9-துக்ளக் வயது 45


இதன் முந்தைய பகுதி…

ஆசிரியர் சோ பேச்சின் தொடர்ச்சி:

பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சொத்து வழக்கில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை விதித்து அளிக்கப்பட்ட தீர்ப்பு, அசைக்க முடியாத தீர்ப்பு என்று நான் கருதவில்லை. அந்தத் தீர்ப்பைப் படித்துப் பார்த்தால், பல அம்சங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாகவே இருக்கின்றன (கைதட்டல்). இதை நானாகக் கண்டுபிடித்துக் கூறவில்லை. விவரம் அறிந்த சிலர் இதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜெயலலிதாவினுடைய வீடு, அதற்குப் பக்கத்தில் உள்ள இடம் மற்றும் அவருடைய ஹைதராபாத் தோட்டம் ஆகிய இடங்களில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட வகையில் 28 கோடி ரூபாய் செலவாகியுள்ளது என்று கணக்கிட்டுள்ளனர்.

28 கோடி செலவாகியுள்ளது என்பதை எப்படி வரையறை செய்தார்கள் என்று பார்த்தால், அப்போது இருந்த பொதுப்பணித் துறைப் பொறியாளர்கள், இதற்கு 28 கோடி ரூபாய் செலவாகி இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளனர். இந்தக் கணக்கை வருமான வரித்துறை ஏற்கவில்லை. அதற்கு மாறாக, இந்தக் கட்டிடங்கள் தொடர்பாக ஜெயலலிதா தரப்பு தாக்கல் செய்துள்ள கணக்குகளை வருமான வரித்துறை ஏற்றுள்ளது.

ஆனால், தனி நீதிமன்ற நீதிபதி என்ன செய்தார் என்றால், ‘28 கோடி ரூபாய் செலவானது என்பதை ப்ராஸிக்யூஷன் தரப்பு நிரூபிக்கவில்லை; இந்தக் கணக்கை ஏற்க முடியாது’ என்றார். ஏற்க முடியாத கணக்கு என்றால், அத்தோடு நிறுத்தினாரா என்றால் இல்லை. ‘28 கோடி ரூபாய் என்பது அதிமாக உள்ளது; அதை ஏற்க முடியாது; அதனால் 20 சதவிகிதத்தை அதில் கழிப்போம்; 22 கோடி ரூபாயாக வைத்துக் கொள்வோம்’ என்று புதுக்கணக்கை அவர் கொடுத்து விட்டார் (சிரிப்பு).

அதேபோல, விவசாய வருமானமாக 5 வருடங்களில் 50 லட்சம் ரூபாய் வந்துள்ளது என்பது ஜெயலலிதா தரப்புக் கணக்கு. ஆனால், ப்ராஸிக்யூஷன் தரப்பு இதை ஏற்காமல், 50 லட்சம் கிடைக்க வாய்ப்பு இல்லை; 5 லட்சம்தான் வருவாய் வந்திருக்கும் என்று கூறியது. நீதிபதி பார்த்தார்; ‘5 லட்சம் ரூபாய் என்று சொல்வது ரொம்பக் குறைவாக உள்ளது (சிரிப்பு); அதனால் இதை 10 லட்ச ரூபாயாக வைத்துக் கொள்வோம்’ என்று முடிவு செய்தார் (சிரிப்பு). தோராயமாக ஒரு கணக்குக்கு அவர் வருகிறார். ‘இவர் ஒன்று சொல்கிறார்; அவர் ஒன்று சொல்கிறார்; நடுவாந்திரமாக நான் ஒன்று சொல்கிறேன்’ என்று நீதிபதி போயிருக்கிறார் (சிரிப்பு, கைதட்டல்). இவருடைய கேஸ் மூன்றாவது கேஸ் (சிரிப்பு). ப்ராஸிக்யூஷன் தரப்பு வாதம் ஒன்று, குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாதம் ஒன்று, மூன்றாவது ஜட்ஜ் தரப்பு (சிரிப்பு, கைதட்டல்).

ஒரு திருமணம் (வளர்ப்பு மகன்) நடந்தது. அதை நான் கூட விமர்சித்திருக்கிறேன். இவ்வளவு ஆடம்பரம் தேவையா என்று எழுதியிருக்கிறோம். அதற்குப் பந்தல் செலவு மட்டும் 5 கோடியே 10 லட்சம் ரூபாய் என்று வழக்கில் கூறப்பட்டுள்ளது. பந்தலுக்கு இவ்வளவு செலவானது என்று எப்போது இந்தக் கணக்குக்கு வந்தார்கள் என்றால், அந்தக் கல்யாணம் முடிந்து, பந்தலை எல்லாம் பிரித்த பிறகு (சிரிப்பு), இரண்டரை வருடம் கழித்து, அந்தக் கல்யாணம் நடந்த இடத்தைப் போய்ப் பார்த்தார்கள் (சிரிப்பு, கைதட்டல்). ‘ஓ இந்த க்ரவுண்ட் தானா’ (சிரிப்பு). சரி, 5 கோடி போட்டுக்கோ’ (சிரிப்பு, கைதட்டல்) என்று நிர்ணயித்து விட்டார்கள்.

நீதிபதி இதைப் பார்த்தார். அவர் தீர்ப்பில், ‘இப்படி எல்லாம் சொல்வதை ஒப்புக் கொள்ள முடியாது; குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கூறுவது போல, இரண்டரை வருடம் கழித்துப் போய் பார்த்து, 5 கோடி செலவானதாக எப்படிக் கூறலாம்? மூணு கோடி என்று வேண்டுமானால் வைத்துக் கொள்வோம்’ (பலத்த சிரிப்பு, கைதட்டல்). இந்தத் தீர்ப்பைப் படித்துவிட்டு விவரம் தெரிந்தவர்கள், ‘இந்த ஜட்ஜ் சொல்லி இருப்பது, மூணாவது கேஸாக இருக்கிறது’ என்கிறார்கள்.

இந்தத் தீர்ப்பை ஏற்க முடியாது என்று கூறுவதற்கு அவர்கள் சொல்லும் காரணம், வருமான வரித்துறையிடம் இதுபற்றி ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்துள்ள கணக்குகள் ஏற்கப்பட்டு, சிலவற்றில் மேல்முறையீட்டிலும் ஏற்கப்பட்டு, ட்ரிப்யூனலும் ஏற்றுக்கொண்டு வருமான வரித்துறை சாதகமான உத்தரவுகளையும் அளித்துள்ளது. அதெல்லாம் இந்தப் பெங்களூரு வழக்கிற்கு முன்பாகவே அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனி நீதிமன்ற நீதிபதியோ, ‘வருமான வரித்துறை கூறுவதை நான் ஏற்க வேண்டியதில்லை’ என்கிறார்.

‘வருமான வரித்துறை ஏற்ற கணக்கை ஒப்புக் கொள்ள வேண்டியதில்லை’ என்று பாட்னா ஹைகோர்ட் அப்படிக் கூறியிருப்பதாகச் சொல்கிறார். ஆனால், பாட்னா ஹைகோர்ட்டின் அந்தத் தீர்ப்பு 2010ல் சுப்ரீம் கோர்ட்டால் ரத்து செய்யப்பட்டுள்ளது (கைதட்டல்). மேல் நீதிமன்றத்தால் ரத்தான ஒரு தீர்ப்பை, இந்த நீதிபதி பிடித்துக் கொண்டுள்ளார். செத்துப் போன ஃபிலாஸபியான கம்யூனிஸத்தை டி.ராஜா பிடிச்சுக்கற மாதிரி, இந்த நீதிபதி அந்த ரத்தான தீர்ப்பைப் பிடிச்சுக்கக் கூடாதா? (சிரிப்பு, பலத்த கைதட்டல்). அதுபோல உயிர் இல்லாத தீர்ப்பைப் பிடித்துக் கொண்டு, அதன் அடிப்படையில் இவர் ஒரு தீர்ப்பைக் கொடுத்துள்ளார்.

ஆனால் விவரமறிந்தவர்கள் மூலம் நான் கேள்விப்பட்டது, வருமான வரித்துறையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்குகளுக்கு மதிப்பு உண்டு என்பது தவிர, அது கட்டுப்படுத்தக் கூடியதும் ஆகும் என்பதுதான். அந்தத் துறை, தீவிரமாக ஆராய்ந்துதான் கணக்குகளை ஏற்கிறது. தவிர அந்த வருமான வரித்துறை, அப்போது ஜெயலலிதாவுக்கு வேண்டிய அரசு நடந்தபோது இந்த முடிவுகளுக்கு வரவில்லை (கைதட்டல்). அதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட பல அம்சங்களும் அந்த சொத்து வழக்கில் உள்ளன. அப்பீல் அவருக்குச் சாதகமாக இருக்குமா, எதிராக இருக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இந்த வழக்கில் ஒன்றுமே கிடையாது என்று நான் தீர்மானமாகச் சொல்ல முன் வரவில்லை. அது எனக்குத் தெரியாது. ஆனால், அவரது தரப்பில் சொல்லக் கூடிய இப்படிப்பட்ட வாதங்களும் இருக்கின்றன. இவை எல்லாம் பெங்களூரு அப்பீல் விசாரணையிலோ அல்லது சுப்ரீம் கோர்ட்டிலோ என்ன ஆகப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டும். வழக்கின் தீர்ப்பைப் பொறுத்து இங்கு அரசியல் நிலைமைகள் உருவாகலாம்.

ஜெயலலிதா விடுதலை என்று வந்துவிட்டால், இங்கு மீண்டும் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும் என்று நான் நிச்சயமாக நினைக்கிறேன் (கைதட்டல்). ஏனென்றால், இதற்கு மாற்று இல்லை. பா.ஜ.க. உருவானால்தான் உண்டு. தி.மு.க.வை மாற்றாக யாரும் கருதவில்லை. ஆனால், வழக்கின் மேல்முறையீட்டில், குன்ஹாவின் தீர்ப்பே எல்லா இடங்களிலும் உறுதிப்படுத்தப்பட்டால் அதற்குப் பிறகு இங்கு அரசியல் நிலைமை என்னாகும் என்பது கூட்டணிகளையும், மக்கள் மன நிலையையும் பொறுத்தது. அதை இப்போது கணிக்க முடியாது.


கூட்டத்தின் ஒரு பகுதி….

ஆனால், தமிழ்நாட்டில் ஒரு வெற்றிடம், அதாவது ஒரு Vacuum தோன்றப் போகிறது என்று எல்லோரும் நம்புகிறார்கள். அதை நாம் நிரப்பி விடலாம் என்று ஒவ்வொரு கட்சியும் கருதுகிறது. Vacuum Cleaner -ஐப் பயன்படுத்தினால் அது குப்பை, சத்தை எல்லாவற்றையும் உறிஞ்சி விடும். அரசியலைப் பொறுத்தவரை ஒரு Vacuum உண்டாவது நல்லதல்ல. எப்படி இருந்தாலும், தமிழகத்தில் மோடி மாதிரி ஒரு தலைவர் வர வேண்டும் (கைதட்டல்). அந்த மாதிரி வந்தால், இங்கு பெரிய மாற்றம் உருவாகும். அதற்கு வாய்ப்பு இருக்கிறதா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது. இனிமேல்தான் பார்க்க வேண்டும்.

ஆனால், தி.மு.க. திரும்பவும் வளர்ச்சி கண்டு விட்டது என்று நான் கருதவில்லை. கடந்த தேர்தலின்போது அதன் செல்வாக்கு எவ்வாறு கீழ் இறங்கியதோ, அதே நிலையில்தான் அக்கட்சி உள்ளது. இனிமேல் நடக்கும் விஷயங்களால் அதற்கு வலு கூடுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சில பேர், தான் உயிரோடு இருக்கும் போதே, தன்னுடைய சொத்துக்களைப் பிள்ளைகள் பெயரில் எழுதி வைத்து விடுவார்கள். சில பேருக்கு மனது வராது (சிரிப்பு). நமது அதிகாரம் போய் விடுமோ என்று நினைத்து, உயிலாக எழுதி வைப்பார்கள். தனக்குப் பிறகு ஏதோ நடக்கட்டும் என்று நினைப்பார்கள். அந்த மாதிரி இப்போது கலைஞர், தலைமைப் பதவியைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். அவர் உயில்தான் எழுதப் போகிறாரே தவிர, இப்போதே ‘செட்டில்மென்ட்’ செய்ய மாட்டார்.

ஆனால், நான் கூறியது போல, அவருடைய அரசியல் வாழ்க்கை அசாதாரணமானது (கைதட்டல்). அவர் அரசியலில்நுழைந்தது முதல், பல இடர்பாடுகளைச் சந்தித்து, அவர் மேற்கொண்ட அரசியல் நட வடிக்கைகள், அவர் அமைத்துக் கொண்ட கூட்டணிகள், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தபோது ஒரு நிலை, இல்லாதபோது ஒரு நிலை இதெல்லாம் அவருக்கு சர்வ சகஜம். பாரதிய ஜனதா கட்சியை, ‘சாமியார்கள், பண்டாரங்கள்’ என்று பேசி விட்டு, பிறகு கூட்டணியும் வைத்துக் கொண்டார். அதன் பின்னர் அவருக்கு அது மதவாதமாகி விட்டது. அவரைப் பொறுத்தவரை ஒரு சமயத்தில் மதவாதக் கட்சி; இன்னொரு சமயம் செக்யூலர் கட்சியாகி விடும். இப்படி வேறு சில கட்சிகளும் மாறி மாறிப் பேசுகின்றன. ஆனால் அதை ஒரு தீர்மானமாக, ஒன்றுமே நடக்காததுபோல கலைஞர் கொண்டு போகிறார். ஆகவே, அவர் யாரோடு கூட்டணி வைத்துக் கொள்வார் என்று இப்போது தெரியாது.

காங்கிரஸுக்கு இப்போதைக்கு ஓட்டுக்கள் கிடைக்க சான்ஸ் இல்லை. இருந்த ஓட்டையும் வாசன் பிரித்து எடுத்துக் கொண்டு போய் விட்டார். மற்றபடி ராமதாஸ், ‘அன்புமணிதான் முதல்வர் வேட்பளார்’ என்கிறார். விஜயகாந்த், ‘நான்தான் ஸி.எம்.’ என்கிறார். திருநாவுக்கரசர், ‘ஏன் நான் வரக் கூடாதா?’ என்று கேட்கிறார். இப்படி எல்லோருக்கும் ஒரு ஆசை இப்போது வந்துள்ளது. ஆனால், இத்தனையும் நீதித்துறையின் முன் உள்ள ஒரு வழக்கின் முடிவைப் பொறுத்து உள்ளது. அதைப் பொறுத்துதான் இது எல்லாமே இருக்கிறது.
(அடுத்த பதிவில் முடியும்…)

தொகுப்பு: எஸ்.ரமேஷ்
ஃபோட்டோ: சிவா
(துக்ளக் ஆண்டு விழா டி.வி.டி. வேண்டுவோர், 04424984050 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்)

(தொடரும்)

Advertisements

One thought on “9-துக்ளக் வயது 45

  1. rjagan49 March 22, 2015 at 4:57 PM Reply

    Cho’s efforts to safeguard or take sides of Jayalalitha and making fun of Judge Kunha are disappointing. Can he say for certain that Jaya was not corrupt and she has not made a rupee more than her legal and declared income and that the case of DA is totally political with no truth at all? If so, Judge D’cunha wouldn’t have found her a culprit and sentenced her. And Jaya would not have drawn this case for 18 years. As Cho says, the case won’t be over with the ensuing HC verdict and it will be taken to SC who will stay put all sentences till the final verdict. This will enable her to come back to power. I thought the people who benefited – read made to accumulate illegal wealth – and goons and the very poor who are lured by freebies, only support her blindly and loyally. Cho supports her because of his dislike to MK. Jaya is no saint and so is MK. This is the curse on TN and the whole India has a number of parties and politicians of these types only. Some honest officials cannot change the system and succumb to the pressure. I am frustrated when people who can analyse and think also support the corrupt.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s