாட்டி விடுறான் ஸார்..” நான்அழமாட்டாக் குறையாய் சொன்னதை அவர் சிறிதும் பொருட்படுத்தவில்லை. மெல்லச் சிரித்தார்.
“தலை நிறைய ‘புஸ்ஸு’ன்னு இருக்கிற உன்னோட முடியைப் பார்த்தாலே உனக்கு கதை எழுத வரும்போல் தெரியுது. நாளைக்கு வரும்போது நாலைஞ்சு பக்கத்துக்குள்ளே ஒரு சிறுகதையை எழுதிக் கொண்டாந்துடு.”
அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே – அந்த தமிழ் வகுப்பு முடிந்ததற்கு அடையாளமாய் மணியொலிக்கவே, வகுப்பு கலைந்தது. நான் தமிழ்ப் பேராசிரியருக்குப் பின்னால் ஓடினேன்.
“ஸ.. ஸார்” “என்ன?” “எனக்கு கதை எழுதத் தெரியாது ஸார். பிரபாகர் சும்மா சொன்னான் ஸார்…”
“அவன் பொய் சொல்கிற மாதிரி எனக்குத் தெரியலை. நீ நாளைக்கு வரும்போது ஒரு கதையோடு வா…!”
“ஸ.. ஸார்…”
“பேசாதே…” அவர் வேகமாக கிளம்பிப் போய்விட்டார்.
மறுநாள் மாலை கடைசி பீரியட்… அட்வான்ஸ்ட் தமிழ் வகுப்பு. தமிழ்ப் பேராசிரியர் மீனாட்சி சுந்தரம் வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்கள் எல்லோரும் வழக்கம் போல் எழுந்து நின்றோம். நின்றவர்களை உடனடியாய் அமரச் சொல்லாமல் என்மீது பார்வையைப் போட்டார்.
“என்ன ராஜகோபால்…! கதை எழுதிட்டு வந்தியா?”
நான் அதிர்ந்து போனவனாய் எதுவும் பேசத் தோன்றாமல் அப்படியே நின்றேன்.
அவர் குரலை உயர்த்தினார்.
“என்ன, எழுதிட்டு வரலையா?”
“ஸார்… எனக்கு கதை எழுதத் தெரியாது ஸார்”
“நேத்தைக்கு என்ன சொன்னியோ, அதைத்தான் இப்பவும் சொல்றே! நான் சொன்னதுக்காகவாவது நீ முயற்சி பண்ணி பார்த்து இருக்கலாம் இல்லையா…? உனக்கு நல்லாவே கதை எழுத வரும்னு நினைக்கிறேன். இப்படி நான் சொல்றதுக்கு என்ன காரணம் தெரியுமா?”
“தெரியலை ஸார்!”
“எல்லாரையும் உட்காரச் சொன்ன பேராசிரியர் என்னை மட்டும் நிற்க வைத்துக் கொண்டார். சொன்னார்.
“போன வாரம் ‘மனோன்மணீயம்’ பாடத்தில் இடம்பெற்ற ‘நெருப்பைக் கரையான்கள் அரிக்குமோ?’ என்கிற வாக்கியத்தைத் தலைப்பாய் கொடுத்து நான் உங்க எல்லாரையும் கட்டுரை எழுதச் சொன்னேன். மொத்தம் 64 பேர் எழுதினீங்க. அதையெல்லாம் நேத்துதான் படித்துப் பார்த்தேன். அந்த 64 கட்டுரைகளில் உன்னோட கட்டுரைதான் கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது. வித்தியாசம்னா, அந்த உரைநடை ஏதோ பரீட்சைக்கு எழுதற மாதிரி இல்லாம, புது உரைநடையில் வெகு யதார்த்தமாய் இருந்தது. அதனால் நீ முயற்சி பண்ணினா உன்னால ஒரு சிறுகதையை எழுத முடியும்னு நினைக்கிறேன்…!”
“என்னால ஒரு சிறுகதையை எழுத முடியும்னு எனக்கு தோணல ஸார்..”
“நீ இதுவரைக்கும் எந்த ஒரு எழுத்தாளனின் சிறுகதையையாவது படிச்சிருக்கியா…?”
“இல்ல… ஸார்..”
“தமிழ்ல வர்ற வாரப் பத்திரிகைகளைப் படிக்கிறதுண்டா?”
“இல்ல ஸார்…”
“நீ இல்லன்னு சொன்னாலும் உன்பேர்ல எனக்கு ஒரு நம்பிக்கை.. இந்த ஆண்டு பல்சுவை இதழில் உன்னோட கதை இடம் பெறணும்…”
“ஸ.. ஸார்.. அது வந்து… !”
“பேசாதே உட்கார்… உனக்கு ரெண்டு நாள் டயம். கதையோடு வந்தா வகுப்புக்குள்ளே வா… இல்லேன்னா என்னோட வகுப்புக்கு வராதே!” “
மௌனமாய் உட்கார்ந்தேன்.”
தமிழ்த் துறைப் பேராசிரியர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் மிகவும் மென்மையானவர்கள். கடந்த ஒரு வருட காலத்தில் அவர் அவ்வளவு கடுமையாய் பேசி நான் பார்த்ததில்லை. வேறு வழியில்லை. கதை என்ற பெயரில் நான்கைந்து பக்கங்களுக்கு எதையாவதை எழுதிக் கொடுத்து ஒப்பேற்றிவிட வேண்டியதுதான். மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்குப் போனேன். பேராசிரியர் சொன்ன வார்த்தைகள் மனசுக்குள் வலம் வந்தன. ‘நீ முயற்சி பண்ணினா உன்னால ஒரு சிறுகதையை எழுத முடியும்!’ என் பேரில்தான் அவருக்கு எவ்வளவு நம்பிக்கை. சிறுகதை ஒன்றை எழுதிப் பார்த்துவிட வேண்டியதுதான்.
அந்த எண்ணத்தை செயலாக்குவதற்கு முன்பாக, என் வீட்டுக்கு அருகில் இருந்த சர். தியாகராயர் நூலகத்துக்குச் சென்று அந்த வாரம் வந்திருந்த கல்கி, விகடன், குமுதம் இதழ்களைப் புரட்டிப் பார்த்தேன். அகிலன், நா பார்த்தசாரதி, கோவி மணிசேகரன், லக்ஷ்மி, ஜெயகாந்தன் போன்ற எழுத்துலக ஜாம்பவான்கள் எழுத்தாட்சி செய்து கொண்டிருந்த காலம் அது. அவர்களின் படைப்புகளை எல்லாம் படித்துப் பார்த்தேன். கதைகள் புரிந்த மாதிரியும் இருந்தது, புரியாத மாதிரியும் இருந்தது. ஆனால் ஒரு சிறுகதை என்றால் அதில் ஏதாவது ஒரு நல்ல ‘மெஸேஜ்’ இருக்க வேண்டும் என்பதை மட்டும் புரிந்து கொண்டேன்.
லைப்ரரியிலிருந்து வீடு திரும்பியதும் இரவு உணவை முடித்துக் கொண்டு பேப்பரும் பேனாவுமாய் உட்கார்ந்தேன். சற்று முன் படித்த கதைகளின் தாக்கம் மனசுக்குள் இருந்ததால் மெதுவாய் எழுத ஆரம்பித்தேன். துவக்கத்தில் வார்த்தைகள் அடம் பிடித்து வாக்கியமாக மாற மறுத்தன. நிறைய அடித்தல் திருத்தங்களுக்குப் பின் வார்த்தைகள் என் பேனா முனைக்கு சிக்கி வாக்கியங்களாக மாற ஆரம்பித்தன. அந்த சிறுகதையை எழுதி முடிக்க நள்ளிரவு 12 மணி ஆயிற்று. எழுதியதை ஒரு முறை படித்துப் பார்த்தேன். ரொம்பவும் சுமாராய் இருந்தது. ‘எப்படியிருந்தால் என்ன.. பேராசிரியர் கதை கேட்டார். எழுதியாயிற்று. யாருக்கும் பிடித்தால் என்ன… பிடிக்காமல் போனால் என்ன?’ கதைக்கு ‘வசந்த வாழ்வு’ எனத் தலைப்பிட்டு ஒரு கவரில் போட்டு வைத்துக் கொண்டேன்.
மறுநாள் காலை ஒன்பது மணிக்கெல்லாம் கல்லூரிக்குப் போய்விட்டேன். தமிழ்த் துறையின் அறைக்குச் சென்றேன். பேராசிரியர் மீனாட்சி சுந்தரம் காலிக்கோ பைன்ட் செய்யப்பட்ட ஒரு கனமான புத்தகத்தை வைத்துக் கொண்டு, அதைப் பார்த்தபடி ஒரு தாளில் எதையோ எழுதிக் கொண்டிருந்தார். நான், “வணக்கம் ஸார்” என்று சொன்னதும் தலைநிமிர்ந்து பார்த்தவர், மலர்ந்தார்.
“என்ன, கதையோடு வந்துட்ட போலருக்கே?”
“ஆமா ஸார்..” “கொண்டா.. கொண்டா.. படிச்சிடலாம்”
அவர் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைத் தள்ளி வைத்துவிட்டு நான் கொடுத்த கதையைப் படிக்க ஆரம்பித்தார். நான் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவரோ தன்னுடைய முகத்தில் எந்த விதமான உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் கதையைப் படித்து முடித்துவிட்டு, ஒரு சின்னப் புன்னகையோடு என்னைப் பார்த்தார்.
“இப்படி வா பக்கத்துல…”
போனேன்.
முதுகைத் தட்டிக் கொடுத்தார்.
“ராஜகோபால்! இது உன்னோட முதல் கதைன்னு என்னால நம்ப முடியல.. முதல் கதையிலேயே ஒரு புரட்சி பண்ணியிருக்க. இது சர்ச்சைக்குரிய கதை. இருந்தாலும்… நம்ம கல்லூரியின் ஆண்டு விழா மலரில் இடம்பெறும்.”
நான் சந்தோஷத்துடன் அறையைவிட்டு வெளியில் வந்தேன். எப்படியோ ஒரு கதையை எழுதி அவரிடம் கொடுத்தாயிற்று என்கிற ஒரு நிம்மதியான எண்ணமே மனசுக்குள் நிறைந்தது. நான் அன்றைக்கு எழுதிய கதையை, சில வருடங்கள் கழித்து நானே படித்தபோதுதான், ‘அட! இது ஒரு சர்ச்சைக்குரிய கருவாயிற்றே!’ என்று மனசுக்கு உறைத்தது. கதையின் கரு இதுதான்.
அது ஒரு சிறிய கிராமம். அந்த கிராமத்தின் கடைவீதியில் இரண்டு ஹோட்டல்கள். ஒன்று பெரிய ஹோட்டல். அதை உயர்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவர் நடத்தி வர, இரண்டாவது ஹோட்டல் சிறியது. கிட்டத்தட்ட அது ஒரு டீக்கடைப் போன்றது. இந்த சிறிய ஹோட்டலை தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவர் நடத்தி வருகிறார். பெரிய ஹோட்டல் நடத்திவரும் நபரின் மகள் விஜயா. சிறிய ஹோட்டலை நடத்தி வரும் நபரின் மகன் ரங்கன். ஹோட்டல்கள் எதிரெதிரே இருப்பதன் காரணமாய் இருவருக்கும் காதல் உண்டாகிறது. இந்தக் காதல் ஊராருக்குத் தெரிய வர பிரச்சினை வெடிக்கிறது. ஆலமரத்தடியில் பஞ்சாயத்து நடக்கிறது. ஊர்ப் பெரியவர் தீர்ப்பு வழங்குகிறார். தீர்ப்பு இதுதான். ரங்கனையும் விஜயாவையும் ஊர் தள்ளி வைக்கிறது. கிராமத்தின் எல்லைப் பகுதிக்குள் அவர்கள் நுழையக் கூடாது என்றும் கட்டுப்பாடு போடப்படுகிறது. இருவீட்டாரும் அவர்களைத் துரத்திவிட, இருவரும் ஊர் எல்லையைத் தாண்டி ஒரு மரத்துக்குக் கீழே உட்கார்ந்து என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். அடுத்த சில நாட்களில் கிராம எல்லை முடியும் இடத்தில் ரோட்டோரமாய் தென்னை ஓலைகளால் வேயப்பட்ட ஒரு டீக்கடை முளைக்கிறது. ரங்கனின் பெயரில் இருந்த முதல் எழுத்தான ‘ர’ வையும், விஜயாவின் பெயரில் இருந்த முதல் எழுத்தான ‘வி’ யையும் சேர்த்து ‘ரவி தேநீர் விடுதி’ என்ற போர்டு தெரிய, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த சிலர் பெஞ்சில் உட்கார்ந்தபடி டீ குடித்துக் கொண்டு இருக்கிறார்கள். வசந்த வாழ்வு கதையின் கரு இதுதான்!
இந்த 2015-லும் நீறு பூத்த நெருப்பைப் போல் இருக்கும் இந்தப் பிரச்சினையை நான், 1968-லேயே, என் முதல் கதையிலேயே தொட்டுப் பார்த்து ஒரு தீர்வும் கொடுத்திருக்கிறேன் என்பதை நினைக்கும்போது, எனக்கே நான் ஒரு ஆச்சர்யமாய் தெரிகிறேன். ‘நல்லவேளை 1968-ல் கௌரவக் கொலை என்கிற வார்த்தை இல்லை என்பதை நினைக்கும்போது மனசுக்குள் ஒரு நிம்மதி பரவுகிறது.
–தொடரும்…
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s