10-துக்ளக் வயது 45


இதன் முந்தைய பகுதி…

ஆசிரியர் சோ பேச்சின் தொடர்ச்சி:

ப்போது பன்னீர் செல்வம் இங்கு முதல்வராக இருக்கிறார். சில பேர் இங்கே கேட்கவில்லை என்றாலும், ‘துக்ளக்’கிற்கு அனுப்பும் கேள்வியிலும், வெளியிலும் என்னிடம், ‘பன்னீர் செல்வம் அரசு ஒரு செயல்படாத அரசாக இருக்கிறது’ என்கிறார்கள். நான் அவர்களிடம், ‘பன்னீர் செல்வம் இந்த 3, 4 மாதங்களில் செய்ய வேண்டிய எந்தக் காரியத்தை அவர் செய்யவில்லை? உதாரணத்துக்கு 2, 3 சொல்லுங்களேன்’ என்று கேட்டேன். அதற்கு, ‘அப்படிக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது; பொதுவாக, ஒரு சீஃப் மினிஸ்டர் இருக்கிற மாதிரியே இல்லை’ என்கிறார்கள். ஏன், அமைதியாக ஒருவர் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாதா? கவர்னர் ஆட்சி மாதிரி, ஒரு நிர்வாகம் நடந்து கொண்டிருக்கட்டுமே? அவர் மீது தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் கம்பி மேல் நடப்பது போல் நடக்க வேண்டும். தான் தான் முதல்வர் என்ற மாதிரியும் காட்டிக் கொள்ளக் கூடாது. அது ஆபத்து (சிரிப்பு, கைதட்டல்). அதே சமயத்தில், அரசாங்கத்தை நடத்தாமலும் இருக்க முடியாது. அதையும் பார்க்க வேண்டும். இப்படி அவர் மிகவும் நாசூக்காகச் செயல்பட்டு வருவதாகவே நான் நினைக்கிறேன் (கைதட்டல்).

அதே போல, ஜெயலலிதாவை நான் மிகவும் ஆதரிக்கிறேன் என்று துக்ளக் மீது ஒரு விமர்சனம் இருக்கிறது. துக்ளக்கே ‘நமது எம்.ஜி.ஆர்.’ பத்திரிகை மாதிரி ஆகிவிட்டது (சிரிப்பு) என்பது புகார். எந்தெந்த விஷயத்தில் ஜெயலலிதாவுடனும், அ.தி. மு.க. அரசுடனும் நான் மாறுபடுகிறேனோ அதை எல்லாம் எழுதி வந்திருக்கிறேன். இலங்கை பிரச்னையில், அ.தி.மு.க.வுக்கு நேர் எதிரான நிலை என் நிலை.

அன்னிய நேரடி முதலீட்டில் கம்யூனிஸ்ட்டுகள், காங்கிரஸ் மற்றும் குருமூர்த்தியின் சுதேசி ஜாக்ரன் மன்ச் எடுத்த நிலையைத்தான் அ.தி.மு.க.வும் எடுத்துள்ளது. அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. எதிர்த்து எழுதியுள்ளேன்.


கூட்டத்தின் ஒரு பகுதி….
அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று தி.மு.க. ஆட்சியில் நன்றாகக் கட்டியிருந்தார்கள். அதை மாற்ற வேண்டும் என்று இந்த அரசு கூறியபோது நான் எதிர்த்தேன். சட்ட சபையை மாற்றும் முடிவைச் சரி என்று சொன்னேன். ஏனென்றால், தி.மு.க. அரசு இந்தியன் ஆயில் டேங்க் மாதிரி ஒரு பில்டிங்கைக் கட்டியிருந்தது (சிரிப்பு, கைதட்டல்). அதை மாற்றியதில் தவறில்லை. ஆனால், லைப்ரரி ஒழுங்காக இருந்தது. அதன் மீது கை வைப்பதை எதிர்த்தேன்.

‘மின்சார நிலைமை இன்னும் சரியாகவில்லை; சரியாகி விடும், சரியாகி விடும்’ என்று சொல்லிக் கொண்டு, தி.மு.க. மீது பழி போட்டுக் கொண்டிருக்க முடியாது. இதைக் கவனிக்க வேண்டும். அதற்கு இந்த அரசு போதிய கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை என்று எழுதியிருக்கிறேன். சட்டம் ஒழுங்கு நிலைமை பற்றி எழுதியிருக்கிறேன்.

இன்னும் நான் என்ன செய்ய வேண்டும் என்று துக்ளக் அலுவலகத்தில் ஒரு விவாதம். இதை நான் கேட்டபோது, எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். பிறகு, ‘ஜெயலலிதா சப்போர்ட்னு ஒரு அபிப்ராயம் இருக்கிறது’ என்றார்கள். ‘ஜெயலலிதா என்றால் மென்மையாக விமர்சிக்கிறீர்கள்; கலைஞரை விமர்சிப்பது போல விமர்சிப்பதில்லை’ என்றார்கள். இதை நான் ஒப்புக் கொள்கிறேன். இது நான் ஏற்க வேண்டிய குற்றச்சாட்டு தான். ஆனால் அதற்கு ஒரு காரணம் உள்ளது. இப்போது அ.தி.மு.க.வுக்கு என்ன மாற்று?

ஜெயலலிதாவும் கூடாது; கலைஞரும் கூடாது; ஹெச். ராஜா வந்தால் சந்தோஷம்தான் (கைதட்டல், சிரிப்பு). ஆனால், நாம் சொல்வது நடக்கிற காரியமாகவும் இருக்க வேண்டும். அந்த மாதிரி யதார்த்த நிலையையும் கணக்கில் கொண்டு நான், எனது விமர்சனங்களைச் செய்கிறேன். அதில் பெரிய தவறு இருப்பதாக நான் கருதவில்லை. அதே சமயம், இப்படி ஒரு விமர்சனம் இருப்பதை நான் கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன். இது நான் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்தான். இந்த மாதிரி ஒரு அபிப்ராயத்தை வளர விடுவது நல்லது அல்ல. இம்மாதிரி ஒரு அபிப்ராயத்தை உருவாக்கி விட்டு, பிறகு நான் கூறும் கருத்துக்கள் எடுபடும் என்று எதிர்பார்ப்பதிலும் அர்த்தம் இல்லை. அதனால் இதை நான் மனதில் நிறுத்தி, துக்ளக்கின் போக்கை அமைத்துக் கொள்வேன்.

(அரங்கில் இருந்து, ‘இலங்கையில் ராஜபக்ஷ தோல்வி பற்றி’ என்று ஓரிருவர் குரல் எழுப்பினர்.)


‘ராஜபக்ஷ வெற்றி பெறுவார் என்று தான் நான் எதிர்பார்த்தேன். தமிழர் ஓட்டுக்களும், முஸ்லிம் ஓட்டுக்களும் அவருக்குக் கிடைக்காது என்பதை நானும் ஏற்றுக் கொண்டேன். ஆனால் சிங்களர்களே இவ்வளவு பேர் அவரை எதிர்ப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. இருந்தாலும் வெற்றி பெற்ற கட்சியின் அளவுக்கு, கிட்டத்தட்ட சமமான அளவு சிங்களர் வாக்குகள் ராஜபக்ஷவுக்கும் கிடைத்திருக்கிறது. அவருடைய குடும்ப ஆட்சி மற்றும் ஊழல் காரணமாக இந்த முடிவு வந்துள்ளது.

சிறிசேனா மட்டும் என்ன செய்யப் போகிறார்? அவருக்கு சிங்களர்கள் ஆதரவு வேண்டாமா? சொல்லப் போனால் ராஜபக்ஷவை விட இவ்விஷயத்தில் அவருக்குக் கூடுதல் கவலை இருக்கும். அதனால் தமிழர் பிரச்னையை அவர் எப்படிக் கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சிறுபான்மைத் தமிழர்களையும், முஸ்லிம்களையும் தாஜா செய்யும் வகையில் அவர் எல்லாம் செய்து விட முடியும். அதுவல்ல, இலங்கை அரசியல். சிங்களர்களின் ஆதரவை, ஓட்டுக்களைப் பெறும் வகையில்தான் அவர் செயல்படுவார். புத்த துறவிகளின் நிர்பந்தம் எல்லாம் வரும். இதை மனதில் கொண்டுதான் இலங்கையின் புதிய அரசை நாம் அணுக வேண்டும். சீனாவுடன் அவர்கள் மிகவும் நெருங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

“இங்கே ‘துக்ளக்’ அழைப்பை ஏற்று டி.ராஜா வந்திருக்கிறார். அவருக்குத் தெரியும். துக்ளக் வாசகர்களும் சரி, சோவும் சரி, நாம் கூறுவதைக் கேட்கப் போவதில்லை என்று அவருக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் அவர் இங்கு வந்திருப்பது, அவருடைய தன்னம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது (கைதட்டல்). டெலிவிஷன் சானல் விவாதங்களில் அவருடன் பங்கேற்றிருப்பது பற்றி இங்கு டி.ராஜா குறிப்பிட்டார். அந்த விவாதங்களில் 4 பேர் பங்கேற்றால், நாங்கள் மூன்று பேர் ஒரு கருத்தைக் கூறினால், நாலாவதாக கருத்துக் கூறும் இவர், வேறு விதமாகத்தான் கருத்துச் சொல்வார் (சிரிப்பு). நாலு பேரில் நாம் மைனாரிட்டியாக இருக்கிறோமே, 75 சதவிகிதம் நமக்கு எதிராக இருக்கிறதே என்று பார்க்க மாட்டார்.

இங்கு வந்துள்ள ஜவாஹிருல்லாஹ்வுக்கு, ‘நான் ஒரு பா.ஜ.க. ஆதரவாளன், ஆர்.எஸ்.எஸ். அனுதாபி’ என்பது தெரியும். தெரிந்தும் அவர் இங்கு வந்து, வாசகர்களிடையே தனது நிலையை, கருத்துக்களைச் சொல்ல வந்திருக்கிறார். அவருக்கும் என் நன்றி (கைதட்டல்).

ஹெச். ராஜாவுக்கு ஒரு நம்பிக்கை. ‘என்ன இருந்தாலும் இவர் (சோ) நம்ப ஆளுதான்’னு. அதே சமயம், எப்போது அவர்களிடம் (பா.ஜ.க.விடம்) இருந்து நான் மாறுபடுவேன் என்று அவருக்கும் தெரியாது; எனக்கும் தெரியாது. ஆகவே, அதையும் தெரிந்து அவர் இங்கு வந்திருக்கிறார். அவருக்கும் நன்றி. இவர்கள் மூவரும் வந்து விழாவைச் சிறப்பித்திருக்கிறார்கள். நீங்கள் அனைவரும் பல வேலைகளை விட்டு இங்கு வந்திருக்கிறீர்கள். அனைவருக்கும் நன்றி.”

(இதற்குப் பிறகு அனைவரும் தேசிய கீதம் பாட, விழா இனிதே நிறைவு பெற்றது.)

தொகுப்பு: எஸ்.ரமேஷ்
ஃபோட்டோ: சிவா
(துக்ளக் ஆண்டு விழா டி.வி.டி. வேண்டுவோர், 04424984050 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s