சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் என்ன? – சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் வி. மோஹன்


ந்திய அளவில் புகழ்பெற்ற சர்க்கரை நோய் நிபுணராகத் திகழ்பவர் டாக்டர் வி.மோஹன். நோயாளிகளுக்குச் சிகிச்சை தருவதோடு, ஏராளமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, பல புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்குத் தந்தவர். அவரை நமது வாசகர்கள் அவரது மருத்துவமனையில் சந்தித்து உரையாடினார்கள். அந்தக் கலந்துரையாடலின் தொகுப்பு இங்கே:

என்.ரகுநாத்: சர்க்கரை நோய் ஒரு நோயே அல்ல; அது ஒரு குறைபாடுதான் என்று சிலர் சொல்கிறார்கள். இந்த நோயைப் பற்றிக் கொஞ்சம் விளக்குங்களேன்.

டாக்டர் மோஹன்: இது டிஸீஸ் இல்லை; டிஸ்ஆர்டர் என்பது உண்மை தான். இந்தக் குறைபாடு உள்ளவர்கள் தங்கள் உணவுப் பழக்கத்தைக் கொஞ்சம் மாற்றி, உடற்பயிற்சிகள் மேற்கொண்டு 40, 50 வருடங்கள் வாழ முடியும். அப்படிப் பார்க்கும்போது அதை நோய் என்று சொல்ல முடியாதுதான். அதே நேரம் பத்து வருடங்களுக்குள் கண் போச்சு, கால் போச்சு, கிட்னி போச்சு என்ற நிலையை இந்தக் குறைபாடு ஏற்படுத்த முடியும் என்கிறபோது, இதை நோய் என்று சொல்வதிலும் தப்பில்லை. நீரிழிவு என்ற குறைபாட்டை, நோய் ஆக்காமல் பார்த்துக் கொள்வது நமது கையில்தான் இருக்கிறது.

நமது உடலில் கணையம் என்றொரு உறுப்பு இருக்கிறது. இதற்குள் ஆல்ஃபா, பீட்டா என்று பல்வேறு ஸெல்கள் உள்ளன. இதில் பீட்டா ஸெல் முக்கியமானது. கணையமே மிகச் சிறிய உறுப்பு. அதற்குள் வெறும் 5 சதவிகித செல்கள்தான் இந்த பீட்டா ஸெல்கள். பிறக்கும்போதே பாரம்பரிய ரீதியாக சர்க்கரை வியாதி வருமா, வராதா என்பது இதில் இம்பிரின்ட் செய்யப்பட்டு விடுகிறது. அப்பா, அம்மா இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்தால், நமக்கு அந்த நோய் வந்தே ஆகும். எந்த வயதிலும் வரலாம். ஆனால் வந்தே தீரும். பெற்றோரில் ஒருவருக்கு மட்டும் இருந்தால், வரும் வாய்ப்பு பாதியாகக் குறையும். சர்க்கரை நோயில் பலவகைகள் உள்ளன. இதில் டைப்1 என்பது குழந்தைகளுக்கு வருவது. ஒரு வயது, இரண்டு வயதிலேயே அவர்களுக்கு இந்த நோய் வந்து விடும். அதற்குக் காரணம் அந்த பீட்டா ஸெல்கள் ஏதேனும் ஒரு காரணத்தினால் பாதிக்கப் படுவதுதான். சில நேரங்களில் நம் உடலில் இருக்கும் ஆட்டோ இம்யூனிட்டி என்ற நல்ல விஷயமே தவறுதலாகச் செயல்பட்டு விடும். ரத்த வெள்ளை அணுக்கள், இந்த பீட்டா ஸெல்களை உடலுக்குக் கேடு விளைவிக்கும் ஸெல்கள் என்று தவறாகக் கணித்து, அந்தச் ஸெல்கள் மீது தாக்குதல் நடத்தும். இது போன்ற பல பிரச்னைகளால், சிறுவயதிலேயே இந்த நோய் வருகிறது.

டைப்2 என்பதுதான் சாதாரண சர்க்கரை நோய். இதுதான் இன்று 90 முதல் 95 சதவிகிதம் பேருக்கு உள்ள பிரச்னை. பரம்பரை ரீதியில் வருவது, உணவுப் பழக்கங்களால், உடல் உழைப்பு இல்லாததால், மன உளைச்சலால் வருவது ஆகியவை இந்த டைப் 2ல் அடங்கும். இதை நம்மால் தடுக்க முடியும். அதிகச் சர்க்கரை உள்ள அரிசி, மைதா உள்ளிட்ட உணவுகளைச் சாப்பிடும்போது கணையத்திலுள்ள பீட்டா ஸெல்கள் இன்ஸுலினைச் சுரந்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரையைத் தசைகளில் செலுத்தி எரித்து விடும். உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இந்த வேலைக்கு உதவும். நாம் அளவுக்கு அதிகமாக இது போன்ற உணவுகளைச் சாப்பிட்டு, தேவைக்கு அதிகமாக இன்ஸுலினைச் சுரக்க வைக்கும்போது, சிக்கல் துவங்குகிறது. போதுமான இன்ஸுலினை சுரக்க முடியாமல், கணையம் திணறிப் போகும். வழக்கமான இன்ஸுலின் சுரப்பும் குறைந்து போகும். எனவே புரதம், நார்ச்சத்து, மினரல்ஸ் அதிகம் உள்ள பயறு வகைகள், காய்கறிகள் ஆகியவற்றை உண்ண வேண்டும். இவற்றிற்கெல்லாம் இன்ஸுலின் தேவையே இல்லை. அப்படியல்லாமல் அதிகப்படியான சர்க்கரையை ரத்தத்தில் நாம் சேர்த்துக் கொள்வதால், இந்த நோய் மும்முரமடைகிறது. இந்த டைப் 2 சர்க்கரை நோய் பற்றி நாம் அதிகம் பேசினால் பல பேருக்கு உதவியாக இருக்கும்.

என்.கிருஷ்ணமூர்த்தி: மருந்துகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. குறைந்த விலையில் ஏழைகளுக்கும் எளிதாகக் கிடைக்கும் விலையில் மருந்துகள் வருவதற்குச் சாத்தியம் இல்லையா?

டாக்டர் மோஹன்: என் அப்பாவும் சர்க்கரை நோய் மருத்துவர்தான். 19 வயதிலேயே அவருடன் இணைந்து நான் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் துவங்கினேன். அந்தக் காலத்தில் சர்க்கரை நோய்க்கான மருந்தின் விலை ஒரு பைசாதான். ஒரு நாளைக்கு நான்கு மாத்திரை எடுத்தால் கூட, நான்கு பைசாதான் செலவு. அந்த மலிவான மருந்து இன்று ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று விலையுயர்ந்து விட்டது. அதற்கு மேல் புது மருந்துகள் ஐந்து ரூபாய், பத்து ரூபாய், நாற்பது ரூபாய் என்று விற்கப்படுகின்றன. இன்று எல்லா விலைவாசிகளும், கூலியும் உயர்ந்திருந்தாலும், மருந்தின் விலை இந்தளவு உயர்ந்திருக்க கூடாது என்பதுதான் எனது கருத்து. இனி வரும் புது மருந்துகள் எல்லாமே விலை கூடுதலாகத்தான் விற்கப்படும். ஏனென்றால், 2005ல் இந்தியா, ‘கேட்’ ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு விட்டது. இதன் மூலம் மருந்தைக் கண்டு பிடித்தவருக்கு உரிய லாபம் சென்றடைய வேண்டும்.

முன்பு மாதிரி, ஃபார்முலா கிடைத்ததும் நாமே அவற்றைத் தயாரித்துக் கொள்ள முடியாது. யார் கண்டு பிடித்தாரோ அவரது அனுமதி பெற்று, அவருக்குரிய பங்கைக் கொடுத்துதான் மருந்தைத் தயாரிக்க முடியும். அதற்கு இந்தியா உடன்பட்டு, அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு விட்டது. பத்துப் பதினைந்து ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, ஐயாயிரம் முதல் பத்தாயிரம் கோடி ரூபாய் வரை பணம் செலவழித்து ஒரு மருந்தைக் கண்டுபிடிக்கிறார்கள். அந்தப் பணத்தை அந்த மருந்து விற்பனை மூலம்தான் அவர்கள் திருப்பி எடுக்க முடியும். எனவே, இனிவரும் காலங்களில் மருந்து விலை குறைய வாய்ப்பில்லை. கண்டு பிடித்தவர்தான் விலையை நிர்ணயிப்பார்.

ஆனால், என்னைப் பொறுத்தவரை உயிர் காக்கும் மருந்துகளைக் குறைந்த விலைக்குக் கொடுப்பதுதான் நியாயமாக இருக்கும். நமது தமிழக அரசாங்கம் பல விலையுயர்ந்த மருந்துகளை வாங்கி, அதை ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுத்து வருகிறது. ஒரு ரூபாய் மாத்திரைகளை மட்டும் அரசு வழங்கவில்லை; நாற்பது, ஐம்பது ரூபாய் மாத்திரைகளையும் வழங்குகிறது. பல வட மாநிலங்களால் இதைச் செய்ய முடியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் சமர்ப்பித்த ஆராய்ச்சிக் கட்டுரை, இன்னமும் டாப் 10 பட்டியலில் நீடிக்கிறது. அந்த ஆராய்ச்சி முடிவு என்னவென்றால், சர்க்கரை நோய் வந்த பிறகும் 50, 60 வருடங்கள் வாழ முடியும் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளோம். மற்ற நாடுகளால் அப்படி நிரூபிக்க முடியவில்லை. 50 வருடங்களுக்கு முன்னால் என்ன மருந்து சாப்பிட்டார்கள்? நான் சொன்ன அரை பைசா, ஒரு பைசா மருந்துதானே? அதைச் சாப்பிட்டுத்தான் இன்று வரை அவர்கள் உயிர் வாழ்கிறார்கள். எனவே, இங்கு மலிவு விலையிலும் நல்ல மருந்துகள் உண்டு. விலையுயர்ந்த புது மருந்துகள் வந்ததெல்லாம், சமீப ஆறேழு வருடங்களாகத்தான். இன்றைக்கு மிக மலிவான சர்க்கரை நோய்க்கான மருந்து, மிகத் தரமானது என்பது ஏழைகளுக்கு ஆறுதல் தரக்கூடிய செய்தி.

சந்தோஷ் குமார்: இந்தியாவில் ஆராய்ச்சிக்காக ஒரு சதவிகிதம்தான் நிதி ஒதுக்கப்படுகிறது என்கிறார்கள். நாம் இன்னும் விலை கொடுத்து வாங்கும் நிலையில் தான் இருக்கிறோம். நாமே கண்டுபிடிக்கும் நிலை ஏற்படாததற்கு என்ன காரணம்?

டாக்டர் மோஹன்: நியாயமான கேள்வி. 2005க்குப் பிறகு, நாம் புதிதாக மருந்துகளைக் கண்டுபிடித்தால் தான், பிறநாடுகளின் பணத்தை நாம் இங்கு கொண்டு வர முடியும். இல்லையென்றால் அவர்கள் கண்டு பிடிப்பை நாம் அதிக விலை கொடுத்து வாங்கிக் கொண்டேதான் இருக்க வேண்டும். இது நம் பொருளாதாரத்தைப் பாதிக்கும். இதனால்தான் மோடி வந்ததும், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிவித்துள்ளார். ஆனால், அரசு சுகாதாரத்திற்கும், ஆராய்ச்சிப் படிப்புகளுக்கும் ஒதுக்கும் தொகை மிக மிகக் குறைவு. உலக நாடுகள் எல்லாம் 5 முதல் 6 சதவிகிதம் வரை இதற்கு நிதி ஒதுக்குகின்றன. நமது நாட்டில் நான்கு சதவிகிதம்தான் நிதி ஒதுக்கப்பட்டு வந்தது. இந்த அரசு வந்ததும் அதில் மேலும் ஒரு சத விகிதத்தைக் குறைத்து விட்டது. ஒரு சதவிகிதம் என்பது சில ஆயிரம் கோடிகள் வரை போகும். அவ்வளவு பெரிய தொகை குறைந்து போனது நமக்கு மிகப் பெரிய இழப்பு என்று தான் சொல்ல வேண்டும்.

25 ஆண்டுகளுக்கு முன்னால் ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனாவின் நிலை என்ன? பதக்கப் பட்டியலில் நம் அருகில் இருப்பார்கள். ஒன்றோ, இரண்டோ மெடல் கிடைக்கும். 80களின் இறுதியில்தான் இது குறித்து அவர்கள் விழித்துக் கொண்டார்கள். முறையாகத் திட்டமிட்டார்கள். 20, 25 ஆண்டுகளில் என்ன ஒரு வளர்ச்சி பாருங்கள். பதக்கப் பட்டியலில் முதலிடத்திற்கே வரத் துவங்கி விட்டார்கள். 95 வரை, மருத்துவ ஆராய்ச்சிகளில் சீனாவின் நிலை பூஜ்யம் தான். திடீரென்று விழித்து எழுந்தார்கள். பணத்தைக் கொட்டினார்கள். அறிவாளிகளை விலைக்கு வாங்கினார்கள். திட்டமிட்டு ஆராய்ச்சிகளை முறைப்படுத்தினார்கள். இன்றைக்கு சீனா உச்ச நிலையில் இருக்கிறது. ஒரு காலத்தில் நாம் உச்ச நிலையில் இருந்தோம். ஆனால், அதைத் தொடர்ந்து நம்மால் பராமரிக்க முடிய வில்லை. நமது கவனமெல்லாம் ஐ.டி. பக்கம் போய் விட்டது.

ஒரு பெரும் ஃபார்மா கம்பெனி முதலாளியுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவரது கம்பெனி பெரிய மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல புதிய கலவைகளை அவர்கள் கண்டு பிடிப்பார்கள். ஆனால், எதில் பணம் வருமோ, அந்த ஆராய்ச்சிகளை மட்டும்தான் தொடர்வார்கள். இதில் பணம் பண்ண முடியாது என்று தோன்றும் கண்டு பிடிப்புகளைக் கொன்று விடுவார்கள். அவரிடம் ‘இந்தியாவுக்கு விஞ்ஞான ரீதியில் நோபல் பரிசு என்பது அரிதான விஷயம். நீங்கள் ஏன் அதற்கு முயற்சிக்கக் கூடாது?’ என்று கேட்டேன். ‘1989ல் நோபல் பரிசு வாங்கியது யார் என்று உங்களால் சொல்ல முடியுமா? எல்லாம் அந்தந்த நேரப் பெருமைதான். அப்புறம் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். நோபல் பரிசோட பரிசுத் தொகை நாலு கோடி ரூபாய். அது எனது பாக்கெட் மணி மாதிரி. அதுக்கு எதுக்கு நான் டைம் வேஸ்ட் பண்ணணும்’ என்று கேட்டார் அவர். அவர்களுக்குப் பணம் தான் பிரதானம். எனவே ஆராய்ச்சிகளை அரசாங்கத்தின் துணையோடு மட்டுமே செய்ய முடியும். அதற்கு அரசாங்கம் பெருமளவு உதவ வேண்டும்.

சந்தோஷ் குமார்: இந்தியா மாதிரி, படிப்பறிவு குறைந்த நாடுகளில்தான் மனித சோதனைகள் நடத்தப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு உள்ளதே? சமீபத்தில் இச்சோதனைகள் மூலம் 49 குழந்தைகள் இறந்து போனதாகக் கூட புகார் வந்தது.

டாக்டர் மோஹன்: சோதனைகள் இல்லாமல் ஒரு மருந்தை முழுமையாக அங்கீகரிக்க முடியாது. எலிகள் மூலம்தான் பெரும்பாலான சோதனைகள் நடக்கின்றன. உயிருக்கு ஆபத்தில்லை என்ற நிலைக்குப் பிறகுதான், வேறு பக்க விளைவுகளுக்காக மனிதர்களிடம் சோதனை செய்யப்படுகிறது. ஒருவரின் அனுமதி இல்லாமல் சோதனை நடப்பதில்லை. அவரது சம்மதம் மிகவும் முக்கியம். இப்படித்தான் ஆயிரக்கணக்கான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. எங்கேனும் ஒரு தவறு நிகழலாம். அதை ஆராய்ந்து அதைத் தடுக்க முயல வேண்டுமே தவிர, ஆராய்ச்சியையே குறை சொல்ல முடியாது. சில டி.வி. ஷோக்களில் இதைப் பெரிதாக்கி, ட்ராமா பண்ணி விடுகிறார்கள்.

குழந்தைகளுக்குச் சோதனை நடத்த, இங்கு மட்டுமல்ல; உலகெங்கும் தடை இருக்கிறது. ஒருவரின் சம்மதம் இல்லாமல் சோதனைகள் நடத்தக் கூடாது எனும்போது, குழந்தைகள் மீது சோதனை நடத்த முடியாது. ஏனென்றால், குழந்தைகளிடம் சம்மதம் வாங்க முடியாது; வாங்கினாலும் செல்லாது. கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் பெண்களுக்கும் இந்தத் தடை பொருந்தும். எனவே இதெல்லாம் வதந்தி. மீறி யாராவது செய்தால் அது சட்ட விரோதம். ஜெயிலுக்குப் போகத் தகுதியானவர்கள். எங்காவது படிப்பறிவு இல்லாத கிராமத்தில் ஏழைகளுக்குப் பணம் கொடுத்து, இது போல சோதனை நடத்தலாம். ஆனால் அது வெகுநாள் நீடிக்காது.

இன்று கிராமங்களில் எல்லாம் விழிப்புணர்வு வந்து விட்டது. அதே போல், மீடியா மிகப் பெரிய பலம் பெற்றுத் திகழ்கிறது. எனவே அதற்கான வாய்ப்புகள் குறைந்து விட்டன. இது போன்ற சர்ச்சைகளால் முறையான சோதனைகளை நிறுத்தி விட முடியாது. முன்பை விட இப்போது இதற்கான நிபந்தனைகள் அதிகப்படுத்தப்பட்டு விட்டன. நாங்கள் சோதனைக்குத் தேர்வு செய்பவர்களின் சம்மதத்தைப் பெறும்போதும், அதற்கான ஒப்புதல் கையெழுத்தை அவர் போடும்போதும், அந்த நிகழ்வை வீடியோ எடுக்க வேண்டும். எத்திக்ஸ் கமிட்டி என்று ஒன்று உள்ளது. அது மாதாமாதம் கூடி, எங்கள் சோதனைகளைக் கண்காணிக்கும். இப்போதெல்லாம் மனிதச் சோதனைகள் மிகவும் எளிதானது அல்ல.

கே. சுப்பையாயோகா மூலம் சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியுமா? சர்க்கரை நோயாளிகளுக்கு ஏன் இன்ஷ்யூரன்ஸ் தரப்படுவதில்லை?

டாக்டர் மோஹன்: உடற்பயிற்சி அளவுக்கு யோகாவும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிக அவசியம். தினசரி அரை மணி நேரம் நடப்பதும், தினசரி அரை மணி நேரம் யோகா செய்வதும் நல்ல பலன் தரும். யோகா என்பது மருந்துக்கு மாற்று கிடையாது. ஆனால், சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அது உதவும். சர்க்கரை நோயாளிகளுக்கு இன்ஷ்யூரன்ஸ் வழங்கப் பல நிறுவனங்கள் முன்வருவதில்லை என்பது உண்மைதான். நான் கொடுத்த டேட்டா அடிப்படையில், சர்க்கரை நோய் வருபவர்கள் எல்லாம் உடனே இறந்து விடுவதில்லை; அவர்கள் 50, 60 ஆண்டுகளுக்கு வாழ முடியும் என்ற நம்பிக்கை வந்ததும், 2005ல் ஐ.சி.ஐ.சி.ஐ. சர்க்கரை நோயாளிகளுக்கான இன்ஷ்யூரன்ஸை அறிமுகம் செய்தது. ஆனால், அதன் ப்ரீமியம் மிக அதிகமாக இருந்தது. இதை நான் வலியுறுத்திச் சொன்னேன். ஆனால், அவர்கள் உடன்படவில்லை. கடைசியாக நாடு முழுக்க ஆயிரம் பேர்தான் இணைந்தார்கள். அது நாளடைவில் காலாவதியாகி விட்டது. தற்போது ஸ்டார் நிறுவனம் சர்க்கரை நோயாளி களுக்கு இன்ஷ்யூரன்ஸை அறிமுகம் செய்துள்ளது.

சந்தித்த வாசகர்கள்

என். கிருஷ்ணமூர்த்தி, சென்னை.
(தனியார் துறை)
நவநீதகிருஷ்ணன், சென்னை
(தனியார் துறை ஓய்வு)
என். ரகுநாத், சென்னை
(தொழில்நுட்ப அதிகாரி, அப்பல்லோ மருத்துவமனை)
சந்தோஷ் குமார், சென்னை
(தனியார் வங்கி)
கே. சுப்பையா, சென்னை
(வருமான வரி ஆலோசகர்)
இந்த வார வி.ஐ.பி
பெயர்: டாக்டர் வி.மோஹன்
பணி : சர்க்கரை நோய் நிபுணர்.
சிறப்பு : 900க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி உலக சாதனை படைத்தவர். சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறப்பு அரிசி உருவாக்கம், சர்க்கரை நோயாளிகளுக்கு இன்ஷ்யூரன்ஸ் முயற்சி, மத்திய அரசு அங்கீகரித்த ஜெனட்டிக் சோதனைக்குத் தகுதி பெற்றது இப்படிப் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.


தொகுப்பு : எஸ்.ஜே. இதயா,
பங்கேற்க: thuglak45@gmail.com,
படங்கள்: ஓ.சீனிவாசன்

(லோ சுகர், ஹை சுகர் இவற்றில் எது ஆபத்து? பரம்பரையில் சுகர் இல்லை என்றாலும், ஒருவருக்கு சுகர் வருமா? இன்ஸுலின் போட்டுக் கொண்டால், எது வேண்டுமானாலும் சாப்பிடலாமா? உள்ளிட்ட மேலும் பல கேள்விகளுக்கான பதில்கள் அடுத்த பதிவில்…)

Advertisements

6 thoughts on “சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் என்ன? – சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் வி. மோஹன்

 1. harikrishnamurthy March 24, 2015 at 3:16 AM Reply

  Reblogged this on My blog- K. Hariharan.

 2. Saravanan Iyer April 4, 2015 at 9:32 AM Reply

  Sir, with your permission, I am sharing this on my FB page…. Hope you won’t have objections. If there’s any objections please let me know on as.saravanan@gmail.com

  • BaalHanuman April 4, 2015 at 2:26 PM Reply

   Sure. Feel free to share. No problem.

 3. K.C.Ganesan October 24, 2016 at 2:48 PM Reply

  Really very nice and useful

 4. nparamasivam1951 January 26, 2017 at 9:23 AM Reply

  Superb article. Hope you won’t mind in sharing my FB/Twitter pages.

  • BaalHanuman January 26, 2017 at 3:13 PM Reply

   Pl. go ahead…Absolutely no problem… You are most welcome to share and spread the awareness..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s