2-துக்ளக் வயது 45


இதன் முந்தைய பகுதி…

தங்க மாரியப்பன், கோவில்பட்டி: நம் நாட்டின் வளர்ச்சியை மிகவும் தடுத்துக் கொண்டிருப்பது ஊழல் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஊழல் என்பது சிறிய அளவில் தொடங்கி பெரிய அளவில் வளர்ந்து இப்போது கட்டாயப்படுத்தி மக்களையும், ஊழலில் ஈடுபட வைக்கும் அளவுக்கு அரசுகள் வந்து விட்டன. ஊழலை நாம் ஆதரித்துக் கொண்டிருந்தோமானால், நாம் எப்படி முன்னேற முடியும்? மேலைநாடுகளைப் போல, நாம் வளர்வது சாத்தியமே இல்லை. நான் சந்தித்த தமிழறிஞர்கள் அனைவரிடமும், ஊழல் ஒழியுமா என்று நான் கேட்டதற்கு, வாய்ப்பே இல்லை என்கிறார்கள். 90 சதவிகித மக்களும், அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களும் அதில் ஊறி விட்டார்கள். இது அதிகமாவதற்குத்தான் வழி இருக்கிறதே தவிர, குறைய வாய்ப்பே இல்லை என்கிறார்கள். இது மிகவும் வருத்தமளிக்கிறது. நம் ஆசிரியரிடம், இதற்கு விடை காண விரும்புகிறேன்.


சோ: ஊழல் என்பது அடியோடு ஒழிந்து விடும் என்று நானே கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால், மிகப்பெரிய அளவில் குறைக்கப்பட்டு விடும். இப்போது கூட மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்று எட்டு மாதங்கள் ஆகப் போகின்றன.. இதுவரை யார் மீதும் ஒரு ஊழல் புகாரும் கூறப்படவில்லை (கைதட்டல்).

குஜராத்தில் எப்படி ஊழலை ஒடுக்கினாரோ, அதே போல் மத்திய அரசிலும் மோடி தலைமையில் பொறுப்பேற்றுள்ள அமைச்சரவை மீது எந்த ஊழல் புகாரும் எழவில்லை. இது போல் ஒரு உறுதியான தலைவர் பொறுப்பில் இருக்கும்போது, அவரே ஒரு முன்னுதாரணமாகத் திகழும்போது, நிச்சயமாக ஊழல் பெரிய அளவில் குறையத்தான் செய்யும். அது நம் நாட்டிலும் நடக்கும்.

உலகத்தில் எங்குமே ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டதாகச் சொல்ல முடியாது. ஆங்காங்கே சிறிய அளவில் ஊழல் இருக்கத்தான் செய்கிறது. மனிதனுடைய பேராசை காரணமாக, இது நடக்கும். ஆனால் பெரிய அளவில் இது நடக்காமல் இருந்தால் சரி. கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்திலேயே லஞ்சம் வாங்குவதற்குத் தண்டனை பற்றிக் கூறப்பட்டுள்ளது. நீதிபதி லஞ்சம் வாங்குவதற்கே தண்டனை இருந்திருக்கிறது. அப்படி என்றால், அப்போதே நீதித்துறையில் ஊழல் இருந்திருக்கிறது. அதாவது சந்திர குப்தர் காலத்திலேயே அப்படி இருந்திருக்கவேதானே அது பற்றி (தண்டனை பற்றி) எழுதியிருக்கிறார். ஆனால், இதற்கு எதிராக ஒரு அரசு உறுதியாகச் செயல்பட முன்வரும்போது, நிச்சயமாக ஊழல் பெருமளவு குறையும்.

மு. அய்யூப்கான், கும்பகோணம்: மக்கள் மகிழ்ச்சியோடு கூடுகிற, மகாமகம் நடைபெறும் கும்பகோணத்திலிருந்து உங்களை வரவேற்பதற்காக வந்திருக்கிறேன். சென்ற துக்ளக் இதழில், ‘மதுக் கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகிறதே?’ – என்று ஒரு வாசகர் கேட்டிருந்த கேள்விக்கு, ஆசிரியர் பதில் கூறும் போது, ‘இப்போது மதுக்கடைக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் பல, விளம்பரம் தேடுவதற்காக நடத்தப்படுகின்றன’ என்று சொல்லியிருக்கிறார். இன்று தமிழகம் முழுவதும் குடும்பங்களை நாசப்படுத்தும் மது, ஒழிக்கப்பட வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது (கைதட்டல்).


இங்கு வருகை தந்துள்ள பலரும் அந்தக் கருத்து உடையவர்கள்தான். ‘டாஸ்மாக் இல்லாத தமிழகத்தை உருவாக்கியே தீருவோம்’ என்று சகோதரி தமிழிசை சௌந்தரராஜன் முழக்கமிட்டு வருகிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளும், மதுவுக்கு எதிராக அவ்வப்போது இயக்கங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. இங்கே வந்துள்ள பேராசிரியர் ஜவாஹிருல்லாவும் அதற்காகப் போராடுகிறார். இவர்கள் மட்டுமல்ல, ஆன்மிகவாதிகளும் மதுவுக்கு எதிராகக் களத்தில் இறங்கியுள்ளனர். ஆட்சியாளர்களிடம் இதற்காக பலரும் முறையிட்டு வருகிறார்கள்.

நான் இந்த ‘துக்ளக்’ ஆண்டு விழா நிகழ்ச்சிக்குச் செல்கிறேன் – என்று கூறியபோது, பெண்கள் சிலர் என்னிடம், ‘மதுவுக்கு எதிராகப் பலருடனும் இணைந்து திரு.ரஜினிகாந்த் அவர்களும் குரல் எழுப்ப வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளுமாறு தெரிவித்தனர். ஆசிரியர் அவர்களும் மதுவுக்கு எதிராகப் பேச வேண்டும்; எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சோ : இவர் ஏன் இங்கு இவ்வளவு நேரம் பேசினார் என்று பார்த்தால், இங்கு வரும் வழியில் பெண்களிடம் பேசிவிட்டு வந்தேன் என்றார் (பலத்த சிரிப்பு). அதனால்தான், அவரால் பேச்சை நிறுத்த முடியவில்லை. இவருக்கும் தொற்றிக் கொண்டு விட்டது (சிரிப்பு).


மது விலக்கை வெற்றிகரமாக அமல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அதை இப்போதல்ல பல வருடங்களாகவே எழுதி வந்திருக்கிறேன். இந்த எனது கருத்தைப் பலர் ஏற்கவில்லை என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தைத்தான் சொல்ல வேண்டும் என்றால், நான் ‘துக்ளக்’கையே நடத்த முடியாது. இந்த மதுவை எதிர்ப்பவர்களில் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்களில் டாக்டர் ராமதாஸ் குறிப்பிடத்தக்கவர் என்பது என் அபிப்ராயம். (கை தட்டல்). உளப்பூர்வமாகவே அவர் இதை எதிர்க்கிறார். ஏனென்றால், வன்னியர் சமூகத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டு, பின்தங்கிய நிலையிலேயே இருப்பதற்கு, இது ஒரு முக்கியமான காரணம் என்று அவர் உறுதியாக நம்புகிறார். அதே சமயம் பலர் இதை ஒரு பிரசார மேடையாகவும், விளம்பரத்துக்காகவும் பயன்படுத்துகிறார்கள்.

மதுவுக்கு எதிராக மக்களின் கருத்து மிகவும் வலுவாக உருவானால், மதுவிலக்கு வந்தே தீர வேண்டும் என்று மக்கள் கருதும் நிலை ஏற்பட்டால், எல்லா அரசியல் கட்சிகளும் அதே நிலைக்கு வந்துவிடும். ஏனென்றால், இன்று பல தலைவர்கள் மக்கள் கருத்துக்குப் பின்னால் செல்பவர்களாக இருக்கிறார்கள். மக்களை வழி நடத்துபவர்களாக இப்போது தலைவர்கள் இல்லை.

இதனால் ஓட்டுக் கிடைக்கும் என்றால், இந்தக் கருத்தை அவர்களும் வலியுறுத்தத் தொடங்கி விடுவார்கள். ஒட்டு மொத்த மக்களும் மதுவுக்கு எதிராக திரும்பும் நிலை உருவானால், நிச்சயம் மது விலக்கு அமலுக்கு வந்துவிடும். இதற்காக ரஜினிகாந்தோ, மற்றவர்களோ குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

எஸ். அனந்த ராமன், தஞ்சாவூர்: புரட்சித் தலைவி அம்மாவின் எதிர்காலம் என்ன? தமிழ்நாட்டின் எதிர்காலம் என்ன? காங்கிரஸிலிருந்து பிரிந்து புதிய கட்சி துவங்கியுள்ள ஜி.கே. வாசனின் அரசியல் பயணத்தைப் பற்றி ஆசிரியரின் கருத்து என்ன? 2016 சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற ஆசிரியரின் ஆலோசனை என்ன? தி.மு.க. தலைவர் கருணாநிதி 11-ஆவது முறையாக அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பற்றி ஆசிரியரின் கருத்து என்ன?


சோ : இன்றைக்கு இங்கு வந்து பேசுகிற எல்லோரும் ‘அவருடைய எதிர்காலம் என்ன? இவருடைய எதிர்காலம் என்ன?’ என்று ஒரே ஜோஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் (பலத்த சிரிப்பு, கைதட்டல்). எல்லோருடைய ஜாதகத்தையும் கொடுங்கள். பார்த்துச் சொல்கிறேன் (சிரிப்பு, கைதட்டல்). ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் சொத்து குவிப்பு வழக்கின் முடிவு என்ன ஆகிறது என்பதைப் பொறுத்து, அவருடைய அரசியல் எதிர்காலம் இருக்கும். அந்த வழக்கில் அவர் விடுதலையாகி விட்டால், மீண்டும் வெற்றி பெறுகிற வாய்ப்பு, அவருக்கும் அ.தி.மு.க.வுக்கும்தான் அதிகம் (கைதட்டல்).

பா.ஜ.க.வுக்கு ஆலோசனை சொல்லுமாறு என்னிடம் கேட்டார். நான் பா.ஜ.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படியிருக்க நான் ஆலோசனை சொன்னால் அந்தக் கட்சிக்கு என்ன கதி ஏற்படும்? (சிரிப்பு, கைதட்டல்) அப்படி பா.ஜ.க.வைக் கெடுக்கும் எண்ணம் எனக்கு இல்லை (கைதட்டல்).


கூட்டத்தின் ஒரு பகுதி….
ஜி.கே. வாசனைப் பொறுத்தவரை, அவர் காங்கிரஸிலிருந்து வெளியேறிய பிறகு, இங்கே காங்கிரஸுக்குள்ள ஓட்டுக்களில் பெரும் பகுதி, அவரிடம் போய் விட்டது. ஏதோ காங்கிரஸிடம் மிச்சம் இருக்கலாம். முன்பே கூட காங்கிரஸுக்கு இங்கே ஓட்டு கிடையாது என்பது வேறு விஷயம். (சிரிப்பு, கைதட்டல்) இப்போது வாசன் கட்சியிடம் உள்ள வாக்கு பலம், காங்கிரஸுக்கு இங்கே நிச்சயமாக இல்லை. வாசன் மிகவும் நிதானமானவர். பரபரப்புச் செய்தி வெளியிட்டு அரசியல் நடத்தாமல், நிதானத்துடன், கண்ணியமான ஒரு அரசியலை நடத்த விரும்புகிறவர். மத்தியில் அவர் பதவி வகித்திருந்த போதும், அவர் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் வரவில்லை. நிச்சயமாக அவரது தலைமையில் த.மா.கா. ஒரு நம்பகத் தன்மை கொண்ட கட்சியாக உருவாகும் என்று நான் நினைக்கிறேன் (கைதட்டல்).

கலைஞரைப் பற்றி இங்கே பேசிய வாசகர், 11-ஆவது முறையாக அவர் தலைவராகப் பொறுப்பேற்றிருப்பது பற்றிக் குறிப்பிட்டார். கலைஞருடைய அரசியல் வளர்ச்சி மிக அசாதாரணமானது. அவருடைய ஆரம்ப நிலையில் இருந்து இன்று வரை கவனித்தால், எப்படித்தான் இந்த மனிதர் பல பிரச்னைகளைச் சமாளித்து, இந்நிலையை எட்டியிருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. அவருக்கு ஆயிரம் பிரச்னைகள், அரசியல் ரீதியான பிரச்னைகள், குடும்பத்திலும் பிரச்னைகள், பதவி போட்டிகள் இத்தனையையும் சமாளித்து, அவர் இந்த வயதிலும் துடிப்போடு ஒரு கட்சியைக் கட்டிக் காப்பாற்றுவது அசாதாரணமானது தான்.

இடையில் எத்தனையோ ஊழல் – புகார் – விசாரணைகள் இவற்றையும் எதிர்கொண்டிருக்கிறார். இன்றைக்கும் இந்த வயதிலும், ஒரு நல்ல நிகழ்ச்சியோ அல்லது ஒரு துக்க நிகழ்ச்சியோ அவற்றில் தவறாமல் பங்கெடுத்துக் கொண்டு, எல்லோருக்கும் உரிய மரியாதையையும் அளித்து, இயங்கி வரும் அவர் ஒரு சாதனையாளர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை (கைதட்டல்). அந்த சாதனையால் தமிழ்நாட்டிற்கு என்ன நன்மை (சிரிப்பு, கைதட்டல்) என்று கேட்டால், அதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும். எனினும், இந்த மாதிரி ஒரு கடினமான உழைப்பும், அரசியல் சாதுர்யமும் எல்லோருக்கும் வந்து விடுவதில்லை. அது கலைஞரிடம் இருக்கிறது. அவருக்கு தன்னுடைய பலமும் தெரியும். தன்னுடைய எல்லையும் தெரியும். அதனால் தான் அவரால் இன்றும் அரசியலில் சாதிக்க முடிந்திருக்கிறது. கட்சித் தலைவராக 11-ஆவது முறையாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை வாசகர் இங்கே சுட்டிக்காட்டினார். 12-ஆவது முறையும் அவர்தான் ஜெயிப்பார் (சிரிப்பு, கைதட்டல்).

எஸ். மணிகண்டன், பெரியபாளையம் : தமிழகம் மின்சாரத் தேவையில் தன்னிறைவு பெற்று விட்டதா? தமிழ்ப் பற்று, தமிழ்ப் பற்று என்கிறார்களே எனக்குப் புரியவில்லை.


சோ : தமிழ்ப் பற்று என்றால் என்ன என்று கேட்டார். அது ஒரு பத்து ஓட்டு (சிரிப்பு, கைதட்டல்). ‘மின்சாரப் பிரச்னை தீர்ந்து விட்டது என்று எப்படிச் சொல்ல முடியும்? சொல்ல முடியாது. இன்னமும் ஆங்காங்கே மின்சாரப் பிரச்னை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலைமை சரியாவதற்கு இன்னமும் அவகாசம் தேவைப்படும் போலிருக்கிறது.

முத்துக்குமார், வேளச்சேரி : முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் துரிதமாகச் செயல் பட்டு தீர்த்து வைத்த மத்திய அரசு, காவிரி ஆணையம் அமைப்பதில் மட்டும் காலம் தாழ்த்துவது ஏன்? எல்லைப் பிரச்னையில் பாகிஸ்தானுக்கு இஸ்ரேல் பாணியில் பதிலடி தர வேண்டும் என்று எழுதி வந்தீர்கள். அந்த முறை தான் இப்போது கையாளப்படுகிறதா? இருந்தும் நமது தரப்பில் உயிரிழப்புகள் தொடர்வது ஏன்?


சோ : பாகிஸ்தானுக்கு இஸ்ரேல் பாணியில் பதிலடி தரப்பட வேண்டும் என்று நான் எழுதியது உண்மை. இப்போதைய மத்திய அரசு, முந்தைய காங்கிரஸ் அரசு போல் மந்தமாக இல்லாமல், ராணுவத்திற்கு முழு அதிகாரம் கொடுத்திருப்பதால், பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டால், பலமாகப் பதிலடி பெறுகிறது. அதனால்தான் அவர் கள் (பாகிஸ்தான்) இதை ஒரு சர்வதேசப் பிரச்னையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். ஆகவே, இந்த அரசு உறுதியுடன் செயல்படுகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

காவிரி ஆணையம் அமைப்பது பற்றி, இங்கே வாசகர் கேட்டார். இது இரு மாநிலங்கள் தொடர்புடைய பிரச்னை. ஏற்கெனவே இது பற்றி நான் எழுதியிருக்கிறேன். பேச்சுவார்த்தை மூலம்தான் இதற்கு சுமுக தீர்வு காண வேண்டும். சட்ட வழிமுறைகளின் மூலம் தீர்வு காண முடியாது.

எஸ். விஸ்வநாதன், பெரம்பலூர்: ஹிந்து மஹா சமுத்திரத்தின் ஏழாம் பாகம் எப்போது வெளிவரும்? பாஞ்சாலி சபதம் எழுதுவீர்களா? நாட்டு மருந்தைப் பற்றி எழுத வேண்டும். பகவத் கீதையை இடைச்செருகல் என்று ‘எல்லைகள் நீத்த ராமகாதை’ என்ற புத்தகத்தில் பழ.கருப்பையா கூறியுள்ளார். இது பற்றி ஆசிரியரின் கருத்து என்ன?


சோ : பாஞ்சாலி சபதத்தை நான் ஏன் எழுத வேண்டும்? (சிரிப்பு) பாரதியார் எழுதியிருக்கிறார். அதை நான் திருப்பி எழுத வேண்டுமா? ஹிந்து மஹா சமுத்திரம் ஏழாம் பாகம் எழுதுவது பற்றிச் சொன்னேன். ஆனால், அது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. பார்க்கிறேன். நாட்டு மருந்தைப் பற்றி எழுதுவதாக இல்லை. (சிரிப்பு) பகவத் கீதையை இடைச் செருகல் என்று பழ. கருப்பையா எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டார். பழ. கருப்பையா எழுதினால், அது அப்படியே வாஸ்தவமாகி விடுமா?

பி.டி. சுவாமிநாதன், நங்கநல்லூர்: போஹோ ஹராம், ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்-கொய்தா, நல்ல தலிபான், கெட்ட தலிபான், சிமி, இந்தியன் முஜாஹிதின் ஆகிய எல்லா அமைப்புகளுமே இஸ்லாமிய மத நம்பிக்கைகளையும், குர்ஆனில் கூறப்பட்டுள்ள சில விஷயங்களையும் மட்டுமே முன்னுதாரணமாக வைத்து, பல்வேறு விதமான தீவிரவாதச் செயல்களை நிகழ்த்துகின்றன.


இது போன்ற அமைப்புகளின் செயல்களுக்கு இஸ்லாமிய அமைப்புகள், ‘விஸ்வரூபம்’ மாதிரியான திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது போலவோ, எங்கேயோ வெளிவந்த ஒரு கார்ட்டூனுக்கு சென்னையை ஸ்தம்பிக்க வைத்தது போன்றோ, ஒரு எதிர்ப்பை தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ வெளிப்படுத்தாமல் இருப்பது (பலத்த கைதட்டல்) தவறு என்று ஆசிரியர் கருதுகிறாரா? தி.மு.க., அ.தி. மு.க.வுக்கு மாற்றாக வேறு ஒரு கட்சி வருவதற்கு வாய்ப்பு உள்ளதா? அல்லது தி.மு.க. என்ற தீய சக்திக்குப் பயந்து, மக்களின் முதல்வருக்கே ஓட்டு அளிக்க வேண்டுமா? (கைதட்டல்) கடைசிக் கேள்வி – அடுத்த ஆண்டு விழாவுக்கு வைகோ, சீமான் என்று யாரையாவது அழைப்பீர்களா? (சிரிப்பு, கைதட்டல்)

சோ : தீவிரவாதத்தைப் பரப்புவதில் எனக்கு ஆர்வம் இல்லை. அதனால் இவர் குறிப்பிட்டவர்களை எல்லாம் நான் அழைப்பேன் என்று கருதவில்லை (கைதட்டல்). இஸ்லாமிய அமைப்புகளும், அம்மத குருமார்கள் சிலரும் தீவிரவாதச் செயல்களைக் கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டு தானிருக்கிறார்கள் (கைதட்டல்). அவர்கள் இதைக் கண்டிக்காமல் இல்லை. சொல்லப் போனால், இப்படி நடைபெறும் செயல்களால் இங்குள்ள முஸ்லிம்களுக்கு ஒரு தர்மசங்கடம்தான். எல்லோரும் எல்லா முஸ்லிம்களையும் சந்தேகத்துடனேயே பார்க்கும் நிலைமை வருவதை, எல்லா முஸ்லிம்களும் விரும்பப் போவதில்லை.


வன்முறைதான் வழி’ என்ற நம்பிக்கை அவர்கள் அனைவருக்குமே இருப்பதாகக் கூற முடியாது. குர்ஆன் போன்ற மதநூல் தான் இதற்கு ஆதாரம் என்றால், எல்லா மத சம்பந்தப்பட்ட நூல்களிலும் கூறப்பட்டுள்ள சில விஷயங்களை, அவரவர் தங்களுக்கு வசதியான முறையில் விளக்கம் கூறிக் கொள்ளலாம். குர்ஆனாக இருந்தாலும், பைபிளாக இருந்தாலும், பகவத் கீதையாக இருந்தாலும் விதவிதமாக அர்த்தம் கொள்ளலாம். அதை வைத்துக் கொண்டு, ‘இதுதான் இவர்கள் மதம்’ என்று முடிவு கட்டுவது சரியாக இருக்காது. இந்தியாவிலேயே நிறைய முஸ்லிம்கள் இந்தத் தீவிரவாதச் செயல்களை எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு இது பிடிக்கவில்லை. என்ன செய்வது?

தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்று இல்லையா என்று கேட்டார். எல்லாவற்றுக்கும் மாற்று உண்டாகிக் கொண்டுதானிருக்கிறது. இதற்கும் மாற்று வரும்.

(வாசகர்களின் கேள்விகள் இத்துடன் நிறைவு பெற்றன. இதையடுத்து, மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வை ஆசிரியர் சோ பேச அழைத்தார். அது அடுத்த பதிவில் இடம் பெறும்.)

தொகுப்பு: எஸ்.ரமேஷ்
ஃபோட்டோ: சிவா
(துக்ளக் ஆண்டு விழா டி.வி.டி. வேண்டுவோர், 044-24984050 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்)

(தொடரும்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s