8-துக்ளக் வயது 45


இதன் முந்தைய பகுதி…

ஆசிரியர் சோவின் நிறைவுரை::

த்தியில் மோடி ஆட்சி வந்த பிறகு, நாட்டில் பரவலாக மக்களிடம் நம்பிக்கை வளர்ந்துள்ளது (கைதட்டல்). அதனால்தான் வெவ்வேறு மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல்களிலும் அவர்களால் (பா.ஜ.க.) வெற்றி பெற முடிந்துள்ளது. ஜம்முவில் கூட பெரும் வெற்றி பெற முடிந்திருக்கிறது (கைதட்டல்). காரணம், மோடியின் அரசு நல்ல திட்டங்களைச் செயல்படுத்தும் என்று மக்களிடம் நம்பிக்கை வளர்ந்திருக்கிறது.

மோடிக்கு விஸா தர மறுத்த அமெரிக்க அதிபர், இப்போது மோடியின் அழைப்பை ஏற்று இங்கு வருகிறார். மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில், அவர் செல்கிற நாடுகளில் எல்லாம் அவருக்குப் பெரிய அங்கீகாரம் கிடைத்து வருகிறது. மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதிநிதி என்ற முறையில் மட்டுமல்ல; எல்லா இடங்களிலும் அவர், தன்னைப் பற்றி தோற்றுவித்துள்ள அபிப்ராயம் காரணமாகவும் அந்த மரியாதை அவருக்கு அளிக்கப்படுகிறது (கைதட்டல்).

சர்வதேச அளவில் உள்ள முக்கியமான தலைவர்கள் மூன்று நான்கு பேரை வரிசைப்படுத்தினால், மோடியையும் அந்த வரிசையில் குறிப்பிட்டு எழுதாத அயல்நாட்டுப் பத்திரிகைகளே கிடையாது (கைதட்டல்). இந்த மாதிரி ஒரு அபிப்ராயத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார். அதனால் தான், அவரைச் செயல்பட அனுமதியுங்கள் என்று நான் சொல்கிறேன். அப்படி வழிவிடாமல், மதமாற்றம் போன்ற தேவையற்ற பேச்சுக்கள், பிரச்னைகளில் சிலர் ஈடுபடுகிறார்கள். மதமாற்றம் எனும்போது, ஒரு தனி மனிதர் மதம் மாறுவது என்பது ஒரு விதம்; ஒரு கூட்டமாக 100 பேரை மதமாற்றம் செய்கிறோம்; அதற்கு ஒரு விழா ஏற்பாடு செய்கிறோம் என்றெல்லாம் அறிவித்தால், அது முன்பு மீனாட்சிபுரத்தில் (நெல்லை அருகே) நடந்த சமாச்சாரத்தைப் போல் ஆகிவிடும். அது மாதிரி நடப்பது சமுதாயத்துக்கு நல்லதல்ல. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

இன்னொன்று இந்தக் கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பதற்குச் சட்டம் கொண்டு வருவது என்றால், அதை ஏன் பா.ஜ.க. தவிர பிற கட்சிகள் ஏற்க மறுக்கின்றன? (கைதட்டல்). கட்டாயப்படுத்தி மதம் மாற்றலாம் என்று இந்தக் கட்சிகள் கூறுகின்றனவா? ஆசை காட்டி மதமாற்றம் செய்தால், செய்யட்டுமே என்று கூறுகிறார்களா? அவர்களுடைய நிலை என்ன? ஏன் இந்தச் சட்டத்தை வேண்டாம் என்கிறார்கள்? என்ற கேள்விக்கு இதுவரை எதிர்க்கட்சிகளிடம் இருந்து பதிலே இல்லை. இந்த விஷயத்தில் நன்றாகச் சிக்கிக் கொண்டார்கள்.

முன்பு ஹிந்துக்கள் மட்டும் மதமாற்றம் செய்யப்பட்டபோது இது ஒரு பிரச்னையாக எழவில்லை. இப்போது பிற மதத்தினர் ஹிந்து மதத்தை ஏற்கிறார்கள் எனும்போது, இந்த மத மாற்றம் எதிர்க்கட்சிகளுக்குப் பிரச்னை ஆகி விட்டது (கைதட்டல்). இவர்களுடைய பிரச்னை ‘மறு மதமாற்றம் (Re-Conversion) தான்; மதமாற்றம் (Conversion) அல்ல.

இதில் வெங்கய்யா நாயுடு, அருண் ஜேட்லி போன்றவர்கள் ‘எல்லாவற்றையுமே தடுக்கச் சட்டம் கொண்டு வருகிறோம்’ என்று நன்றாகப் பிடித்துக் கொண்டார்கள். அதை இந்த எதிர்க்கட்சிகளால் ஏற்க முடியவில்லை. அதே சமயம், சில ஹிந்து அமைப்பினர், பொறுப்பில்லாமல் எதையாவது பிற மதத்தினரின் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் பேசுவதை எல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும். ‘ஒரு பெண் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று யாராவது பேசினால், அந்தப் பேச்சு பெண்களுக்கு எதிரானது’ என்கிறார் டி.ராஜா. சரி. ஆனால் ‘ஒருவர் நாலு திருமணம் கூடச் செய்து கொள்ளலாம்’ என்று கூறப்படுகிறதே, அது எப்படி? (பலத்த கைதட்டல்). அது ஆணுக்கு எதிரானதா? பெண்ணுக்கு எதிரானதா? அல்லது சமூகத்துக்கு எதிரானதா? (கைதட்டல்).

இதனால்தான், ‘பொது சிவில் சட்டம் தேவை’ என்கிறார் ஹெச்.ராஜா. அதில் என்ன தவறு? பொது சிவில் சட்டம் ஒரே இரவில் வந்து விடாது. அது பற்றிய விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்; அதை எல்லோரும் ஏற்க வேண்டும்; கொண்டு போய் அதைத் திணிக்க முடியாது. பெரிய இஸ்லாமிய நாடுகளிலேயே கூட சிவில் சமாசாரங்களில் ‘ஷரியத்’ சட்டம் அமலில் இல்லை. அப்படியிருக்கும்போது இங்கு சட்டம் பொதுவானதாக மாறினால் என்ன தவறு? இந்தக் கேள்விகளை எல்லாம் எதிர்கொள்ளும் போது, சிறுபான்மையினரின் மனம் புண்பட்டுவிடக் கூடாது என்றுதான் எதிர்க் கட்சிகள் பார்க்கின்றன. காரணம், ஓட்டுப் போய் விடுமோ என்ற பயம் (கைதட்டல்).

எல்லா கட்சிகளுக்குமே இந்த மைனாரிட்டி ஓட்டு தங்களிடம்தான் இருப்பது போன்ற ஒரு அபிப்ராயம். யாரைக் கேளுங்கள் – ‘அப்படிச் செய்தால் மைனாரிட்டி ஓட்டு போய் விடுமாம்’. அப்படி என்ன, ஒவ்வொரு கட்சியிடமுமா மைனாரிட்டி ஓட்டு இருக்கிறது? இந்த பயத்தினால் இந்தப் பிரச்னையை நேர்மையான முறையில் அணுக எந்தக் கட்சியுமே தயாராக இல்லை; பா.ஜ.க.வைத் தவிர (கைதட்டல்).

கூட்டத்தின் ஒரு பகுதி….

‘பண வீக்கம் குறைந்தது என்றால், அதற்கு மோடி அரசு காரணம் அல்ல. உலகம் முழுவதும் குறைந்து வருகிறது; அதனால் இங்கேயும் குறைந்துள்ளது’ என்கிறார் டி.ராஜா. அதேபோல் ‘உலகெங்கும் வறுமை இருக்கிறது; அதனால்தான் இங்கும் இருக்கிறது’ என்று டி.ராஜா சொல்வாரா? மாட்டார். பிரச்னைகள், குறைகள் என்றால், அதற்கு எல்லாம் பொறுப்பு மோடி; ஆனால் நல்லதாக எதுவும் நடந்தால் அது அவரால் அல்ல என்கிறார்கள்.

இந்த அரசு காட்டி வரும் முனைப்பு அசாத்தியமானது. இங்கே அந்நிய நேரடி முதலீடு பற்றிப் பேச்சு வந்தது. டி.ராஜா குறிப்பிட்டதுபோல், அந்நிய நேரடி முதலீட்டை குருமூர்த்தி ஏற்கவில்லை; பா.ஜ.க. விலேயே கூட சிலருக்கு அபிப்ராய பேதம் இருக்கலாம். ஆனால் நான் எப்போதுமே அதை ஆதரித்து, வரவேற்று எழுதியிருக்கிறேன். சொல்லப் போனால், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இது அனுமதிக்கப்படும் என்று எழுதியிருக்கிறேன். அதே போல், இதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பதில் எனக்கு பரம திருப்தி (கைதட்டல்).

நமக்கு வெளிநாட்டு முதலீடுகள் தேவை. அப்படி முதலீடுகள் வந்தால் நமக்கு நல்லதுதான். அதுதான் என் அபிப்ராயம். ‘அந்நிய முதலீட்டை அனுமதித்தால் நாம் நாசமாகி விடுவோம்’ என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதை நான் ஏற்கவில்லை. முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, இங்கு அதன் மூலம் தொழிற்சாலைகள் உருவானால், அது நல்லதுதானே? இன்று தேவைப்படும் தொழில் நுட்பங்கள், இந்தக் கம்பெனிகளின் வரவு மூலம் கிடைக்குமென்றால், அவற்றை நாம் கற்றுக் கொள்வதில் ஒரு தவறும் இல்லை. அப்போது இங்கு ஒரு ஆரோக்கியமான போட்டியும் உருவாகும். அது நல்லதுதான் என்று நான் நினைக்கிறேன். அந்நிய முதலீடு அதிகபட்ச அளவான 49 சதவிகிதம் போனாலும், மீதமுள்ள 51 சதவிகிதப் பங்கு நம் வசம்தானே இருக்கப் போகிறது? அதை வைத்துக் கட்டுப்படுத்தலாமே? அந்தச் சாமர்த்தியம் கூட இல்லா விட்டால் எப்படி வர்த்தகத்தில் ஈடுபட முடியும்?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு என்ன ஆகப் போகிறது என்பதைப் பொறுத்து இங்கு அரசியல் சூழ்நிலைகள் மாறலாம். இந்த வழக்கில் என்ன (முடிவு) ஆகப் போகிறது என்பது இப்போது நமக்குத் தெரியாது. அப்பீல் மனு மீது தற்போது ஹைகோர்ட்டில் விசாரணை நடைபெறுகிறது. அதன் பிறகு சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகும் வாய்ப்பு இருக்குமா, இருக்காதா என்பது நமக்குத் தெரியாது. அதனுடைய முடிவு என்னவாக இருக்கும் என்று நமக்குத் தெரியாது. ஆனால் (கீழ் நீதிமன்றத்தால்) அசைக்க முடியாத ஒரு தீர்ப்பு அளிக்கப்பட்டு விட்டதாக நான் நினைக்கவில்லை.

(ஆசிரியர் சோ அவர்களது பேச்சின் பிற்பகுதி அடுத்த பதிவில் இடம் பெறும்.)

தொகுப்பு: எஸ்.ரமேஷ்
ஃபோட்டோ: சிவா
(துக்ளக் ஆண்டு விழா டி.வி.டி. வேண்டுவோர், 04424984050 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்)

(தொடரும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s