ரூ.2,000 கோடி முறைகேட்டில் சிக்கியதா நாளந்தா பல்கலை? வேந்தர் பதவியை துறப்பதாக அமர்தியா சென் நாடகம்


சர்வதேச நாளந்தா பல்கலைக் கழகத்தின் வேந்தர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக, பிரபல பொருளாதார அறிஞரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்தியா சென் அறிவித்திருப்பது, கல்வி வட்டாரத்தைக் கடந்து, அனைத்து தரப்பிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பீகாரில், பல நுாறு ஆண்டுகளுக்கு முன், குப்தர்களால் அமைக்கப்பட்ட பழம் பெரும் பல்கலைக் கழகம் நாளந்தா. வெளி நாடுகளில் இருந்தும் பலர், அங்கு வந்து கல்வி பயின்று சென்ற வரலாறு உண்டு.கடந்த ஐ.மு., கூட்டணி ஆட்சி யின் போது, இந்தப் பல்கலைக் கழகத்தை புதுப்பித்து, அதன் கல்வி எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என, முயற்சி எடுக்கப்பட்டது. குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், இந்த விஷயத்தில் மிகுந்த ஆர்வம் காட்டினார். எனவே, இந்தப் பல்கலை, இந்தியாவைக் கடந்து பல நாடுகளிலும் கல்வி சேவையை தொடர ஏற்பாடு செய்யப்பட்டது. புதுப்பிக்கப்பட்டு, விரிவுபடுத்தப்பட்ட பல்கலையின் வேந்தராக, பிரபல பொருளாதார வல்லுனர் அமர்தியா சென், நியமிக்கப்பட்டார்.

அவர் நியமிக்கப்பட்டது முதலே, பல சர்ச்சைகள் அவ்வப்போது கிளம்பின. எல்லாமே, அமர்தியா சென்னை மையமாக வைத்து கிளம்பியதால், அப்போதைய மத்திய அரசும் அவர் மீது கடும் எரிச்சல் அடைந்திருந்தது.இப்பல்கலையின் நிர்வாகக் குழுவுக்கு ஆண்டுக்கு, 50 லட்சம் ரூபாயும், பேராசிரியர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுவதாகவும், சலுகைகளும், செலவுகளுமாக பல கோடி ரூபாய் வாரி இறைக்கப்படுவதாகவும், குற்றச்சாட்டு எழுப்பினர். இதன் பின்னணியில், வேந்தராக இருக்கும் அமர்தியா சென் தான் காரணம் என்றும், அப்போதே பலரும் அவர் மீது குற்றப் பட்டியல் வாசித்தனர்.

கொந்தளிப்பு:

இதனால், கடந்த, 2014 ஜூலையில் விரிவுபடுத்தப்பட்ட நாளந்தா பல்கலையின் செயல்பாடுகள் குறித்து, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி உட்பட பலரும், அமர்தியா சென்னுக்கு எதிராக கொந்தளித்தனர்.அதைத் தொடர்ந்து, தன்னாட்சி அமைப்பான நாளந்தா பல்கலைக்கான நிதி ஒதுக்கீடு, செலவினங்கள் குறித்து மத்திய அரசு, திடீர் ஆய்வுகளை நடத்தியது. இதனால், மத்திய அரசு மீது தன் கோபத்தை அப்போதே கொட்ட ஆரம்பித்தார் அமர்தியா சென்.’உலகின் பழமையான கல்வி அமைப்புகளில் ஒன்றாக கருதப்படும் நாளந்தா பல்கலையின் செலவுகளில், மத்திய அரசு தேவையில்லாமல் தலையிட்டு, ஆய்வுகளை மேற்கொண்டால், பல்கலையின் தலைவர் பொறுப்பில் இருந்து நான் விலக தயார்’ என, மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார்.அதை அப்போதைய அரசு கண்டு கொள்ளாததோடு, தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள, தன் குரல் எடுபடவில்லை என, அமைதியானார் சென். 


கடந்த லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் பிரதமர் நரேந்திர மோடி குறித்து, கடுமையான விமர்சனங்களை வைத்தார் அமர்தியா சென்.கடந்த ஜூலை மாதத்தோடு, அமர்தியா சென்னின் வேந்தர் பொறுப்பு வகிக்கும் காலம் நிறைவு அடைந்தது. ஆனாலும், கடந்த ஜனவரியில் கூடிய பல்கலையின் ஆட்சி மன்றக் குழு மீண்டும், இரண்டாவது முறையாகவும் அமர்தியா சென்னையே, வேந்தராக நியமிக்க முடிவெடுத்தது.அந்த முடிவை, வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.

ஒப்புதல் தரவில்லை:

ஆனால், ‘ஒரு மாதத்துக்குப் பின்னும் இந்த முடிவிற்கு, மத்திய அரசு தரப்பில் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இதனால், இனியும் அப்பொறுப்பில் நான் தொடர விரும்பவில்லை’ என, காரணம் சொல்லி, பொறுப்பில் இருந்து தான் விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கிறார் சென்.

இது தொடர்பாக, வெளியுறவுத்துறை செயலர் அக்பருதீன் கூறியதாவது: எதையும் அரசியலாக்கலாம் என, அமர்தியா சென் நினைக்கிறார். கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மத்திய அரசு எப்போதும் கவனமாகவே செயல்படுகிறது. நாளந்தா பல்கலையின் வேந்தராக, இரண்டாவது முறையும் ஆட்சி மன்ற குழு தேர்ந்தெடுத்த தகவல், இன்னமும் முறையாக எங்களுக்கு வந்து சேராததால், உடனடியாக, அது குறித்து முடிவெடுக்கவில்லை. அதற்குள், குற்றம்சாட்டுவது சரியல்ல. இவ்வாறு, அக்பருதீன் கூறினார்.

 

வெளியுறவுத் துறை கண்காணிப்பு:

சுமார், 3,000 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிர்மாணிக்கப்பட்ட நாளந்தா பல்கலை, மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் ஒரு சர்வதேச பல்கலையாக இருந்தாலும், பல நாடுகளையும் மையமாகக் கொண்டு இயங்குவதால், இந்த பல்கலையை கண்காணிக்கும் பொறுப்பு, வெளியுறவுத் துறைக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. நிதி ஒதுக்கீடு விவகாரம் உள்ளிட்ட, பல்கலையின் அத்தனை செயல்பாடுகளையும் வெளியுறவுத் துறையே கண்காணிக்கும். 

சர்ச்சைகளின் மறு உருவம் சென்:

அமர்தியா சென் குறித்து, இணைய தளங்களிலும், பா.ஜ., தரப்பிலும் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்:

* 3,000 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், தொடங்கப்பட்ட நாளந்தா பல்கலையின் துவக்க விழாவில், அந்த பல்கலையின் வேந்தர் அமர்தியா சென் பங்கேற்கவில்லை; அமெரிக்காவிலேயே இருந்து விட்டார்.

*அமர்தியா சென்னால், பல்கலையின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டவரும், துவக்க நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. துணை வேந்தருக்கு, ஐந்து லட்சம் ரூபாய் சம்பளம்.

* இதனால், எரிச்சல் அடைந்த, பல்கலையின் மற்றொரு முக்கிய தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாம், பதவியை ராஜினாமா செய்ததுடன், தன் கண்டனங்களை, ஒரு கடிதமாக, வெளியுறவு துறைக்கு அனுப்பினார்.

* எந்த தேர்வுமின்றி, டில்லி ஸ்ரீராம் கல்லுாரியில், துணை பேராசிரியராக இருந்த கோபா சபர்வால் என்ற பெண்ணை பல்கலையின் துணைவேந்தராக தேர்வு செய்தார் அமிர்தா சென். கோபா சபர்வாலுக்கும், 5 லட்சம் ரூபாய் சம்பளம்.

* சபர்வால், தனக்கு வேண்டிய ஆட்களை, 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரையான சம்பளத்தில் நியமித்தார்.

*அவர்களில் ஒருவர், சபர்வாலின் தோழி அஞ்சனா சர்மா. ‘ஆபிசர் ஆன் ஸ்பெஷல் ட்யூட்டி’ என்ற பெயரில், அவருக்கு, 3.5 லட்சம் ரூபாய் சம்பளம்.

மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை!

அமர்தியா சென் ராஜினாமா சர்ச்சை குறித்து, சமூக ஆர்வலர் பானு கோம்ஸ் கூறியதாவது:

* காஷ்மீர் போலவே தொலைநோக்கற்ற அசட்டு ஷரத்துகளால், அரசியல் உள் நுழைந்து மேலாண்மையை சிக்கலாக்கி இருக்கும் இன்னொன்று, நாளந்தா பல்கலைக் கழகம்.


* ‘சவுத் ஏஷியன் இன்டர்நேஷனல் யுனிவர்சிட்டி’ என்ற அடையாளத்தின் கீழ், பெருமளவு நிதியை அளிப்பது இந்திய அரசாக இருந்தாலும், அந்த நிதியை செலவழிக்கும் வரைமுறைகளில் இந்திய அரசுக்கு பங்கு கிடையாது. அதனால், மேலாண்மையிலும் ஓரளவு பங்கு தான் உண்டு.

* இந்த பல்கலையில், 2,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்து இருப்பதாக, மத்திய கணக்கு தணிக்கை துறையான – சி.ஏ.ஜி., அறிக்கை கூறுகிறது. முறைகேடு அறிக்கைக்கு சரியான விளக்கத்தை, பதவியில் இல்லாவிட்டாலும் அமர்தியா சென் சொல்ல வேண்டும்.

*அரசியல் தனமான பரபரப்பு குற்றச்சாட்டுகளை சொல்வதன் மூலம் கவனத்தை திசை திருப்ப முடியாது.

– தின மலர் நிருபர் 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s