ஸ்ரீ அன்னை அவதரித்த தினம் பிப்ரவரி 21 – திருப்பூர் கிருஷ்ணன்


*ஆன்மிகம் என்பது மனிதர் இறந்தபின் முக்திக்கு வழிகோலுவது; அதற்கும் உலகியல் வாழ்வுக்கும் சம்பந்தமில்லை என்ற கருத்தை உடைத்து, உலகியல் வாழ்வுக்கும் வழிகாட்டுவதே ஆன்மிகம் என வலியுறுத்தியவர்களில் சுவாமி விவேகானந்தரைப் போல ஸ்ரீஅன்னையும் மிக முக்கியமானவர்.

ஸ்ரீஅன்னை சொன்ன அறிவுரைகளும் அவர் வாழ்வில் நிகழ்ந்த பல சம்பவங்களும் இவ்வுலக வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்த வழி சொல்பவை.

முக்தி, முற்றும் துறந்த முனிவர்களின் லட்சியமாக இருக்கலாம். ஆனால் நடப்பியல் வாழ்வுக்குப் பயன்படாத ஆன்மிகத்தால் சராசரி மக்களுக்கு என்ன பயன்? அன்னை சோல்லும் ஆன்மிகம் நம் அன்றாட வாழ்வோடு தொடர்புடையது…

*ஒரு செயலைச் செய்ய நீண்டநேரம் ஆகிறதென்றால், அதற்கு அந்தச் செயலை நாம் முழுமையான மன ஒருமைப்பாட்டோடு செய்யாததே காரணம் என்பதை அறைகூவிச் சொல்கிறார் ஸ்ரீஅன்னை. மன ஒருமைப்பாட்டை முழுமையாக நாம் பழகிக் கொண்டால், ஒரு செயலைச் செய்ய சாதாரணமாக நாம் எடுத்துக்கொள்ளும் நேரத்தில் பாதி நேரத்திலேயே அந்தச் செயலை இரண்டு மடங்கு சிறப்பாகச் செய்து முடித்துவிடலாம் என்கிறார் அவர்.

அது எப்படி? அதற்கான பயிற்சி முறையையும் அவரே கற்றுத் தருகிறார்.

நாளை குளிக்கப் போகும்போது உங்கள் மன ஒருமைப்பாட்டைப் பழகத் தொடங்குங்கள். குளிக்கும்போது பாட்டுப் பாடாதீர்கள். குளிப்பதைத் தவிர வேறு எதையும் மனத்தில் நினைக்காதீர்கள். கால் கட்டைவிரலில் தண்ணீர் விட்டுக் கொள்ளும் போதும், அதில் சோப்புத் தேய்த்துக் கொள்ளும் போதும், கட்டைவிரல் அழுக்கில்லாமல் சுத்தமாக வேண்டும் என்ற எண்ணம் தவிர வேறு எண்ணம் உங்கள் மனத்தில் வரக்கூடாது. இப்படியே ஒவ்வோர் அங்கமாக நினைத்து தண்ணீர் விட்டு சோப்புத் தேய்த்துக் குளித்து முடியுங்கள்.

குளியலறைக்கு வெளியே வந்தபின் ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். நீங்கள் இரண்டு விஷயங்கள் பற்றி ஆச்சரியப்படுவீர்கள். ஒன்று, வழக்கமாகக் குளிக்க ஆகும் நேரத்தில் பாதி நேரத்திலேயே நீங்கள் குளித்து முடித்திருப்பீர்கள். இன்னொன்று, வழக்கத்தை விட இரண்டு மடங்கு உங்கள் உடல் தூய்மையான உணர்வு உங்களுக்கு ஏற்படும்.

இதுதான் மன ஒருமைப்பாட்டுடன் எல்லாச் செயல்களையும் செய்யப் பழகுவதில் உள்ள மகத்துவம். நம் வாழ்வில் எத்தனை சாதனைகளை நாம் செய்ய முடியும் என்பதை எண்ணிப் பார்த்தால் தான் மன ஒருமைப்பாட்டின் மகிமை விளங்கும்….

*ஓர் அச்சகத்தில் உறைகளை ஒட்டும் பணிக்கு அவசரமாக ஆள் தேவைப்பட்டது. சித்ரா சென் என்பவரை அதைச் செய்யுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தார் அன்னை. அவர் அதைச் செய்து முடித்துவிட்டார். ஆனால் உறைகளைப் பசை தடவி ஒட்டும்போது பேசிக்கொண்டும் பாட்டுப் பாடிக் கொண்டும் அந்தச் செயலைச் செய்தார்.

மறுநாள் அன்னை அவரிடம் விசாரித்தார்.

‘உறைகள் அனைத்தையும் ஒட்டிவிட்டாய் போலிருக்கிறது?’

‘ஆம் அம்மா!’

‘ஆனால் பேசிக்கொண்டும் பாட்டுப் பாடிக் கொண்டும் ஒட்டினாயோ?’

ஸ்ரீஅன்னை தான் இல்லாத இடங்களில் நடப்பதைக் கூடக் கண்டறியும் சூட்சுமக் கண்கள் உடையவர் அல்லவா? துடுக்கான சித்ரா சென் சிரித்தவாறே அன்னைக்கு பதில் சொன்னார்:

‘அதனால் என்ன? பாட்டுப் பாடிக்கொண்டு ஒட்டினாலும் பணி முடிந்துவிட்டதல்லவா?’

அன்னை அவர் கண்களையே கூர்மையாகப் பார்த்தார். பின் சொன்னார்:

‘நான் அந்தச் செயலைச் செய்திருந்தால், என்னைவிடச் சிறப்பாக இந்த உலகில் வேறு யாரும் அந்தச் செயலைச் செய்திருக்க முடியாது என்கிறபடி, என் மனத்தையும் என் உணர்வுகளையும் அதிலேயே முழுமையாகக் குவித்து, பாட்டுப் பாடவோ பேசவோ தோன்றாமல் அந்தச் செயலைச் செய்து முடித்திருப்பேன்!’

அன்னை இப்படிச் சொன்னதும், அவர் திகைத்துப் போனார். அப்போதுதான் எந்தச் செயலைச் செய்தாலும் எப்படிச் செய்ய வேண்டும் என்ற உண்மை அவருக்குப் புரிந்தது. ‘ஸ்ரீஅன்னை தன் வார்த்தைகளால் என் கன்னத்தில் ஓங்கி அறைந்து அறிவுறுத்தியது போல் இருந்தது எனக்கு!’ என்று ‘அன்னையை நினைவுகூர்தல்’ என்ற புத்தகத்தில் நன்றியுடன் இந்த சம்பவம் குறித்துப் பதிவு செய்கிறார் சித்ரா சென்…..

*ஒரு சலவைத் தொழிலாளி, ஆசிரமவாசிகளின் ஏராளமான துணிமணிகளைச் சலவைசெய்து அடுக்காகக் கொண்டுவந்து வைத்தான். ஸ்ரீஅன்னை அந்தத் துணி அடுக்கைப் பார்த்தார். ‘எல்லாத் துணிகளையும் நன்றாகச் சலவை செய்தாயா?’ என அந்தத் தொழிலாளியிடம் விசாரித்தார். தன் தொழிலில் ஒவ்வொருவரும் நூறு சதவிகிதம் உண்மையாக இருக்கவேண்டும் என்பது அன்னையின் கோட்பாடு. அவன் தயங்கியவாறே, ‘ஆம்!’ என்றான்.

துணி அடுக்கைக் கூர்ந்து பார்த்த அன்னை, அதன் நடுவிலிருந்து ஒரு துணியை எடுத்தார். ‘பின் ஏன் இந்தக் கறை போகவில்லை?’ என்று அவனிடம் அந்தத் துணியிலிருந்த ஒரு கறையைச் சுட்டிக் காட்டிக் கேட்டார். அவன் அதிர்ந்து போனான்.

அடுக்கின் நடுவே இருந்த துணியின் மடிப்பில் மறைந்திருந்த கறையை அன்னை கண்டுபிடித்தது எப்படி என்பது அவனுக்கு விளங்காத மர்மம். அவன் மனப்போக்கைச் சீர்திருத்தும் அக்கறையால் தான் அந்தக் கறை பற்றி அன்னை விசாரித்தார் என்பதை அவன் புரிந்துகொண்டான். அன்னையின் அறிவுறுத்தலால் அன்றுமுதல் அவன் பணித்தரம் மேம்பட்டது.

*ஸ்ரீஅன்னை ஓர் அலுவலகத்திற்கு விஜயம் செய்ய முடியுமா, ஓரிரு வாரங்களில் அன்னைக்கு அத்தகைய அவகாசம் கிடைக்குமா என்று கேட்டு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அன்னை போலி பந்தாக்கள் எதுவும் இல்லாதவர். உடனே, ‘நாளை முதல் நான் பல அலுவல்களில் ஈடுபட வேண்டியுள்ளது, இன்று இப்போது நான் ஓய்வாகத் தான் இருக்கிறேன். இன்றே நான் வருகிறேனே?’ என்று கூறிவிட்டார்.

அழைத்தவர்களால் மறுக்க இயலவில்லை. ஆனால் ஸ்ரீஅன்னை வருவதற்குள் அலுவலகத்தை அன்னை விஜயத்திற்கு ஏற்றபடித் தயார் செய்ய வேண்டிய நிர்பந்தம். சரசரவென்று அலுவலகம் இயன்றவரை சீராக்கப்பட்டது. வாயிலில் கோல மிட்டார்கள். மாவிலைத் தோரணங்கள் கட்டினார்கள். பூரண கும்பத்தோடு அன்னையை வரவேற்கத் தயாரானார்கள்.

அன்னை மலர்ச்சியுடன் சிரித்தவாறே அலுவலகத்திற்குள் வலதுகால் வைத்துப் பிரவேசித்தார். உள்ளே நுழைந்தவர் சற்று நின்றார். அன்னை ஏன் நிற்கிறார் என்று எல்லோரும் திகைத்தார்கள். அன்னை கூர்மையாக எதையோ கேட்டார். பின் சொன்னார்:

‘ஏதோ சன்னமான அழுகுரல் கேட்கிறது எனக்கு. முதலில் அதைச் சரி செய்ய வேண்டுமே?’

அழுகுரலா? அலுவலகத்தினர் திகைத்தார்கள். யாரும் அழவில்லை அங்கே. அவ்விதம் குரல் கொடுக்க ஒரு பூனையோ நாயோ கூட அக்கம் பக்கத்தில் இல்லை. தவிர மற்ற யாருக்கும் எந்த அழுகுரலும் கேட்கவும் இல்லை.

ஆனால் அன்னை தன் கருத்தில் தீர்மானமாக இருந்தார். மெல்ல நடந்தார். பூட்டியிருந்த ஓர் அலமாரியின் முன் சற்று நின்றார். ‘இந்த அலமாரிக்கு உள்ளிருந்துதான் அழுகுரல் வருகிறது. அலமாரியைத் திறவுங்கள்!’ என்றார்.

அலமாரி சாவி போட்டுத் திறக்கப்பட்டது. மறுகணம் அதனுள், அன்னை வருகிறார் என்ற அவசரத்தில், அலுவலகத்தை ஒழுங்கு செய்வதற்காக அள்ளித் திணிக்கப்பட்டிருந்த கோப்புகள் அனைத்தும் சரசரவெனக் கீழே கொட்டின.

கீழே விழுந்த கோப்புகளை அன்னையின் விழிகள் பரிவோடு பார்த்தன. ‘இந்தக் கோப்புகளை எல்லாம் சீராக அலமாரிக்குள் அடுக்கி வையுங்கள்!’ என்று பணித்தார் அன்னை. பணியாளர்கள் உடனே அன்னையின் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்தார்கள். கோப்புகள் சீராக அடுக்கி வைக்கப்பட்டு அலமாரி மூடப்பட்டது. ‘இப்போது அழுகுரல் நின்றுவிட்டது!’ என்று சொன்ன அன்னை மேலும் விளக்கினார்:

‘நாம் உயிரற்றவை என்று கருதும் பொருட்களுக்கெல்லாம் கூட உயிர் உண்டு. உயிர் இல்லாதது என்று உலகில் எதுவும் கிடையாது. தாறுமாறாக அடுக்கி வைக்கப்பட்ட இந்தக் கோப்புகள் அழுது கொண்டிருந்தன. சீராக அடுக்கி வைத்ததும் அவை மகிழ்ச்சி அடைந்துள்ளன. இப்படி ஒவ்வொரு பொருளையும் சீராக நாம் பராமரித்தால் அவை கூடுதலாக நமக்குப் பணிபுரியும். நம் வேலைத்தரம் மேம்படும். வேலையும் அதிக நேரமெடுக்காமல் சீக்கிரமே முடிவடையும்!’

ஸ்ரீஅன்னையின் அரிய அறிவுரையை வியப்போடு கேட்டுக் கொண்டார்கள் அந்த அலுவலகத்தினர்….

*நாம் செருப்பு உபயோகிக்கிறோம். நம் செருப்பு பிய்ந்து போகிறது. உடனே அதைத் தூக்கிப் போட்டுவிட்டு, புதுச்செருப்பு வாங்கி அணிந்து கொள்கிறோம். ஆனால் புதுச்செருப்பு வாங்குவது எப்படி என்று அதற்கு அன்னை ஒரு முறையைக் கற்பிக்கிறார்.

பழைய செருப்பை ஒரு காகிதத்தில் பொதிந்து வைத்துக் கொண்டு, மனத்தில் பின்வருமாறு நினைத்துக் கொள்ள வேண்டும். ‘ஏ செருப்பே! என் பாதங்களைத் தாங்கி எனக்கு எவ்வளவோ சேவை செய்தாய். உனக்கு என் மனமார்ந்த நன்றி. ஆனால் இப்போது பயன்படுத்த இயலாத அளவு நீ தேய்ந்து விட்டாய். எனவே வேறுவழியில்லாமல் மிகுந்த நன்றியுடன் உன்னைத் துறக்கிறேன். எனக்குக் கடினமாக உழைத்த உனக்கு மீண்டும் மீண்டும் என் நன்றி!’ இப்படி எண்ணியவாறு அந்தப் பழைய செருப்பைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.

இப்படிச் செய்வதால் என்ன பயன்? நாம் வாங்குகிற புதுச் செருப்பு நமக்குக் கூடுதலாக உழைக்கும் என்கிறார் அன்னை!

இன்றைய விஞ்ஞானம் அணுவைப் பற்றிப் பேசுகிறது. எல்லா ஜடப் பொருட்களும் கூட அணுக்களால் ஆனவையே. ஒவ்வோர் அணுவும் புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் ஆகிய பகுதிகளால் ஆனவை. இந்தப் பகுதிகள் ஒன்றையொன்று சுற்றியவாறு ஓயாத இயக்கத்தில் இருக்கின்றன. எனவே அடிப்படையில் இயக்கமில்லாத பொருள் என்று உலகில் எதுவுமில்லை.

அப்படிப் பார்த்தால், இயக்கம் என்பதே உயிரின் சக்தி தானே? எல்லாப் பொருளுக்கும் உயிர் உண்டு என்ற அன்னையின் கோட்பாடு உண்மைதானே?

*ஒரு பக்தர் தம் மனைவியுடனும் தம் குழந்தையுடனும் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை அன்னைக்கு அனுப்பியிருந்தார். தம் மனைவி தமக்கு மிகவும் தொந்தரவு தருவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அன்னையின் அடியவரான எம்.பி. பண்டிட் அந்தக் கடிதத்தையும் புகைப் படத்தையும் அன்னையிடம் காட்டியபோது அன்னை மெல்லிய முறுவலுடன் கணவர் படத்தை விரலால் சுட்டிக் காட்டினார். அதாவது தொந்தரவு செய்வது மனைவியல்ல, கணவர்தான் என்பதே அந்தச் செய்கையின் பொருள்!

சிறிதுகாலம் கழித்து இந்தச் சம்பவத்தை அந்தக் கணவரிடம் சொன்னபோது அவர் அன்னை சொன்னது உண்மைதான் என நேர்மையுடன் அதை ஒப்புக் கொண்டாராம். இந்தத் தகவலை எம்.பி. பண்டிட் தம் நூலில் பதிவு செய்துள்ளார்…

*பகைச் சக்திகள் ஏதேனும் ஒருவகையில் மனிதனோடு தொடர்பை உருவாக்கிக் கொள்கின்றன. ஆணவத்தோடும் தற்பெருமையோடும் ஒருவன் பேசினால் அவன் மனத்தில் ஒரு துவாரம் உருவாகிறது. அந்த துவாரத்தின் வழியாக பகைச் சக்தி அவன் உள்ளத்தில் புகுந்து அவனை அழிக்கிறது. எனவே தற்பெருமையோ ஆணவமோ கூடாது என்பது அன்னையின் கோட்பாடு…

*நீ விரும்புவதையெல்லாம் கடவுள் உனக்குத் தருவதில்லை. எதை அடைவதற்கு உனக்குத் தகுதி இருக்கிறதோ அதை மட்டுமே கடவுள் உனக்குத் தருகிறார். எனவே நீ உயர்வடைய வேண்டுமானால், உன் தகுதிகளை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பது ஸ்ரீஅன்னையின் முக்கியமான அறிவுரை.

நம் தகுதிகளை எவ்விதமெல்லாம் மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கும் அன்னை அறிவுரைகள் வழங்கியிருக்கிறாரே? அவற்றை நாம் பின்பற்றி முன்னேறலாமே?

ஸ்ரீ அன்னை அவதரித்த தினம் பிப்ரவரி 21

ஸ்ரீ அன்னையின் அமுத மொழிகள்!

* மனித விவகாரங்களைப் பொறுத்தவரை உனக்கு ஏமாற்றுவதற்கு வாய்ப்பிருக்கலாம். இறைவனைப் பொறுத்தவரை எதிலும் ஏமாற்றத்திற்கு இடமில்லை.

* விரும்பத்தகாத ஒரு மனிதனுடன் ஒரு சில வார்த்தைகள் பரிமாறிக் கொண்டாலும்கூட, அந்த விஷம் உன்னைத் தொற்றிக் கொள்ளக்கூடும்.

* மனிதா! நீ குழந்தைபோல் ஆகி உன்னை அன்னையிடம் ஒப்படை. அவள் உன்னை ஏந்திச் செல்லட்டும். உனக்கு இனி ஆபத்து இருக்காது.

* எப்போதும் சரியான செயலையே முறையாகச் செய்திட, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விநாடியும் நாம் ஆர்வமுடன் இருக்கவேண்டும்.

* நீ எதைச் செய்தாலும் எப்போதும் இறைவனை நினைவில்கொள்.

* நீ எப்படி இருந்தாய் என்பதை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காதே! எப்படி இருக்க விரும்புகிறா என்பதை மட்டும் நினை. நீ நிச்சயம் முன்னேறுவாய்.

* நீ பிறருடைய விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடாது இருப்பாயானால் அதுவே நீ உனக்குச் செய்துகொள்ளும் மிகப்பெரிய சேவையாகும்.

* நீ நினைத்தபோதெல்லாம் உனக்கு அருள்புரிய தெய்வம் ஒன்றும் உனக்கு கடமைப் பட்டிருக்கவில்லை! அவன் அருளைப் பெறத் தகுதியானவனாக உன்னை மாற்றிக்கொள்!

* ஒரு பூவைப்போல, வெளிப்படையாக, எளிமையாக, தெளிவாக, இனிமையாக, மென்மையாக, பாரபட்சமின்றி உயர்ந்த பண்புடன் இருங்கள்!

* பிரச்னைகளை புரிந்துகொண்டாலே அதில் பாதி தீர்ந்துவிடுகிறது! அதைப் புரிந்துகொள்ள முதலில் உன் மனம் அமைதியாக இருக்க வேண்டும்!

– ஆதிரை வேணுகோபால், சூளைமேடு

Advertisements

4 thoughts on “ஸ்ரீ அன்னை அவதரித்த தினம் பிப்ரவரி 21 – திருப்பூர் கிருஷ்ணன்

 1. […] திரு. திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய  ‘ஸ்ரீ அன்னை அவதரித்த தினம்’ […]

 2. krishnamoorthys February 21, 2015 at 4:40 AM Reply

  இன்று அற்புத நாள் .இனிய செய்திகள் .நன்றி .

 3. vasanth99in February 21, 2015 at 11:14 PM Reply

  Thanks Mohan

  MURALIDHARAN

  Sent from my iPhone 4G

  Pls forgive my iPhone for typos (if any)

  >

 4. Kamala Rangan February 22, 2015 at 1:05 PM Reply

  On Feb 20, 2015 9:40 PM, “Balhanuman’s Blog”
  wrote:
  >
  > BaalHanuman posted: ” *ஆன்மிகம் என்பது மனிதர் இறந்தபின் முக்திக்கு
  வழிகோலுவது; அதற்கும் உலகியல் வாழ்வுக்கும் சம்பந்தமில்லை என்ற கருத்தை
  உடைத்து, உலகியல் வாழ்வுக்கும் வழிகாட்டுவதே ஆன்மிகம் என வலியுறுத்தியவர்களில்
  சுவாமி விவேகானந்தரைப் போல ஸ்ரீஅன்னையும் மிக முக்கியமானவர். ”
  >

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s