மஹாளய பட்சம் எனும் மகத்தான புண்ணிய தினங்கள் – ஏ.எம்.ஆர்


நம்மீது வைத்துள்ள ஈடிணையற்ற கருணையினால், பித்ருக்கள் எனப் பூஜிக்கப்படும் நம் முன்னோர்கள் எங்கோ கற்பனைகளுக்கும் மீறிய பலப் பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பித்ருக்களின் உலகத்தில் இருந்து, ஸ்வர்ணமயமான விமானங்களில், சூர்ய கதிர்களின் வழியாக பூவுலகிற்கு எழுந்தருளி, மஹாளய பட்சம் எனும் அந்த பதினைந்து புனித தினங்களிலும் நம்முடன் தங்கியிருக்கிறார்கள் என்று வேதகால மகரிஷிகள் அருளியுள்ளனர்.

கிடைத்தற்கரிய  புண்ணிய பலனை நமக்கு அளித்தருளும் அந்தப் பதினைந்து நாட்களும் – நாம் தூய்மையான உள்ளத்துடன் இருக்க வேண்டும். வீட்டை தூய்மைப்படுத்தி, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பதினைந்து நாட்களிலும், வீட்டில் எவருடனும் சண்டையிடுவதோ, அல்லது தவறான வார்த்தைகள் பேசுவதோ அல்லது அசைவ உணவு உண்பதோ கண்டிப்பாகக் கூடாது.  ஏனெனில், அப்போது நம் முன்னோர்கள் நம் வீடுகளில் தங்கியிருக்கிறார்கள். அவர்களது தேஜஸ்ஸை (தெய்வீக ஒளி) நம் ஊனக்கண்களில் பார்த்தால், அந்த ஒளியின் பிரகாசத்தினால் நம் பார்வை போய் விடும். ஆதலால்தான் அப்பெரியோர்கள் தங்கள் ஒளியை மறைத்துக் கொள்கிறார்கள்.

சக்தி உள்ளவர்கள் தினமும் சிராத்தம் செய்யலாம். இதற்கு வசதியில்லாத அன்பர்கள் அவரவர்கள் தங்கள் தந்தை இறைவனடி சேர்ந்த திதியன்று செய்யலாம். தந்தை காலமான தினத்தின் திதி தெரியாதவர்கள் ஏகாதசி அல்லது மஹாபரணி ஆகிய தினங்களில் செய்யலாம். புண்ணிய நதிக்கரையில் செய்வது மிகச் சிறந்த நற்பலனை அளிக்கும்.

தான பலன்!

மஹாளய பட்சம் புண்ணிய தினங்களில் ஏழைகளுக்கும், ஆசார அனுஷ்டானங்களில் சிறந்த பெரியோர்களுக்கும் வஸ்திர தானம், அன்னதானம், கன்றுடன் கூடிய பசு தானம், தீப தானம் ஆகியவற்றை அளிப்பது மகத்தான புண்ணிய பலனை அளிக்கும்.

மஹாளய பட்சம் 17-9-2016 அன்று ஆரம்பமாகிறது. மஹாளய பட்ச புண்ணிய காலம் செப்டம்பர் 30, 2016 வெள்ளிக்கிழமையன்று சர்வ மஹாளய அமாவாசையுடன் நிறைவு பெறுகிறது.

ஸ்நானம்!

இந்த மஹாளய அமாவாசை தினத்தில் புண்ணிய நதிகள், சேது, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய திருத்தலங்களில் சமுத்திர ஸ்நானம் செய்வது, காசி, கயை, குருக்ஷேத்திரம், சூர்ய குண்டம், பிரம்ம சரஸ் ஆகிய தீர்த்தங்கள், கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, நர்மதை, துங்கபத்ரா போன்ற மகா புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்து, பித்ருக்களுக்காக அவரவரது சக்திக்கேற்ப தானம் கொடுப்பது அளவற்ற புண்ணிய பலனைத் தரும்.

சிராத்த பலன்!

மஹாளய பட்சத்தில் செய்யும் சிராத்தம், மற்றும் பித்ரு பூஜைகள் ஆகியவற்றின் புண்ணிய பலன் நமக்குப் பல பிறவிகளுக்குத் தொடர்ந்து கிடைக்கும். தர்ம தேவதைக்கு தீப தானம் அளிப்பது மகத்தான புண்ணிய பலனை அளிக்கும். மஹாளய பட்சத்தில் சிராத்தம் செய்து, பித்ருக்களை பூஜிக்கும் புண்ணிய பலன் எத்தகைய கொடிய கிரக தோஷங்களானாலும், ஒரு நொடியில் போக்கி விடும்.

பித்ருக்களை வழி அனுப்புதல்!

மஹாளய அமாவாசை அன்றுதான் பித்ருக்கள் அவர்களது உலகங்களுக்குத் திரும்பிச் செல்கின்றனர். ஆதலால், அன்று அவர்களை விசேஷமாக பூஜித்து, நமஸ்கரித்து, அவர்களை வழி அனுப்ப வேண்டும். கிடைத்தர்க்கரியது பித்ருக்களின் ஆசி. அதிலும் மஹாளய பட்சம் 15 நாட்களும் அவர்கள் நம்முடன் பரம கருணையுடன் தங்கியிருப்பதால், அதற்கேற்ப நாம் பக்தியுடன் நடந்து கொள்ள வேண்டும். கிடைத்தற்கரியது மஹாளய பட்ச புண்ணிய காலம்.

–நன்றி குமுதம் ஜோதிடம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s