6-துக்ளக் வயது 45


இதன் முந்தைய பகுதி…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா எம்.பி. பேச்சு: துக்ளக் விழாவில் நான் கலந்து கொள்வது இதுதான் முதல் முறை. நண்பர் சோ அவர்கள் இந்தியாவில், தமிழகத்தில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒரு அரசியல் விமர்சகர். அதன் காரணமாக அவர் சொல்கிற கருத்துக்களை எல்லாம் ஏற்றுக் கொள்பவன் அல்ல நான் (சிரிப்பு, கைதட்டல்). அவருடைய கருத்துக்களுக்கு மதிப்பளிக்கிறேன். ஆனால், அதை ஏற்றுக் கொள்கிறேன் என்பது அதற்குப் பொருள் அல்ல. நான் ஒரு கம்யூனிஸ்ட் என்கிற முறையில் உங்களை எதிர்கொள்கிறேன். இன்றைய அரசியல் நிலை குறித்து அறிவார்த்தமாகப் பேசுகிற கூட்டமாகத்தான் இதை நான் கருதுகிறேன். ஒரு கட்சிக்குப் பிரசாரம் செய்கிற கூட்டமாக இதனை நான் கருதியது இல்லை (கைதட்டல்). அந்தக் கட்சியின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதை விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் இல்லை என்று நான் கருதுகிறேன்.


இன்றைக்கு கம்யூனிஸ்ட்டுகள் மீது கூடப் பல கருத்து அவதூறுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ‘கம்யூனிஸ்ட்டுகள் வறுமை தத்துவத்தைப் பேசுபவர்கள்; அவர்களுடைய தத்துவம் என்பது வறுமையைப் பற்றியது. இது தான் கம்யூனிஸ்ட்டுகளின் கொள்கை’ என்று கூறுவார்கள். அப்போதுதான் கம்யூனிஸ்ட் தத்துவத்தின் மூல நாயகர்கள் என்ன சொன்னார்கள் என்றால், ‘இப்படி கூறுபவர்களிடம் ஒரு வறுமை இருக்கிறது; அந்த வறுமை, தத்துவத்தின் வறுமை. எங்களுடையது, வறுமை பற்றிய தத்துவம் அல்ல; விமர்சிப்பவர்களுக்குத் தான் தத்துவம் இல்லாத வறுமை இருக்கிறது’ என்று சொன்னவர் காரல் மார்க்ஸ். கருத்துக்குக் கருத்து நாம் எதிர்கொள்ள வேண்டும். அதுதான் அறிவியல்.

இன்றைக்கு இந்தியாவின் அரசியல் நிலை எப்படிப்பட்டதாக இருக்கிறது? முதலில் இந்தியாவை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா ஒரு ஒற்றைப் பரிமாண நாடு அல்ல; ஒரு குறிப்பிட்ட மதத்திற்குச் சொந்தமான நாடு அல்ல; ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குச் சொந்தமான நாடு அல்ல; ஒரு குறிப்பிட்ட கலாசாரத்துக்குச் சொந்தமான நாடு அல்ல; இந்தியா, பன்முகத்தன்மை கொண்ட நாடு. அதனால்தான், வேற்றுமையில் ஒற்றுமையை நாம் எப்படிப் போற்றுகிறோமோ, அந்த அளவுக்கு இங்கு இருக்கும் வேற்றுமைக்கும் மதிப்பளித்துப் போற்ற வேண்டும். அதுதான் இந்திய ஜனநாயகத்தின் பலம்.

ஆனால், இன்றைக்கு இந்தியாவைச் சிலர் மாற்றி அமைக்க வேண்டும் என்று பார்க்கிறார்கள். அவர்கள் கடந்த காலத்திலும் முயன்று பார்த்தார்கள்; இன்றும் அவர்கள் முயற்சிக்கிறார்கள். இந்திய தேசியம் என்பது மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதைத்தான் பா.ஜ.க.வின் ஹெச். ராஜா, ‘இப்படித்தான் நாங்கள் மாற்றி அமைக்க விரும்புகிறோம்’ என்று சொல்லி விட்டுப் போயிருக்கிறார். இதனை எதிர்கொள்ளும் ஆற்றலும், துணிச்சலும் எனக்கும் இருக்கிறது; என்னுடைய தத்துவத்திற்கும் இருக்கிறது.

இன்றைக்கு இந்தியாவினுடைய அரசியல் என்று பார்க்கும்போது, இந்தியாவின் சமூக பொருளதார நிலைகளை நாம் மதிப்பீடு செய்ய வேண்டும். 2014ல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது உண்மை. ‘பா.ஜ.க.வுக்கு வேண்டுமானால் 31 சதவிகிதம் இருக்கலாம்; என்.டி.ஏ.வுக்கு ஆதரவு 41 சதவிகிதம்’ என்று பா.ஜ.க.வினர் சொல்கிறார்கள். ஆனால், மொத்தத்தில் 59 சதவிகிதம் பேர் உங்களுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். இது உண்மையா, இல்லையா?

நம்முடைய தேர்தல் முறை எப்படி இருக்கிறது, தேர்தல் சட்டங்கள் எப்படி அமைந்துள்ளன என்பது வேறு. தற்போதைய தேர்தல் முறை குறித்து, எங்களுக்கும் சில மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. அர்த்தமுள்ள வகையில் தேர்தல் சீர்திருத்தம் தேவை என்று நாங்கள் கூறி வருகிறோம். அது தனியான ஒரு விஷயம். அந்த விவாதத்துக்கு நாங்கள் தயார். 41 சதவிகிதம் பேர் என்.டி.ஏ.வை ஆதரித்திருக்கிறார்கள் என்று நீங்கள் கூறிக் கொள்ளும்போது, 59 சதவிகிதம் பேர் என்.டி.ஏ.வை ஆதரிக்கவில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் வலிமை.

இன்றைக்கு இந்தியாவின் நிலை என்ன? இதில் முக்கியமானது, இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது பணவீக்கம் அதிகமாக இருந்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்தன. அதனால் மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீது கோபம் இருந்தது. இது எல்லோருக்கும் தெரியும். இன்றைக்கு, பணவீக்கம் பூஜ்யம் என்ற நிலைக்கு வந்து விட்டது என்கிறார்கள். பணவீக்கம் பூஜ்யம் என்ற நிலையை எட்ட என்ன காரணம்? இந்தப் பெருமை மோடிக்கோ, என்.டி.ஏ. அரசுக்கோதான் சேரும் என்று நீங்கள் கூறிக் கொள்ள முடியுமா? இன்று வெளியாகியுள்ள பத்திரிகைகளைப் பாருங்கள்.

இங்கே குருமூர்த்தி உட்கார்ந்திருக்கிறார். பல பொருளாதார நிபுணர்கள் எழுதியிருக்கிறார்கள். ‘சூழ்நிலை மோடிக்குச் சாதகமாக அமைந்து விட்டது, அவரது அதிர்ஷ்டம்’ என்று எழுதுகிறார்கள். என்ன காரணம்? பணவீக்கம் குறைந்துள்ளது. அதற்கு வேறு காரணங்கள். சர்வதேசச் சூழ்நிலை. ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸின் தீவிரவாதச் செயல்பாடுகள் காரணமாக, கச்சா எண்ணெயின் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக பணவீக்கம் குறைந்துள்ளது. இங்கு இருக்கும் குருமூர்த்தி இதை ஏற்கிறாரா, இல்லையா என்று கேட்டு பாருங்கள். பிற பொருளாதார நிபுணர்கள் கூறும் இக்கருத்தை அவர் ஏற்கிறாரா, இல்லையா என்று கேட்டுப் பாருங்கள்.

ஆகவே, பொருளாதாரத்தைநாம் விவாதிக்கிறபோது அறிவார்ந்த முறையில் நாம் அணுக வேண்டும். ஏதோ பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன், நாம் தமிழ்நாட்டில் பேசுவதுபோல, பாலாறும் தேனாறும் இங்கே பாய்ந்து ஓடுகின்றன என்று யாரும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். கற்பனை நல்லது; ஆனால் கற்பனையே வாழ்க்கை ஆகி விடாது. மன்மோஹன் சிங் பிரதமராக இருந்தபோது, சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ‘புதிய பொருளாதாரக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று நாங்கள் வலியுறுத்தினோம். காங்கிரஸ் அதைக் கேட்கவில்லை. பா.ஜ.க. இதற்குத் தயாராக இருக்கிறதா?

நாம் என்ன சொன்ன போதிலும், ‘இந்தியாவில் வறுமை வளர்ந்திருக்கிறது; வறுமையில் வாடுகிற மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது’ இதை குருமூர்த்தி மறுப்பாரா? டைம்ஸ் ஆஃப் இந்தியா சில நாட்களுக்கு முன் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளது. எந்தெந்த நாடுகளில் வறுமையில் வாழுகிற மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று அந்தப் பட்டியல் கூறுகிறது. அதில் இந்தியா ஒரு நாடாக இருக்கிறது. என்ன காரணம்?

அமெரிக்கா இன்று பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் பல இன்று பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன என்று சொல்கிறார்கள். அதுபோல் ஆசிய நாடுகள், பல நாடுகள் நெருக்கடியில் உள்ளன. அந்த நெருக்கடியிலிருந்து நாம் மீளவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிப் பாருங்கள். ‘வேலைவாய்ப்பின்மை என்பதே இங்கு இல்லை; இளைஞர்களுக்கெல்லாம் ஒளிமிக்க எதிர்காலம்’ என்று யாராவது சொல்ல முடியுமா?

ஆகவே, வறுமை, வேலைவாய்ப்பின்மை இவை எல்லாம் தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவுகள் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிரச்னைகளை எப்படி மோடி அரசு எதிர்கொள்கிறது? இந்த ஆட்சியில் எல்லாவற்றுக்குமே அவசரச் சட்டம்தான். ஆட்சிக்கு வந்த 7 மாதங்களில் பல அவசரச் சட்டங்கள். குறிப்பாக, அன்னிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு வர வேண்டும் என்பதற்கு ஒரு அவசரச் சட்டம். ஒரு முறை குருமூர்த்தி என்னிடம், ‘ராஜா, உங்களுடைய போரில் பாதியை நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம்’ என்றார். அவரிடம் நான், ‘எங்கள் போராட்டத்தில் பாதியையா? என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நாங்களும் பன்னாட்டு முதலாளிகளை அனுமதிப்பதை எதிர்க்கிறோம். நீங்களும் எதிர்க்கிறீர்கள்’ என்றார். ‘உள்ளூர் விஷயங்களில் நமக்குள் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம், அது வேறு’ என்றார். அவரோடு நான் உடன்படுகிறேன்.

இன்ஷ்யூரன்ஸ் துறையில் அன்னிய முதலீடு, பாதுகாப்புத் துறையில் அன்னிய முதலீடு, ரயில்வே துறையில் அன்னிய முதலீடு இப்படி எல்லா துறையிலும் அதுவும் 49 சதவிகிதம். ப்ரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது நான் ராஜ்யசபையில் கேட்டேன்; ‘எத்தனை சதவிகிதம் அனுமதிக்கிறோம் என்பது பிரச்னை அல்ல; இந்தக் கொள்கைதான் பிரச்னை; அரசின் இந்தக் கொள்கை சரியென்று கருதுகிறீர்களா?’ என்று கேட்டேன்.


அதே கேள்வியை நான் இன்றைய நிதியமைச்சர் அருண் ஜேட்லியையும் பார்த்துக் கேட்கிறேன். ‘நீங்கள் அன்னியக் கம்பெனிகளைத் திருப்திப்படுத்த அவசரச் சட்ட வழியைத் தேர்ந்தெடுக்கிறீர்களா? நாடாளுமன்றத்தை ஒதுக்கி விட்டு, அவைக்கு வெளியில் வைத்து எதையும் செய்ய நினைக்கிறீர்கள். இது என்ன முறை?’


கூட்டத்தின் ஒரு பகுதி….
இன்று இந்தியா மட்டுமல்ல; உலக நாடுகளின் இந்தக் கொள்கைகள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையில் சொல்கிறேன்; ‘கஞ்சி குடிப்பதற்கு இலார்; அதன் காரணங்கள் இவையென்னும் அறிவும் இலார்; நெஞ்சு பொறுக்குதிலையே’ இப்படி நெஞ்சு பொறுக்காமல்தான், சமூகத்தில் ஏன் இந்த ஏற்றத்தாழ்வுகள்? ஏன் பெரும்பான்மையான மக்கள் வறுமையின் பிடியில் இருக்கிறார்கள்? முதலாளித்துவ பொருளாதாரத்தை ஆராய்ந்து, மார்க்ஸ் கொண்டு வந்ததுதான், ‘மூலதனம்’. இன்று இன்னொரு மூலதனம் வந்திருக்கிறது. இங்கு வந்திருப்பவர்கள் அதைப் படித்திருக்க வேண்டும். தாமஸ் பிக் கட்டி கேபிடல் முன்னுதாரணம் இல்லாத வகையிலான சமூக ஏற்றத்தாழ்வு; இதற்குக் காரணம், சொத்துக்கள் மிகச் சிலரிடம் குவிந்துள்ள நிலைமை; இதைச் சொன்னது, தாமஸ் பிக்கட்டியின் மூலதனம். இன்று இந்தியாவில் பார்ப்பது, முன் எப்போதும் இல்லாத ஏற்றத்தாழ்வு. இதற்குத் தீர்வு என்ன? இதிலிருந்து எப்படி வெளியே வரப் போகிறோம்?

ஒரு கட்சி ஆட்சிக்கு வரலாம், போகலாம். ஆனால், நாடு இருக்க வேண்டும். மக்கள் இருக்க வேண்டும். அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் (கைதட்டல்). அதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? இது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இதுதான் நாம் அரசியலைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டிய முறை. அரசியல் என்பது வெறும் வாக்குகளைக் கேட்பது மட்டும் அல்ல; அரசியலையும், பொருளாதாரத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. நாம் விவாதித்துக் கொண்டிருப்பது பொருளாதார அரசியல். அரசியலும், பொருளாதாரமும் வேறு வேறு அல்ல. அந்தப் பின்னணியில் இந்தியாவின் இன்றைய அரசியலை நாம் பார்க்க வேண்டும்.

இன்று பாரதிய ஜனதா கட்சி ‘மேக் இன் இந்தியா’ என்கிறது. இங்கே நோக்கியா மூடப்படுகிறது (கைதட்டல்). நீங்கள் ‘மேக் இன் இந்தியா’ என்கிறீர்கள். நாம் உண்மையிலேயே இந்தியாவில் உருவாக்கப் போகிறோமா? அல்லது உடைக்கப் போகிறோமா? காலம் சொல்லும். ஆனால், ‘இந்தியாவிலேயே உற்பத்தி’ என்ற கருத்துக்குப் பின்னால் உள்ள சிந்தனை என்ன? ‘தொழில்கள் தொடங்குவதை எளிமைப்படுத்துவது’ என்ற கருத்தின் பின்னால் இருக்கும் சிந்தனை என்ன?

நண்பர் சோ, ‘தொழிலதிபர்கள், முதலாளிகளை நான் குற்றம் சொல்ல மாட்டேன்; அவர்கள் நேர்மையானவர்கள், உழைப்பாளிகள்’ என்று சொல்கிறார். உண்மை. ஆனால், மஹாத்மா காந்தி பெயரால் இருக்கும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தின்கீழ் பணியாற்றுகிற சாதாரண மக்களை சோம்பேறிகள் (கைதட்டல்). ஆனால், முதலாளிகள் நேர்மையானவர்கள் என்கிறார். நான் கேட்கிறேன்; ‘கொடுக்கிற தெய்வம் கூரையைக் கிழித்துக் கொடுக்கும்’ என்று தமிழ்நாட்டில் சொல்வார்கள். ஆண்டவன் மீது எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆண்டவனை நம்புகிற மக்களோடு வாழ்கிறவன் நான். ‘கொடுக்கிற தெய்வம், கூரையைக் கிழித்துக் கொடுக்கும்’ சரி, கூரையே இல்லாத மக்கள், வறுமையில் வாழ்கிறார்கள் (கைதட்டல்). ஆனால் கோடி கோடியாகச் சிலருக்கு பணம் போய்ச் சேருகிறது – எப்படி? இதைத்தான் நான் கேட்கிறேன். இதை மாற்றுவதற்கு என்ன கொள்கை பா.ஜ.க.விடம் இருக்கிறது? காங்கிரஸிடம் இருந்ததில்லை. பா.ஜ.க.விடம் இருக்கிறதா?

ஆனால், இப்போது புதிதாக என்ன வருகிறது? மத மாற்றம். இன்னொன்று ‘லவ் ஜிஹாத்’. எல்லா மதங்களும் அன்பையும், கருணையையும்தான் போதிக்கின்றன (பலத்த கைதட்டல்). இயேசு பெருமான் என்று வருகிற போது, ‘உன்னைப் போல்அயலாரையும் நேசி’ இதுதான் இயேசு சொன்னது. முஹம்மது நபியும் கூறினார். ஏதோ ஹிந்து மதம் மட்டும்தான் இதைப் பேசுகிறது என்று நாம் புரிந்து கொள்ளக் கூடாது. எல்லா மதங்களும் அன்பையும், சகிப்புத் தன்மையையும் தான் போதிக்கின்றன.

(டி.ராஜா பேச்சின் தொடர்ச்சி அடுத்த பதிவில்…)

தொகுப்பு: எஸ்.ரமேஷ்
ஃபோட்டோ: சிவா
(துக்ளக் ஆண்டு விழா டி.வி.டி. வேண்டுவோர், 04424984050 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்)

(தொடரும்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s