1-நான் வி.ஐ.பி. இல்லை, வெறும் வி.எஸ்.பி.! – கிரேஸி மோஹன்


பிரபல கதை வசனகர்த்தா கிரேஸி மோகன் ‘கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ என்ற நாடகம் மூலம் பிரபலமானவர் கிரேஸி மோஹன். இப்போது நாடகத்தில் மட்டுமல்லாமல் சினிமாவிலும் பிரபலம். தொடர்ந்து நடித்தும் வருகிறார். அவரது வீட்டில் ‘துக்ளக்’ வாசகர்கள் அவரை சந்தித்துப் பேசினார்கள். உரையாடலின் முக்கிய பகுதிகள் இங்கே:

(வாசகர்கள் ஒவ்வொருவராக தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் கிரேஸி மோஹன்.)

கிரேஸி மோகன்: நான் ஒரு ஹவுஸ் ஹஸ்பண்ட். (வாசகர்கள் சிரிப்பு). என் வொய்ஃப் என்னை டென் பை டென்னுதான் கூப்பிடுவா. எப்பவும் என் வீட்டு மாடியிலே உள்ள 10X10 ரூமில்தான் இருப்பேன். அங்க உட்கார்ந்துதான் தினமும் எழுதுவேன். நான் ஒரு எழுத்தாளர்னுதான் உங்க எல்லோருக்கும் தெரியும். ஆனால், அடிப்படையில் நான் ஒரு ஓவியர். நிறைய ட்ராயிங் பண்ணியிருக்கேன். (சிலவற்றைக் காட்டுகிறார்.) அப்புறம் கவிதை எழுதுவேன். அதற்கப்புறம்தான் எழுத்தாளர்.

ஹரித்ராதேவி வைத்தியநாதன்:நீங்கள் எப்படி ஸார் கலைத் துறைக்கு வந்தீங்க?


கிரேஸி மோஹன்: நான் எஞ்ஜினியரிங் படிச்சுட்டு சுந்தரம் க்ளேட்டனில் வொர்க் பண்ணிட்டு இருந்தேன். நான் வேலையை விட்டதுக்கு மெயின் காரணம் சினிமா ஆசையெல்லாம் கிடையாது. நாய் மேல் உள்ள பயம்தான். நைட் ஷிஃப்ட் முடிச்சிட்டு வீட்டுக்கு வருவேன். ஜெமினி மேம்பாலத்தில் இருந்து ஸ்டெல்லா மேரீஸ் வரை ஒரு நாய்க்கூட்டம் துரத்திட்டு வரும். பிறகு அங்கே இருந்து ரிலே ரேஸ் மாதிரி, அடுத்த நாய் க்ரூப் மியூஸிக் அகாடமி வரைக்கும் துரத்திட்டு வரும். இதுக்குப் பயந்தே நான் வேலையை விட்டேன். வேலையை விடுறதுக்கு முன்னாடியே பாலசந்தர் ஸாரோட பழக்கம் எனக்கு கிடைச்சது. அவர் என்னோட நாடகத்தைப் ‘பொய்க்கால் குதிரை’ என்ற பெயரில் படமாக எடுத்தார். அதுக்கப்புறம் முக்தா ஸ்ரீனிவாசன் ‘கதாநாயகன்’ என்ற படத்தை எடுத்தார். அதுக்கு வசனம் எழுதுற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அது முதல்தான் சினிமா கதாசிரியர் ஆனேன். அந்தப் படம் பெரிய ஹிட்.


இந்த சினிமா, ட்ராமாவுக்கெல்லாம் வர்றதுக்கு முன்னாடி எனக்கு பத்திரிகையில் வேலை பார்க்கணும்னு ரொம்ப ஆசை. ஆனந்த விகடனில் நிறைய எழுதியிருக்கேன். நாம் எழுதுறதைப் பிரின்ட்டில் பார்க்குற சுகமே தனிதான். ‘கே.பி.டி. சிரிப்பு ராஜா’ என்றொரு சிரிப்புச் சரித்திர தொடரை விகடனுக்கு எழுதினேன். இப்போ வந்த ‘இம்சை அரசனுக்’கெல்லாம் அதுதான் முன்னோடி. விகடன் எம்.டி., பாலசுப்ரமண்யன் தன் டேபிளுக்கு வர்ற எல்லா மேட்டருக்கும் சூப்பர், சுமார் என்று கமென்ட் போட்டு அனுப்புவார். நான் என் மேட்டரை எழுதிக் கொடுத்துட்டு, நைட் 2 மணிக்கு மதனைப் பார்த்து பாலசுப்ரமண்யன் என்ன கமென்ட் போட்டிருக்கார் என்று பார்க்கப் போவேன். அவ்வளவு க்யூரியாஸிட்டி. என்னுடைய அந்தத் தொடருக்கு மதன்தான் படம் போட்டார். வேறொருவர் எழுதிய தொடருக்கு மதன் படம் போட்டது அந்த ஒரு தொடருக்குத்தான். அப்புறம் சினிமா பற்றி சொல்லணும்னா கமல்ஸாருடன் எனக்கு அறிமுகம் கிடைத்த பிறகுதான், சினிமாவில் நான் மிகப் பிரபலமானேன்.

எஸ். ரமேஷ்: ஆமாம். சுமார் பத்து படங்களில் கமலுடன் சேர்ந்து கலக்கி இருப்பீர்கள். எப்படி இப்படி ஒரு கூட்டணி அமைந்தது?


கிரேஸி மோகன்: வெறும் சினிமாக்காரர்களுடன் பணிபுரிவதை விட, நண்பர்களுடன் பணிபுரியும் போது, அதில் ஒரு முழு ஈடுபாடு கிடைக்கும். அந்த நட்பு எனக்கும் கமல் ஸாருக்கும் இடையே இருந்த தால், அது சிறந்த கூட்டணியாகத் திகழ்ந்தது. நான் கிண்டி எஞ்ஜினியரிங் காலேஜில் படிக்கும்போது, ‘கிரேட் பேங்க் ராபரி’ன்னு ஒரு ஸ்கிரிப்ட் எழுதி, நாடகம் போட்டேன். அந்த நாடகத்துக்கு எனக்கு பெஸ்ட் ரைட்டர் அண்ட் ஆக்டர் அவார்டு கிடைச்சது. அதை அன்று எனக்கு வழங்கியது கமல் ஸார் தான். பிற்பாடு ‘அபூர்வ சகோதரர்கள்’தான் நான் அவர் கூட வொர்க் பண்ணின முதல் படம். நான் வெறும் ட்ராமா மோஹனாக இருந்தபோது, வெளியூர் ட்ராமா ஒன்றுக்குப் போவதற்காக அவசர அவசரமாக ஸ்கூட்டரில் துணிகளை அள்ளிக் கொண்டு இஸ் திரி வண்டியைத் தேடிப் போனேன். ஒரு மரத்தடியில் நின்ற இஸ்திரிக்காரனிடம் துணியைக் கொடுத்துவிட்டு காத்திருந்தபோது, பக்கத்திலிருந்த கல்லறையிலிருந்து ஒரு உருவம் என்னை ‘வா வா’ என்று அழைத்தது. கல்லறையில் இருந்து ஒரு உருவம் கூப்பிட்டால் எப்படி இருக்கும்? திகிலோடு உன்னிப்பாகக் கவனித்த போதுதான், அது கமல் ஸார் என்று தெரிந்தது. உடனே அவரைப் பார்க்கப் போனேன். ‘சத்யா’ பட ஷூட்டிங் நடந்துக் கொண்டிருந்தது. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள். எங்கள் பழக்கமே சுடுகாட்டில் தான் ஆரம்பித்தது.

என் நண்பர் மௌளீஸ் ராமபத்ரன் திருக்குறள் நிறையப் படித்தவர். அவர் எங்கிட்ட அடிக்கடி சொல் வார். ’மோகன் நீ என்ன கதை எழுதினாலும் அதுலே ஒரு திருக்குறளைக் கொண்டு வரணும்’ என்று. நான் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் கமல் ஸார்கிட்ட டயலாக் சொன்ன முதல் ஸீன், அந்த குள்ளக் கமல் டெல்லி கணேஷை கொல்கிற ஸீன். அப்போ டெல்லி கணேஷ் சொல்லுவார்: ‘தம்மாத்துண்டா இருக்கிற நீதான் என்னைக் கொல்லப் போறியா?’. அதுக்கு குள்ளக் கமல் பதில் சொல்லுவார்: ‘திருக்குறள் கூட சின்னதுதான். அதுலே எவ்ளோ விஷயம் இருக்குது தெரியுமா’ன்னு கேட்பார். இந்த டயலாக்கை கேட்டதும், கமல் ‘சூப்பர் மோஹன்’ என்று பாராட்டினார். அப்போது முதல் கமல் எனக்கு ரொம்ப நெருக்கமாயிட்டார்.

சுதா விஸ்வநாத்: எழுத்தாளர் சுஜாதாவுக்கும், உங்களுக்கும் கூட அது மாதிரி ஒரு ஒத்த அலைவரிசை இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கேன். எழுத்தாளர் சுஜாதா பற்றிச் சொல்லுங்களேன்.


கிரேஸி மோகன்: சுஜாதாவுக்கும் எனக்கும் 35 வருடப் பழக்கம். அவர் பெங்களூரில் வேலை பார்க்கும்போது என் ட்ராமா பெங்களூரில் நடந்தால், தவறாமல் பார்க்க வருவார். ட்ராமா முடிந்து, நைட் 10 மணிக்குப் பேச ஆரம்பித்தால், அதிகாலை 2 மணி வரை பேசுவோம். ‘இந்த ட்ராமாவில் நீங்க ‘அப்படி பண்ணியிருக்கலாம், இப்படி பண்ணியிருக்கலாம்’ என்று ஒரு புது ட்ராமாவே சொல்லிட்டுப் போவார். சுஜாதா இஸ் ரியல்லி கிரேட். அவர் சென்னைக்கு வந்த பிறகு வாரத்துலே இரண்டு நாள் அவர் வீட்டுக்குப் போயிருவேன். அவருடைய மறைவு இந்த சமூகத்திற்கு நஷ்டம். எம்.எஸ். விஸ்வநாதன் ஆகட்டும்; வாலி ஆகட்டும்; அப்துல் கலாம் ஆகட்டும்; சுஜாதா ஆகட்டும். இவர்கள் எல்லாம் வெறும் இசையமைப்பாளர், கவிஞர், ஜனாதிபதி, எழுத்தாளர் மட்டும் இல்லை. இந்த தேசத்தின் சொத்துகள். அவர்களுடைய மறைவு இன்றைய பேரக் குழந்தைகளின் இழப்பு.

ஒருமுறை மதி நடத்திய புத்தக வெளியீட்டு விழாவில், அப்துல் கலாம், ஜெயகாந்தன், மனோரமா ஆச்சி என்று பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருந்தார்கள். பெரியவா இருக்கப்ப வாண்டுகள் விஷமம் பண்ணாம, அந்தண்ட போயிடணும்னு சொல்வாங்களே, அந்த மாதிரி நம்மளைச் சொல்லிடுவாங்களோன்னு பயந்துக்கிட்டே நான் மேடைக்குப் போனேன். ஆனால், அப்துல் கலாம் என் கன்னம் பிடித்து கிள்ளி ‘ஹை கிரேஸி’ என்றபோது நெகிழ்ந்து போய் விட்டேன். சரி சுஜாதாவுக்கு வர்றேன். ஒருநாள் கடைக்குப் போயிட்டு நான் வீட்டுக்குத் திரும்புற வழியிலே சுஜாதாவின் வீட்டைப் பார்த்தேன். கீழே ஆம்புலன்ஸ் நின்றது. உடனே நான் வண்டியை நிறுத்திட்டு மேலே ஓடினேன். சுஜாதா, மூச்சிறைத்துக் கொண்டிருந்தார். அவரது மகன் அவரை பிரபல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவிருந்தார். அந்த மருத் துவமனை ஆம்புலன்ஸில் டிரைவர் மட்டும் ஸ்ட்ரெச்சருடன் இருக்கிறார். மறுபுறம் தூக்க ஆளில்லை. அன்றைக்கென்று பார்த்து சுஜாதா இருந்த அப்பார்ட்மென்டில் லிஃப்டும் வேலை செய்யவில்லை. அவரது வீடோ மூணாவது மாடியில். கடைசியில் சுஜாதாவை ஒரு சேரில் அமர வைத்து, ஆம்புலன்ஸ் டிரைவர், சுஜாதா மகன், நான் மூவரும் சேர்ந்து படிகளில் இறக்கிக் கொண்டு வந்தோம். அவரது மறைவு எனக்குப் பெரும் வருத்தத்தைக் கொடுத்தது.


நம்ம ஊரில் எழுத்தாளர்களை நாம மதிக்கிறதே கிடையாது. இது எனக்கு மிகப் பெரிய வருத்தம். அமெரிக்காவில் சுஜாதாவில் பாதிகூட தேற மாட்டார் ஒரு எழுத்தாளர். அவர் வீட்டு மொட்டை மாடியில் ஹெலிகாப்டர் தளம் இருக்கு. வீட்டில் ரெடியானதும் மொட்டை மாடிக்குப் போய் ஹெலிகாப்டரில் ஏறி வெளியே கிளம்புவார். இங்குள்ள ஒரு எழுத்தாளனுக்கு அந்த அந்தஸ்து வருமா? எழுத்தாளனை ஒரு சமூகம் கொண்டாடணும். நான் ஏதோ கமல்ஹாசனின் அரவணைப்பைப் பெற்றதால், எல்லோருக்கும் செல்லப்பிள்ளை ஆகிவிட்டேன். எல்லா எழுத்தாளர்களுக்கும் இப்படி சந்தர்ப்பங்கள் வாய்ப்பதில்லை. குறிப்பாக கோடம்பாக்கத்தில் வெற்றி பெறுவது பெரும் கஷ்டம்.

வி.ரவிசங்கர்: நீங்கள் நாடகத்துறைக்கு வந்த போது, இங்கு பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருந்தனர். அவர்கள் மத்தியில் நீங்கள் எப்படி உங்களை நிலை நிறுத்தி கொண்டீர்கள்?


கிரேஸி மோகன்: சின்ன வயதில் எங்க அப்பா சோ நாடகத்துக்கு பாஸ் வாங்கிக் கொடுப்பார். நானும் போவேன். சோ ஸ்டேஜுக்குள்ளே வரும்போது தண்டர் க்ளாப்ஸ் வரும். சோ எனக்கு ஒரு ஆதர்சம். சோ, மௌலி, விசு, கோமல் ஸ்வாமிநாதன், ஆர்.எஸ். மனோகர், வி.எஸ் ராகவன் இவர்களெல்லாம் எனக்குப் பிடித்தமானவர்கள். இவர்களெல்லாம் மேடையில் அதிசயம் நிகழ்த்தியவர்கள். நான் காலேஜ் டைம்லே நிறைய நாடகம் போடத் துவங்கினேன். என் தம்பி மாது பாலாஜி விவேகானந்தா கல்லூரியில் படிச்சான். அவன் நாடகம் போட நான் ஸ்க்ரிப்ட் எழுதித் தருவேன். ஆனால் அதை அவன் பேரில் போட்டுக்குவான். கல்லூரி ஸ்டூடன்ட் பேரில் இருந்தால்தானே கல்லூரி போட்டியில் கலந்துக்க முடியும்? அந்த ட்ரூப்பில் நடிச்ச பல பேர்தான் இன்னைக்கும் எங்க கூட நடிச்சிட்டு இருக்காங்க.

அப்போ குமுதம் இதழில் இளைய தலைமுறை என்ற பகுதியில் நானும், தம்பியும் இருக்குற புகைப் படத்தைப் போட்டாங்க. அப்போ சின்னதாகப் பிரபலம் ஆனேன். காலேஜ் முடிச்சதுக்கப்புறம் ‘கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ எழுதி முடித்த பிறகு, பிரபல நாடக ஜாம்பவான்கள் சிலர் முன் வாசித்து காட்டினேன். நான் முடித்ததும் ஒரு பிரபல எழுத்தாளர் என்னை தனியே அழைத்துப் போய், ‘எனக்கு எதுவும் புரியலை. ஒண்ணு இந்த ட்ராமா முதல் ஷோவோடு காலி. இல்லை இது சக்ஸஸ் ஆகிடுச்சுன்னா இனிமேல் இதுதான் ட்ராமா’ என்றார். இன்னைக்கு அதுதான் நடக்குது. பழைய சீரியஸ் ட்ராமாஸ் இப்போ இல்லை. இதுதான் ட்ராமான்னு ஆகிப் போச்சு. என்னோட ‘சாக் லேட் கிருஷ்ணா’ ட்ராமா 777 தடவை மேடை ஏறிடுச்சு. 500ஆவது ஷோ அமெரிக்காவில் பண்ணினோம், 700ஆவது ஷோ சிங்கப்பூர்லே நடந்தது. 777ஆவது ஷோவுக்கு கமல் வந்தார். அடுத்த ஷோ ‘கூகுள் கடோத்கஜன்’னு செப்டம்பர்லே பண்றோம்.

அப்புறம் காத்தாடி ராமமூர்த்திக்கு எழுதத் துவங் கியபோது கொஞ்சம் பக்குவம் வந்தது. அவருக்கு எழுதிய ‘அய்யா அம்மம்மா’ பெரும் வரவேற்பைப் பெற்றது. மாமியார் – மாட்டுப்பெண் தகராறை வச்சு எழுதினேன். இந்த மாமியார் – மாட்டுப்பெண் தகராறு கதை சாகாவரம் பெற்றது. என்னைக்கும் ஸ்திரமானது. இன்னைக்கு டி.வி. சீரியல் எல்லாம் இந்த தகராறை நம்பிதான் இருக்கிறது. 2 எப்பிஸோட் வர வேண்டிய சண்டையை 200 எப்பிஸோட் காட்டுறாங்க. டி.வி. சீரியலில் ஒருத்தன் செத்தால் அவன் பாடியை அடக்கம் பண்ண நூறு எப்பிஸோட் ஆகுது. இதுக்கு நடுவிலே பாடி வேற மாறுது – ஆக்டர் தகராறினால் (வாசகர்கள் சிரிப்பு). இந்த சீரியலை எத்தனை நாள் பார்க்காமல் விட்டுட்டு திரும்பப் பார்த்தாலும் புரியும், டாம் அண்ட் ஜெரி கார்ட்டூன் மாதிரி.

ஆர். மீனாட்சி: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும், ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள். உங்கள் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் பெண் யார்?


கிரேஸி மோகன்: எனது வெற்றிக்குப் பின்னாடி நிறைய பெண்கள் இருக்காங்க. தப்பா நினைக்காதீங்க. அது எங்க அம்மா, மனைவி, என் டீச்சர் ஜானகி. எனக்கு ஆறு வயசில் டீச்சராக வந்தவர் ஜானகி. எனக்கு அவர்தான் கிராமர் சொல்லிக் கொடுத்தார். நான் ஸ்கூல் படிக்கும் போதே என்னை ட்ராமாலே நடிக்க வச்சதும் அவர்தான். எனக்கு கட்டபொம்மன் வேஷம் போட்டு டயலாக் எல்லாம் சொல்லிக் கொடுத்து ஸ்கூல், ஸ்கூலாக போட்டிகளுக்கு அழைத்துச் சென்றார். எனக்குள் ட்ராமா என்ற விதையை அவர்தான் விதைத்தார் என்று நினைக்கிறேன். அதனால்தான் என் ட்ராமலே வர்ற எல்லா ஹீரோயின் பேரும் ஜானகி. சம்பளம் பேசுறதுக்கு முன்னாடியே எல்லார் கிட்டேயும் இந்தக் கண்டிஷனைச் சொல்லிடுவேன். சம்பளத்தை குறைத்தால் கூட தப்பில்லை. ஹீரோயின் பேரை மாத்தக் கூடாது என்று. அவருக்கு இப்போது 86 வயசு ஆகுது. பெங்களூரில் நல்லா சௌக்கியமா இருக்கார்.

ஜி. குப்புசாமி: எழுத்தாளரான நீங்கள் நடிகனானது எப்படி?


கிரேஸி மோகன்: நான் அடிப்படையில் எழுத்தாளன் தான். அபூர்வ சகோதரர்களுக்கு நான் டயலாக் எழுதியபோது, தினமும் ஷூட்டிங்கிற்குப் போவேன். அங்கு ஒருநாள் ஒரு சின்ன ரோலுக்கு நடிக்க வேண்டிய ஆர்ட்டிஸ்ட் வரவில்லை. உடனே கமல் ஸார் என்னை நடிக்க வைத்து விட்டார். கமல் ஸார் இந்த மாதிரி விஷப் பரீட்சைகள் எல்லாம் செய்வார். ‘மகளிர் மட்டும்’ படத்தின் திரைக்கதை, வசனத்தை நான் எழுதி முடித்ததும், கமல் ஸார் என்னையே டைரக்ட் பண்ண சொன்னார். நான் வேணாம்னு சொல்லிட்டேன். சினிமா டைரக்ஷன் என்பது சாதாரண விஷயம் கிடையாது. ஷங்கர், கே.எஸ் ரவிக்குமார் எல்லாம் அதிகாலையிலேயே செட்டுக்கு வந்துருவாங்க. ஆனால் எனக்கு காலை 9.30க்கு மேல் எழுந்துதான் பழக்கம். எனக்கு டைரக்ஷன் சரிப்பட்டு வருமா? ஒருமுறை சென்னை மேயர் சைதை துரைசாமிக்கிட்ட பேசிக் கிட்டிருக்கும்போது, ‘உங்களுக்கு சாதகமாக இரண்டு விஷயம் சொல்றேன். ஒண்ணு – நான் உதயசூரியனைப் பார்த்ததேயில்லை. இரண்டு – எனக்கு இரட்டை இலை பிடிக்கும். ஒண்ணு வெத்திலை; இன்னொன்னு புகையிலை’ என்றேன். நான் பலரிடம் அடிக்கடி சொல்வது – நான் வி.ஐ.பி. இல்லை. வெறும் வி.எஸ்.பி. வெற்றிலை சீவல் புகையிலை.

உரையாடலின் தொடர்ச்சி அடுத்த பதிவில்…


எஸ்.ஜே. இதயா

சந்தித்த வாசகர்கள்
ஹரித்ராதேவி வைத்தியநாதன், சென்னை
(குடும்பத் தலைவி)
ஜி.குப்புசாமி, சென்னை
(அஞ்சல்துறை)
ஆர்.மீனாட்சி, சென்னை
(குடும்பத் தலைவி)
எஸ்.ரமேஷ், சென்னை
(சுயதொழில்)
வி.ரவிசங்கர், சென்னை
(தென்னக ரயில்வே)
சுதா விஸ்வநாத், சென்னை
(குடும்பத் தலைவி)
இந்த வார வி.ஐ.பி.

பெயர்: கிரேஸி மோகன்
பணி : பிரபல கதை வசனகர்த்தா.
சிறப்பு : ஏராளமான நாடகங்களை எழுதி, அதில் நடித்து வருபவர். சினிமா கதாசிரியர் மட்டுமின்றி சினிமாக்களிலும் நடித்துள்ளார். சிறந்த ஓவியர். வெண்பாக்கள் எழுதும் கவிஞரும் கூட.

 

 

One thought on “1-நான் வி.ஐ.பி. இல்லை, வெறும் வி.எஸ்.பி.! – கிரேஸி மோஹன்

  1. nparamasivam1951 September 6, 2015 at 3:07 AM Reply

    நாடகத்தை போல, பேட்டியும் கல கல.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s