5-துக்ளக் வயது 45


இதன் முந்தைய பகுதி…

ஹெச். ராஜா (பா.ஜ.க. தேசியச் செயலர்) : இறுதியாக ஒரு விஷயத்தை இங்கே நான் சொல்ல வேண்டும். இதை சர்ச்சைக்குரியது என்றும் சிலர் நினைக்கலாம். ஏனென்றால், இப்போது இது மிகப் பெரிய விவாதப் பொருளாகியுள்ளது. ‘மதமாற்றம்’ குறித்த சர்ச்சை. நான் கேட்பது என்னவென்றால், ‘சமத்துவம்’ என்பது இருக்குமானால், ‘பெரும்பான்மை’ அல்லது ‘சிறுபான்மை’ என்பது எங்கிருந்து வரும்? (கைதட்டல்)

இந்த நாட்டில் இதுநாள் வரை பணத்துக்காகவும், அரபு நாடுகளில் வேலைக்காகவும், ஆசை காட்டியும், அச்சுறுத்தியும் மதமாற்றம் செய்யும் சம்பவங்கள் நடக்கவில்லையா? (கைதட்டல்) இதனால்தான் – பா.ஜ.க. அல்ல – மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசே மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நண்பர் சீதாராம் யெச்சூரி, ‘மதமாற்றத் தடைச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது’ என்கிறார். நிச்சயமாக இல்லை. ‘அது சட்ட பூர்வமானதுதான்’ என்று உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.


மத நம்பிக்கைகளைப் பின்பற்றுவதும், போதிப்பதும் தவறு அல்ல என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ராமநவமியின்போது ராமாயணக் கதை சொல்கிறார்களே, அங்கு யாரும் மதம் மாற்றுவதில்லை; அது மதத்தின் போதனைகளை எடுத்துக் கூறுவது என்று தெளிவாகச் சொல்லி இருக்கிறார்கள் (கைதட்டல்). ஆக்ராவில் நடந்தது கட்டாய மதமாற்றம் என்றால், சரி அதைத் தடுக்க கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வருவோம். பெரும்பான்மை சமுதாய மக்களுக்கு இருக்கிற அச்சத்தைப் போக்க வேண்டிய கடமையும் அரசியல் கட்சிகளுக்கும், ஒரு அரசாங்கத்துக்கும் இருக்கிறது (கைதட்டல்).

1951ல் இந்தியாவில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 85 சதவிகிதம்; இன்றைக்கு 79 சதவிகிதம். அன்றைக்கு முஸ்லிம்களின் எண்ணிக்கை 9.9 சதவிகிதம்; இன்று 14.2 சதவிகிதம். நண்பர்களே இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் என்ன மாற்றம் வரும்? கேரளா மற்றும் லட்சத் தீவுகளின் பா.ஜ.க. பொறுப்பாளராக நான் இருக்கிறேன். கேரளாவில் 1901ல் 68.36 சதவிகிதமாக இருந்த ஹிந்துக்களின் எண்ணிக்கை, 2001ல் 54.47 சதவிகிதமாகக் குறைந் துள்ளது. தற்போது இந்த அளவு மேலும் குறைந்திருக்கலாம். இப்படித் தொடர்ந்தால் என்ன ஆகும்? நாடு முழுவதும் ஹிந்துக்கள் மைனாரிட்டி ஆகி விடுவார்கள் (கைதட்டல்). இதற்கு இன்னும் 100 ஆண்டுகள் அல்லது 150 ஆண்டுகள் ஆகலாம். ஆனால், இப்படி நடக்காது என்று சொல்ல முடியாது. அப்படி நடந்தால் என்ன ஆகும்? அதையும் பார்க்க வேண்டும்.

இன்று கேரளாவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை எடுத்துக் கொண்டால், ஹிந்துக்கள் நடத்துவது 157 கல்லூரிகள்; மைனாரிட்டி சமூகத்தினரின் கல்லூரிகள் 340. அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளை எடுத்துக் கொண்டால், ஹிந்துக்கள் நடத்துவது 284; மைனாரிட்டி சமூகத்தினர் நடத்துவது 7626. நில உடமை என்று பார்த்தால், ஹிந்து குடும்பத்தினருக்குச் சராசரியாக 69 சென்ட்; முஸ்லிம் குடும்பத்தினருக்கு 77 சென்ட்; கிறிஸ்துவ குடும்பத்தினருக்கு 126 சென்ட். கேரளாவில் லட்சாதிபதிகள் என்று பார்த்தால் ஹிந்துக்கள் 59; மைனாரிட்டி சமூகத்தினர் 120.


வங்கி டெபாஸிட்டுகள் என்று எடுத்துக் கொண்டால், அங்கு மக்கள் தொகையில் 54 சதவிகிதமாக உள்ள ஹிந்துக்களுடைய வங்கி டெபாஸிட், மொத்த டெபாசிட் தொகையில் வெறும் 12.5 சதவிகிதம். நாம் மைனாரிட்டி ஆகி விட்டால் என்ன நடக்கும்? காஷ்மீரில் ஹிந்துக்கள் விரட்டி அடிக்கப்பட்ட மாதிரியான சூழ்நிலை இந்தியா முழுவதும் உருவானால்…? (கைதட்டல்) காஷ்மீரில் பிரச்னை ஏற்பட்டபோது, ஹிந்துக்கள் வருவதற்கு டெல்லி இருந்தது. காஷ்மீர் போல பல மாநிலங்களில் நிலைமை உருவானால், போவதற்கு சமுத்திரத்தைத் தவிர வேறு வழியில்லை (கைதட்டல்) என்ற கவலை மெஜாரிட்டி மக்களிடம் இருக்கிறது. ஆகவே இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.

இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள நாம் மூன்று விஷயங்களில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும். முதலாவது மதமாற்றத் தடைச் சட்டம்; இரண்டாவது பொது சிவில் சட்டம் (கைதட்டல்); மூன்றாவது குடும்பக் கட்டுப்பாட்டுக்கான உரிமையை அனைவருக்கும் பொதுவானதாகக் கொண்டு வருவது (பலத்த கைதட்டல்). பாகிஸ்தானில் பல தார மணம் (Polygamy) சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டுள்ளபோது, அதை அங்கு முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள முடியும் என்றால், இந்தியாவில் (அதே சட்டம்) ஏன் கூடாது? (பலத்த கைதட்டல்) யோசித்துப் பார்க்க வேண்டும். பிரச்னையைக் கண்டு பயந்து ஓடக்கூடாது. பிரச்னையைப் புரிந்து கொண்டு, அதற்குத் தீர்வு காண வேண்டும்.

அரசியல் சட்டத்தில் பல்வேறு ஷரத்துக்கள், கல்லூரிகள் துவங்குவதில் ஹிந்துக் களுக்கு எதிராகப் பாரபட்சமானதாக இருக்கிறது. வழிபாட்டுத் தலங்களை நாம் நிர்வகிப்பதிலும் அப்படிப்பட்ட அம்சங்கள் இருக்கின்றன. எல்லோருக்கும் எல்லா சட்டமும் பொது என்று கொண்டு வருவோம். இன்னும் சொல்வதானால், பரம்பரை உரிமையிலான சொத்துப் பரிவர்த்தனையில் கூட ஹிந்துக்கள் முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்; முஸ்லிம்கள் கட்ட வேண்டியதில்லை. ஏன் இந்தப் பாரபட்சம்?

கடைசியாக ஒரு விஷயம் தி.மு.க. பொதுக்குழுத் தீர்மானத்தில் கலைஞர், ‘தி.மு.க.வை பா.ஜ.க. அழிக்க முடியாது’ என்று சொல்லி இருக்கிறார். அப்படியானால் பா.ஜ.க. வளர்ந்து வருகிறது என்று அர்த்தம் (கைதட்டல்). சமீபத்தில் ஒரு கல்லூரி நடத்திய சர்வேயில், முதலிடத்தில் அ.தி.மு.க. 43 சதவிகிதம்; இரண்டாவது தி.மு.க. 33 சதவிகிதம்; மூன்றாவது இடத்தில் பா.ஜ.க.வுக்கு 10 சதவிகிதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற எந்தக் கட்சியும் குறிப்பிடும் படியாக இல்லை. ஆகவே அவர்கள் யார் வேண்டுமானாலும், ‘நாங்கள்தான் முலமைச்சர்’, ‘எங்கள் தலைமைதான்’ என்று எது வேண்டுமானாலும் பேசட்டும். யதார்த்த நிலைமையை மக்கள் புரிந்திருக்கிறார்கள். நாம் அறிந்திருக்கிறோம்.

‘தி.மு.க. பொதுக்குழுவில் அவர் (கலைஞர்) ‘திருவாரூர் கருணாநிதியாக மாறுவேன்’ என்று சொல்லி இருப்பதை மிகப் பெரிய அச்சுறுத்தலாகவே நான் நினைக்கிறேன். அதை நான் சாதாரணமாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அதேபோல வைகோ அவர்கள், ‘தி.மு.க., அ.தி.மு.க. இரண்டையும் அழிக்க முடியாது’ என்கிறார். அப்படியானால் ம.தி.மு.க.வை அழிக்க முடியுமா? (சிரிப்பு) இந்த பேச்சுக்களில் இருந்து, இவர்களுக்குள்ளாக ஏதோ நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிகிறது. ஆகவே, என்னுடைய ஒரே கருத்து (ஸம்ஸ்க்ருத ஸ்லோகத்தைச் சொல்லிவிட்டு) ‘ஆகாயத்தில் இருந்து வருகிற மழைநீர் எப்படி கடலைச் சென்றடைகிறதோ, அதுபோல நீ எந்த ஆண்டவனை வணங்கினாலும் அது என்னையே வந்து சேரும்’ என்று கண்ணன் சொல்லி இருக்கிறார். அதனால் 33 கோடி தேவதையுடன் நான் வணங்கும் என்னுடைய காரைக்குடி கொப்புடைய நாயகிக்கு, அல்லாஹ்ய நமஹ, கிறிஸ்துவாய நமஹ என்று இரண்டு பூக்களைக் கூடுதலாகப் போடுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் ஹிந்துக்களுடைய உரிமைகள் பற்றி, அவர்களுடைய கவலைகள் பற்றி நாம் பேசவே கூடாது அதுதான் செக்யூலரிஸம் என்றால், அதை ஒருக்காலும் ஏற்றுக் கொள்ள முடியாது (கைதட்டல்). இப்படிப் பேசுவதால் ‘சர்ச்சைக்குரியவன்’ என்று என்னைக் குறிப்பிட்டால், நான் ‘சர்ச்சைக்குரியவன்’ ஆகவே இருக்க விரும்புகிறேன் (பலத்த கைதட்டல்).

இதையடுத்து ஹெச்.ராஜா வின் பேச்சை ஒட்டி ஆசிரியர் சோ சில கருத்துக்களைக் கூறினார். அவர் பேசியது:

ஆர்.எஸ்.எஸ். பற்றி ராஜா இங்கே குறிப்பிட்டார். என்னுடைய சொந்த அனுபவம் ஒன்றைச் சொல்கிறேன். ஜனதாவில் பிளவு ஏற்பட இருந்த சமயம். ‘ஜனசங்கத்தில் இருந்து வந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸிலும், ஜனதா விலுமாக இரட்டை உறுப்பினராக நீடிக்கக் கூடாது; ஒன்று, ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருக்கலாம். அல்லது ஜனதா கட்சி உறுப்பினராக இருக்கலாம்’ என்ற பிரச்னை பெரிதாக உருவானது.

அப்போது நான் சந்திரசேகரைச் சந்தித்து, ‘இதைத் தீர்ப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டாமா’ என்று கேட்டேன். அப் போது அவர், ‘அந்தத் தீர்வு எங்களிடம் இருந்து வர முடியாது; ஆர்.எஸ்.எஸ். தலைவர் இதற்கு ஒரு தீர்வு அளித்தால் உதவிகரமாக இருக்கும்’ என்றார். ‘என்ன தீர்வை ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூற வேண்டும்?’ என்று நான் கேட்டேன். ‘ஜனதா கட்சியில் இருப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ். ஸில் பதவி வகிக்கக் கூடாது; இங்கே கட்சியில் பதவி வகிப்பவர்கள் அங்கு உறுப்பினராக இருக்கக் கூடாது’ என்று ஒரு ஃபார்முலாவை சந்திரசேகர் சொன்னார். ‘இதை அவர்கள் ஏற்றுக் கொண்டால், மீதி விவகாரங்களை நீங்கள் சரி செய்து விடுகிறீர்களா?’ என்று அவரிடம் கேட்டேன். ‘சரி’ என்று சொன்னார்.

நான் உடனே அத்வானியை டெலிஃபோனில் தொடர்பு கொண்டு இதுபற்றிச் சொன்னேன். ‘நீ என்ன செய்யப் போகிறாய்?’ என்று கேட்டார். ‘நான் தேவரஸைச் சந்தித்து இதுபற்றிப் பேசப் போகிறேன்’ என்றேன். அப்போது தேவரஸ்தான் ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்தார். ‘சரி போய்ப் பார்’ என்று அத்வானி கூறினார். நான் தேவரஸை சந்திக்கச் சென்ற அன்று அவருக்கு கடுமையான ஜுரம். அந்த நிலைமையிலும், நான் எங்கிருந்தோ வந்திருக்கிறேன் என்பதால் பார்க்க ஒப்புக்கொண்டு, சுமார் 1 மணி நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர், ‘ஜனதா கட்சி பிளவுபடுவது நல்லதல்ல; அதனால் இந்த ஏற்பாட்டுக்கு நான் ஒப்புக் கொள்கிறேன்; நீங்கள் சந்திரசேகரிடம் போய் இதைச் சொல்லுங்கள். இதை அத்வானியிடமும் கூறி விடுங்கள்’ என்றார்.


கூட்டத்தின் ஒரு பகுதி….இந்த விவகாரம் இவ்வளவு சுலபமாக முடியும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அவருடைய அணுகுமுறையைக் கவனியுங்கள். ஜனசங்கம் என்றோ, ஆர்.எஸ்.எஸ். என்றோ இந்தப் பிரச்னையை அவர் பார்க்க வில்லை (கைதட்டல்).தேசத்தில் ஒரு பெரிய மாற்று சக்தியாக ஜனதா கட்சி உருவாகியிருந்தது. அது குட்டிச் சுவராகி விடக்கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருந்தார். இந்த விஷயத்தில் ஹிந்துத்துவா அணுகுமுறை என்றோ, வேறு விதமாகவோ எந்த விமர்சனமும் சொல்ல முடியாது.

ஆர்.எஸ்.எஸ். தலைவரிடம் இருந்து புறப்பட்டு, நான் சந்திரசேகரைச் சந்திப்பதற்கு முன் அத்வானியிடம் நடந்ததைக் கூறினேன். அவர், ‘எல்லாம் சரி; ஆனால், இதை ஜனதா கட்சி ஏற்காது’ என்றார். ‘ஏன்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நேற்று தான் சோஷலிஸ்ட் தலைவர்களும், சந்திரசேகரும் கூடிப் பேசியிருக்கிறார்கள்; சோஷலிஸ்ட்டுகள் சும்மா இருக்க மாட்டார்கள்’ என்று சொன்னார்.

நான் போய் சந்திரசேகரிடம் தேவரஸ் கூறியதை எடுத்துச் சொன்னபோது, அவர் என்னிடம், ‘சோஷலிஸ்ட்டுகள் இதை ஏற்கவில்லை. நான் என்ன செய்வது?’ என்றார். அத்துடன் குட்டிச் சுவராகி விட்டது. அப்படி அப்போது சோஷலிஸ்ட்டுகள் இடதுசாரி சிந்தனை உடையவர்கள் தடுத்ததால் ஜனதா கட்சி பாழானதே தவிர, ஆர்.எஸ்.எஸ். அப்போது ஒரு பெரிய பொறுப்பை உணர்ந்து (கைதட்டல்), தேசத்துக்கு ஒரு மாற்று அரசியல் சக்தி உருவாக ஆதரவளிப்பதற்கு முன்வந்தது என்பதை மறக்கவே முடியாது.

தி.மு.க.வை ஒழிக்க முடியாது என்று கலைஞர் சொல்லி இருப்பதை, இவ்வளவு சீரியஸாக ஹெச். ராஜா எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ‘தி.மு.க.வை ஒழிக்க முடியாது’ என்று பா.ஜ.கவைப் பார்த்து அவர் சொல்லவில்லை. தன் குடும்பத்துக்குச் சொல்கிறார் (சிரிப்பு, கைதட்டல்). ‘உங்களால் எல்லாம் தி.மு.க.வை அழிக்க முடியாது’ என்று குடும்பத்தாரைப் பார்த்து கலைஞர் சொல்கிறார். அவர்களைப் பார்த்து நேரடியாகச் சொல்ல முடியாது என்பதால், இப்படி மறைமுகமாகச் சொல்லி இருக்கிறார் (சிரிப்பு, கைதட்டல்).

‘மைனாரிட்டி மக்கள் தாங்கள் சிறுபான்மை என்பதை உணர்ந்து அடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்’ இது நான் சொல்வது அல்ல; பல ஆண்டுகளுக்கு முன்னால் கலைஞர் அளித்த ஒரு பேட்டி குமுதத்தில் வந்திருந்தது. அதிலே அவர் சொல்லி இருந்தார். ‘பிராமணர்கள் தமிழகத்தில் மைனாரிட்டி மக்கள்; மைனாரிட்டி மக்கள் தங்கள் நிலைமையை உணர்ந்து அடக்கமாக இருக்க வேண்டும்’ என்றார். பிராமணர்களைப் பற்றி என்பதால் அவரால் இப்படிச் சொல்ல முடிந்தது. சரி, அவர் சொன்ன இந்த ஃபிலாஸபி எப்படிப்பட்டது? இப்படிப் பேசுகிற அவர் மிதவாதி; செக்யூலர்; சமத்துவப் பார்வையுடையவர். ஆனால் இப்படி எல்லாம் ஒரு முறை கூடப் பேசாத பா.ஜ.க., மதவாதக் கட்சி என்பது என்ன நியாயம்? இதை நான் ஏற்கவில்லை.

அதே சமயம், சில ஹிந்துத்துவ அமைப்புகள் சமீப காலமாகச் செய்து வருகிற காரியங்கள் மத்திய அரசுக்குக் கெட்ட பெயரை உண்டாக்கி வருகின்றன என்பதை ஹெச்.ராஜா உணர வேண்டும். அவர் உணர்ந்துள்ளார் என்பதை என்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அவரைப் போன்றவர்கள் இந்தப் பிரச்னையை உணர்ந்து செயல்பட வேண்டும். இது ஏதோ திட்டமிட்டு, மோடி ஆட்சியின் பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் நடப்பது போல் எனக்குத் தோன்றுகிறது.

(பின்னர் ஆசிரியர் சோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா எம்.பி.யைப் பேச அழைத்தார்.)

தொகுப்பு: எஸ்.ரமேஷ்
ஃபோட்டோ: சிவா

(துக்ளக் ஆண்டு விழா டி.வி.டி. வேண்டுவோர், 04424984050 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்)
(தொடரும்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s