நூல் விமர்சனம்: தெய்வத்தின் தெய்வம் காப்பாற்றும்! – சுப்ர.பாலன்


சதா சர்வகாலமும் ராம நாமத்தையே சொல்லிக் கொண்டிருக்கும் அனுமன் மட்டும் ஏன் வைகுந்தம் போகவில்லை? இப்படி ஒரு சந்தேகம் வந்ததாம் பிரகலாதனுக்கு. பகவானின் அனுமதிபெற்று பூமிக்கு வந்து இதை அனுமனிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்புகிறான் அந்தச் சீறிய சிங்கத்தின் உக்கிரத்தைத் தணிக்கும் பேறுபெற்ற பிரகலாதன். கலியுகத்தில் ‘ராமஜபம் செய்பவர்களின் உலகியல் துன்பங்களை நீக்கி அவர்களை ரட்சிப்பதன் பொருட்டு நீ மண்ணுலகிலேயே நிரந்தரமாக இருந்துவர வேண்டும்’ என்பது அனுமனுக்குப் பரம்பொருள் இட்ட பணி. இதை அனுமன் பிரகலாதனுக்குச் சொல்வதான ஒரு நயம்.

சீதாதேவிக்கு அனுசுயா தேவி தம் தவவலிமையால் காற்றிலிருந்து வரவழைத்துத் தந்த மோதிரம் சற்று அளவில் பெரிதாக இருந்ததாம். அதனால் அத்திரி மகரிஷியின் ஆசிரமத்திலிருந்து வெளிப்பட்டு கானகத்தில் நடந்துபோகும்போது விரல்களை மடக்கி மோதிரம் நழுவாமல் பாதுகாத்திருக்கிறாள் சீதை. அதை கவனித்து இராமன் கேட்டபோது, விவரம் சொல்லித் தன் கரத்தால் அதை இராமனின் பெரிய விரலில் அணிவித்தாளாம். இராமனுடைய விரலளவுக்கு அது சரியாக இருந்ததாம்.

பின் நாட்களில், அசோகவனத்தில் சீதையை அனுமன் சந்தித்தபோது அந்த மோதிரத்தை இராமபிரான் தன்னுடைய இடுப்பு முடிச்சிலிருந்து எடுத்துத் தந்ததாகச் சொன்னாராம். இந்தக் குறிப்பிலிருந்து கணையாழியை விரலிலிருந்து கழற்றாமல் இடுப்பு முடிச்சிலிருந்து தந்திருப்பதால் இராமன் உடல் மெலிந்துபோய் விரல்கள் மெலிந்திருக்க வேண்டும் என்று ஊகித்தறிந்தாளாம் சீதை. இப்படி ஓர் அழகான கற்பனை.

வனவாச காலம் முடிந்து உரிய நேரத்தில் இராமபிரான் அயோத்தி திரும்பக் காலதாமதமாவதாக எண்ணித் தீக்குளிக்க முனைகிறான் பரதன். அவன் அக்னி குண்டத்தை இருமுறை வலம் வந்தபிறகும் கூடப் பதற்றமடையாமல் ‘தெய்வத்தின் தெய்வம் காக்கும்’ என்ற முழுமையான நம்பிக்கையோடு சுருதகீர்த்தியையும் அமைதிப்படுத்துகிறாளாம் பரதனின் மனைவியான மாண்டவி. இங்கே ‘தெய்வம்’ என்றது தன் கணவன் பரதனை. தெய்வத்தின் தெய்வம் வேறு யார்? இராமபிரான்தானே! இப்படி ஒரு சுகமான சிந்தனை.

மாவீரனான இராவணன் முதுகில் காயம் பட்டிருப்பதாக ஒரு செய்தியை மருத்துவர் மண்டோதரியிடம் சொல்வதாக ஒரு கதை வருகிறது. ‘தன் கணவன் முதுகில் காயம் படக்கூடிய அளவுக்கு இருத்தலாகாது. போரில் இறந்துபோயிருந்தால் தானும் உடன்கட்டை ஏறியிருக்கலாமே’ என்று எண்ணுகிறாளாம் மண்டோதரி.

மயக்கம் தெளிந்த இராவணன் தன் மனைவியின் மனநிலையைத் தெரிந்து கொள்கிறான். ‘போரில் புறமுதுகிட்டு ஓடினால்தான் முதுகில் காயம் ஏற்படும் என்ற கற்பனையை யார் உருவாக்கியது? தன் கணவன் இராவணேஸ்வரனின் மாவீரத்தைப் பற்றி நன்கறிந்த மண்டோதரியா இப்படி கற்பனை செய்வது?’ என்று சொல்லிவிட்டு காயத்துக்கான காரணத்தையும் விளக்குகிறார் ஆசிரியர்.

அபூர்வ ராமாயணம்’ என்ற தலைப்பில் முன்பே முதல் தொகுதியாகக் ‘காற்றின் குர’லை வெளியிட்ட திருப்பூர் குமரன் பதிப்பகத்தார், அந்த வரிசையில் இரண்டாவது தொகுதியாக ‘அனுமன் கதைகள்’ வெளியிட்டிருக்கிறார்கள். திருப்பூர் கிருஷ்ணனின் எளிமையும் இனிமையும் கலந்த தமிழில் இராமாயணக் கதைகளின் வித்தியாசமான படிப்பனுபவத்தை இவற்றில் பெறமுடிகிறது. முழுமையாக இராமாயண காலத்தில் நடைபோடுகிற உணர்வைத் தருகிற நாற்பத்தெட்டு அனுபவக் கதைகள், ‘ம.செ.’யின் அட்டை வண்ணச் சிறப்போடு!

அனுமன் கதைகள், (அபூர்வ ராமாயணம் தொகுதி-2), திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், 57-பி., பத்மாவதி நகர், காமராஜ் சாலை, விருகம்பாக்கம், சென்னை-92 போன் 044 2377 1473) ரூ 260.

தொடர்புடைய பதிவு: நூல் விமர்சனம் – காற்றின் குரல் – திருப்பூர் கிருஷ்ணன்

–நன்றி கல்கி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s