2-நான் அழுதபோது யூனிட்டே சிரித்தது! – கிரேஸி மோகன்


ஜி. குப்புசாமி: தூங்கி எழ லேட் ஆகும் என்பதற்காக டைரக்ஷன் வாய்ப்பைக் கை விடலாமா?

கிரேஸி மோகன்: கடைசி வரைக்கும் எழுத்தாளனாக இருக்கணும் என்பதுதான் என் ஆசை. ‘நகைச்சுவை’ என்ற சப்ஜெக்ட்டை வேறு கையில் எடுத்துள்ளேன். மற்றவர்களைச் சிரிக்க வைப்பது என்பது சாதாரண விஷயமில்லை. எனவே, இந்த ஜென்மத்தில் ஒரு எழுத்தாளனாக மட்டுமே இருந்து, அதில் முழுமையான ஒரு பெர்ஃபெக்ஷனைக் கொண்டு வந்தால் போதும் என்று நினைக்கிறேன். இதனால்தான் என் நாடகங்களைக் கூட நான் இயக்குவது கிடையாது. மௌலியின் தம்பி எஸ்.பி.காந்தன்தான் இயக்குகிறார். நான் எழுதிக் கொடுத்து விடுவேன். அதை எடிட் செய்து, ரிகர்ஸல் பார்ப்பது எல்லாம் காந்தனின் வேலை. நடிக்க வந்தது கூட ஒரு ஆக்ஸிடெண்ட்தான். ஒரு ஸீனில் நடிக்க வேண்டிய நடிகர் வராததால், கமல் என்னை நடிக்க வைத்து விட்டார். ஆக்ஸிடெண்ட்லே எல்லோருக்கும் உயிர் போகும். ஆனால், ஆக்ஸிடெண்ட்டால்தான் எனக்கு நடிப்பு வாழ்க்கை கிடைத்தது.

ஆர். மீனாட்சி: ரஜினியோடு படம் பண்ணிய அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்க ளேன்….

கிரேஸி மோகன்: ரஜினியோடு நான் அருணாச்சலம் படம் பண்ணினேன். அதுக்கு முன்னரே ராகவேந்திரா படத்துக்கு நான்தான் ஸ்கிரிப்ட் எழுதுவதாக இருந்தது. இதற்காக திருவல்லிக்கேணியில் ராயர்கள் பல பேரைச் சந்தித்து, பாலகிருஷ்ண சாஸ்திரிகளிடம் பத்து நாள் டிஸ்கஸ் பண்ணி, நிறையப் புத்தகங்கள் படித்து, அந்த ஸ்கிரிப்டை எழுதி முடிச்சேன். ஆனால், அப்போது, சுந்தரம் கம்பெனி வேலையை விடாமல் எழுதிக்கொண்டிருந்ததால், அந்தப் படம் மிஸ் ஆகிவிட்டது. ராகவேந்தரரை செல்லமாகக் கோவித்துக் கொண்டு அத்துடன் விட்டு விட்டேன். ‘கட்’ பண்ணினால், சுமார் 30 ஆண்டுகள் கழித்து ரஜினியோடு அருணாச்சலம் படத்தில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் உட்கார்ந்து படத்துக்குப் பஞ்ச் டயலாக் யோசித்துக் கொண்டு இருந்தோம். வல்லவன், நல்லவன், அடி, இடி என்று ஏதேதோ சொல்லிப் பார்த்தேன். எதுவும் ரஜினிக்குப் பிடிக்கவில்லை. அன்று வியாழக்கிழமை என்பதால், மாலை ராகவேந்திரா கோவிலுக்குப்போனேன். அப்போது, ‘ராகவேந்திரா இந்த வாய்ப்பு நீ கொடுத்தது. எனக்குக் கிடைச்சது. நீ சொல்லு; நான் எழுதி முடித்து விடுகிறேன்’ என்று பிரார்த்தனை பண்ணினேன். அப்போது ஒரு ஃப்ளாஷ். மறுநாள் ரஜினியிடம் என் பிரார்த்தனையையே டயலாக்காக மாற்றி ‘ஆண்டவன் சொல்றான்; அருணாச்சலம் முடிக்கிறான்’னு சொன்னேன். அந்தப் ‘பஞ்ச் டயலாக்’ ரஜினி சாருக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. ‘எங்க ஸார் பிடிச்சீங்க இதை’ என்று கேட்டார் ரஜினி. ‘உங்க ராகவேந்திரர்தான் ஸார் கொடுத்தார்’ என்று சொன்னேன்.

சுதா விஸ்வநாத்: உங்களை யாராவது கிரேஸி ஆக்கியிருக்கிறார்களா?

கிரேஸி மோகன்: பல பேர் ஆக்கியிருக்கிறார்கள். ஒரு சம்பவம் சொல்கிறேன். எனக்கு சோகமே பிடிக்காது. சோக ஸீன் பிடிக்கவே பிடிக்காது. வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் ஒரு ஸீன். எங்க அப்பா குணமானதைப் பார்த்து நான் அழ வேண்டும். எனக்குச் சுத்தமாக அழுகை வரவில்லை. ‘ஸீனை வேற மாதிரி மாத்திக்கலாம்’ என்றேன். கமல் வந்து ‘அதென்ன நாங்கள் எல்லாம் கஷ்டப்பட்டு அழுகிறோம். நீங்க மட்டும் அழ மாட்டேன் என்றால் எப்படி? நீங்கள் அழுதுதான் ஆகணும்’ என்று சொல்லிட்டார். அப்புறம் சினேஹா வந்து, என் கண்ணுலே கிளிஸரின் ஊத்தி விட்டாங்க. எனக்கு அப்போதும் அழுகை வரவில்லை. எல்லோரும் அழுகிற மாதிரி நடிப்பார்கள். நான் அழுகிற மாதிரி நடிப்பதுபோல் நடித்தேன். ‘ஷாட்’ முடிந்ததும் யூனிட்டே கை கொட்டிச் சிரித்தது.

ஹரித்ராதேவி வைத்தியநாதன்:உங்கள் நிஜ வாழ்க்கையில் நடந்த ஏதாவது ஒரு ஹ்யூமர் சொல்லுங்களேன். எங்களுக்குத் தெரியாத சம்பவமாக, அதாவது, இதுவரை பேட்டியில் சொல்லாத சம்பவமாகச் சொல்லுங்கள்.

கிரேஸி மோகன்: சம்பவம் சொல்வேன். நீங்க போடுகிற கண்டிஷன்படி சொல்றதுதான் கஷ்டம். தீபா வளிக்குத் தீபாவளி பத்திரிகை நிருபர் வந்து, ‘உங் களால் மறக்க முடியாத தீபாவளி பற்றிச் சொல்லுங்க’ன்னு கேட்பார்கள். வருஷா வருஷம் மறக்க முடி யாத தீபாவளியைப் பற்றி எப்படிச் சொல்ல முடியும்? உண்மையிலேயே எனக்கு மறக்க முடியாத தீபாவளி என்று சொல்ல வேண்டும் என்றால் 1952 அக்டோபர் 16ஆம் தேதி வந்த தீபாவளிதான். ஏனென்றால் அது என் பிறந்த நாள். ஆக, எல்லோருக்கும் என் வயசு தெரிந்து விட்டது. சரி, பரவாயில்லை…. (வந்திருந்த வாசகிகளைக் கைகாட்டி) நான் என்ன ஹரித்ரா தேவியா, சுதா விஸ்வநாத்தா, மீனாட்சியா, வயதை மறைக்க? (சிரிப்பு). நான் இப்போது ஸீனியர் ஸிட்டிஸன். இதில் ஒரு வசதி என்னவென்றால், இப்போது ரயிலில் லோயர் பெர்த் ஈஸியா கிடைக்கிறது.

எஸ். ரமேஷ்: நாடகம் நடிக்கும்போது காமெடி சம்பவம் நடந்ததுண்டா?

கிரேஸி மோகன்: ஒரு முறை என் டிராமாவில் எனக்குப் பொண்டாட்டியாக நடிக்கிற பெண் வரவில்லை. என்ன செய்கிறதுன்னுகுழம்பி நின்றபோது, எங்கள் டிராமாவுக்கு ரெகுலராக வருகிற ஒரு தம்பதியைப் பார்த்தேன். அவர்களிடம் போய், இன்றைக்கு ஒரு நாள், எங்கள் நாடகத்தில் நடிக்க முடியுமா என்று கேட்டேன். அந்தப் பெண்ணோட ஹஸ்பெண்ட் ஒரு ஆஜானுபாகுவான ஆள். ஆங்கிலப்பட ஹீரோ அர்னால்ட் மாதிரி உடம்பு. அவர் ‘சரி சரி, நடிச்சுட்டு வா’ என்றார். கட கடன்னுஅந்தப் பெண்ணுக்கு மேக்கப் போட்டு கொஞ்சம் கொஞ்சம் வசனத்தைச் சொல்லிக் கொடுத்து, ரெடி பண்ணினோம். வழக்கமாக அந்த டிராமாவில், நான் டாமினேட்டிங் ஹஸ்பெண்ட்டாக இருப்பேன். மனைவியை ‘வாடி மைதிலி, போடி மைதிலி’ என்று அதட்டுவேன். ஆனால், அன்றைக்கு ஸ்கிரீன் மறைவில் நிற்கிற அவரது கணவரைப் பார்த்து விட்டு, நாடகம் முழுக்க, ‘வாங்க மைதிலி, போங்க மைதிலி’ன்னு சொல்லி நடித்தேன். நடித்தேன்னு சொல்லக் கூடாது. அன்னைக்கு வீட்டிலே இருக்கிற மாதிரியே, மேடையிலும் இருந்தேன்.

(வாசகர்கள் சிரிப்பு)

ஹரித்ராதேவி வைத்தியநாதன்:சாக்லேட் கிருஷ்ணா நாடகம் 777 முறை மேடையேறிய சாதனை, தானாக நிகழ்ந்ததா? அல்லது நீங்கள் இலக்கு வைத்துக் கொண்டீர்களா ?

கிரேஸி மோகன்: நாங்களாக நாடகத்தை நடத்துவதில்லை. சபா அழைத்தால் மட்டுமே நடத்திக் கொடுக்கிறோம். அப்படிப் பலரும் அழைத்து அழைத்துத்தான். சாக்லேட் கிருஷ்ணா 777 முறை மேடையேறியது. ஐநூறு முறை மேடையேறியதும் விழா எடுத்தோம். அப்போது, 700 முறை இது மேடையேறும் என்பது எங்களுக்குத் தெரியாது. பிறகு 700ஆவது காட்சிக்கு விழா எடுத்தோம். அப்போது 777 தடவை மேடையேறும் என்பது தெரியாது. இந்த நாடகத்திற்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்தால் ஆயிரம் தடவைக்கும் மேல் மேடையேறி, கின்னஸ் சாதனை படைக்கவும் வாய்ப்பிருக்கிறது. இது முழுக்க, முழுக்க ஆண்டவனின் அனுக்ரஹம்தான்.

வி.ரவிசங்கர்: நீங்கள் எழுதும் வசனங்களை டைரக்டர்கள் மாற்றும்போது, உங்களுக்குக் கஷ்டமாக இருக்குமா?


கிரேஸி மோகன்: அப்படிச் சொல்ல முடியாது. டைரக்டர் ஒரு ஸீன் சொல்வார். ‘ஹீரோ மீட்ஸ் ஹீரோயின் அட் அடையார் பார்க்’ என்று சொல்வார். நான் அந்தச் சூழலுக்கு ஏற்றவாறு ஃபலூடா, பன்னீர் பட்டர் மசாலா ஆகிய மெனுவை வைத்து ஏதாவது நகைச்சுவையாக டயலாக் எழுதுவேன். மறுநாள் டைரக்டர் திடீரென்று ‘அடையார் பார்க் லொகேஷன் கிடைக்கலை. பனகல் பார்க்கில் ஷூட்டிங்’ என்பார். அப்போது அந்தச் சூழலுக்கு ஏற்ற மாதிரி ‘மாங்காய் பத்தை, மிளகாய் பொடி, கடலை பர்பி‘ன்னு ஏதாவது மாற்றித்தான் ஆகவேண்டும். இது சகஜம்.

ஆர். மீனாட்சி: நீங்கள் உலக நாடுகள் பலவற்றில் நாடகம் நடத்தியிருக்கிறீர்கள். உங்களுக்கு நாடகம் நடத்தப் பிடித்த நாடு எது?

கிரேஸி மோகன்: அமெரிக்காவைச் சொல்லலாம். அங்கு நான் 200 ஷோ நடத்தியிருக்கிறேன். நல்ல தமிழைக் கேட்கவும், ஆடியோ, வீடியோ எல்லாம் அலுத்துப் போய், காட்சிகளை நேரே பார்க்கவும் ரொம்பஆர்வமாக வருவார்கள். ஒரு சின்ன நகரத்தில் நாடகம் போட்டால் கூட, வெவ்வேறு ஊர்களிலிருந்து கார் எடுத்துக் கொண்டு, பல மணி நேரம் டிராவல் பண்ணி வருவார்கள். அதற்காக, மற்ற நாட்டு ரசிகர்களை நான் குறைத்துச் சொல்லவில்லை. ஒன்றைச் சொல்ல வேண்டும். எனக்கு வெளிநாட்டுக்குப் போவதென்றாலே பிடிக்காது. ‘ஹோம் சிக்’ வந்து விடும். எனக்கு மாம்பலம் போனாலே ‘ஹோம் சிக்’ வந்து விடும். அதனால்தான் பேட்டியை துக்ளக் ஆஃபீஸில் வைத்துக் கொள்ள வேண்டாம். வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம்’ என்று சொன்னேன். என்னைச் சிலர் கிணற்றுத் தவளை என்று கூடச் சொல்லலாம். நான் கபாலி குளத்து மீனாகவே இருந்து விட்டுப் போகிறேன்.

ஹரித்ராதேவி வைத்தியநாதன்:உங்களுக்கு வாரிசு என்று யாரைச் சொல்வீர்கள்?

கிரேஸி மோகன்: கல்யாணம் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம். அது குடும்ப வாரிசு. ஆனால், கலை வாரிசை நாமாக உருவாக்க முடியாது. அதற்கு வாரிஸத்தில் (தாமரையில்) இருக்கிற சரஸ்வதியின் அனுக்கிரஹம் வேண்டும். இப்போதைக்குச் சொல்ல வேண்டும் என்றால், என் தம்பி பாலாஜிதான் எனக்கு வாரிசு

எஸ்.ரமேஷ்: உங்கள் அனுபவங்களைப் புத்தகமாக எழுத வேண்டும் என்கிற எண்ணம் உண்டா?

கிரேஸி மோகன்: டிராமா பற்றிக் கண்டிப்பாக ஒரு புத்தகம் எழுத வேண்டுமென்று இருக்கிறது. ஆனால், எப்போது அது நடக்குமோ தெரியவில்லை. திட்டமிடவில்லை இன்னும்.

ஜி. குப்புசாமி: கதைக்கான கருவை எங்கிருந்து எடுக்கிறீர்கள்?

கிரேஸி மோகன்: எல்லோரது மனதிலும் கரு இருக்கும் ஸார்! அதைக் கண்டுபிடித்து அதற்கு உருக் கொடுக்கிறது தான் வித்தை. ‘சாக்லேட் கிருஷ்ணா’ கதையை நான் 25 வருஷமாகப் பாலாஜியிடம் சொல்லிக் கொண்டு இருந்தேன். அதற்கு உருக் கொடுத்தது சமீபத்தில்தான். இந்தக் கடவுள் மனிதன் சந்திப்பு என்பது புதிய விஷயமில்லை. புதுமைப்பித்தன், சோ, வாலி என்று எத்தனையோ பேர் அந்தந்தக் காலகட்டத்திற்கு ஏற்றவாறு எழுதி வெற்றி பெற்றார்கள். இப்போதைய டிரெண்டுக்கு ஏற்ப நான் எழுதினேன். இந்தக் கடவுள் மனிதன் சந்திப்பு கருவும், மாமியார் மருமகள் கரு போல் சாகாவரம் பெற்றது. அதற்கு எப்படி உருக் கொடுக்கிறோம் என்பதையொட்டியே வெற்றி அமையும்.

சுதா விஸ்வநாத்: உங்களுக்குப் பிடித்தது மேடையா, வெள்ளித்திரையா?

கிரேஸி மோகன்: மை லவ் இஸ் ஸ்டேஜ். நாடகம் மூலமாகத்தான் என்னை பாலசந்தர் கூப்பிட்டார். நாடகம் இல்லைன்னா கிரேஸி மோஹன் இல்லை. கமல் ஸார் கூப்பிட்டது கூட நாடக மோஹனைத்தான். ரஜினி ஸாரும் நாடக மோஹனைத்தான் வசனம் எழுத அழைத்தார். எனவே, மேடைதான் எனக்கு முதல் சாய்ஸ்.

வி.ரவிசங்கர்: நாடகத்தில், பிடிக்கலை என்றால் அல்லது ரெஸ்பான்ஸ் இல்லையென்றால் காட்சிகளை, வசனங்களை மாத்திக்கலாம். இது தவிர, நாடகத்திற்கும், சினிமாவிற்கும் என்ன வித்தியாசம்?

கிரேஸி மோகன்: நாடகம் வீட்டுச் சாப்பாடு. சினிமா கல்யாணச் சாப்பாடு. வீட்டுச் சாப்பாட்டில் நமக்குப் பிடிச்சதையும், வர்றவங்களுக்குப் பிடித்ததையும் செய்தால் போதும். கல்யாணச் சாப்பாட்டில் சேட்டு குடும்பம் வரலாம், சர்தார்ஜி வரலாம், குழந்தைகள் வரலாம். எனவே, எல்லோருக்கும் பொதுவாகப் பிடிக்கிற மாதிரி ஒரு மெனு போடணும். சினிமாவில் நான் ஒரு அங்கம். ஒரு ஹீரோ இருப்பார், ஒரு டைரக்டர் இருப்பார், ஒரு இளையராஜா இருப்பார், ஒரு பி.சி.ஸ்ரீராம் இருப்பார், கூடவே நானும் இருப்பேன். ஆனால், நாடகத்தில் நான்தான் பிரதானம். இரண்டாவது ‘ரோ’வுக்குப் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு, மேடையில் நடிக்கிற யார் முகமும் தெளிவாகத் தெரியாது. அவர்களை ரசிக்க வைக்க வேண்டியது எனது வசனங்கள்தான்.

ஆர். மீனாட்சி: உங்களுக்குப் பிடித்த காமெடி நடிகர் யார்?

கிரேஸி மோகன்: நாகேஷ். அதற்குப் பிறகு கவுண்டமணி.

ஹரித்ராதேவி வைத்தியநாதன்:ஆர்.எஸ்.மனோகர் மாதிரி பிரம்மாண்டமான செட்களுடன் இனி டிராமாக் கள் போட முடியாதா

கிரேஸி மோஹன்: பின்னணியில் பனி பெய்கிறது என்று நான் எழுதி விடுவேன். ஆனால், பாலாஜியும், காந்தனும் பனிக்கு எங்கே போவார்கள்? இன்றைக்கு, பல்வேறு கவலைகளுக்கிடையில் நாடகம் பார்க்க வருகிறார்கள். அவர்களைச் சிரிக்க வைத்து அனுப்பினால் போதும்.

ஜி. குப்புசாமி: இப்போது சினிமாத் துறையில் பேய்ப் படங்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது. உங்களுக்கு பேய் டிராமா போடும் எண்ணம் உண்டா?

கிரேஸி மோகன்: ரசிகர்கள் பேய்த்தனமாகச் சிரித்தால் போதும். எங்கள் அடுத்த நாடகமும் சாக்லேட் கிருஷ்ணாவின் பார்ட்2 மாதிரிதான் இருக்கும். ‘கூகுள் கடோத்கஜன்’ என்கிற அந்தப் புது நாடகம், வருகிற செப்டம்பர் 14ஆம் தேதி அரங்கேறுகிறது.

வி.ரவிசங்கர்: நீங்கள் மிகப் பெரிய சிவாஜி ரசிகர் என்பது தெரியும். ஆனால், சிலர் சிவாஜியை ‘ஓவர் ஆக்டிங்’ என்கிறார்களே?

கிரேஸி மோகன்: அவர்களிடம் சொல்லுங்கள். சிவாஜி ஓவர் ஆக்டிங் கிடையாது. சிவாஜிக்குப் பிறகு ஆக்டிங் ஓவர் என்பதுதான் உண்மை.

ஆர். மீனாட்சி: நாடகங்களில் கருத்துச் சொல்ல முடியாதா?

கிரேஸி மோகன்: நீங்கள் கேட்கிறதாக இருந்தால் இங்கேயே சொல்கிறேன். நாங்க அக்னி கோத்திரம். அக்னிதான் எங்களுக்குத் தெய்வம். வீட்டிலேயே அக்னி வளர்த்துச் சாமி கும்பிடுவோம். எங்கள் தாத்தாவெல்லாம் கோவிலுக்கே போக மாட்டார். கேட்டால், ‘அங்க நாலு பேரு, நாலு விதமா வருவா. அவாளத் தொட்டா தீட்டு’ன்னு சொல்வார். இன்று அதெல்லாம் மாறி விட்டது. மலையாளத்தில் கொட்டாரக்கரா நடித்த படம் ஒன்று இருக்கு. ‘பிராமணனாகப் பிறந்தேன்; பிராமணனாக வாழ்ந்தேன். பிராமணனாகத்தான் சாவேன்’ என்பார். இறுதியில், அவர் இறந்த பிறகு, பிராமணர் அல்லாத நான்கு பேர்தான் அவரைத் தூக்கிச் செல்லும் சூழல் அமையும். அதனால் மனிதர்களில் வேற்றுமை பாராட்டக் கூடாது. இன்றைக்கு, உறவுகளுடன் தொடர்பே இல்லாமல் இருக்கிறோம். புருஷன் பொண்டாட்டி சேர்ந்திருந்தாலே ஜாயின்ட் ஃபேமிலி என்றாகி விட்டது. அத்தை, மாமாவை முதியோர் இல்லத்துக்கு அனுப்பிவிட்டு, பக்கத்து வீட்டுக்காரர்களை அங்கிள், ஆன்ட்டி என்று கூப்பிடும் பழக்கம் வந்து விட்டது. இதெல்லாம் மாற வேண்டும். கருத்து போதுமா?

தொகுப்பு : எஸ்.ஜே. இதயா,
படங்கள்: பேஜர் கிருஷ்ணமூர்த்தி

சந்தித்த வாசகர்கள்
ஹரித்ராதேவி வைத்தியநாதன், சென்னை
(குடும்பத் தலைவி)
ஜி.குப்புசாமி, சென்னை
(அஞ்சல்துறை)
ஆர்.மீனாட்சி, சென்னை
(குடும்பத் தலைவி)
எஸ்.ரமேஷ், சென்னை
(சுயதொழில்)
வி.ரவிசங்கர், சென்னை
(தென்னக ரயில்வே)
சுதா விஸ்வநாத், சென்னை
(குடும்பத் தலைவி)
இந்த வார வி.ஐ.பி.

பெயர்: கிரேஸி மோகன்
பணி : பிரபல கதை வசனகர்த்தா.
சிறப்பு : ஏராளமான நாடகங்களை எழுதி, அதில் நடித்து வருபவர். சினிமா கதாசிரியர் மட்டுமின்றி சினிமாக்களிலும் நடித்துள்ளார். சிறந்த ஓவியர். வெண்பாக்கள் எழுதும் கவிஞரும் கூட.

 

Advertisements

One thought on “2-நான் அழுதபோது யூனிட்டே சிரித்தது! – கிரேஸி மோகன்

  1. D. Chandramouli September 10, 2015 at 9:26 AM Reply

    Crazy Mohan and troup came to Jakarta recently at the invitation of Indonesian Tamil Sangham and enacted back to back two of their dramas, one of which was Chocolate Krishna. It was a housefull show and a grand success. We all thoroughly enjoyed Mohan’s speech as also the dramas. Look forward to his next venture, “Google Gadothgajan”. In this interview, Mohan’s reply on Sivaji’s ‘overacting’ that after Sivaji, acting was over, was quite apt. Hopefully, Mohan will create more stories for Kamal as the pair has been proved successful, with humor at its best.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s