நூறு வயதில் கூட ஷுகர் வரலாம்! – சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் வி. மோஹன்


ந்திய அளவில் புகழ்பெற்ற சர்க்கரை நோய் நிபுணராகத் திகழ்பவர் டாக்டர் வி.மோஹன். நோயாளிகளுக்குச் சிகிச்சை தருவதோடு, ஏராளமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, பல புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்குத் தந்தவர். அவரை நமது வாசகர்கள் அவரது மருத்துவமனையில் சந்தித்து உரையாடினார்கள். அந்தக் கலந்துரையாடலின் தொடர்ச்சி இங்கே:

ரகுநாத்: ஆசியாவில்தான் சர்க்கரை நோய் அதிகம் என்கிறார்கள். அப்படியானால் அரிசிதான் சர்க்கரை நோய்க்கு முக்கியமான காரணமா?

டாக்டர் மோஹன்: உண்மைதான். சர்க்கரை நோய்க்கு அரிசி ஒரு காரணி. ஒரு முறை சாய்பாபாவுடன் பேசுகையில், ‘நீ நோய், மருந்து குறித்து நிறைய ஆராய்ச்சி பன்ணியிருக்கிறாய் அல்லவா? அரிசியைக் குறித்து ஒரு ஆராய்ச்சி மேற்கொள்’ என்றார். உடனே நான் அது தொடர்பான ஆராய்ச்சியைத் துவக்கினேன். அரிசியில் நார்ச்சத்து என்பதே கிடையாது. அதில் நார்ச்சத்தைக் கொண்டு வர முடியுமா என்பது தான் என் ஆராய்ச்சி. சீனாவில் 1.5 சதவிகிதம் நார்ச்சத்து கொண்ட அரிசியைக் கண்டு பிடித்துள்ளார்கள். நாங்கள் சில வேளாண்மை ஆராய்ச்சி மையங்களின் உதவியுடன் சுமார் 8 சதவிகித நார்ச்சத்து உள்ள அரிசியைக் கண்டுபிடித்துள்ளோம். இது உலக சாதனை. இந்த அரிசி சர்க்கரையைக் கூட்டாது. முதலில் ப்ரௌன் அரிசியை அறிமுகம் செய்தோம். ஆனால், ‘அது கலர் இல்லை; சுவை இல்லை; செரிமானம் எளிதில்லை’ என்று குறை சொன்னார்கள். எனவே, தான், தற்போது இந்தப் புது வெள்ளை அரிசியைக் கண்டுபிடித்து வழங்கியுள்ளோம். அரசாங்கத்தை அணுகி, பல நிபுணர்களின் கூட்டத்தைக் கூட்டி அந்த அரிசிக்கு அங்கீகாரம் வாங்கி விட்டோம். நிதியுதவியும் பெற்று விட்டோம். எங்களிடம் மட்டும் விற்கப்பட்ட அந்த அரிசி, தற்போது 70 இடங்களில் விற்பனையாகிறது.

நவநீதகிருஷ்ணன்: நேற்று வரை சர்க்கரை நோய் இல்லாதவருக்குத் திடீரென்று ஒரே நாளில் அந்த நோய் வந்து விடுமா? நமக்கு அந்த நோய் வந்து விட்டது என்பதைப் பரிசோதனை இல்லாமலே நாம் உணர்ந்து கொள்ள முடியுமா?

டாக்டர் மோஹன்: அரிப்பு, ஆறாத புண், தண்ணீர் தாகம், எடை குறைதல் ஆகிய அறிகுறிகளின் மூலம் சர்க்கரை நோயை அறியலாம். நான்கைந்து வருடங்களுக்குப் பிறகுதான் இதெல்லாம் தெரிய வரும். பரம்பரையில் சர்க்கரை நோய் இருப்பவர்கள், முப்பது வயது முதலே அவ்வப்போது சோதனைகள் செய்து கொள்வது நல்லது. ஷுகர் வந்த பிறகு அதைக் கட்டுப்பாட்டில் வைப்பதை விட, அதை முன் கூட்டியே வராமல் தடுப்பது நல்லது. அதற்கு நல்ல உணவுக் கட்டுப்பாடும், தினசரி உடற்பயிற்சியும் முக்கியம்.


என்.ரகுநாத்: சர்க்கரை நோய் என்பது இன்ஸுலின் குறைபாடு என்று கூறினீர்கள். அப்படியானால் நீங்கள் தரும் மருந்துகள் எந்த வேலையைச் செய்கின்றன?

டாக்டர் மோஹன்: சில மருந்துகள் கணையத்திலிருந்து இன்ஸுலின் உற்பத்தியைத் தூண்டுகின்றன. சிலருக்கு இன்ஸுலின் சுரக்கும். ஆனால், அது வேலை செய்யாது. அவர்களுக்கு இன்ஸுலினை வேலை செய்ய வைக்கும் மருந்துகளைத் தருவோம். ஒவ்வொருவரும் எந்தக் கட்டத்தில் உள்ளார்கள் என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப இந்த மருந்துகளைத் தருகிறோம். சில பேருக்கு இந்த இருவகை மருந்துகளைக் கலந்தும் தருவோம். சிலருக்குக் கிணறு வறண்டு விடுவது போன்று, கணையத்தில் இன்ஸுலின் சுரப்பே நின்று போகும். அவர்களுக்கு இந்த மாத்திரைகளைக் கொடுத்துப் பலனில்லை. அவர்களுக்கு இன்ஸுலின் ஊசிதான் ஒரே தீர்வு. பழைய மருந்துகள் சுகரைக் குறைக்கும் வேலையை மட்டும் செய்தன. ஏற்கெனவே நமக்கு ஷுகர் கன்ட்ரோலில் இருக்கும்போது, இதுபோன்ற மாத்திரைகளைச் சாப்பிட்டால் அது லோ ஷுகராக மாறும் வாய்ப்பு உண்டு. ஆனால், நவீன மருந்துகள் சர்க்கரை கூடுதலாக இருந்தால் மட்டுமே குறைக்கும். சரியான அளவில் இருந்தால், அதற்குக் கீழே குறைக்காது. அதனால்தான் பழைய மருந்து இரண்டு ரூபாய் என்றால், புதிய மருந்துகள் 20 ரூபாய்க்கு மேல் விற்கின்றன.


நவநீதகிருஷ்ணன்: லோ ஷுகர், ஹை ஷுகர் இரண்டில் எது ஆபத்தானது?

டாக்டர் மோஹன்: சர்க்கரையின் அளவு என்பது வெறும் வயிற்றில் 80 முதல் 120 வரை இருக்கலாம். உணவு அருந்திய பிறகு 140 அல்லது அதிகபட்சமாக 150 வரை இருக்கலாம். அதற்கு மேல் போகும்போது அது ஹை ஷுகர். 70க்குக் கீழாக குறையும் போது அது லோ ஷுகர். ஹை ஷுகர் 500, 600 வரைக்கும் கூடச் செல்லும். ஆனால், அதன் பாதிப்பு உடனடியாகத் தெரியாது. ஆனால், உள்ளே கண், சிறுநீரகம், நரம்பு மண்டலம் என்று பல உறுப்புகளைப் பாதிக்கும். 700, 800 என்று அதிகமாகும் போதுதான் மயக்கம், கோமா போன்ற உடனடி பாதிப்புகள் ஏற்படும். ஆனால், லோ ஷுகர் என்பது 50க்கு கீழிறங்கும்போதே மயக்கம் போன்ற உடனடி பாதிப்பு இருக்கும். 20க்குப் போனால் கோமா ஏற்படக்கூடும். எனவே, உடனடி பாதிப்பை ஏற்படுத்தும் லோ ஷுகர்தான் ஆபத்தானது. அதைக் கவனமாக மெயின்டெய்ன் செய்ய வேண்டும். சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். இன்னும் 10 நிமிஷம் கழித்துச் சாப்பிடலாம் என்று ஒத்திப் போடக் கூடாது. இன்ஸுலின் போட்டுக் கொள்கிறவர்கள், உடனடியாகச் சாப்பிட வேண்டும். இல்லையென்றால் கோமா வரை போய்விடும் அபாயம் உண்டு. எனவே ஹை ஷுகர் என்பது நீண்ட கால ஆபத்து; லோ ஷுகர் என்பது குறுகிய கால ஆபத்து.


என்.கிருஷ்ணமூர்த்தி: மாத்திரை போடுகிறவர்கள், எப்போது இன்ஸுலின் போட்டுக் கொள்ளும் நிலைக்குப் போவார்கள்?

டாக்டர் மோஹன்: வழக்கமாக பல வருடங்கள் மாத்திரை போட்டும், இன்ஸுலின் போதிய அளவு சுரக்காவிட்டால் இன்ஸுலின் போட்டுக் கொள்ள வலியுறுத்துவோம். மூன்று மாத சராசரி சுகர் அளவைக் கண்டுபிடிக்கும் டெஸ்ட் ஒன்று உள்ளது. அது 7 இருந்தால் நலம். 10, 11 என்று போனால் இன்ஸுலின் போடுவதைத் தவிர, வேறு வழியில்லை. தற்போது நான் ஒரு ஆராய்ச்சியில் உள்ளேன். ஹை ஷுகருடன் வருபவர்களுக்கு முதல் ஒரு மாதம் இன்ஸுலின் ஊசியைப் பரிந்துரைக்கிறோம். நிலைமை கட்டுக்குள் வந்த பிறகு மாத்திரைகள் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இப்படி எடுத்தவுடன் வலுவான ட்ரீட்மென்ட் கொடுப்பதால், நல்ல ரிஸல்ட் கிடைக்கிறது. தொடர்ந்து அந்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறேன். இன்ஸுலின் சுரக்கும் அளவைக் கண்டறிய, எங்களிடம் ஒரு டெஸ்ட் உள்ளது. அதை எடுத்தால் ஒருவருக்கு இன்ஸுலின் தேவையா, மாத்திரையே போதுமா என்ற தெளிவு நமக்குக் கிடைக்கும்.

நவநீதகிருஷ்ணன்: சர்க்கரை அளவை ரத்தத்தின் மூலம் டெஸ்ட் பண்ணாமல், கையில் கட்டிக் கொண்டாலே கண்டுபிடிக்கும் வாட்ச் எல்லாம் மார்க்கெட்டுக்கு வந்ததே?

டாகடர் மோஹன்: க்ளுக்கோ வாட்ச் 7, 8 வருடங்களுக்கு முன்பு வந்தது. நமது வியர்வை மூலமாக சர்க்கரை அளவைக் கண்டுபிடிக்கும் முறை அது. ஆனால், அது ஃபெயிலியர் ஆயிடுச்சு. நிறைய தவறான ரீடிங்குகளை அது தந்ததால், மக்களின் நம்பிக்கையை இழந்தது. தற்போது அந்தக் கம்பெனியே மூடப்பட்டு விட்டது. இப்போது சி.ஜி.எம்.எஸ். என்று ஒரு மிஷின் வந்துள்ளது. அதை அணிந்து கொண்டால், நிமிடத்திற்கு நிமிடம் நமது க்ளுக்கோஸ் அளவைக் கண்டுபிடித்துச் சொல்லிக் கொண்டே இருக்கும். அதையும் தாண்டி செயற்கையான கணையம் ஒன்றைச் சோதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை அணிந்து கொண்டால், சர்க்கரை அளவைத் துல்லியமாகக் கண்காணித்துக் கொண்டிருப்பதோடு, தேவைப் படும்போது தேவையான அளவு இன்ஸுலினை அதுவே நமது உடம்பிற்குள் செலுத்தி விடும். இந்த அட்வான்ஸ் மிஷின் தற்போது இறுதிக்கட்டப் பரிசோதனையில் இருக்கிறது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் மார்க்கெட்டுக்கு வரலாம். ஆனால், இவை எல்லாமே இன்ஸுலின் ஊசி போட்டுக் கொள்கிறவர்களுக்கான சாதனங்கள். மாத்திரை மட்டும் போட்டுக் கொள்ளும் நோயாளிகளுக்கு இது தேவையில்லை. அவர்கள் மாத்திரையுடன், உணவுக் கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டு, அவ்வப்போது பரிசோதனை செய்து கொண்டால் போதுமானது.

நவநீதகிருஷ்ணன்: ‘இப்போது ஒரே ஒரு முறை இன்ஸுலின் போட்டுக் கொண்டால் போதும். வாழ்நாள் முழுவதும் சிகிச்சை தேவையில்லை’ என்று செய்திகள் வருகின்றனவே?

டாக்டர் மோஹன்: அப்படியெல்லாம் எந்த நாட்டிலும், எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. ‘ஒன் டைம் மருந்து’ என்று ஊடகங்களில் செய்தி வந்தால், நம்பாதீர்கள். அதெல்லாம் இப்போதைக்கு சாத்தியம் இல்லை.

கே.சுப்பையா: இன்ஸுலின் ஊசி போட்டுக் கொள்பவர்கள், எதை வேண்டுமானாலும் சாப்பிடலாமா? அப்படிச் சிலர் நம்புகிறார்களே?

டாக்டர் மோஹன்: முற்றிலும் தவறான நம்பிக்கை. இன்ஸுலின், மாத்திரை எல்லாம் இரண்டாம் கட்டம்தான். முதல் கட்டம் மற்றும் அடிப்படை விஷயம் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவைதான். அதில் எந்தவிதச் சலுகைக்கும் இடம் கிடையாது.

நவநீதகிருஷ்ணன்: பொதுவாக சர்க்கரை நோய் 40 அல்லது 50 வயதில் தாக்குகிறது. 60 வயது வரை சர்க்கரை நோய் இல்லாமல் தாக்குப்பிடித்து விட்டால், அதன் பிறகு வராது என்கிறார்களே உண்மையா?

டாக்டர் மோஹன்: என் பாட்டியும் ஒரு டாக்டர் தான். என் அப்பாவுக்கு 60 வயதில் ஷுகர் வந்த போதிலும், என் பாட்டிக்கு 80 வயது வரை ஷுகர் வரவில்லை. அவர் அதைப் பெருமையாக கூறிக் கொண்டிருந்தார். ஆனால், அடுத்த சில வருடங்களிலேயே அவருக்கு ஷுகர் வந்து 85 வயதில் இன்ஸுலின் ஊசி போடுமளவிற்குப் பாதிக்கப்பட்டார். எனவே, ஷுகர் எந்த வயதில் வரும் என்பதற்கு எந்த வரம்பும் கிடையாது. நூறு வயதுக்கு மேல் ஷுகர் வந்தவரை நானே பார்த்திருக்கிறேன். ஒரு ஆங்கிலோ இந்தியன் நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது அவரைச் சோதித்தேன். அவருக்கு ஷுகர் சுத்தமாக இல்லை. ஆனால், அடுத்த ஓரிரு வருடங்களில் அவருக்கு ஷுகர் வந்து 105ஆவது வயதில் இறந்தே போனார். எனவே, எந்த வயதிலும் ஷுகர் வரும். இன்று பிறக்கும் குழந்தைக்கும் டைப்1 ஷுகர் வரலாம். எனவே, சர்க்கரை நோய்க்கு வயது என்பது ஒரு காரணமே இல்லை.

ரகுநாத்: பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடல் இளைத்து விடுவார்கள். அப்படியானால் குண்டாக இருப்பவர்கள் ஷுகர் இல்லாதவர்கள் என்று கணிக்கலாமா?


டாக்டர் மோஹன்: அப்படிக் கணிக்க முடியாது. ஒல்லியாக இருப்பவர்களில் 5 சதவிகிதம் பேர் சர்க்கரை நோயாளிகளாக இருந்தால், குண்டாக இருப்பவர்களில் 30 சதவிகிதம் பேராவது சர்க்கரை நோயாளிகளாக இருப்பார்கள். குண்டாக இருப்பது சர்க்கரை நோய் வருவதற்கு ஒரு காரணமாகும். சர்க்கரை கன்ட்ரோலில் இருந்தால், குண்டானவர்கள் மெலிய மாட்டார்கள். ஷுகர் கூடுதலாக ஆக சதை மெல்ட் ஆகும். உடல் மெலிவு கண்டிப்பாக ஏற்பட்டு விடும். எனவே, குண்டானவர்களுக்கு சர்க்கரை இருக்காது என்று அர்த்தமில்லை.

சந்தோஷ் குமார்: பிற நாடுகளில் பத்தாயிரம் பேருக்கு 20 டாக்டர்கள் இருந்தால், இந்தியாவில் 5 டாக்டர்கள்தான் இருப்பதாகக் கூறுகிறார்கள். பொது மருத்துவர்களின் நிலையே இப்படி என்றால், ஸ்பெஷலிஸ்ட்டுகளின் எண்ணிக்கை இன்னும் குறைவு. பேராசிரியர்களின் எண்ணிக்கை அதை விடக் குறைவு. ஒரு பக்கம் மக்கள் தொகையும், நோயாளிகளின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டு போகும்போது, டாக்டர்கள் குறைவது நம் நாட்டின் பெரிய குறை இல்லையா?

டாக்டர் மோஹன்: கண்டிப்பாகக் குறைதான். இதனால்தான் நாங்கள் மருத்துவம் பார்ப்பதோடு நிற்காமல், தொடர் ஆராய்ச்சிகள், அரிசி, ரவை தயாரிப்பு, சர்க்கரை நோயாளிகளுக்கான செருப்பு, ஷூ தயாரிப்பு என்று பல களங்களில் செயல்படுவதோடு, தனி எஜுகேஷன் அகாடமியும் நடத்தி வருகிறோம். பல கோர்ஸ்களை நடத்துகிறோம். கண், கால் சர்க்கரை நோய்க்கான டயட்டீஷன் தொடர்பாகப் பல கோர்ஸ்களைக் கொண்டு வந்துள்ளோம். சர்வதேச சர்க்கரை நோய் ஃபெடரேஷன் (IDF), ‘உங்கள் சென்டரில் மட்டும் கோர்ஸ்களை நடத்தாமல் ஆசிய அளவில் பயிற்றுவியுங்கள்’ என்று கேட்டுக் கொண்டு எங்கள் சென்டரை அங்கீகரித்துள்ளது. உலகில் உள்ள 8 சென்டர்களில் நாங்களும் இருக்கிறோம். இந்தியாவில் நாங்கள் மட்டும்தான். சான்றிதழ்களை ஐ.டி.எஃப். வழங்கும். இந்தியா முழுக்க நாங்கள் அளித்த பயிற்சியைப் பார்த்து, அந்த எட்டு சென்டர்களில் நாங்கள் தரும் பயிற்சிதான் சிறந்தது என்ற அங்கீகாரமும் வழங்கியுள்ளார்கள். அரசாங்கமும் இதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும்.

நவநீதகிருஷ்ணன்: தாத்தாவுக்கும், பாட்டிக்கும் சர்க்கரை நோய் இல்லை. அப்பா, அம்மாவுக்கும் சர்க்கரை நோய் இல்லை. இருந்த போதிலும் புதிதாக சர்க்கரை நோயில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க என்ன வழி?

டாக்டர் மோஹன்: முதலில் அப்படிப்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய் தாக்கும் அபாயம் குறைவு. எனினும் நல்ல உணவுப் பழக்கம், தினசரி உடற் பயிற்சி, எடை கூடாமல் பார்த்து கொள்ளுதல் ஆகியவை மூலம் சர்க்கரை நோயை தூரமாகத் தள்ளி வைக்க முடியும். இவற்றை ஒழுங்காகக் கடைப் பிடித்தால், ஷுகரை மட்டுமில்லாமல் கொழுப்பு, ரத்த அழுத்தம் என்று பல நோய்களைத் தவிர்த்து விடலாம்.

சுப்பையா: சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் உறுப்புகளை வரிசையாகப் பட்டியலிட முடியுமா?

டாக்டர் மோஹன்: கண்தான் முதலில் பாதிக்கப்படும். அடுத்து சிறுநீரகம். அடுத்து இருதயம், அடுத்து நரம்புகள். அடுத்து கால் பாதங்கள். அதோடு பாலியல் பலவீனம் ஏற்படும். ஞாபகமறதி ஏற்படும். பக்கவாதம் வரலாம்.

ரகுநாத்: நாட்டு மருந்துகள், இயற்கையாகக் கிடைக்கும் உணவு வகைகளில் ஷுகர் கன்ட்ரோல் ஆவதாகச் சொல்கிறார்களே? அதன் மூலமே ஷுகரை கன்ட்ரோலில் வைக்க முடியுமா?

டாக்டர் மோஹன்: நான் ஒரு அலோபதி டாக்டர் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், ஆயுர்வேத மருந்துகள் மீது நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளேன். எனவே, அதில் முழுமையான பலன் இல்லை என்று சொல்ல மாட்டேன். ஓரளவு அதில் பலன் கிடைக்கும். வெந்தயம் ரொம்ப நல்லது. பாகற்காய் கூட நல்லது. இப்படி பல விஷயங்கள் உள்ளன. ஆனால், இது மட்டும் போதாது. நாங்கள் தரும் மருந்துகளே போதாது என்ற நிலையைத்தான் நாம் பார்க்கிறோம். ஒருவேளை மாத்திரை, இருவேளை மாத்திரை, மூன்று வேளை மாத்திரை, அதுவும் போதாமல், இன்ஸுலின் என்று நாங்களே மருந்துகளை அதிகப்படுத்துகிறோம். இயற்கை உணவுகளை முழு மருந்தாக்கிக் கொள்ள முடியாது. அவற்றை உட்கொள்வது கூடுதல் பலன் அளிக்கும், அவ்வளவுதான். ஏனென்றால், இந்த நோய் உங்களை மேலே இழுத்துக் கொண்டே போகக் கூடியது.

கிருஷ்ணமூர்த்தி: சிகிச்சையும் எடுத்துக் கொண்டு, வழக்கம் போல எதுவும் சாப்பிடலாம் என்கிற அளவுக்கு மருத்துவம் முன்னேறவில்லையா?

டாக்டர் மோஹன்: (சிரிக்கிறார்) அப்படி சாப்பிடக் கூடாது. கூடும் அளவைக் குறைக்கத்தான் மருந்து தருகிறோம். மேலும் ஷுகர் பொருட்களைச் சாப்பிட்டால் ஷுகர் அளவு மேலும் கூடும். அப்புறம் மருந்தின் அளவையும் கூட்ட வேண்டும். மேலும் சாப்பிட்டால் மேலும் ஷுகர் கூடும். அது பெரிய ஆபத்தில் முடியும். சர்க்கரை நோய் வந்து விட்டால், முதல் மருத்துவம் உணவுக் கட்டுப்பாடுதான். அது இல்லாமல், என்ன மருத்துவம் பார்த்தாலும் பலனளிக்காது. அது போன்ற சிந்தனைக்கே போகாதீர்கள். ‘மாத்திரையைக் கூடுதலாகப் போட்டுக் கொண்டு, கூடுதல் ஸ்வீட் சாப்பிடுவது; இன்று ஸ்வீட் சாப்பிட்டு விட்டோம் என்று கூடுதலாக மாத்திரை போட்டுக் கொள்வது’ இவையெல்லாம் தவறான அணுகுமுறைகள்.


ரகுநாத்: அப்பா, அம்மா இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்தும், அது குழந்தைக்கு வராமல் தப்பிக்க வாய்ப்பே இல்லையா?

டாக்டர் மோஹன்: பெரும்பாலும் வாய்ப்பில்லை. ஆறு குழந்தைகள் பிறந்தால் ஒன்று வேண்டுமானால் அதிர்ஷ்டவசமாகத் தப்பிக்கலாம். அது விதிவிலக்கு. மற்றபடி எல்லோருக்கும் வந்தே தீரும். நமது உடற் பயிற்சி, உணவுப் பழக்கத்தின் மூலம், அதைத் தள்ளிப் போடலாம்; அவ்வளவுதான். கணக்குப் பாடத்தில்தான் 2+2=4. உயிரியல் பாடத்தில் 2+2=4 என்று இருக்க அவசியம் இல்லை. அது 3ஆக இருக்கலாம். 5ஆக மாறலாம். அம்மா, அப்பாவின் ஜீனில் இருந்தால், குழந்தைக்கு அந்தக் கோளாறு வந்தே தீரும். ஆனால், அதற்கான காலகட்டம் மாறலாம்.

சந்தித்த வாசகர்கள்

என். கிருஷ்ணமூர்த்தி, சென்னை.
(தனியார் துறை)
நவநீதகிருஷ்ணன், சென்னை
(தனியார் துறை ஓய்வு)
என். ரகுநாத், சென்னை
(தொழில்நுட்ப அதிகாரி, அப்பல்லோ மருத்துவமனை)
சந்தோஷ் குமார், சென்னை
(தனியார் வங்கி)
கே. சுப்பையா, சென்னை
(வருமான வரி ஆலோசகர்)
இந்த வார வி.ஐ.பி
பெயர்: டாக்டர் வி.மோஹன்
பணி : சர்க்கரை நோய் நிபுணர்.
சிறப்பு : 900க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி உலக சாதனை படைத்தவர். சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறப்பு அரிசி உருவாக்கம், சர்க்கரை நோயாளிகளுக்கு இன்ஷ்யூரன்ஸ் முயற்சி, மத்திய அரசு அங்கீகரித்த ஜெனட்டிக் சோதனைக்குத் தகுதி பெற்றது இப்படிப் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.


தொகுப்பு : எஸ்.ஜே. இதயா,
பங்கேற்க: thuglak45@gmail.com,
படங்கள்: ஓ.சீனிவாசன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s