3-துக்ளக் வயது 45


இதன் முந்தைய பகுதி…

எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், எம்.எல்.ஏ. (தலைவர், மனிதநேய மக்கள் கட்சி) : “சுதந்திரமாகப் பொதுத் தளங்களில் கருத்துக்களைப் பதிவு செய்யும் வாய்ப்பு சிறுபான்மை மக்களுக்கு அரிதாகவே கிடைக்கின்றது. அத்தகைய அரிய வாய்ப்பாக இதை நான் கருதுகின்றேன். மாணவப் பருவத்திலிருந்தே நான் ‘துக்ளக்’கை வாசித்து வருகின்றேன். ‘துக்ளக்’ வெளியிடும் கருத்துக்களில் எனக்குப் பல மாற்றுக் கருத்துக்கள் இருந்தபோதிலும், வெகுஜன வாரப் பத்திரிகை உலகில் துக்ளக்கின் வருகை ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை (கைதட்டல்). நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்வு குறித்துப் புலனாய்வு செய்து கொண்டிருந்த இதழ்களுக்கு இடையே, ‘துக்ளக்’ பிரசுரமாகி, அரசியல் ரீதியான சிந்தனைகளைப் பரவச் செய்ய வழி வகுத்தது என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன்.


‘துக்ளக்’ இதழ்களில் பல இதழ்கள் சிறப்பானதாக இருந்தாலும் கூட, ஒரு வாரம் வெளிவந்த இதழை மறக்கவே முடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி 1996 டிஸம்பர் 6ஆம் தேதி அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் இடித்துத் தரை மட்டமாக்கப் பட்டபோது, அந்த வாரம் வெளி வந்த ‘துக்ளக்’கின் அட்டைப் படம் வெறும் கருப்பாக இருந்தது (கைதட்டல்). அது ஒரு கொடிய நிகழ்வு என்பதைப் பதிவு செய்திருந்தார்கள். அதை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

“இன்றைய அரசியல்’ என்ற தலைப்பில் இங்கு உரையாற்ற நான் பணிக்கப்பட்டுள் ளேன். 2014ஆம் ஆண்டு, மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் நிகழ்ந்த ஆண்டாக அமைந்தது. நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஒரு புதிய ஆட்சி பொறுப்பேற்றது. பா.ஜ.க. 282 இடங்களிலும், அது தலைமை தாங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 இடங்களிலும் வெற்றி பெற்றது. இருப்பினும், வாக்களித்த மக்களில் 69 விழுக்காட்டினர், பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களித்தார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. மனதைச் சுண்டி இழுக்கக் கூடிய பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி, இந்தியாவின் பிரதமராக ஆகியிருக்கிறார். ஆனால், தேர்தலின்போது அவர் அளித்த பல வாக்குறுதிகள், இன்று ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகியும் கூட நிறைவேற்ற முடியாத ஒரு சூழலைப் பார்க்கின்றோம்.

அதுமட்டுமல்லாமல், முந்தைய காங்கிரஸ் அரசு பதவியில் இருந்தபோது, காங்கிரஸ் அரசின் பல நிலைப்பாடுகளை பா.ஜ.க. விமர்சித்துள்ளது. ஆனால், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, எதையெல்லாம் விமர்சித்தார்களோ, எதை எதிர்த்தார்களோ, அதையே இவர்களும் நிறைவேற்றுவதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். குறிப்பாக, சேது சமுத்திரத் திட்டம். அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் முந்தைய ஆட்சியில் பா.ஜ.க. அதைக் கடுமையாக எதிர்த்த ஒரு நிலையை மேற்கொண்டு, வெவ்வேறு வகையில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியது. ஆனால், இப்போது பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, அதே சேது சமுத்திரத் திட்டத்தை மாற்று வழியில் நடைமுறைப்படுத்துவோம் என்று சொல்வது – எந்த வகையில் நியாயம்? என்று கேட்க விரும்புகிறேன்.

நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்ற பிறகு, நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, ‘இந்த அரசு ஏழைகளுக்குச் சொந்தமான அரசு; ஏழைகளுக்கு வறுமையை ஒழிக்கும் வல்லமையை அளிப்போம்; அதன் மூலம் அவர்கள் கண்ணியமாக வாழ்வதற்கு வழி வகுப்போம்’ – என்றார். இது போல் கவர்ச்சிகரமாகப் பேசுவதில் மோடி வல்லவராக இருக்கிறார். ஆனால், அவரது அரசின் செயல்பாடுகள் இதற்கு நேர் எதிரானதாக இருக்கிறது. எடுத்துக்காட்டாகச் சொல்வதானால், 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்குவதற்கு மோடி அரசு எடுத்துள்ள நடவடிக்கையைக் குறிப்பிடலாம். ‘மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம்’, உலகம் கண்டிராத மிகப்பெரும் அரசு வேலைவாய்ப்புத் திட்டமாக இருந்து வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் 4.8 கோடி வீடுகளைச் சேர்ந்த 7.4 கோடி மக்கள் பலனடைந்துள்ளார்கள். இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு அரசுக்கு ஏற்பட்ட செலவினம் 34 ஆயிரம் கோடி ரூபாய். அதாவது ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவிகிதம்.

“பிரதமர் மோடிக்கு, உண்மையிலேயே ஏழைகளுக்கு உதவிட வேண்டும் என்ற அக்கறை இருந்தால், தனது உரையில் குறிப்பிட்ட வாறு, கிராமப்புற ஏழை மக்களின் வறுமையை ஒழிக்க உதவிடும் இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, இன்னும் அதிகமான மக்களுக்கு இதன் பலன் சென்றடையச் செய்திருக்க வேண்டும். அதுதான் எங்களுடைய விருப்பம். ஆனால், மாநில அரசுகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியைப் பெருமளவு குறைத்துள்ளதுடன், அதன் பயனைக் கட்டுப்படுத்தும் முடிவையும் மோடி அரசு எடுத்துள்ளது. இதன் விளைவாக தமிழ்நாட்டில் 385 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்பட்டு வந்த இந்தத்திட்டம், தற்போது 98 ஊராட்சி ஒன்றியங்கள் என்ற அளவுக்குக் குறைந்து, கிராமப்புற ஏழை மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது.

“மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பயனடைந்து வந்த ஏழை மக்களிடம் இருந்து ‘அச்சே தின்’ – நல்ல நாட்கள் – விடை பெற்றுச் சென்று விட்டன. இதுபோல் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இதுவரை அனுபவித்து வந்த நல்ல நாட்களும் பறி போய் விடும் போலத் தெரிகிறது. சுய உதவிக் குழுக்கள் கலைக்கப்படலாம் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். மகளிர் சுய உதவிக் குழுக்களால்தான் தமிழகத்தில் கிராமப்புற மகளிர் பொருளாதாரம் மேம்பட்டிருப்பதோடு, குடும்பத்தில் உள்ள பெண்கள், பிறரைச் சாராமல் தன்னிறைவு பெற்றுள்ளனர். நாடு முழுவதிலும் பெண்கள் மத்தியில் பரவலான வளர்ச்சியை மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தி இருக்கையில், அவற்றைக் கலைப்பதுதான் மோடி அரசுக்கு ‘வளர்ச்சி’ என்று தெரிகிறதா என்று வினவ விரும்புகின்றேன்.


கூட்டத்தின் ஒரு பகுதி….
மோடி பதவி ஏற்றதுமே சொன்னார்; ‘பாரத் விஜய்ஹே –பாரதம் வெற்றி பெற்றுள்ளது; நல்ல நாட்கள் வரப் போகின்றன’ – என்று சொன்னார். ஆனால், ஏழு மாத கால மோடி ஆட்சியைப் பார்க்கும்போது, அச்சே தின் – நல்ல நாட்கள் – மேல் தட்டு மக்களுக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் மட்டும்தான் என்று எண்ணத் தோன்றுகிறது. எடுத்துக்காட்டாகச் சொல்வதானால், கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்காக, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளுக்குச் செல்லக்கூடிய தகுதியான மாணவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

ஆனால், நம்முடைய பிரதமர் மோடி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றபோது, அவருடைய குழுவில், அவரது நண்பரும், பெரும் தொழிலதிபருமான அதானியும் சென்றார். அங்கே குயின்ஸ்லாந்தில் நிலக்கரிச் சுரங்கம் துவங்குவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்காக அதானி குழுமம் கேட்ட கடன் தொகையை, ஆஸ்திரேலியாவில் உள்ள 5 வங்கிகள் தர மறுத்துவிட்ட சூழ்நிலையில், பிரதமருடன் சென்ற ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பிரதிநிதி, 6,200 கோடி ரூபாய் அதானிக்கு கடன் கொடுக்கக் கூடிய புரிந்துணர்வு ஒப்பந்தம் அங்கே கையெழுத்தாகின்றது. பிரதமரின் முன்னிலையிலேயே இது நடைபெற்றது. ஆகவேதான் அச்சே தின் – நல்ல நாட்கள் என்பது இந்த ஆட்சியில் கார்ப்பரேட்களுக்கு மட்டும்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது.

வளர்ச்சிக்கான ஆக்கபூர்வ மான பணிகள் நடக்கின்றனவோ இல்லையோ, மோடி ஆட்சியில் பகட்டான விளம்பரங்கள் மட்டும் தாராளமாகவே செய்யப்படுகின்றன. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு, ஸ்வச் பாரத் – தூய்மை இந்தியா திட்டம். மஹாத்மா காந்தியடிகள் பிறந்த நாளன்று இத்திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தைக் குறித்து சோ அவர்கள், கடந்த அக்டோபர் 22 துக்ளக் இதழின் கேள்வி–பதில் பகுதியில், ‘இந்தத் திட்டம் விளம்பரம் பெறுவதற்கான திட்டம்; தூய்மை இந்தியா பேனர்கள், போஸ்டர்கள் எல்லாம் குப்பையோடு குப்பையாகக் கலந்திருக் கும்’ என்று மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறார். தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. தலைவர் சதீஷ் உபாத்யாயா குப்பைகளை அவரே கொட்டி விட்டு, பிறகு அவரே அதைத் தூய்மைப்படுத்தியதை அக்டோபர் 26 இதழில் ஆசிரியர் சோ அவர்கள் ‘ஸ்டண்ட்’ என்று வர்ணித்திருப்பதையும் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எந்த அளவுக்கு விளம்பர மோகம் இந்த அரசை ஆட்டிப் படைக்கிறது என்பதற்கு இது மட்டுமல்ல, இன்னும் பல சான்றுகள் இருக்கின்றன. சமீபத்தில் இலங்கையில் தூக்குத் தண்டனைக்கு ஆளான நம்முடைய 5 மீனவர்கள் – என்னுடைய தொகுதிக்குட்பட்ட தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர்கள் – விடுதலை செய்யப்பட்டார்கள். இந்த விடுதலையில் மத்தியில் உள்ள மோடி அரசுக்குப் பெரும் பங்கு இருப்பதை மறுக்க முடியாது. அதற்காக மோடி அரசுக்கு நான் அப்போதே நன்றி தெரிவித்துள்ளேன்.

ஆனால், மத்திய அரசுக்கு அதிலே பங்கு இருப்பதைப் போல் தமிழக அரசுக்கும் பங்கு உண்டு. அவர்களுக்கான செலவுகளை ஏற்று, வழக்குகளை நடத்தியது தமிழக அரசு என்பதை மறுக்க முடியாது. இந்த 5 மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக் கப்பட்டவுடன், ராமேச்வரம் தீவு கொதித்தெழுந்தது. மிகப் பெரிய போராட்டங்களை அந்த மீனவ மக்கள் நடத்தினார்கள். நாடு பார்த்துக் கொண்டிருந்தது. அதன் காரணமாக மிகப் பெரிய நகர்வுகள் நடைபெற்றன. தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரலில், இந்த 5 மீனவர்களின் உயிரைக் காப்பாற்ற குரல் கொடுத்தன. 5 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

ஆனால், மோடி அரசுக்கு, கொழும்பிலிருந்து தங்கச்சி மடம் வருவதற்கு குறுகிய பாதை எப்படி அமைந்தது என்றால், கொழும்பு டு நியூடெல்லி, நியூ டெல்லி டு சென்னை, சென்னை டு ராமநாதபுரம், ராமநாதபுரம் டு தங்கச்சிமடம் (கைதட்டல்). இது ஏன்? அந்த 5 மீனவர்களையும் நான் அவர்களுடைய இல்லங்களில் சந்தித்துக் கேட்டேன். ‘நீங்கள் கொழும்புவிலிருந்து புறப்படும்போது எந்த ஊருக்குச் செல்கிறோம் என்று சொன்னார்களா?’ என்று கேட்டேன். ‘ஐயா, ஒன்றுமே சொல்லவில்லை’ என்று சொன்னார்கள்.

டெல்லியில் என்ன நடந்தது? டெல்லிக்கு வந்து இறங்கினார்கள். அங்கே விமான நிலையத்தின் ஒரு வாசலில் தமிழக அரசின் பிரதிநிதிகள் காத்திருந்தார்கள்; தமிழகப் பத்திரிகையாளர்கள் காத்திருந்தார்கள். அவர்களை எல்லாம் பார்க்கவிடாமல், மீனவர்கள் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அப்படித் தான் அந்த மீனவர்கள் சொல்கிறார்கள். அங்கே தூர்தர்ஷனும், ஏ.என்.ஐ.யும் மட்டும் வந்தன. ‘மோடி அவர்களுக்கும், ராஜபக்ஷவுக்கும் நன்றி சொல்கிறோம் என்று மட்டும் சொல்லுங்கள்’ என்று அவர்களிடம் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். அப்படிச் சொன்ன பிறகு, அப்படியே திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். ஏன் இந்த விளம்பர மோகம் என்று கேட்கத் தோன்றுகிறது.

இதேபோல், தேர்தல் பிரசாரத்தில் மீனவர்கள் தொடர்பாக மோடி பேசும்போது, ‘தமிழக மீனவர்களுக்காக தனி அமைச்சகம் அமைக்கப்படும்’ என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், தமிழக மீனவர்களுக்கு அந்த நல்ல நாட்கள் இன்னும் வரவில்லை. அன்றாடம் அவர்கள் பிரச்னையைச் சந்திக்கின்றார்கள். அதுமட்டுமல்ல, மோடி அரசு பதவி ஏற்ற பிறகு, இதுவரை தமிழக மீனவர்களின் 90 படகுகள் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தப் படகுகளில் ஒன்றைக் கூட இந்த ஆட்சி மீட்கவில்லை. எனவேதான், மீனவர்களுக்கு அச்சே தின் இன்னும் வரவில்லை என்று சொல்கின்றேன்.

இங்கே இன்னொன்றையும் நான் சொல்ல விரும்புகின்றேன். பல்வேறு துறைகளை பன்னாட்டு நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு ஒதுக்குவதுபோல், மீன் வளத் துறையையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பது போல் ஒரு முடிவு எடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ‘முதலில் பசுமைப் புரட்சியை நிலை நாட்டினோம்; பிறகு வெண்மைப் புரட்சியை நிகழ்த்தினோம்; இனி நீலப் புரட்சியை நிலை நாட்டுவோம்’ என்று மோடி சொன்னார். அது என்ன நீலமோ எனக்குப் புரியவில்லை. ஒரு சிறப்பு மண்டலத்தை அமைப்பது பற்றி, மீன்வளத் துறை துணை இயக்குனர் மீனா குமாரி தலைமையில் ஒரு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் மீன் பிடிப்பதற்கு அனுமதி அளிக்கும் ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது.

சமீபத்தில் 12 அணு உலைகள் அமைப்பதற்கு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2 அணு உலைகள் இருக்கின்றன. ‘மஹாராஷ்டிராவில் ஜெய்தாபூரில் அணு உலையை அனுமதிக்க மாட்டோம்’ என்று அம்மாநிலச் சுற்றுச்சூழல் அமைச்சரான பா.ஜ.க.வைச் சேர்ந்த கரம் அவர்கள் தெளிவாகக் கூறியிருக்கிறார். ஆனால், அணு உலையின் குப்பைத் தொட்டியாக தமிழகம் மாறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் தமிழக அரசு என்ன நிலையை எடுத்திருக்கிறது என்று வினவ விரும்புகிறேன். அதேபோல் காவிரிப் படுகைப் பகுதியில் உள்ள 50 லட்சம் விவசாயிகளைப் பாதிக்கக் கூடிய மீத்தேன் திட்டம் பற்றி, இந்த அரசின் நிலைப்பாடு என்ன என்று கேட்க விரும்புகிறேன்.

அடுத்ததாக பா.ஜ.க.காரர்களும், துக்ளக் இதழிலும் ‘ஹிந்துத்துவா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் எனக்கு உடன் பாடில்லை. அதை நான் ‘சங்க பரிவாரத்துவம்’ என்றே சொல்ல விரும்புகிறேன். பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த அரங்கில் சுட்டிக்காட்டப்பட்டதுபோல், பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. இதைப் பற்றி சோ அவர்கள் இங்கே சொல்லும்போது, ‘யார் யாரெல்லாமோ, எங்கேயோ பேசுவார்கள்; அதற்கு நரேந்திர மோடி பதில் சொல்ல வேண்டுமா?’ என்று கேட்டார். ஆனால், சோ அவர்களுக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்; 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 10ல் வெளிவந்த துக்ளக்கில், ‘இது பற்றி மோடியும், அமித்ஷாவும் பேசாமல் இருப்பது, இதற்கு அவர்களுடைய அங்கீகாரம் உண்டு என்பது போல் இருக்கிறது’ என்று தலையங்கத்தில் கூறியிருப்பதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

“அது மட்டுமல்லாமல், இங்கே போஹோ ஹராமைப் பற்றி, ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸைப் பற்றி, சமீபத்தில் ஃப்ரெஞ்சு நையாண்டி பத்திரிகையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைப் பற்றி எல்லாம் சொன்னார்கள். சோ அவர்கள் மிக நியாயமாகவே சொன்னார்; ‘இங்குள்ள முஸ்லிம்கள் இவற்றை எதிர்க்கிறார்கள்; அவர்களுக்கு இது பெரிய தர்மசங்கடங்களை ஏற்படுத்தி இருக்கிறது’ என்று சொன்னார். நிச்சயமாக போஹோ ஹராமும் சரி, ஐ.எஸ்.எஸ்.ஐ.எஸ்.ஸும் சரி, அல்லது சார்லி ஹெப்டோ மீது தாக்குதலில் ஈடு பட்டவர்களும் சரி – நான் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன் – அவர்கள் முஸ்லிம் பெயர் தாங்கிகள்தானே தவிர, (கைதட்டல்) இஸ்லாத்தின் பிரதிநிதிகளாக, இஸ்லாத்தின் அடிப்படையிலே செயல்படக் கூடியவர்களாக இருக்கவில்லை. அத்தகைய பயங்கரவாதமும், தீவிரவாதமும் அது எந்த மத அடிப்படையில் வந்தாலும்கூட, நிச்சயமாக அதை அங்கீகரிக்க முடியாது; ஏற்றுக் கொள்ள முடியாது. அத்தகைய பயங்கரவாதம் நசுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து (கைதட்டல்).

“இறுதியாக தலைசிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர் சுஜாதா கூறிய ஒரு கருத்துடன் எனது உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன். இஸ்லாம் தீவிரவாதத் தைப் போதிக்கின்றதா? அப்படிப்பட்ட கருத்து திருக்குர் ஆனிலே சொல்லப்பட்டிருக்கிறதா? என்ற கேள்விக்கு, சுஜாதா அவர்கள் தினமணியின் ரம்ஜான் பெருநாள் மலரில் எழுதியிருந்த கட்டுரையில் பதில் சொல்லி இருக்கிறார்.‘திருக்குர் ஆனை முதலில் இருந்து கடைசி வரை மொத்தமாகத் தேடிப் பார்த்தாலும், மற்றவர் பெயரில் வெறுப்பு வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை, குர் ஆனில் இல்லை; நம்மிடம்தான் (கைதட்டல்). திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய என் கண்களைத் திறந்த என் பெற்றோர் தீவிர வைணவர்’ என்று சொல்லி இருக்கிறார் (கைதட்டல்).

“இந்தியா என்பது பல நிறமும்,பல வாசமும் உள்ள பல பூக்கள் பூக்கக் கூடிய தோட்டம். இதில் இழையாக இருப்பது நமது அரசியல் நிர்ணயச் சட்டம். அந்த அரசியல் நிர்ணயச் சட்டத்தின்படி அனைவரும் ஆட்சி செய்வதற்கு இணைந்து செயல்படுவோம்.”

இவ்வாறு ஜவாஹிருல்லாஹ் பேசி முடித்ததும், அவரது பேச்சு தொடர்பாக ஆசிரியர் சோ சில கருத்துக்களைக் கூறினார். அப் போது சோ பேசியது:

“சேது சமுத்திரத் திட்டத்தை முதலில் பா.ஜ.க. எதிர்த்தது என்றால், அந்தத் திட்டம் கூடாது என்று சொல்லவில்லை. அந்தப் பாதை வேண்டாம்; ராமர் பாலத்தை இடித்துத்தான் செயல்படுத்துவோம் என்று கூறியதை எதிர்த்தது (கைதட்டல்). ‘ராமர் என்ன எஞ்ஜினியரா?’ – இந்த மாதிரி பேசப்பட்டதைத்தான் பா.ஜ.க. எதிர்த்ததே தவிர, மாற்று வழி தேடக் கூடாது என்று பா.ஜ.க. சொல்லவில்லை. இப்போது அதைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

“மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் பற்றிச் சொன்னார். நல்லா பணம் பண்ணுவதற்கு உதவுவது இந்தத் திட்டம் (சிரிப்பு, கைதட்டல்). கூலியாக நியாயமாக 100 ரூபாய் தர வேண்டும் என்றால், எவ்வளவு தரப்படுகிறது என்பது, ஆங்காங்கே இருக்கும் அதிகாரியையும், அந்தக் கூலியை வாங்கிக் கொள்பவரையும் பொறுத்து, 60 ரூபாய், 70 ரூபாய் என்று தரப்பட்டது. மீதியை இவர்கள் பங்கு போட்டுக் கொண்டார்கள். வேலையோ ஒன்றும் கிடையாது. எனக்கு இதுபற்றித் தெரியும். கிராமத்தில் போய்ப் பார்த்தபோது, வயல்காட்டில் கள்ளி மாதிரி முளைத்திருப்பதைக் காட்டி, இதை எல்லாம் எடுப்பதாகத்தான் இந்த வேலைக்குக் கணக்கு காட்டப்பட்டது. அதேபோல் சாலையைச் சுத்தம் செய்தோம்; வரப்பைச் சுத்தம் செய்தோம் என்று கணக்கு – ஆனால் அப்படி ஒரு வேலையும் நடக்காது.


“சோம்பேறித்தனத்தை வளர்த்து, விவசாயத்துக்கு ஆள் இல்லாமல் செய்து (பலத்த கைதட்டல்), சில அதிகாரிகளுக்குப் பணம் பண்ண வழி செய்து கொடுத்த திட்டம் இது. மஹாத்மா காந்தி ‘எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்’ என்றார். இப்படிப் பட்டவர்களும் நல்லா இருக்கணும்னு நினைச்சாரோ, என்னவோ (சிரிப்பு, கைதட்டல்) தெரியாது. அந்த திட்டத்தை இந்த அரசு கைவிட்டு விடவில்லை. அதில் உள்ள ஊழலை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுப்பது, இடையில் பணம் வேறு எங்கும் போகாமல் எப்படித் தடுப்பது என்பதுதான் இந்த அரசின் கவலையே ஒழிய, ஏழை மக்களுக்குக் கிடைக்கக் கூடிய உதவியைத் தடுத்து விடுவது மோடியினுடைய எண்ணம் அல்ல, அவருடைய வளர்ச்சித் திட்டம் என்பது அது அல்ல.

“அதானிக்குக் கொடுக்கும் பணம் (கடன்) சலுகை என்று சொன்னார். பொதுவாக, நம் நாட்டில், பணக்காரன் என்றால் அவன் கெட்டவன்; ஒரு பிஸினஸ்மேன் என்றால் அவன் அயோக்கியன்; தொழிலதிபர் என்றால் அவன் இருக்கவே கூடாது – இந்த மாதிரி ஒரு அபிப்பிராயம் வளர்ந்திருக்கிறது. நான் அவர்களை எல்லாம் மிகவும் மதிக்கிறேன் (கைதட்டல்). எல்லோராலும் பிஸினஸ் நடத்த முடியாது. எல்லோராலும் அதில் ஏற்படும் நெளிவு சுளிவுகளைச் சமாளிக்க முடியாது. அதில் வரக்கூடிய நஷ்டங்களைத் தாங்க முடியாது. எல்லோராலும் ‘ப்ளான்’ பண்ண முடியாது; விஷன் இருக்காது. இந்தத் திறமைகள் சிலரிடம் இருக்கின்றன. அப்படிப்பட்டவர்கள் வெற்றிகரமான தொழிலதிபர்களாக இருக்கிறார்கள். அவர்களை அரசு நாட் டுக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் (கைதட்டல்).

“வர்த்தகர்களையும், தொழிலதிபர்களையும் நசுக்கித்தான் ஒரு நாடு முன்னேற முடியும் என்று உலகத்தில் எங்குமே கிடையாது. அவர்கள் சுயநலவாதிகளாக இல்லாதவாறு பார்த்துக் கொண்டு, அவர்கள் செய்யும் வேலையால், அவர்களுடைய திறமையால், தொழில்களும், வர்த்தகங்களும் வளர்ந்து, அதன் மூலம் ஏழைகளும் வாய்ப்புகளைப் பெற வழிதேட வேண்டும். அதைத்தான் மோடி செய்து கொண்டிருக்கிறார். அதில் தப்பும் கிடையாது. அப்படி ஒன்றும் தொழிலதிபர்கள், எங்கோ திருடி தொழில் செய்யவில்லை. பல ரிஸ்க்குகள் எடுத்து, கஷ்டப்பட்டுத்தான் தொழில் நடத்துகிறார்கள். பல தொழில் களை வளர்த்து பணிபுரியும் அவர்களுடைய பணியை, நாட்டுக்குப் பயனுள்ள வகையில் திருப்பி விட அரசு முனைய வேண்டும். அதை மோடி செய்கிறார்.

“மீனவர்களின் விடுதலை பற்றிக் குறிப்பிட்டார். மத்திய அரசின் தலையீடு இருந்திரா விட்டால், அவர்கள் விடுதலை ஆகி இருக்கப்போவதில்லை (கைதட்டல்). அதற்கு முன்னால் ‘நாங்கள் கொடி பிடித்தோம், ஆர்ப்பாட்டம் செய்தோம்’ என்றால், எல்லாவற்றுக்கும்தான் ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள்? எல்லா காரியமும் நடந்து விடுகிறதா? மத்திய அரசு, தான் செய்த ஒரு காரியத்தை, ‘நாங்கள் செய்தோம்’ என்று சொல்லிக் கொள்ளக் கூடாதா? மக்களுக்கு அது தெரியக் கூடாதா? மத்திய அரசு அதை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? (சிரிப்பு) எப்படி இந்த மீனவர்கள் விடுதலையானார்கள்? ‘தெரியலை, (சிரிப்பு). அங்கே ஏதோ கொடி பிடிச்சாங்களாம் (சிரிப்பு) அதனால் விடுதலை ஆகிட்டாங்க போலிருக்கு’ன்னு சொல்ல முடியுமா? இதுதான் ஒரு பிரதமரும், மத்திய அரசும் செய்ய வேண்டிய வேலையா? இதில் என்ன நடந்தது என்று அரசு சொல்லி இருக்கிறது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாவிட்டால் என்ன செய்ய முடியும்?

“ஹிந்துத்துவ அமைப்புகளைச் பற்றி நான் எழுதியிருப்பதைச் சொன்னார். நான் நிச்சயமாக அவர்கள் போக்கை எதிர்த்திருக்கிறேன். வளர்ச்சி என்ற பாதையில் மோடி போய்க் கொண்டிருக்கிறார். அதைக் கெடுப்பது போல், ஆங்காங்கே அதற்கு இடையூறு செய்வது போல் என்னென்னவோ பேசுகிறார்கள். ஒரு வரைமுறையே இல்லை. ராமர் பற்றிய பேச்சு, கோட்ஸே பற்றிய பேச்சு – இப்போது கோட்ஸேவுக்கு கோயில் என்று ஆரம்பித்திருக்கிறார்கள். எனக்குச் சந்தேகமே வந்து விட்டது. அதாவது, மோடிக்கு வரும் நற்பெயரைக் கெடுப்பதற்கென்றே, இந்த அரசின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கத்துடனேயே இந்த மாதிரி எல்லாம் செய்கிறார்களோ என்று. சிலர் அவரது வளர்ச்சியைப் பொறுக்க மாட்டாமல், அவர்களால் இந்த மாதிரி காரியங்கள் நடத்தப்படுகின்றனவோ என்று எனக்குச் சந்தேகமே வந்து விட்டது.


“ஆனால் ஒன்று சொல்கிறேன். இந்த ஹிந்துத்துவ அமைப்புகள் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். ஹிந்துயிஸம் மாதிரி சகிப்புத்தன்மை உள்ள மதம் எதுவுமே கிடையாது ( பலத்த கைதட்டல்). நீங்கள் ஆரம் பத்திலிருந்து பார்த்தாலும், உபநிஷத் துக்களிலிருந்து இன்றைய எழுத்துக்கள் வரை எடுத்துக் கொண்டாலும், கேள்விகளைச் சந்திக்க ஹிந்துயிஸம் பயந்ததே கிடையாது (கைதட்டல்). எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேள்; பதில் சொல்கிறோம் – என்று பதில் இருக்கிறது. அந்தப் பதில் நமக்குப் புரியாது. அதனால் தத்துவத்தையே கேள்வி கேட்கிறார்கள்.

“இப்போது ஒரு எழுத்தாளர் நான் இனிமேல் எழுதப் போவதில்லை என்று சொல்லி விட்டார். இதனால் யாருக்கு நஷ்டம் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் சுட்டிக்காட்டியுள்ள மாதிரி பழக்கங்கள் ஒருவேளை இருந்திருக்கலாம். அதை ஒருவர் எழுதட்டுமே? அவருடைய கருத்தை அவர் சொல்லிவிட்டுப் போகிறார். அது எத்தனை பேரிடம் போய்ச் சேரப் போகிறது? அந்தப் புத்தகத்தை எத்தனை பேர் படித்திருப்பார்கள்? இந்த எதிர்ப்பால், இன்று அதில் இருப்பது எல்லோருக்கும் தெரிய வருகிறது.

பாரதியாரின் கவிதை ஒன்று –
உண்மையின் பேர்தெய்வம் என்போம் அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்
உண்மைகள் வேதங்கள் என்போம் – பிறி(து)
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்

கடலினைத் தாவும் குரங்கும்– வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்
வடமலை தாழ்ந்தத னாலே – தெற்கில்
வந்து சமன்செயும் குட்டை முனியும்

நதியினுள் ளேமுழு கிப்போய் – அந்த
நாகர் உலகில்ஓர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த – திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்

ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும் – ஒன்றில்
உண்மையென் றோதிமற் றொன்று பொய்யென்னும்
நன்றுபு ராணங்கள் செய்தார் – அதில்
நல்ல கவிதை பலபல தந்தார்.

கவிதை மிகநல்ல தேனும் – அக் கதைகள்பொய் யென்று தெளிவுறக் கண்டோம்
புவிதனில் வாழ்நெறி காட்டி – நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்

பின்னும் (ஸ்)மிருதிகள் செய்தார் – அவை
மன்னும் இயல்பின வல்ல – இவை
மாறிப் பயிலும் இயல்பின ஆகும்

காலத்திற் கேற்ற வகைகள் – அவ்வக்
காலத்திற் கேற்ற ஒழுக்கமும் நூலும்
ஞாலம் முழுமைக்கும் ஒன்றாய் – எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை…

– இப்படி அந்தக் கவிதை போகிறது. அதாவது, புராணங்கள் எல்லாம் கற்பனை; நீதி பல சொல்கிறது என்று கூறும் இந்த பாரதியாரை, ஹிந்து மதம் மிகவும் போற்றுகிறது. அவரை ஒரு ஞானியாகக் கருதுகிறோம். அவர் ஞானிதான், சந்தேகமே இல்லை. ஞானிகளுக்கு இப்படித்தான் பார்வை இருக்கும். வேறு எந்த மதத்திலாவது இப்படி ஒருவர் எழுதி, அவரை ஞானி என்று ஏற்றுக் கொள்வார்களா? (கைதட்டல்) அப்படி எழுதினால், அந்த மனிதர் அத்தோடு க்ளோஸ் (கைதட்டல்). தெருவிலே அவர் தலைகாட்ட முடியாது. இவர் மட்டுமல்ல, பல பெரிய தத்துவ மேதைகள், ஆன்மிகவாதிகள் இதுபோன்ற கருத்துக்களைக் கூறியிருக்கிறார்கள். அது அவர்களுடைய பார்வை.

“பல கோணங்கள் மனிதனுக்கு இருக்கும்; பல பார்வைகள் இருக்கும் என்பதை ஹிந்து மதம் ஏற்பதுபோல, வேறு எந்த மதமும் ஏற்றுக் கொண்டதில்லை. கீதையிலே கூட கிருஷ்ணர் என்ன சொல்கிறார்? ‘சில பேர் அறியாமையால் என்னென்னவோ தெய்வங்களை வணங்குகிறார்கள். ஆனால் அதெல்லாம் என்னிடம்தான் வந்து சேரும்’ என்கிறார். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? ‘அதை எல்லாம் செய்யாதே’ என்று அவனைத் தடுக்கவில்லை. ‘இதெல்லாம் எனக்குத்தான் வந்து சேரும்’ என்று தான் சொல்கிறார். அந்த மாதிரி ஒரு பக்குவம் உள்ள மதம் ஹிந்து மதம்.

“உலகத்தில் வேறு எந்த மதத்திற்கும் இந்தப் பார்வை இருக்க முடியாது என்பதில் சந்தேகமே கிடையாது (கைதட்டல்). அப்படிப்பட்ட மதத்தில் இருப்பவர்கள், அந்த மதத்தின் பெயரால் தாறுமாறாகப் பேசி, நாட்டில் ஒரு கலவரமான சூழ்நிலையை உருவாக்க முனைவது கொஞ்சம் கூட நல்லதல்ல. இதை அந்த அமைப்புகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். இதை கட்டுப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.


(இதைத் தொடர்ந்து பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் ஹெச். ராஜாவை ஆசிரியர் பேச அழைத்தார். அவரது பேச்சு அடுத்த பதிவில்…)

தொகுப்பு: எஸ்.ரமேஷ்
ஃபோட்டோ: சிவா
(துக்ளக் ஆண்டு விழா டி.வி.டி. வேண்டுவோர், 04424984050 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்)

(தொடரும்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s