7-துக்ளக் வயது 45


இதன் முந்தைய பகுதி…

டி. ராஜா எம்.பி., (இந்திய கம்யூனிஸ்ட்) பேச்சின் தொடர்ச்சி :

ன்றைக்கு ஆசிய நாடுகளில் ஒரு பிரச்னை அது என்னவென்றால், மதப் பெரும்பான்மை, சமயப் பெரும்பான்மை என்பது அரசியல் ஆயுதமாக மாற்றப்படுகிறது. அதுதான் விவகாரம். இந்தியாவில் அரசியல் மதப் பெரும்பான்மை இன்று ஒரு அரசியல் ஆயுதமாக மாற்றப்படுகிறது. அதேபோல் அரேபிய நாடுகளில் மதப் பெரும்பான்மை அரசியல் ஆயுதமாக மாற்றப்படுகிறது. இலங்கையில் மதப் பெரும்பான்மை அரசியல் ஆயுதமாக மாற்றப்பட்டதா, இல்லையா? (கைதட்டல்)


கருணைக்கும், அன்புக்கும் புத்தரை விட வேறு யாரையும் நாம் மேற்கோள் காட்ட முடியாது. ஆனால், அந்த புத்தரின் பெயரால் இலங்கையில் என்ன நடைபெற்றது? எனவே, மதங்கள் என்று வருகிறபோது, எல்லா மதங்களும் ஒரே நெறியைத்தான் போதிக்கின்றன. ஆனால், அது அரசியலுக்குப் பயன்படுத்தப்படுகிறபோதுதான், அந்த மதங்கள் இழுக்கைத் தேடிக் கொள்கின்றன. அந்த மதத்துக்குச் சிலர் இழுக்கைத் தேடித் தருகிறார்கள். ஹிந்து மதத்துக்கு யார் இழுக்கைத் தேடித் தருகிறார்கள்?

நானே சொல்கிறேன் – இங்கே என்னுடைய நண்பர் ஹெச்.ராஜா இருக்கிறார். பகிரங்கமாகவே நான் அவரிடம் சொல்ல முடியும். ஹிந்து மதத்திற்கு இழிவு ஏற்படுகிறதென்றால், உங்களால் (பா.ஜ.க.வால்) ஏற்படுகிறது.

நண்பர் சோ எனக்கு நல்ல நண்பர். டெலிவிஷன் விவாதங்களில் அவரோடு நான் மோதியிருக்கிறேன். நான் சொல்ல வருவது, ஹிந்து மதம் யாராலும் அழிக்கப்பட்டுவிடாது.

ஒவ்வொரு ஹிந்துப் பெண்மணியும் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஹிந்து தாய்மார்களுக்கு, எனது ஹிந்து சகோதரிகளுக்கு அவ்வாறு கட்டளையிட உங்களுக்கு என்ன உரிமை? எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்வதென்று அவர்கள் தீர்மானிக்கட்டும். இது என்ன பெண்களை நடத்தும் முறை? இது பெண்களுக்கு விரோதமான பேச்சு. இவ்வாறு யோசனை கூறுபவர்கள் பெண்களை மனிதப் பிறவியாகக் கருதாமல், குழந்தை பெறும் இயந்திரமாக நினைக்கிறார்கள். இதை நான் எதிர்க்கிறேன். இங்கே யாராவது இதை ஆதரிக்கிறீர்களா? (‘இல்லை’ என்று குரல் வந்தது).

ஒருவர் பேசுகிறார்; இந்தியாவில் பிறப்பவர்கள் எல்லாம் ஹிந்துக்கள்; ஓவைசி என்ற இன்னொருவர், இந்தியாவில் பிறப்பவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் என்கிறார். இது என்ன முட்டாள் தனம்? பிறக்கிற குழந்தை, குழந்தையாகத்தான் பிறக்கிறது (கைதட்டல்). அது ஹிந்துவாகவோ, முஸ்லிமாகவோ பிறக்கவில்லை (கைதட்டல்).

மதச்சார்பற்ற தன்மை என்றால் என்ன? மதத்தைக் கொண்டு போய் அரசியலோடு கலக்காதீர்கள். மதத்தைக் கொண்டுபோய் தேர்தலோடு கலக்காதீர்கள் (கை தட்டல்). மதம் என்பது அவரவரின் தனிப்பட்ட விஷயம். இந்த விஷயத்தில் நமது அரசியல் சட்டம் தெளிவாக இருக்கிறது. நமது அரசியல் சட்டம் என்ன சொல்கிறது? ஹெச்.ராஜா கூட இங்கு மேற்கோள் காட்டினார்.

அரசியல் சட்டத்தின் 25-ஆவது பிரிவு மதச் சுதந்திரம் பற்றிப் பேசுகிறது. யார் வேண்டுமானாலும், எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம்; ஒழுகலாம்; பிரசாரம் செய்யலாம். ஆனால், அதற்குப் பொருள் என்ன? அதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் பரப்புகிறோம் என்று ஹிந்து மதத்தை நீங்கள் தாழ்த்தி விடக் கூடாது. அம்பேத்கருக்கு ஒரு நெருக்கடி வந்தது. மத மாற்றத்துக்கு ஒரு பெரிய இயக்கத்தை முன்னெடுத்து அவர் வழிநடத்தினார். அது வரலாற்றின் ஒரு பகுதியா, இல்லையா?

அப்போது அம்பேத்கர் என்ன சொன்னார். ‘நான் ஹிந்துவாகப் பிறந்தேன்; ஹிந்துவாக நான் இறக்க விரும்பவில்லை’ என்று. ஏன்? இன்றைக்கு இந்திய சமுதாயத்தில் தலித்துக்கள், தலித்துக்களாகத்தான் இருக்கிறார்கள். ஆதிவாசிகள், ஆதிவாசிகளாகத்தான் இருக்கிறார்கள். இந்த தலித் மக்களுக்கு எங்கே விடுதலை? தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் ஏன் அதிகரித்து வருகின்றன? இதை எல்லாம் கண்டு வெகுண்டெழுந்தவர் அம்பேத்கர். எனவே, நாம் செக்யூலரிஸம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.


அரசியலை, மதத்துடன் கலக்காதீர்கள். இதைத்தான் கம்யூனிஸ்ட்டுகள் என்ற முறையில் நாங்கள் செக்யூலரிஸம் என்கிறோம். செக்யூலரிஸம் என்பதை வேறு கண்ணோட்டத்துடன் நீங்கள் அணுகினால் அது உங்களுடைய பிரச்னை. ஆனால், இந்தியாவின் பன்முக தேசியத் தன்மையை, வகுப்புவாதப் பார்வையுடன் வேறு விதமாக மாற்றியமைக்க யார் முயற்சித்தாலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

அதேபோல் இன்னொன்றையும் நான் இங்கே தெளிவாக்க விரும்புகிறேன். மதவாதப் போக்கு, எந்த மதத்தினரால் முன்வைக்கப் பட்டாலும், அதை எதிர்ப்பதில் சமரசத்திற்கு இடமின்றி உறுதியோடிருப்போம். அது ஹிந்து வகுப்புவாதமாக இருந்தாலும், இஸ்லாமிய மதவாதமாக இருந்தாலும், சீக்கிய மதவாதமாக இருந்தாலும், அது நாட்டுக்கு நல்லதல்ல. இதை நாங்கள் எதிர்ப்போம்.

இறுதியாக, நண்பர் சோ அவர்களுக்குச் சொல்லிக் கொள்வேன். தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் நாங்களும் இருக்கிறோம் (கைதட்டல்). நமது நாட்டுக்குள்ளேயே நடந்த காலிஸ் தான் தீவிரவாதத்துக்கு எதிராக நாங்கள் முன் வரிசையில் இருந்து குரல் எழுப்பினோம். பஞ்சாபில் காலிஸ்தான் தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் எங்கள் இயக்கத் தோழர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இது போல் உலகத்தின் எந்த பாகத்தில் எந்த மதத்தின் பெயரால் தீவிரவாதமாக இருந்தாலும், அதற்கு எதிராக நாங்கள் முன்வரிசையில் நிற்கிறோம். தொடர்ந்து நிற்போம் (கைதட்டல்).

ஆகவே, நண்பர்களே, இன்றைய அரசியலை வேறு கண்ணோட்டத்தில் இருந்து பாருங்கள். இந்தியாவுக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகிறது; உலகுக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. அந்த மாற்றம் என்பது, மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். நன்றி (கைதட்டல்).

(இதன் பிறகு டி.ராஜாவின் பேச்சு பற்றி ஆசிரியர் சோ, சில கருத்துக்களைக் கூறினார்.)

பா.ஜ.க.வை எதிர்த்து 69 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர் என்று முதலில் ஆரம்பித்து, பிறகு சிறிது நேரம் கழித்து என்.டி.ஏ.வை எதிர்த்து வாக்களித்திருப்பவர்கள் 59 சதவிகிதம் பேர் என்று டி.ராஜா குறிப்பிட்டார். எதிர்த்து வாக்களித்தவர்களின் அளவை வைத்துத்தான் தேர்தல் முடிவுகள் அமைய வேண்டும் என்றால், என்.டி.ஏ.வை எதிர்த்திருப்பவர்கள் 59 சதவிகிதம் பேர் – சரி; ஐ.மு. கூட்டணியை எதிர்த்து வாக்களித்திருப்பவர்கள் 80 சதவிகிதம் பேர். அப்படியானால் யார் ஆட்சிக்கு வர வேண்டும் (கைதட்டல்). இங்கு பேசிய டி.ராஜாவின் கட்சியை (கம்யூனிஸ்ட்) எதிர்த்து வாக்களித்தவர்கள் 95 சதவிகிதம் இருக்கும் (பலத்த கைதட்டல்). ஜவாஹிருல்லாஹ் இருக்கிறார். அவரது கட்சிக்கு எதிராக விழுந்த வாக்குகள் 98 சதவிகிதம் கூட இருக்கும். ஆகவே, எதிர்த்து வாக்களித்தவர்களின் அளவைக் கொண்டுதான் ஒரு ஆட்சி நிறுவப்பட வேண்டும் என்றாலும், இதே மோடி ஆட்சிதான் வந்திருக்கும் (கைதட்டல்). ஏனென்றால், அதை எதிர்த்தவர்கள்தான் குறைவு.

அவசரச் சட்டத்தை வைத்தே எல்லா காரியங்களையும் இந்த அரசு முடிக்கப் பார்க்கிறது என்று இங்கே குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் இயங்க அனுமதிப்பதில்லை. ஆனால், நாடாளுமன்றத்தின் மூலம்தான் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அதை எதிர்க் கட்சிகள் முடக்குகின்றன. இந்த நிலையில் ஒரு அரசு என்ன செய்ய முடியும்? உலகத்துக்கும், நாட்டு மக்களுக்கும் மோடியின் அரசு இவ்விஷயங்களில் முனைந்திருக்கிறது என்பதை எவ்வாறு மத்திய அரசு உணர்த்த முடியும்? இந்த அவசரச் சட்டங்கள் பிறப்பித்தல் மூலம்தான் உணர்த்த முடியும்.

இதை நம்பி உடனே முதலீடுகள் வந்து விடும் என்று கூறவில்லை. ஆனால், இந்த நடவடிக்கை இந்த அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். இதை வைத்தே அரசு எல்லாம் செய்து விடமுடியாது. நாடாளுமன்றத்தின் ஒப்புதலை நிச்சயம் பெற வேண்டும். ராஜ்ய சபையில் அரசுக்கு மெஜாரிட்டி இல்லாததால் அங்கு அமளி ஏற்படும். அங்கு முடியாவிட்டால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடத்தப்படும். அங்கே அரசால் நிறைவேற்ற முடியும். அது நடந்து விடக் கூடாது என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கவலை, அச்சம். இதுவரை ஏதோ அவசரச் சட்டங்களே பிறப்பிக்கப்படாததுபோலவும், இதுதான் முதல் முறை என்பது மாதிரியும் மோடி அரசை எதிர்க் கட்சிகள் குறை கூறுவது, ஏற்க முடியாத ஒன்று.

மத மாற்றம் பற்றி இங்கே டி.ராஜா பேசினார். மத மாற்றமே இல்லாத, மத மாற்றம் என்பதற்கே வழியில்லாத மதம் ஹிந்து மதம் (கைதட்டல்). இப்போது ஆரிய சமாஜ் போன்ற சில அமைப்புகள் ‘மறுமத மாற்றம்’ என்று ஏதோ நடத்தலாம். ஆனால், ஹிந்து மத நூல்களை எடுத்துக் கொண்டால், மத மாற்றத்துக்கு வழியும் கிடையாது, இடமும் கிடையாது. டெலிவிஷன் சேனல்களில் இது பற்றிய சில நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. ஏதோ சிலர் தொப்பி அணிந்து கொண்டு, ஹோமம் வளர்த்து, சிலரை மத மாற்றம் செய்வது மாதிரிக் காட்டுகிறார்கள். ஹிந்துயிஸத்தில் இதுபற்றி எந்தக் குறிப்பும் இல்லை. இவை யெல்லாம் இவர்களாகவே வகுத்துக் கொண்டுள்ள விதிமுறை.

ஹிந்துயிஸத்தில் இப்படி யார் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். நல்ல சாமியாரும் வரலாம், போலிச் சாமியாரும் வரலாம். உடனே சாமியாரைத்தான் பிடித்துக் கொள்கிறார்கள். அது அவர்கள் விருப்பம். ஆனால், பெரிய பெரிய மஹான்கள், துறவிகள் எல்லாம் இருக்கிறார்கள். எல்லோருக்கும் ஹிந்து மதம் இடம் அளித்துள்ளது. ஏனென்றால், ஹிந்து மதம் எப்போதும் ஒரு கூட்டத்தை நோக்கி கருத்துக்களைச் சொல்லவில்லை. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவன் எப்படி வாழ வேண்டும், அவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தர்மத்தை போதிக்கிறது.

‘நீ உன்னை உயர்த்திக் கொள்; நீ சரியாக இரு’ என்று ஒவ்வொருவருக்கும் சொல்வது ஹிந்து மதம். அப்படி ஒவ்வொருவரும் இருந்தால் அந்தச் சமுதாயமே சரியாக இருக்கும். இப்படிச் சொல்வது ஹிந்து மதம். ஆனால், பிற மதங்களோ பொதுவாகக் கூட்டத்தை நோக்கிப் பேசுகின்றன. அதனால் தான் அவர்களுக்கு மத மாற்றம் தேவைப்படுகிறது. ஆனால் ஹிந்துயிஸத்திற்கு மதமாற்றம் தேவையில்லை. பிற மதமோ, ‘நம் கடவுளை ஏற்கவில்லையென்றால் அவன் சரியில்லை; அவனை மாற்ற வேண்டும்’ என்கிறது. ஹிந்து மதம் அப்படிக் கூறவில்லை. ஹிந்துக் கடவுள்களை ஒப்புக் கொள்ளாமல், பல தெய்வங்களின் பெயர்களைக் கூட உச்ரிக்காமல், ஒருவன் ஹிந்துவாக இருந்துவிட முடியும். ஏனென்றால், அது ஒரு வாழும் வகை (கைதட்டல்).

நோக்கியா பற்றி இங்கு டி.ராஜா பேசினார். நோக்கியா இங்கிருந்து போனதற்கு பி.ஜே.பி. அரசா காரணம்? என்.டி.ஏ.வா காரணம்? முன்பிருந்த ஐ.மு. கூட்டணி அரசு, முன் தேதியிட்டு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை வரி கட்டச் சொன்னது; தாங்க முடியாமல் அந்தக் கம்பெனியை மூடிவிட்டார்கள். இதற்கு பி.ஜே.பி. அரசு எப்படிப் பொறுப்பாகும்?

மஹாத்மா காந்தி வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் வேலை செய்பவர்களை சோம்பேறிகள் என்று நான் கூறுவதாக இங்கு டி.ராஜா குறிப்பிட்டார். முதலில் அந்தத் திட்டத்தின் கீழ் ‘வேலை செய்பவர்கள்’ என்று யாராவது இருக்கிறார்களா என்று நான் கேட்கிறேன் (பலத்த கைதட்டல்). திட்டம் இருக்கிறது; அதற்கான நிதி ஒதுக்கீடு இருக்கிறது; அதை பங்கு போட்டுக் கொள்கிறவர்கள் இருக்கிறார்கள் – சரி, வேலை செய்பவர்கள் இருக்கிறார்களா? (கைதட்டல், சிரிப்பு) வேலையே கிடையாதே? பிறகு என்ன வேலை செய்வது? (சிரிப்பு) அதனால்தான் அது மோசடித் திட்டம் என்று நான் சொல்கிறேன் (கைதட்டல்). லஞ்சத்தை வளர்க்க ஒரு அருமையான திட்டம்.

கதை ஒன்று சொல்வார்கள். யாரோ ஒரு அதிகாரி ரொம்ப லஞ்சம் வாங்குகிறார் என்று. அவருக்கு சமுத்திரக் கரையில் வேலை கொடுத்து ‘ஒரு நாளைக்கு எத்தனை அலை வருகிறது? எத்தனை அலை போகிறது என்று அலை களை எண்ணும் வேலை உனக்கு’ என்று சொன்னார்களாம் (சிரிப்பு). இதில் லஞ்சம் வாங்க வழியே கிடையாது என்று நினைத்து அந்த வேலையைத் தந்தார்கள். இவர் போய் அங்கு உட்கார்ந்து கொண்டு, ‘படகை எல்லாம் யாரும் எடுக்கக் கூடாது; கடலுக்குள்ளே போகக் கூடாது; நான் அலையை எண்ணுகிறேன்’ என்று சொன்னார் (சிரிப்பு). ‘நீ படகை எடுத்துக் கொண்டு கடலுக்குள் போக வேண்டும் என்றால், எனக்கு இவ்வளவு கொடு’ என்று கேட்க ஆரம்பித்தார் (சிரிப்பு, கைதட்டல்) அங்கேயும் லஞ்சம் வாங்க ஆரம்பித்தாராம். அந்த மாதிரி வந்த திட்டம்தான், மஹாத்மா காந்தி பெயரைச் சொல்லி நடக்கும் திட்டம். இதுவும் ஒரு சமுத்திர அலைத் திட்டம் (சிரிப்பு, கைதட்டல்). ஆனால், அந்தத் திட்டத்தையும் கூட இந்த அரசு முழுமை யாகக் கைவிட்டு விடவில்லை. மாற்றி அமைப்பது பற்றிக் கூறுகிறது.


கூட்டத்தின் ஒரு பகுதி….
இங்கு தலித்களின் நிலைமை பற்றி டி.ராஜா குறிப்பிட்டார். ஹிந்து மத நூல்களில், பிறப்பினால் யாரும் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவனும் கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிராமணன், ஷத்ரியன், வைசியன்,சூத்திரன் என்று எந்த வர்ணமும் பிறப்பினால் வந்து விடுவதில்லை. அவரவர் வாழும் முறை, அவன் குணம் இதனால்தான் ஒருவன் குறிப்பிட்ட வர்ணத்தைச் சார்ந்தவன் ஆகிறானே தவிர, பிறப்பினால் அல்ல என்று திரும்பத் திரும்ப ஹிந்து மதத்தின் பல நூல்களில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

தலித்களைப் பொறுத்தவரை, அவர்கள் கிறிஸ்தவர்களானாலும், முஸ்லிம்களானாலும் தங்களது நிலை குறித்து வருத்தப்படுகிறார்கள். அங்கெல்லாம் அவர்களைச் சமமாகப் பார்க்க வேண்டியதுதானே? அவர்களை மத மாற்றம் செய்யும்போது அளிக்கும் உறுதிமொழிகளில் ஒன்று, ‘எங்கள் மதத்தில் உங்களை ஒடுக்க மாட்டோம்; சமமாக நடத்துவோம்’ என்பதுதானே? ஆனால், அந்தச் சமத்துவம் அங்கேயும் அவர்களுக்கு கிடைப்பது இல்லையே?

மத மாற்றத்தைப் பொறுத்தவரை, கட்டாயப்படுத்தியோ, ஆசை வார்த்தைகள் கூறியோ மத மாற்றம் செய்வது தடுக்கப்படுவதில் தவறே இல்லை (கைதட்டல்). இங்கே ஹெச். ராஜா சுட்டிக் காட்டியதைப் போல், கட்டாயமாக மதமாற்றம் செய்வதைத் தடுக்கும் சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டே ஏற்றுக் கொண்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மட்டுமின்றி, ஒரிஸ்ஸாவில் கூட இது தொடர்பான சட்டம் அமலில் இருப்பதாக நினைக்கிறேன். மத்தியப் பிரதேசத்தில் இதைக் கொண்டு வந்தது காங்கிரஸ் அரசுதானே தவிர, அங்கு பா.ஜ.க. அரசு வந்த பிறகு அல்ல. அதனால் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டால் அதில் தவறில்லை. ஆனால், அது துஷ்பிரயோகம் செய்யப்பட்டு விடக் கூடாது.

ஒருவர் சுயமாகச் சிந்தித்து யாருடைய போதனைகளைக் கேட்டோ, தனிப்பட்ட காரணங்களுக்காகவோ மதம் மாற முடிவெடுத்தால், அதில் தவறில்லை. அது அவருடைய விருப்பம். ஆனால், ஆசை காட்டியோ, கட்டாயப்படுத்தியோ மத மாற்றம் செய்வதைத் தடுப்பதில் தவறில்லை.

(இதன் பிறகு ஆசிரியர் சோ தமது நிறைவுரையைத் தொடங்கினார். அந்த பேச்சு அடுத்த பதிவில்…)

தொகுப்பு: எஸ்.ரமேஷ்
ஃபோட்டோ: சிவா
(துக்ளக் ஆண்டு விழா டி.வி.டி. வேண்டுவோர், 04424984050 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்)

(தொடரும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s