சர்வம் சிவமயம் – காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா


Brahadeeswar

அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் கர்ப்பக் கிருஹத்தின் சுவரில் மேற்குப் பாகத்தில் லிங்கோத்பவ மூர்த்தியின் பிம்பம் இருக்கும். அதில் லிங்கத்துக்குள் ஒரு திவ்ய மூர்த்தியிருக்கும். அதன் ஜடா மகுடம் லிங்க வட்டத்துக்குள் முடியாமலே இருக்கும். அதன் பாதமும் லிங்கத்தின் அடியில் முடிகிற வரைக்கும் தெரியாது.

ஸ்ரீ ருத்ராபிஷேகம் பண்ணுவதற்கு முன்பு ஒரு சுலோகம் சொல்லிவிட்டு, அப்புறம்தான் அபிஷேகம் பண்ணுவது வழக்கம். அந்த சுலோகம்:

ஆபாதால நப: ஸ்தலாந்த புவன

ப்ரஹ்மாண்டமா விஸ்புரத்

ஜ்யோதி: ஸ்பாடிக லிங்க மௌலி விலஸத்

பூர்ணேந்து வாந்தாம்ருதை:

அஸ்தோகாப்லுதம் ஏகம் அசம் அநிசம்

ருத்ராநுவாகான் ஜபன்

த்யாயேத் ஈப்ஸித ஸித்தயே(அ) த்ருதபதம்

விப்ரோ மிஷிஞ்சேத் சிவம் ||

இந்த சுலோகத்தில் என்ன தெரியுமா சொல்லியிருக்கிறது? பாதாள முதல் ஆகாச பரியந்தம் எல்லையில்லாத ஜோதி ஸ்வரூபமாகப் பிரகாசிக்கின்ற ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் பண்ண வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.

ஸ்படிக லிங்கத்துக்கு ஒரு வர்ணமும் சொல்ல முடியாது. எந்த வஸ்துவை அதில் வைக்கிறோமோ அதனுடைய வர்ணத்தை அது பிரதிபலிக்கும். குண -தோஷம் இல்லாதது அது. ஞானம் எப்படிப் பரிசுத்தமாக இருக்கிறதோ, அப்படி அந்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. பரப்பிரம்ம ஸ்வரூபம் நிர்விகாரமாக இருந்தாலும், நம்முடைய மனோபாவத்தை எப்படி வைக்கிறோமோ அப்படித் தோன்றும் என்பதற்குத் திருஷ்டாந்தமாக, இந்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. அது எதையும் மறைக்காது. அதற்குப் பின்னால் உள்ள வஸ்துக்களையும் அதன் வழியாகப் பார்க்கலாம். பரம சுத்தமாக நிஷ்களங்கமாக இருக்கும். நிர்குணமான பரமாத்ம வஸ்துவுக்கு அது திருஷ்டாந்தம். நினைக்கிற ரூபமாக அது தெரியும்.

மேலே சொன்ன சுலோகப்படி, அதன் சிரஸில் பூரண சந்திரன் இருக்கிறது. ‘பூர்ணேந்து’ என்று சுலோகத்தில் வருவது, ‘பூர்ண இந்து!’; இந்து என்றாலும் சந்திரன் என்றாலும் ஒன்றுதான். ஈசுவரன் ஜடையும், கங்கையும், கண், காது, மூக்கு, கை, கால் முதலிய அவயவங்களும் கொண்ட ‘ஸகள’ ரூபத்தில் வருகிறபோது, அவர் மூன்றாம் பிறையை வைத்துக் கொண்டு சந்திரமௌலியாக இருக்கிறார். ரூபமே இல்லாத பரமாத்மா ‘நிஷ்கள’ தத்வமாயிருக்கிறபோது, அங்கே சந்திரன், கங்கை எதுவும் இல்லை. அரூபமாயும் இல்லாமல், ஸ்வரூபமாயும் அவயவங்களோடு இல்லாமல், லிங்கமாக ஸகள – நிஷ்களமாக இருக்கிறபோது அவர் பூர்ண சந்திரனை உச்சியில் வைத்திருக்கிறார். அதிலிருந்து அமிருதமே கங்கை மாதிரிக் கொட்டுகிறது.

ஸமஸ்த பிரபஞ்ச ஸ்வரூபமான ஜ்யோதிர்லிங்கம் குளிர்ந்தால், லோகமெல்லாம் குளிரும். இதனால்தான் சிவலிங்கத்துக்கு ஓயாமல் அபிஷேகம் செய்வது. ருத்திர அபிஷேகத்துக்கு முன்பு சொல்லும் சுலோகம், இதை எல்லாம் அறிவுறுத்துகிறது.

ஸகல பிரம்மாண்டமும் சிவலிங்கம்தான்.

ஸ்ரீ ருத்ரத்தில் இப்படியே சொல்லப்பட்டிருக்கிறது. ஸர்வ பதார்த்தங்களும், நல்லது கெட்டது எல்லாம் சிவ ஸ்வரூபம் என்று ஸ்ரீ ருத்ரம் சொல்லுகிறது.

லிங்கம் ஏன் வட்ட வடிவமாயிருக்கிறது? வட்டமான ஸ்வரூபத்துக்குத்தான் அடி முடியில்லை; ஆதியில்லை, அந்தமுமில்லை. மற்றவற்றுக்கு உண்டு. முக்கோணத்துக்கு, சதுரத்துக்கு உண்டு. ஆதியந்தம் இல்லாத வஸ்து சிவம் என்பதை லிங்கா காரம் காட்டுகிறது.

சரியான வட்டமாக (Circle) இல்லாமல், லிங்கம் நீள் வட்டமாக (ellipse) இருக்கிறது. பிரபஞ்சமே ‘எல்லிப்டிக்’காகத்தான் இருக்கிறது. நம் சூரிய மண்ட லத்தை (solar system) எடுத்துக்கொண்டாலும் கிரஹங்களின் அயனம் நீள்வட்டமாகத்தான் இருக்கிறது” என்று நவீன விஞ்ஞானத்தில் சொல்வதும், பிரம்மாண்டமும் ‘ஆவிஸ்புரத்’ என்று சாஸ்திரம் சொல்வதும் லிங்க ரூபத்துக்கு ரொம்ப ஒற்றுமையாக இருக்கிறது.

யாராவது பந்துவை நினைக்கிறோம். சந்தோஷமாயிருக்கிறது; ஆனால், அவருடைய உருவத்தையும் பார்த்தால்தான் சந்தோஷம் பூரணமாகிறது. அவ்வாறே உருவமற்ற சிவமும் ஒரு உருவத்தோடு வந்து அனுக்கிரகம் பண்ணினால்தான் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஞானிகளுக்கு மட்டுமே பரமாத்ம ஸ்வரூபத்தின் நிராகார (அருவ) உண்மை புரியும். உருவத்தைப் பார்த்துப் பார்த்து ஆனந்தம் அனுபவிக்கிற நமக்கு உருவத்தோடு கண்டால்தான் ஆனந்தம் உண்டாகும். அதற்காகத்தான் உருவமற்ற பரமேசுவரன், அருவுருவான லிங்கமானதோடு நில்லாமல், அந்த லிங்கத்துக்குள்ளேயே திவ்வியரூபம் காட்டும் லிங்கோத்பவ மூர்த்தியாக இருக்கிறார்.

இப்படி ரூபத்தைக் காட்டினாலும் வாஸ்தவத்தில் தமக்கு அடியும் இல்லை, முடியும் இல்லை. அதாவது, ‘ஆதியும், அந்தமும் அற்ற ஆனந்த வஸ்துவே தாம்’ என்று உணர்த்துவதற்காக, மேலே லிங்க வட்டத்துக்குள் ஜடாமுடி முடியாமலும், கீழே அதே மாதிரி தம் பாதம் அதற்குள் அடங்காமலும் இருப்பதாகக் காட்டுகிறார்.

அடி முடி எல்லை இல்லாமல், அவர் ஜ்யோதி ஸ்வரூபமாக நின்றார். ஜ்யோதிர்லிங்கமாக, ஆகாயத்துக்கும் பூமிக்குமாகப் பரமசிவன் உத்பவித்த இரவே சிவராத்திரியாகும்.

பிரம்மா ஹம்ஸரூபமாகப் போய்ப் பார்த்தும் சிவபெருமானின் சிரஸ் அகப்படவில்லை என்றும், விஷ்ணு வராஹ ரூபமாகப் போயும் பாதம் அகப்படவில்லை என்றும் சொல்வதன் தாத்பரியம் என்னவென்றால், பரமாத்மா ஆதி அந்த ஹீனமான வஸ்து என்பதுதான்; சிருஷ்டி, பரிபாலனம் எல்லாவற்றையும் கடந்த வஸ்து அது என்பதுதான். இப்படி அடி முடி தேடி பிரம்மாவும் விஷ்ணுவும் பெற முடியாத வரையே, ‘என் சாமர்த்தியத்தால் அறிய முடியும்’ என்கிற அகங்காரமில்லாமல் அன்போடு பக்தி செய்து உருகினால், வெகு சுலபத்தில் அவர் நமக்கு அகப்பட்டு விடுவார். அன்பினாலே மிகமிக விரைவில் திருப்தி பெற்று அனுக்கிரகிப்பவர் சிவபெருமான் என்பதாலேயே, அவருக்கு ‘ஆசுதோஷி’ என்று ஒரு பெயர் இருக்கிறது.

சகல பிரபஞ்சமும் அடங்கியிருக்கிற லிங்க ரூபமானது ஆவிர்பவித்த சிவராத்திரி மகா சதுர்த்தசி இரவில், அவரை அப்படியே ஸ்மரித்து ஸ்மரித்து அவருக்குள் நாம் அடங்கியிருக்க வேண்டும். அதைவிட ஆனந்தம் வேறில்லை.

–நன்றி தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s