4-துக்ளக் வயது 45


இதன் முந்தைய பகுதி…
ஹெச். ராஜா (பா.ஜ.க. தேசியச் செயலர்) : 2014ஆம் ஆண்டில் அரசியல் ரீதியாகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1977வரை, காங்கிரஸ் அல்லாத மாற்று என்பது தான் இந்த நாட்டின் அரசியல் கட்சிகளுடைய தேடுதலாக இருந்தது. காங்கிரஸ் வலுவாகக் காலூன்றிய ஒரு அரசியல் சக்தி யாகத் திகழ்ந்திருந்தது. இதை எதிர்ப்பதற்குப் பல கட்சிகள், தலைவர்கள் ஒன்றாக இணைந்து ஒரு கூட்டு முயற்சியில் ஈடுபட்டார்கள். பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா, டாக்டர் ராம் மனோஹர் லோகியா போன்றவர்கள் ஏன் சில சமயங்களில், சில பகுதிகளில், உதாரணமாக உத்தரப் பிரதேசத்தில் கம்யூனிஸ்ட்டுகளே கூட இந்தக் கூட்டமைப்பில் இருந்திருக்கிறார்கள். 1977ல் கூட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜனதா கட்சியுடன் கூட்டணியில் இருந்தது. என்ன காரணம்? ஆதிக்க நிலையில் ஒரு அரசியல் கட்சி, கேள்வி கேட்பாரே இல்லாத நிலையில் இருக்கும்போது, அது சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கிறது என்பதை 1975ல் பார்த்தோம்.


அன்றைக்கு ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம், பி.எல்.டி., சோஷலிஸ்ட் கட்சி எல்லோரும் ஒன்றாக இணைந்து, ஜனதா கட்சி என்ற அமைப்பை ஏற்படுத்தி மாற்று அரசாங்கத்தைக் கொண்டு வந்தோம். அதுவும் இரண்டரை ஆண்டுகளுக்குள், சிறு குழந்தைகள் மிட்டாய்க்காகச் சண்டை போடுவது போல, தங்களுக்குள் சிறுபிள்ளைத்தனமாகச் சண்டையிட்டுக் கொண்டதால், அந்த ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் திருமதி இந்திரா காந்தி ஆட்சிக்கு வந்தார். இது அப்படியே தொடர்ந்து, 1985 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, இனி இந்தியாவில் எந்தக் கட்சிக்கும், தனிப் பெரும்பான்மை கிடைக்காது; கூட்டணிகள், கூட்டணி ஆட்சிகள் தவிர்க்க முடியாது என்ற நிலை உருவானது.

அதன் பிறகு தற்போது, சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள், ‘ஒரு கட்சிக்குத் தனிப் பெரும்பான்மை கொடுக்க வேண்டும், அப்போதுதான் வளர்ச்சி ஏற்படும்’ (கைதட்டல்) என்று 2014 மே மாதம் தேர்தலின்போது பா.ஜ.க.வுக்கு வாக்களித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல; இந்த நாட்டினுடைய பொருளாதார,அரசியல் மற்றும் சமுதாய சிந்தனைகளில் பெரிய மாற்றங்கள் இந்தக் காலகட்டத்தில் நடந்துள்ளன.

‘நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கும்’ என்று ஜவஹர்லால் நேரு கூறியதில் தொடங்கி, பின்னர் தாராளமயம் மற்றும் உலக மயமாக்கலுக்கு அதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.வி.நரசிம்ம ராவ் கொண்டு வந்த பொருளாதாரச் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம் அதைப் போன்ற இன்னொரு பெரிய மாற்றம் மதச் சார்பின்மை என்ற தத்துவத்தைப் பற்றியது. திரு. அத்வானி பலமுறை கூறியிருக்கிறார்; ‘ஹிந்துக்களை மட்டம் தட்டிக் கேவலமாகப் பேசுவதற்கான ஒரு மென்மையான வார்த்தையாக மதச்சார்பின்மை ஆகிவிட்டது’ என்று (கைதட்டல்). பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்கிற வகையில்கூட, எந்தவிதமான கருத்தும் சொல்லக் கூடாது என்பது போன்ற சூழ்நிலை நிலவி வந்தபோது, மக்களின் மனதில் கருத்து மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவும் சேர்ந்ததுதான் 2014 தேர்தல் முடிவுகள்.

இங்கே ஜவாஹிருல்லாஹ் பேசும்போது, 69 சதவிகிதம் பேர் பா.ஜ.க.வுக்கு எதிராக ஓட்டளித்திருப்பதாகச் சொன்னார். பா.ஜ.க. தலைமை தாங்கிய என். டி.ஏ.வுக்கு (தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு) 41 சதவிகிதம் ஓட்டு விழுந்துள்ளது. ஜவஹர்லால் நேருவின் செல்வாக்கு உச்சத்தில் இருந்தபோது கூட 42 சதவிகிதத்திற்கு மேல், காங்கிரஸ் ஓட்டு வாங்கியது இல்லை (கை தட்டல்). அதுவும் ஜனநாயகரீதி யில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதானே? அதுபோல இன்றும் தே.ஜ. கூட்டணிக்கு 41 சதவிகிதம் கிடைத்துள்ளது. தவிர, பா.ஜ.க. 543 தொகுதிகளிலும் போட்டியிடவில்லையே? ஆகவே, அதை ஒதுக்கி விட்டு, நமக்கு சௌகரியமானதைப் பேசுவது சரியாக இருக்காது.

கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு முக்கியக் காரணங்களுக்காக மக்கள் வெகுண்டெழுந்து காங்கிரஸ் ஆட்சியை வேரோடும், வேரடி மண்ணோடும் தூக்கி எறிந்துள்ளனர். எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூடப் பெறுகின்ற அளவுக்கு காங்கிரஸால் ஸீட்டுக்களைப் பெற முடியவில்லை. என்ன காரணம்? ஒன்று ஏழை மக்களின் முதுகெலும்பை முறிக்கின்ற பண வீக்கம்; அதன் விளைவாக விலைவாசி உயர்வு. இரண்டாவது ஊழல். இந்த இரண்டு விஷயங்களிலுமே, தற்போதைய அரசாங்கம் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. துக்ளக் ஆசிரியருடைய துவக்க உரையிலேயே அதைக் குறிப்பிட்டு, என்னுடைய வேலையைச் சுலபமாக்கி இருக்கிறார். இதுவரை பணவீக்கம் பூஜ்ய நிலைக்கு வந்ததே இல்லை.

ஏழைகளை மிக அதிகமாகப் பாதிப்பது உணவுப் பணவீக்கம். ஏழை மக்களின் வருமானத்தில் 75 அல்லது 80 சதவிகிதம் உணவுப் பொருளுக்குத்தான் போகிறது. அதே சமயம், நடுத்தர அல்லது உயர் வகுப்பினருக்கு இந்தச் சதவிகிதம் இவ்வளவு இருக்காது. வீட்டு வாடகை போன்ற அம்சங்கள்தான் அவர்களுக்குக் கூடுதலாக இருக்கும். ஏழைகளோ குடிசைகளில் இருப்பவர்கள். ‘பொருளாதார நிபுணர்’களுடைய பதவிக் காலத்தில் பணவீக்கம் 18ல் இருந்து 20 சதவிகிதமாக இருந்தது. ஆனால், இன்று பூஜ்ய நிலையை எட்டியுள்ளது. Retail Inflation கூட 5 சதவிகிதம்தான். பொருளாதார அதிசயத்திற்கு எடுத்துக் காட்டாகச் சொல்வதானால், அடல்ஜி (வாஜ்பாய்) அரசைக் குறிப்பிடலாம். ‘வளர்ச்சி இருந்தால் பண வீக்கம் இருக்கும்’ என்று பொருளாதார ஆசிரியர்கள் சொல்வார்கள். ஆனால், வாஜ்பாய் ஆட்சி பொறுப்பேற்றபோது, 4.5 சதவிகிதமாக இருந்த வளர்ச்சியை 2003 – 2004ல் 8.3 சதவிகிதத்துக்கு உயர்த்தி (கைதட்டல்), இந்தியா இரட்டை இலக்க வளர்ச்சியை எட்ட முடியும் என்ற நம்பிக்கையை அளித்தது அடல்ஜியின் ஆட்சி (கைதட்டல்).

ஆனால், இந்த 10 ஆண்டுகளில் என்ன நிலைமை? 8.3 சதவிகித வளர்ச்சியின்போது ஆட்சிக்கு வந்தவர்கள், அதை மீண்டும் 4.5 ஆகக் குறைத்து இப்போது ஆட்சியை நம்மிடம் கொடுத்திருக்கிறார்கள். அந்த 4.5 என்பது, மோடி பொறுப்பேற்ற இந்த ஏழு மாதங்களில் 5.7 ஆக வளர்ந்திருக்கிறது. உலக வங்கி முதற்கொண்டு பல்வேறு சர்வ தேச நிதி நிறுவனங்கள், இந்தியா 6.5 சதவிகித வளர்ச்சியை வருகின்ற 2015 – 16ல் எட்டுவது சுலபமானது என்று (கைதட்டல்) சொல்கின்ற அளவுக்கு அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே என்.டி.ஏ. ஆட்சி, பா.ஜ.க. ஆட்சி என்றால் வளர்ச்சி என்பதை நமது முந்தைய ஆட்சிக் காலத்திலும் நிரூபித்தோம்; இப்போதும் நிரூபித்து வருகிறோம்.

காங்கிரஸ் அரசு செய்ததைத்தான் இந்த அரசும் செய்கிறது என்று கூறுவது, அதற்கு உடனே காங்கிரஸார் ‘யூ டர்ன் சர்க்கார்’ என்று பெயர் வைப்பது, இதெல்லாம் பேச்சுக்குப் பயன்படலாம். எதை முன்னாடிச் செய்ய வேண்டும், எதைப் பிறகு செய்ய வேண்டும் என்று இந்த அரசுக்குத் தெரியும். வண்டியைக் கொண்டு போய் குதிரைக்கு முன்னாடி நிறுத்தக் கூடாது என்பதைத் தெரிந்த நிர்வாகம், மோடியின் அரசாங்கம். ‘மான்யங்களை நேரடியாகப் பயனாளிக்குத் தந்து விடுவோம்’என்று முன்பு கூறினார்கள்; ஆனால், மான்யங்களைப் பெறுவதற்குத் தகுதியானவர்களுக்கு வங்கிக் கணக்கே கிடையாது. அப்படி யானால் அந்தப் பணத்தை யார் பாக்கெட்டில் போடுவார்கள்? காங்கிரஸ்காரன் பாக்கெட்டிலா? (சிரிப்பு, கைதட்டல்).

அதனால்தான், இந்த ஆட்சி அறிவித்த ‘பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா’ என்பது, வங்கியில் வெறும் கணக்குத் தொடங்குவது மட்டுமல்ல; மான்யம் நேரடியாகப் போய்ச் சேர முதலில் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும்; அது மட்டும் போதாது. நான் செட்டி நாட்டைச் சேர்ந்தவன். அங்கும் பழக்கமுண்டு. சென்னையிலும் பார்த்திருக்கிறேன். சாலையோரக் கடை வைத்திருப்பவர்கள், தள்ளு வண்டியில் வியாபாரம் செய்கிறவர்கள் – இவர்களுக்கு காலையில் 90 ரூபாய் கடனாகத் தந்து, மாலையில் 100 ரூபாயாக வசூல் செய்து கொள்வான். அவர்களிடம் அந்த முதலீட்டுப் பணம் இல்லாததால், தினந்தோறும் இப்படி வாங்குவார்கள்.


கூட்டத்தின் ஒரு பகுதி….
ஆனால் இன்று இந்த ஜன்தன் யோஜனா மூலமாக, வங்கியில் பணமே இல்லாமல் அவன் பெயரில் கணக்குத் தொடங்கப்பட்டு, 5 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெறும் வசதி செய்து தரப்பட்டுள்ளது (கைதட்டல்). கந்து வட்டி, மீட்டர் வட்டிக்காரனிடம் கைகட்டி நிற்காமல் 5 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்து வியாபாரம் நடத்த முடியும். அதுமட்டுமின்றி, அவன் பெயரில் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் 1 லட்சம் ரூபாய். இது ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டம்.

சுதந்திர இந்தியாவின் சரித்திரத்திலேயே, உற்பத்தித் துறையில் எதிர்மறையான வளர்ச்சி என்ற நிலை இருந்த ஒரு ஆட்சி, மன்மோஹன் சிங் ஆட்சி. அந்த ஆட்சியில் மிகப் பெரிய பொருளாதார நிபுணர் எங்க ஊர்க்காரர்தான், நிதியமைச்சராக வேறு இருந்திருக்கிறார் (பலத்த கைதட்டல்). உற்பத்தித் துறையில் இருந்த எதிர்மறையான வளர்ச்சியை இன்று மாற்றியமைக்கத் திட்டமிட்டு, ‘இந்தியாவிலேயே உற்பத்தி’  Make in India என்பது மாத்திரம் அல்ல; அதனுடன் இணைந்து திறன் வளர்ப்பு (Skill Development) என்று திட்டமிட்டரீதியில் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான அரசாக, மோடி அரசு இருந்து கொண்டிருக்கிறது (கைதட்டல்).

புதிய தொழில் முனைவோருக்கு, ஆரம்ப நிலை முதலீட்டு உதவிக்கென (Seed Capital) 10 ஆயிரம் கோடி ரூபாயில் திட்டம். இவ்வாறு தருவதன் மூலம், மொத்தத்தில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரையிலான, முதலீட்டுடன் கூடிய தொழில்கள் இதன் மூலம் உருவாக முடியும். ஆகவே வேலைவாய்ப்பை உருவாக்க இது ஒரு வழி. வேலைவாய்ப்பு இருந்தால்தான் வருமானம் வரும்; வருமானம் இருந்தால்தான் சேமிப்பு இருக்கும்; சேமிப்பு இருந்தால்தான் முதலீடு வரும்; முதலீடு இருந்தால்தான் வேலைவாய்ப்பு உருவாகும். ஆகவே, இந்த அரசு பொருளாதார முன்னேற்றத் துறையில் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஸ்வச் பாரத்தைப் (தூய்மை இந்தியாவை) பொறுத்தவரை விளம்பரமாகவே இருக்கட்டும்; அது தேவை என்கிறேன். எம்.ஜி.ஆர். நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நாகேஷ், வாழைப் பழத்தைச் சாப்பிட்டு விட்டு, அதன் தோலை ரோட்டில் போடப் போவார். பிறகு அவரே, ‘ஓ! சிங்கப்பூரில் இருக்கோமோ’ என்று சொல்லி, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, தோலை வாயில் போட்டுக் கொள்வார் (சிரிப்பு). குப்பையைத் தெருவில் போட்டால் தப்பு என்பதைப் பிரபலமானவர்கள் மூலம் சொன்னால் நன்றாகப் பரவும். கமலஹாஸன் இதில் ஈடுபட்டார். சச்சின் டெண்டுல்கர் ஈடுபட்டுள்ளார். இது எதற்கு என்றால், மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான்.

கேரளாவில் சுற்றுப் பயணத்தில் இருந்தபோது ஒருவர் சொன்னார்; ‘அக்டோபர் 2ஆம் தேதி மோடி தூய்மை இந்தியா திட்டத்தைத் துவக்கி வைத்த பிறகு, நான் சாக்லேட் சாப்பிட்டால் கூட, அந்தப் பேப்பரை என் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, எங்கே குப்பைத் தொட்டி இருக்கிறதோ, அங்குதான் போடுகிறேன்; கண்ட இடத்திலும் போடுவதில்லை’ என்றார் (கைதட்டல்). ஆகவே, சில விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருவது பரவலாக விழிப்புணர்வு உருவாவதற்குத்தான். ஒரு வாரப் பத்திரிகை, மலையளவு குப்பை குவிந்திருப்பதற்குப் பக்கத்தில் பிரதமர் துடைப்பத்துடன் இருப்பது போல் படம் வரைந்து, சாத்தியமற்ற இலக்கு (Task Impossible) என்று எழுதியிருந்தது. நான் சொல்கிறேன் செயற்கரிய செய்வார் பெரியோர்; அது இந்த ஆட்சி.

இங்கு சில சர்ச்சைகள் பதில் கூற எனக்கு இங்கு அதிக நேரம் இல்லை. குற்றச்சாட்டுகள் கூறுவதற்கென்றே காங்கிரஸ், கம்யூனிஸ்ட், நாத்திக அமைப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்துள்ளன. துக்ளக்கில் கூட கடந்த வாரம், ‘தலை விரித்தாடும் ஹிந்துத்துவா வெறி’ என்று ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. அதில் ஆர்.எஸ்.எஸ். பரிவார் அமைப்பில் ஹிந்து மஹா சபாவையும் குறிப்பிட்டிருந்தார்கள். ஹிந்து மஹா சபா, பரிவார் அமைப்பாக எப்போது இருந்தது? ஜனசங் ஆரம்பித்த காலத்தில் இருந்த ஹிந்து மஹா சபாவும் தனியாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் எங்களோடு கூட்டணியாகக் கூட இருந்தது இல்லையே? தி.மு.க., அ.தி.மு.க. கூட பா.ஜ.க. கூட்டணியில் இருந்துள்ளது. ஹிந்து மஹா சபா அப்படி இருந்ததில்லை.

ஒரு விஷயத்தை நான் இங்கே தெளிவாக்க விரும்புகிறேன். காந்திஜி கொலை நடந்த அன்று குருஜி கோல்வால்கர் அவர்கள் அதை மிகக் கடுமையாகக் கண்டித்தார். ஆகவே அவர்களது (ஹிந்து மஹா சபா) கருத்துக்களில் பாரதிய ஜனதா கட்சிக்கோ, பரிவார் அமைப்புகளுக்கோ எந்த விதத்திலும் சம்பந்தம் கிடையாது. மேலும் இதில் (கோட்ஸேவுக்குச் சிலை) எங்களுக்குச் சம்மதமும் இல்லை (கைதட்டல்).

இதை இந்த மேடையில் பேசுவதற்காகச் சொல்ல வில்லை. துக்ளக்கில் 14ஆம் தேதி இதழில் வந்ததற்கு முன்னாடி, 4ஆம் தேதி திருச்சியில் நான் நிருபர்களைச் சந்தித்த போது, ‘இதை விடப் பெரிய பைத்தியக்காரத்தனம் இல்லை; எப்படி ராஜீவ் காந்தி கொலைக்குக் காரணமான எல்.டி.டி.ஈ, தலைவர் பிரபாகரனுக்கு தமிழ்நாட்டில் பிறந்தநாள் கொண்டாடுவது பைத்தியக்காரத்தனமோ, அது போல் இதுவும் (கோட்ஸேவைப் புகழ்வதும்) ஒரு பைத்தியக்காரத்தனம்’ (பலத்த கைதட்டல்) என்று சொன்னேன். இதில் எந்த விதத்திலும் பாரதிய ஜனதாவுக்கோ, ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கோ தொடர்பு இல்லை.

இது மாத்திரம் அல்ல; பல சர்ச்சைகள் ‘திடீரென்று பா.ஜ.க.காரர்கள் திருவள்ளுவரைக் கண்டுபிடித்து விட்டார்கள்’ என்று கூறுகிறார்கள். கிடையாது. ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் பிரார்த்தனையின்போது, நாயன்மார்கள், ஆழ்வார்கள், திருவள்ளுவர் ஆகியோரை முதலில் துதிக்கிறோம். அதையடுத்து மஹாத்மா காந்தி பற்றி, டாக்டர் அம்பேத்கர் பற்றி, சுப்ரமணிய பாரதி பற்றி, ராஜேந்திர சோழன் பற்றி, எல்லோரையும் பற்றி ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பக்திபூர்வமாக அக்கூட்டங்களில் சொல்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, 1937-ல் வார்தாவில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஒரு முகாமிற்கு காந்திஜி வந்தார். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சாப்பிடும்போது, காந்திஜி ஒவ்வொருவரிடமும் சென்று, ‘உன் ஜாதி என்ன?’ என்று விசாரித்தார். இது முக்கியமான செய்தி. என்னவோ பாரதிய ஜனதா கட்சி, வருணாச்ரம தர்மக் கட்சி என்கிறார்கள். 1978-ல் பாபா சாஹேப் தேவரஸ் சொன்னார்; ‘தீண்டாமை இந்த நாட்டில் குற்றமில்லை என்று சொன்னால், எதுவுமே குற்றமில்லை’ என்றார். இதைவிட வேறு என்ன வேண்டும்? 1937-ல் காந்திஜி, ஆர்.எஸ்.எஸ்.காரர்களிடம் எந்த ஜாதி என்று கேட்ட போது, எல்லோரும், ‘ஹிந்து’, ‘ஹிந்து’ என்கிறார்கள்.

அப்போது காந்திஜி, ஹெட்கேவாரிடம், ‘நான் ஒரு சமூக ஆய்வாளர் என்ற முறையில் தெரிந்து கொள்வதற்காகக் கேட்கிறேன்; இவர்களிடம் எந்த ஜாதி என்பதைச் சொல்லச் சொல்லுங்கள்; நீங்கள் கூறினால் கேட்பார்கள்’ என்று கூறினார். அதன் பிறகு அவர்கள், தங்கள் ஜாதியைச் சொன்னார்கள். அங்கே ஒவ்வொருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அப்போது காந்திஜி என்ன சொன்னார் தெரியுமா? ‘என்னால் காங்கிரஸில் கொண்டு வர முடியாத சீர்திருத்தத்தை நீங்கள் களத்திலே கொண்டு வந்திருக்கிறீர்கள்’ (பலத்த கைதட்டல்) என்றார். ஏனென்றால் சுதந்திரத்துக்கு முன்பு காங்கிரஸ் மாநாட்டில் கூட, ஹரிஜன மக்களுக்குத் தனி பந்தி உண்டு. இடையில் திரை போட்டு வைத்திருப்பார்கள். இதை எந்தக் காங்கிரஸ்காரராலும் மறுக்க முடியாது. அது மட்டுமல்ல; 1964ல் விச்வ ஹிந்து பரிஷத் தொடங்கப்படும்போது, அதில் கொண்டு வரப்பட்ட முதல் தீர்மானமே, ‘ஹிந்து சமுதாயத்தில் தீண்டாமைக்கு இடமில்லை’ என்பதுதான்.

இப்போது சமீபத்தில், பகவத் சிங் தலைமையில் ஆர்.எஸ்.எஸ். நிறைவேற்றிய தீர்மானம் ‘தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மற்றவர்களோடு போட்டியிடச் சக்தி பெறுகின்ற வரை இந்த இடஒதுக்கீடுகள் தொடர வேண்டும்’ (கைதட்டல்). இதை விட சமூக ஒற்றுமைக்கு வேறு என்ன வேண்டும்? ஹிந்து சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்க வேண்டும். ஏற்றத்தாழ்வுள்ள சமுதாயத்தை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே, மஹாத்மா காந்தி பற்றி யாரோ பேசியுள்ள கருத்துக்கு எங்கள் மீது, அதாவது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகள் மீது குற்றம் சாட்டுவது என்பது சரியாக இருக்காது.

தொகுப்பு: எஸ்.ரமேஷ்
ஃபோட்டோ: சிவா
(துக்ளக் ஆண்டு விழா டி.வி.டி. வேண்டுவோர், 04424984050 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்)

(தொடரும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s