ஸ்ரீ மாதா ட்ரஸ்ட் V. கிருஷ்ணமூர்த்தி – சந்திப்பு அரவிந்த் சுவாமிநாதன்


சென்னை அடையாறிலுள்ள ராஜஸ்தானி தர்மசாலாவில் அமைந்திருக்கும் ஸ்ரீ மாதா ட்ரஸ்ட்டில் புற்றுநோயால் தாக்குண்ட ஏழை நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்றுவருகிறார்கள். அன்போடும் பரிவோடும் அவர்களிடம் விசாரிப்பவர் ட்ரஸ்ட் நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான திரு. வி. கிருஷ்ணமூர்த்தி. ஏழைப் புற்றுநோயாளிகளின் வாழ்க்கைக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட அவருடன், இணைந்து செயலாற்றி வருகிறார் திருமதி டி. விஜயஸ்ரீ. ‘ஜனசேவா ரத்னம்’, ராமகிருஷ்ண மடத்தின் சிறந்த சேவை நிறுவன விருது, லயன்ஸ் க்ளப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த சேவையமைப்புக்கான விருது, மதுரா ட்ராவல்ஸ் வழங்கிய ‘மதுரா மாமனிதர்’ , சுதேசி மாத இதழின் ‘துருவா’, கவி ஓவியா இதழ் வழங்கிய மனிதநேய விருது, ராஜாஜி சேவையமைப்பின் ராஜாஜி விருது, ஸ்ரீகுரு வித்யாலயாவின் ‘சேவாரத்னா’, ‘Outstanding Achiever‘, மதர் தெரசா விருது, எனக் கணக்கற்ற விருதுகளை இவர்கள் பெற்றுள்ளனர். நோயாளிகளின் மகிழ்ச்சியே தமது மகிழ்ச்சி என்று கர்மயோகிகளாக வாழ்ந்துவரும் இவர்களைத் தென்றலுக்காக நண்பர் அரவிந்த் சுவாமிநாதன் சந்தித்தார். அந்த உரையாடலிலிருந்து…

தென்றல்: ஸ்ரீ மாதா ட்ரஸ்ட் ஆரம்பித்தது எப்போது, அதை ஆரம்பித்ததன் பின்புலம் என்ன?

கிருஷ்ணமூர்த்தி: இப்போது நாங்கள் இயங்கிவரும் இந்த இடம் அரசாங்கத்தால் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டுக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டது. இதில் ஒரு நான்குமாடிக் கட்டிடத்தை ராஜஸ்தான் தனவந்தர்கள் 150 பேர் கொடுத்த நிதியைக் கொண்டு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டினர் கட்டினார்கள். இந்தியாவின் பலபகுதிகளிலிருந்தும் ஏழை புற்றுநோயாளிகள் சென்னைக்கு வந்து தங்கி, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக இந்தக் கட்டிடம் கட்டப்பட்டது. 1999 மே மாதம் திறந்துவைக்கப்பட்டது. ஆனால் திறந்து ஒருவருடம் ஆகியும் இதை முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை. காரணம், இதை நடத்த அதிக நிதி தேவைப்பட்டதுதான். அனுபவமும் மனிதாபிமானமும் வாய்ந்த சரியான நோக்கமுடைய ஒரு சேவையமைப்பு இதனை நடத்துவதற்குத் தேவைப்பட்டது. அது கிடைக்காமல் ஒரு வருடகாலம் பூட்டிக்கிடந்தது.

அதுகண்டு வருந்திய கேன்சர் இன்ஸ்டிட்யூட்டின் நிர்வாகத்தலைவர் டாக்டர் வி. சாந்தா மற்றும் ராஜஸ்தான் அசோசிஷேயனைச் சேர்ந்தவர்கள், காஞ்சி சங்கராசாரியார் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளைச் சந்தித்து இதனை நடத்தித்தர வேண்டிக்கொண்டனர். நான் காஞ்சிமடத்தின் சிஷ்யன். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 35 ஆண்டுகள் பணியாற்றியவன். அங்கு வேலை செய்யும்போது பல்வேறு சமூகநலத் திட்டங்களுக்காகக் காஞ்சிமடத்தை அணுகியதுண்டு. அவர்கள் அமைத்த பள்ளிக்குச் செயலாளராக இருந்து, இயன்ற அளவு நற்பணிகளைச் செய்திருக்கிறேன். அவ்வாறு பெரியவரின் அன்புக்குப் பாத்திரமானவன் நான்.

அவர்கள் அணுகியதும், பெரியவரும், “கேன்சர் இன்ஸ்டிட்யூட் நற்பணிதானே, ஏழைகளுக்கு உதவுவதைவிட வேறென்ன தர்மகாரியம் இருக்கமுடியும்? அவசியம் செய்வோம்” என்று உறுதியளித்துவிட்டு என்னை அழைத்தார். “உன் வேலையை விட்டுவிட்டு இதன் பொறுப்பை ஏற்றுக்கொள்” என்று சொன்னார். பெரியவரின் உத்தரவைக் கடவுளின் உத்தரவாக ஏற்று நானும் வேலையை விட்டேன். பின், “பெரியவா, நான் முழுமையாக இதில் இறங்குவதற்கு முன்னால் இதுபற்றி ஒரு சர்வே எடுக்க நினைக்கிறேன். 20 சதவீதம் மக்களுக்கு இலவசம்; 80 சதவீதம் பேரிடம் ஓரளவு பணம் வாங்கமுடியும் என்று சாந்தா அம்மா சொல்கிறார்கள். அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதை நான் நேரில்சென்று பார்த்து, அங்குள்ள நோயாளிகளிடம் பேசித் தெரிந்துகொண்டு வருகிறேன். அதன் பின்னர் பொறுப்பேற்கிறேன்” என்று சொன்னேன்.

இங்கு வந்து பார்த்தால் இங்கு வருபவர்கள் எல்லாமே பரம ஏழைகள் என்பதும், கட்டிய லுங்கியோடு, புடவையோடு வரும் அவர்கள், ஒருவேளைச் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுபவர்கள் என்பதும் தெரிந்தது.

தெ: அடடா.. பிறகு?

கி: நான் பெரியவாளைச் சந்தித்து, “இது ரொம்ப உசந்த தர்மம். நாம் இலவசமாகச் செய்ய முடிந்தால்தான் சாத்தியம். இல்லாவிட்டால் முடியாது” என்றேன். “எவ்வளவு செலவாகும்?” என்றார் பெரியவா. “ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் 5000 ரூபாயாவது ஆகும்” என்றேன். அது 2000 ஆண்டுப்படி கணக்கு. பெரியவர், “நான் ஏகவஸ்திரதாரி ஆச்சே! தினம் 5000 ரூபா உனக்கு எப்படிக் கொடுக்கமுடியும்?” என்றார். நான் “நீங்கள் பணம் கொடுக்கவேண்டாம். உங்கள் பரிபூரண ஆசிர்வாதத்தைக் கொடுத்தால் போதும். எனக்கு இரண்டு வரங்களை மட்டும் கொடுங்கள்” என்றேன். ‘என்ன’ என்பதுபோல் பெரியவா பார்த்தார். “நீங்கள் தினமும் மூன்றுவேளை சந்திரமௌலீஸ்வர பூஜை செய்கிறீர்கள். பூஜையில் முதல்பூவைப் போடும்போது இந்த அமைப்பு நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்” என்றேன். சிரித்தபடி அனுக்கிரகித்த பெரியவர், “சரி, சரி. இரண்டாவது வரத்தை கைகேயி மாதிரி ஏதாவது கேட்டுவிடப் போகிறாய்” என்றார். “இல்லை பெரியவா. உங்களுக்கு இஷ்டதெய்வம் திருப்பதி பாலாஜி. அந்த பாலாஜியை தரிசனம் செய்துவிட்டுத்தான் நீங்கள் எந்த நல்ல காரியத்தையும் ஆரம்பிப்பீர்கள். எப்போதெல்லாம் பாலாஜி முன்னால் நிற்கிறீர்களோ அப்போதெல்லாம் இந்த ட்ரஸ்ட் நீடூழி இருந்து ஏழைகளுக்குச் சேவை செய்யவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்” என்றேன்.

பெரியவர் நெகிழ்ந்துவிட்டார். “நீ ரொம்ப புத்திசாலிடா. பணமாக் கேட்டிருந்தாக்கூட கொடுத்திருந்திருப்பேன். ஆனால் அது காலத்தால் அழியக்கூடியது. நீ அதைக் கேட்கவில்லை. சந்திரமௌலீஸ்வரரோட அருளையும், பாலாஜியோட அருளையும், என்னோட ஆசிர்வாதத்தையும் கேட்கிறாய். நிச்சயம் எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்று அனுக்கிரகித்தார். அன்றிரவே பெரியவா திருப்பதிக்குப் புறப்பட்டார். என்னையும் உடனழைத்துச் சென்றார். திருப்பதியில் பெருமாள்முன் பெரியவா உட்கார்ந்தார். என்னையும் உட்காரச் சொன்னார். தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

Thirupathi

பெரியவா தியானத்தில் இருப்பார். கண்விழித்து என்னைப் பார்ப்பார். அவர் கண்களில் கண்ணீர் பெருகும். அதைத் துடைத்துக்கொண்டு பாலாஜியைப் பார்ப்பார். மீண்டும் தியானத்தில் ஆழ்ந்துவிடுவார். இப்படியே நள்ளிரவு 1.30 மணிமுதல் விடியற்காலை 5.30 மணிவரை பெருமாள்முன் உட்கார்ந்து கொண்டிருந்தோம். அவ்வளவு நேரம் பெருமாள்முன் உட்காரும் பாக்கியத்தை எனக்குக் கொடுத்தார். தியானம் முடித்து வெளியில் வரும்போது பெரியவா, “உன்னோட அமைப்புக்கு ‘ஸ்ரீமாதா ட்ரஸ்ட்’னு பேர் வை. ரொம்ப நன்னா வரும்” என்றார். அப்படிப் பெருமாள் சன்னதியில் பெரியவா ஆரம்பித்து வைத்தது ஸ்ரீ மாதா ட்ரஸ்ட். பெரியவா இதன் அடிப்படைச் செலவுகளுக்குப் பணம் கொடுத்தார். ஒருவருடம் கழித்து நடந்த பத்திரிகையாளர் கூட்டத்துக்கும் வந்தார். அதில் பேசும்போது, “இது ஒசந்த தர்மம். நீங்க கிருஷ்ணமூர்த்தி கையில கொடுக்கற பணம் என் கையில கொடுக்கறமாதிரி. இதைவிட ஒசந்த தர்மம் இருக்கமுடியாது” என்று சொன்னார்.

தெ: இங்கு தங்கியிருக்கும் நோயாளிகளுக்கு என்னென்ன வசதிகள் வழங்கப்படுகின்றன?

கி: அன்றைக்கு ஒருநாள் செலவு 5000 ரூபாயாக இருந்தது, இன்றைக்கு 25000 ரூபாய் ஆகிறது. அன்றைக்கு வெறும் சாப்பாடுமட்டும் தான் போட்டோம். இன்றைக்கு இங்கே தங்கியிருக்கும் நோயாளிகளுக்குச் சாப்பாடு, உடனிருப்பவருக்குச் சாப்பாடு, தங்குமிடம், மருந்து மாத்திரைகள், அவர்கள் சிகிச்சைக்கான பண உதவி, அவர்கள் திரும்பி ஊருக்குப் போகும்போது ஒரு மாதத்துக்கான மருந்து மாத்திரைகள் எல்லாம் தருகிறோம். பஸ் சார்ஜ்கூட இல்லாத ஏழைகள் என்றால் அதற்கு, குடும்பமே நடத்தமுடியாத பரம ஏழையாக இருந்தால் அதற்கான உதவி, குழந்தைகள் படிக்க உதவி என்று இன்றைக்கு ஏறத்தாழ ஒன்றரைக் கோடி ரூபாய்க்குமேல் வருஷத்திற்குச் செலவாகிறது. இறையருளால், பொதுமக்களின் கருணையால் இன்றளவும் ஒருநாள்கூடத் தடங்கல் இல்லாமல் நற்பணி தொடர்கிறது. இதுவரை 3 லட்சம் பேர் இங்கு தங்கிச் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள்.

தெ: இவர்களுக்குத் தரப்படும் உணவு…?

கி: காலை 6.00 மணிக்கு காபி. 7.30 மணிக்கு இட்லி, கிச்சடி, சாம்பார். மதியம் இரண்டு காய், சாம்பார், ரசம், கறி, கூட்டு, மோர் என்று காய்கறி உணவு. மதியம் 3.30 மணிக்கு டீ, சுண்டல். கேன்சர் நோயாளிகளுக்கு கொத்துக்கடலை சுண்டல் அவசியம் தேவை. அதில் நிறையப் புரதம் இருக்கிறது. ரேடியேஷன் தெரபியால் அவர்கள் உடல் மிகவும் பலவீனம் அடைந்துவிடும். அதனால், விட்டமின், புரோட்டீன், மினரல்ஸ் என்று சத்துமிகுந்த உணவுகள் தேவைப்படும். அது வழங்கப்படுகிறது. மாலை 6:30க்கு கூட்டுவழிபாடு. 7.30க்குக் கலவை சாதம், ஒரு காய், ரசம், மோர் சாதம் கொடுக்கிறோம். நோயாளிக்கும், உதவியாக இருப்பவருக்கும் இதை இலவசமாகவே கொடுக்கிறோம். நோயாளி குழந்தையாக இருந்தால் தாய், தந்தை இருவருமே உடனிருக்க அனுமதிக்கிறோம். ஏனென்றால் ஒரு சமயம் குழந்தை அம்மா சாப்பாடு ஊட்டவேண்டும் என்று அடம் பிடிக்கும். ஒரு சமயம் அப்பா இருந்தால்தான் மாத்திரை சாப்பிடுவேன் என்று அடம்பிடிக்கும். அவர்களுக்கும் உணவு இலவசம். சிலசமயம் நோயாளிகளுக்கு ஸ்பெஷல் டயட்ஸ் டாக்டர்கள் எழுதிக் கொடுத்திருப்பார்கள். அவர்களுக்கு அதையும் கொடுக்கிறோம். அதுபோலப் பண்டிகைகள் எப்படி அவரவர் வீட்டில் கொண்டாடுவார்களோ அதேபோல இங்கும் கொண்டாடப்படும். தீபாவளி, பொங்கலுக்கு புத்தாடை, இனிப்பு எல்லாம் நோயாளி, உதவியாளர் என எல்லாருக்கும் உண்டு. என் பேரன் என்ன சாப்பிடுவானோ அதே உணவு இவர்களுக்கு இங்கே உண்டு.

ஒரு வாரம் இதை நடத்தக் கையில் பணம் இருக்கும், அப்புறம் இருக்காது. ஆனால் நாங்கள் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. எப்போது சந்திரமௌலீஸ்வரரும் பாலாஜியும் உத்தரவாதம் கொடுத்து இதை ஆரம்பித்தேனோ, அப்போதே இது அவர்கள் பொறுப்பாகி விட்டது. ஏன் நான்தான் எல்லாவற்றையும் செய்வதாக நினைத்து வீண் கவலைப்பட வேண்டும்? எல்லாம் அவர்கள் பொறுப்பு. அவர்கள்தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறார்கள்.

இந்த நேர்காணலை முழுமையாகப் படிக்க… (தென்றல் மாத இதழ் – மார்ச் 2015)

http://tamilonline.com/thendral/article.aspx?aid=9925

இந்தப் பேட்டியை உங்கள் நண்பர்களுக்கு, உறவுகளுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்களின் முகவரியைக் கொடுங்கள். நாங்கள் அவர்களுக்கு இதுபற்றிய கைப்பிரதிகளை அனுப்பிவைக்கிறோம்.

எங்களோடு எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம்.

மின்னஞ்சல்:
கிருஷ்ணமூர்த்தி – vkrishnamoorthy.smt@gmail.com
விஜயஸ்ரீ – dvijayasree.smcc@rediffmail.com

தொலைபேசி – +91 44 2442 0727

அஞ்சல் முகவரி:
Sri Matha trust,
Mohandevi Hirachand Nahar Rajasthani Dharmasala,
Old Cancer Institute,
East Canal Bank Road,
Gandhi Nagar, Adyar,
Chennai – 600020,
Tamil Nadu

Srimatha cancer care,
No.466, 3rd Avenue, Indira Nagar,
Chennai – 600020, Tamil Nadu, India.

தொலைபேசி:  (+91) 2491 2308, 2441 3233

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s