2-டெக்னிக்கே இல்லாமல் காட்டான் மாதிரி சுத்துறான் – என்று என்னை விமர்சித்தார்கள்! – கிரிக்கெட் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்


கிரிக்கெட் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்
(சென்ற பதிவின் தொடர்ச்சி)

ரங்கநாதன்: நீங்கள் கிரிக்கெட் ஆடும்போது, அடிக்கடி வானத்தை அல்லது சூரியனைப் பார்க்கும் பழக்கம் வைத்திருந்தீர்கள். அதற்கு என்ன காரணம்?

ஸ்ரீகாந்த்: சூரியனைத்தான் பார்ப்பேன். ஆறாம் வகுப்பில் நான் ஸம்ஸ்கிருதம் படித்தேன். அப்போது ‘சூரியன்தான் கண்ணுக்குத் தெரியக் கூடிய கடவுள்’ (சூர்யா பிரத்க்ஷ தேவதா) என்று சொல்லிக் கொடுத்தார்கள். அது முதல் சூரிய பகவான் மேலே எனக்கு ஒரு நம்பிக்கை. வெள்ளைக்காரன் அதை ஸோலார் எனர்ஜின்னு சொல்றான். ஸோலார் எனர்ஜின்னு சொன்னால், நம்ம ஊரில் சின்னப் பசங்க கேட்க மாட்டாங்க. சூரிய பகவான்டா…. என்று சொன்னால் கேட்பாங்க.


ஆர்.கோகுலகிருஷ்ணன்: நீங்கள் முதல் 15 ஓவரில் அடித்து விளையாடுவீர்கள். இன்றைக்கு அப்படி ஆடுவது குறைந்து விட்டதே?

ஸ்ரீகாந்த்: ஸார்… ஒருத்தரை ஒருத்தர் ஒப்பிடுவதே தவறு. அவரவர்கள் தங்களுக்கு எது சரியோ அதைத்தான் ஆடுவார்கள். அது ஒரு பக்கமிருக்க, இப்போது எல்லோருமே அப்படித்தானே ஆடுறாங்க? ஏன் இல்லைன்னு சொல்றீங்க? முதலில் நான் அப்படி ஆடினப்போ ‘காட்டான் மாதிரி சுத்துறான்’ என்று தானே நீங்கள் எல்லாம் விமர்சனம் பண்ணீங்க? (வாசகர்கள் சிரிப்பு. சிலர் மறுத்தனர்) அதெல்லாம் மறுக்காதீங்க. எனக்குத் தெரியும் ஸார். என்னை ‘டெக்னிக்கே இல்லாமல் காட்டான் மாதிரி சுத்துறான்’ என்றுதான் பலரும் விமர்சனம் பண்ணினாங்க. ஆனால், இன்னைக்கு உலகமே அப்படித்தான் விளையாடுது. முதன் முதலில் அப்படி விளையாட ஒரு தைரியம் வேணும். அந்த அசட்டு தைரியம் எனக்கு இருந்தது.

கோகுலகிருஷ்ணன்: நீங்கள் ஒரு சீரிஸில் விளையாடும்போது, முதல் மேட்ச்சில் நீங்கள் அடித்து ஆடி பெரிய ஸ்கோர் எடுத்தால், அந்த சீரிஸில் இந்தியா தோற்றுப் போகும். முதல் மேட்ச்சில் நீங்கள் குறைந்த ரன் எடுத்தால், அந்த சீரிஸில் இந்தியா ஜெயித்து விடும். பல சீரிஸில் இதை கவனித்து நான் உறுதி செய்திருக்கிறேன். உங்களுக்கு அது தெரியுமா?

ஸ்ரீகாந்த்: (சிரிக்கிறார்) அதெல்லாம் நான் கவனிச்சதில்லை ஸார். நீங்கள் நினைக்கிற மாதிரி நான் அந்தளவு பெரிய ப்ளேயர் இல்லை. ஒன் டே கிரிக்கெட்டில்தான் நான் ஓரளவு புகழ் பெற்றேன். என் ஆட்டத்தை நான் ஆடினேன். பெரிதாக இலக்கு எதையும் திட்டமிட்டு நான் ஆடவில்லை.

ஆர்.கற்பகம்: 20-20 காலத்தில் நாம் விளையாடவில்லையே என்ற வருத்தம் உங்களுக்கு உண்டா?

ஸ்ரீகாந்த்: இது பலரும் என்னை கேட்கும் கேள்விதான். வயதானவர்கள், ‘நான் எல்லாம் அந்தக் காலத்தில் பி.டி.சி. பஸ்ஸில்தான் போனேன். அப்போ எனக்கு கார் எல்லாம் கிடையாது’ என்று புலம்புவது போலத்தான் இது. என் காலத்தில் எது இருந்ததோ, அதை ஆடினேன். அதுக்காக என் காலத்தில் 20-20 இல்லாமல் போயிடுச்சேன்னு இப்போ நான் புலம்பினால் அது என்ன நியாயம்? நானே அப்படி வருந்தினால், விவியன் ரிச்சர்ட்ஸ் எல்லாம் என்ன செய்வார் பாவம்.

பி.கே.ஜீவன்: இன்றைக்கு இருப்பதில் பெஸ்ட் கேப்டன் என்று யாரைச் சொல்வீர்கள்?


ஸ்ரீகாந்த்: ஏன் நம்ம ஊர் தோனியே உலக கேப்டன்களில் முக்கியமான ஒரு கேப்டன்தான். அதை விட்டால், ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருந்த மைக்கேல் க்ளார்க்கை சொல்லுவேன். ஆனால், ஒருவரின் தியமையை வைத்து பெஸ்ட் கேப்டன் என்று சொல்லும் காலம் மலையேறிவிட்டது. இன்றைக்கு சக்ஸஸ் ரேட்தான் ஒரு கேப்டனை பெஸ்ட் கேப்டன் என்று பேச வைக்கிறது. ஒரு கம்பெனி பிரமாதமாக பிஸினஸ் செய்தால், ‘அப்பா! அந்த எம்.டி.யின் மூளையே மூளை. என்னமாய் திட்டமிட்டு காய் நகர்த்தி, பிஸினஸ் பண்றான் பாரு’ என்று பேசுவார்கள். அதே கம்பெனி லாட்டரி அடித்தால், ‘அந்த எம்.டி.க்கு மூளையே கிடையாதுடா. இவனை எம்.டி.யா வெச்சிருந்தா கம்பெனி நட்டத்தில் போகாமல் என்ன செய்யும்?’ என்று பேசுவார்கள். இதுதான் இன்றைய உலகம். அதுதான் கிரிக்கெட் கேப்டனுக்கும் பொருந்தும்.

எஸ்.முரளிதர்: வேகப்பந்து வீச்சையும் சரி, சுழற்பந்து வீச்சையும் சரி, சிறப்பாகக் கையாண்ட சிறந்த இந்திய பேட்ஸ்மேன் என்று யாரைச் சொல்வீர்கள்?

ஸ்ரீகாந்த்: எனது காலத்தில் குண்டப்பா விஸ்வநாத், கவாஸ்கரை சொல்லலாம். அடுத்த காலகட்டத்தில் டெண்டுல்கரைச் சொல்லலாம்.

எஸ்.முரளிதர்: டெண்டுல்கர் வேகப்பந்து வீச்சில் பலமுறை திணறி இருக்கிறார். கவாஸ்கரோடு ஒப்பிடுகையில், டெண்டுல்கர் வேகப்பந்தைச் சிறப்பாகக் கையாண்டார் என்று ஒப்புக்கொள்ள முடியாது.

ஸ்ரீகாந்த்: நீங்கள் ஒருத்தரை இன்னொருத்தரோடு ஒப்பிடுவதையும்தான் என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. சி.கே.நாயுடு பயங்கரமான ப்ளேயர்னு சொல்றாங்க. டான் ப்ராட்மேன் கிரிக்கெட்டின் பெரிய பிஸ்தான்னு சொல்றாங்க. இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் சிறந்த ப்ளேயர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள். இதுலே அவரோட கம்பேர் பண்ணினால், இவர் எப்படி? இவரோடு கம்பேர் பண்ணினால் அவர் எப்படி என்றெல்லாம் கணக்கு போடுவதே தப்பு. ஒவ்வொரு ஆட்டத்திலும் சூழ்நிலைகள் வேறு வேறாகத்தான் இருக்கும். இதையும் அதையும் ஒப்பிடக் கூடாது. கவாஸ்கர் ஒரு க்ரேட் ப்ளேயர் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் ஸ்கோர் பண்ணின ரன்களில் பெரும்பான்மை ரன்கள் வேகப்பந்துக்கு எதிராக எடுக்கப்பட்ட ரன்கள். அதுவும் ஓப்பனிங் பேட்ஸ்மேன் எனும்போது புது பந்து, புது ஆடுகளம் என்று நிறையச் சிக்கல்கள் உண்டு. அதையெல்லாம் சமாளித்துதான் அவர் சிறந்த வீரராக ஜொலித்தார். அவர் அந்த வகையில் பிஸ்தா என்றால், டெண்டுல்கர் வேறொரு வகையில் பிஸ்தா. எனவே, இருவரையும் ஒப்பிடக் கூடாது. அப்படி நீங்கள் ஒப்பிட்டால் கபில்தேவைத்தான் நான் சிலாகித்துப் பேசுவேன். இன்றைக்கு 20-20 கிரிக்கெட் காலத்தில் கபில்தேவ் ஆடியிருந்தால் வெளுத்துக் கட்டியிருப்பார்.

கற்பகம்: அந்தக் காலத்தில் கவாஸ்கர் – கபில்தேவுக்கு இடையே பெரிய மோதல் இருந்ததாக நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படி ஒரு கோஷ்டிப் பூசல் இருந்தது உண்மைதானா ஸார்?


ஸ்ரீகாந்த்: ஒரு டீமில் பலர் இருக்கும்போது, சில முட்டல், மோதல்கள் வராமல் போகாது. எந்த ஃபீல்டை எடுத்துக் கொண்டாலும், எந்த ஆஃபீஸை எடுத்துக் கொண்டாலும் இதுபோன்ற முட்டல், மோதல்கள், பூசல்கள், மன வருத்தங்கள் இருக்கத்தான் செய்யும். அண்ணன், தம்பிக்கு இடையிலேயே எவ்வளவு முட்டிக்குது? அது மாதிரிதான் இதுவும். இவையெல்லாம் பெரிதுபடுத்தத் தேவையில்லாத அற்ப விஷயங்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.

கோகுலகிருஷ்ணன்: கிரிக்கெட் என்பது மெட்ரோ பாலிட்டன் ஸிட்டி ஆட்டமா?

ஸ்ரீகாந்த்: அது ஒரு காலகட்டம். இன்றைக்குத் தொலைக்காட்சிக்கு நன்றி சொல்ல வேண்டும். கிராமத்திற்கு கிராமம் சிறுவர்கள் மட்டையுடன் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். முன்னாடி உ.பி.யில் இருந்தெல்லாம் கிரிக்கெட்டர் வர மாட்டார்கள். அதெல்லாம் இப்போது மாறி விட்டது. இன்றைக்கு தோனி, ரைனா, ரோகித் ஷர்மா, புவனேஷ் குமார் என்று எத்தனையோ பேர் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகரங்களிலிருந்து, மிடில் க்ளாஸ் குடும்பங்களிலிருந்து மிகச் சாதாரணமாக இந்திய அணிக்குள் இடம் பிடிக்கிறார்கள்.

எஸ்.முரளிதர்: ஆனால், தமிழ்நாட்டில் உடுமலைப் பேட்டை செந்தில்நாதனை தவிர்த்து யாரும் வரவில்லையே? 30 ஓவர் மேட்ச்சைப் பார்த்துதான் வீரரை செலக்ட் செய்கிறார்கள். ஒருவேளை அது போதாதோ?


ஸ்ரீகாந்த்: திரும்பத் திரும்ப செலக்ஷன் கமிட்டியையே குறை சொல்வதில் பலனில்லை. 120 கோடி பேரில் 15 பேரைத் தேர்வு செய்யச் சொன்னால், நீங்கள் எப்படி தேர்வு செய்வீர்கள்? படிப்படியான தேர்வு மூலம்தானே தேர்வு செய்ய முடியும்? முதலில் மாநிலத்திற்குள் விளையாடுபவர்களிலிருந்து மாநில அணியைத் தேர்வு செய்ய வேண்டும். பிறகு பல மாநில அணிகளிலிருந்து ஜோனல் டீம் வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு ஜோனல் டீம்களிலிருந்து இந்திய அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இதுதானே சிஸ்டம்? ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு தேர்வு கமிட்டி இருக்கிறது. அதன்படிதான் தேர்வுகள் நடக்கின்றன. தமிழ் வீரர்கள் இந்திய அணியில் இடம் பெறவில்லையென்றால், தமிழக வீரர்கள் தகுதியில்லாதவர்கள் என்று அர்த்தம் இல்லை. நம்மைவிடத் தகுதியான பிற மாநில வீரர்கள் இந்த முறை முன்னுக்கு வந்து விட்டார்கள் என்பதுதான் அர்த்தம். பல பேர் சரிசமமான தகுதிகளோடு இருக்கலாம். இருந்தாலும் கூட, இந்த முறை யாரோடு மோதுகிறோம்; எந்த நாட்டோடு மோதுகிறோம்; எந்த பிட்ச்சில் மோதுகிறோம் என்பதை வைத்துக் கூட, சம தகுதியுள்ள கூட்டத்தில் ஒருவரை மட்டும் அவர்கள் தேர்வு செய்யலாம். யாரைத் தேர்வு செய்தாலும், மற்ற மாநில மக்கள் தேர்வுக் கமிட்டியைக் குறை சொல்லத்தான் செய்வார்கள்.

கோகுலகிருஷ்ணன்: டெஸ்ட், ஒன் டே, 20-20 ஆகிய மூன்று விதமான போட்டிகளுக்கும், தனித் தனியே மூன்று கேப்டன்கள் இருப்பதுதான் சரியானது என்று சிலர் சொல்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?


ஸ்ரீகாந்த்: அது அந்தந்தச் சூழ்நிலை மற்றும் அந்தந்தக் கேப்டனின் திறமை சம்பந்தப்பட்டது. இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றி விட முடியாது. நபர் மற்றும் சூழலுக்கேற்ப முடிவு செய்து கொள்ள வேண்டியதுதான். பிரஷர் இருக்கும்போது, ஓய்வு தேவைப்படும்போது கேப்டனை மாற்றத்தானே செய்கிறார்கள்?

ஆர்.ரவீந்திரன்: இந்திய அணி பேட்டிங்கில் பலமாக இருக்கிறது. ஆனால், ஃபீல்டிங் ஃபெய்லியர் காரணமாகத்தான் பல மேட்சுகளை நாம் இழக்கிறோம். ஒப்புக் கொள்கிறீர்களா?


ஸ்ரீகாந்த்: முழுமையாக ஒப்புக் கொள்ள மாட்டேன். முந்தைய நிலைக்கு தற்போது கொஞ்சம் பரவாயில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

ரவீந்திரன்: இன்னைக்குக் கொஞ்சம் பெட்டராக இருக்குன்னு நீங்கள் சொல்வதற்குக் காரணம் – இளைஞர்கள் அணியில் இடம் பிடித்திருப்பதால். இதே வீரர்கள் தொடர்ந்து இடம்பெறும்போது ஃபீல்டிங் படிப்படியாக மோசமாகி விடுகிறது.

ஸ்ரீகாந்த்: ம்ம்ம்… இருக்கலாம். ஒத்துக் கொள்கிறேன்.

ஜி.ரங்கநாதன்: 20-20 கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட் டையும், ஒருநாள் கிரிக்கெட்டையும் அழித்து விடும் போலிருக்கிறதே?

ஸ்ரீகாந்த்: ஸார்… நான் ஏற்கெனவே சொல்லிட்டேன். கால மாற்றத்துக்கு ஏற்ப நாம் மாறித்தான் ஆக வேண்டும். பழசையே பிடித்து தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது. மக்கள் எதை விரும்புவார்கள்? நீங்களே சொல்லுங்கள். டமால் டுமீல் என்று பவுண்டரி அல்லது சிக்ஸர் அடிப்பதை விரும்புவார்களா? டொபுக்கு டொபுக்கு என்று கட்டை போடுவதை விரும்புவார்களா? நிச்சயம் ஃபாஸ்ட் கிரிக்கெட்டைத்தான் விரும்புவார்கள். எனவே குறை சொல்லிக் கொண்டே இருப்பதை விட காலத்திற்கேற்ற மாற்றங்களுக்கு நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

எஸ்.முரளிதர்: இந்தியாவில் வேகப்பந்துக்கு ஏற்ற பிட்சுகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

ஸ்ரீகாந்த்: இதில் மாற்றுக் கருத்து என்ன இருக்க முடியும்? முழுமையாக ஏற்கிறேன். பலவிதமான பரீட்சார்த்த விக்கெட்டுகளில் நாம் விளையாடிப் பழக வேண்டும். அப்போதுதான் எந்த நாட்டிலும், எந்த விக்கெட்டிலும் நாம் தன்னம்பிக்கையோடு விளையாட முடியும். இந்தியாவின் பிட்சுகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

ஜீவன்: உங்களை பயமுறுத்திய பௌலர்கள் யார், யார்?

ஸ்ரீகாந்த்: பயமுறுத்திய பௌலர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் என்னை கஷ்டப்படுத்திய பௌலர்களைச் சொல்லலாம். பாகிஸ்தானின் வாஸிம் அக்ரம், வெஸ்ட் இண்டிஸின் மால்கம் மார்ஷல், நியூஸிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லி ஆகியோர் என்னுடைய ரன் குவிப்பிற்குக் கஷ்டத்தைக் கொடுத்தவர்கள் என்று சொல்லலாம்.

கற்பகம்: சச்சின் டெண்டுல்கர் மாதிரி, உங்கள் அனுபவங்களைப் புத்தகமாக வெளியிடுவீர்களா?

ஸ்ரீகாந்த்: ஏற்கெனவே இப்படி பல பேர் கேட்டு விட்டார்கள். நான் இன்னும் எதுவும் முடிவு செய்யவில்லை. இதுவரை அப்படி எதுவும் எழுதும் எண்ணம் எனக்கு இல்லை.

ரவீந்திரன்: நீங்கள் ஏன் பௌலிங் போடவில்லை?

ஸ்ரீகாந்த்: போட்டிருக்கேனே ஸார். பல ஓவர்கள் வீசியிருக்கிறேன். எல்லோரும் திட்டமிட்டு என் பௌலிங்கை அமுக்கிட்டாங்க ஸார். (சிரிப்பு)

ஜீவன்: ‘கிரிக்கெட் லைஃப் சீக்கிரம் முடிஞ்சு போச்சு’ என்ற வருத்தம் உங்களுக்கு உண்டா?

ஸ்ரீகாந்த்: வருத்தம் எல்லாம் இல்லை. ஆனால், சில நேரம் நினைத்திருக்கிறேன். நான் இன்னும் கொஞ்சம் எஃபர்ட் எடுத்திருந்தால், இன்னும் கொஞ்சம் ஹார்ட் ஒர்க் பண்ணியிருந்தால், இன்னும் சில ஆண்டுகள் ஆடியிருக்க முடியுமோ என்று நினைத்திருக்கிறேன். 32 வயதில் ரிட்டையர் ஆகினேன். அந்த நேரத்தில் கொஞ்சம் முனைந்திருந்தால், 35 அல்லது 36 வயது வரைக்கும் ஆடியிருக்க வாய்ப்பு கைகூடி வந்திருக்கலாம். இப்போது 22 வருடங்கள் கழித்து, அதை நினைத்து என்ன பண்ண முடியும்? விடுங்க ஸார்.

ரங்கநாதன்: இந்த டக்வொர்த் லூயிஸ் முறை பற்றி உங்கள் கருத்து?


ஸ்ரீகாந்த்: அது மாதிரி ஒரு லூஸுத்தனம் எதுவுமில்லைன்னுதான் தோணுது. யாருக்கும் எதுவும் புரியாது. கம்ப்யூட்டருக்கு மட்டும்தான் புரியும். இது மாதிரி ஒரு ஃபார்முலாவை எப்படித்தான் வைத்துக் கொண்டு, ஆடுகிறார்களோ தெரியவில்லை. சுத்த லூஸுத்தனம். அந்த டக்வொர்த் யாரு, லூயிஸ் யாருன்னு கூட யாருக்கும் தெரியாது. அவங்க கிட்டே இந்த ஃபார்முலாவை வைத்து ரிஸல்ட் கேட்டால், அவர்களுக்கும் கூட சொல்லத் தெரியாது. கம்ப்யூட்டர் மட்டும்தான் முடிவு சொல்லும். இதற்குப் பதிலாக வேறு ஏதாவது வழிமுறையைக் கொண்டு வருவது நல்லது.

கோகுலகிருஷ்ணன்: இந்தியாவோட வேகப்பந்து வீச்சாளர்களின் எதிர்காலம் எப்படியிருக்கும்?

ஸ்ரீகாந்த்: எதிர்காலம்னு ஒண்ணு இருக்குமா என்பதே சந்தேகமாக இருக்குது. இங்கு அவ்வளவு மட்டமான பிட்சுகள். இந்த மாதிரி பிட்சுகளில் அவர்கள் முடிந்தளவு வேகமாகப் பந்து வீச முயல்வதே ஒரு பெரிய சாதனை என்றுதான் நான் நினைக்கிறேன். நாம் விக்கெட்டுகள் மீது கவனம் செலுத்த வேண்டியது மிக மிக அவசியம்.

எஸ்.முரளிதர்: நமது திறமைக்கு உரிய இடம் நமக்குக் கிடைக்கவில்லை என்ற வருத்தம் உண்டா?

ஸ்ரீகாந்த்: ஸார்… இதையெல்லாம் நானே சொல்லிக்கிட்டிருக்க முடியாது. நீங்கள்தான் என் திறமையைக் கணக்கிட்டுப் பார்த்து ‘நல்ல திறமைசாலி. பாவம்… உரிய அங்கீகாரம் கிடைக்கலை’ன்னு சொல்லணும். எனக்கு நானே, ‘நான் நல்ல திறமைசாலி. ஆனால், பாவம் எனக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போயிடுச்சு’ என்று சொல்லிக்கிட்டு திரிய முடியுமா ஸார்? இதுலே இன்னொரு விஷயமும் இருக்கு. எவ்வளவுதான் பேர் வாங்கினாலும் ஒரு காலகட்டத்தில் நாம மறக்கப்படத்தானே செய்வோம். இங்கே வந்திருக்கிற நீங்கள் எல்லாம், ஓரளவு என் ஏஜ் க்ரூப்பைச் சேர்ந்தவர்கள். அதனால் என்னை ஞாபகம் வெச்சுப் பேசுறீங்க. இன்றைக்கு இருக்கிற 15 வயது பையன் கிட்டே போய் நான் நின்னா, என்னை யாருன்னுதான் கேட்பான். அதனாலே இதெல்லாம் ஒரு பெரிய விஷயமில்லை ஸார்.

ரங்கநாதன்: கிரிக்கெட் நடுவர்கள் விஷயத்தை இன்னும் தொழில்நுட்பரீதியாகக் கொண்டு போக, சர்வதேச கிரிக்கெட் சங்கம் முனைந்துள்ளதாகத் தெரிகிறது. அது பற்றி?


ஸ்ரீகாந்த்: டெக்னாலஜியை ஓரளவு பயன்படுத்திக் கொள்வதில் தப்பில்லை. ரன் அவுட்டுகளுக்கு ரீப்ளே பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். பவுண்டரியா, சிக்ஸரா என்று உறுதி செய்யவும் டெக்னாலஜி உதவுகிறது. தரையில் பட்டதா, இல்லையா என்று சந்தேகம் எழும் கேட்சுகளை ரீப்ளே பார்த்துதான் முடிவு செய்ய வேண்டியுள்ளது. இப்போது எல்.பி.டபிள்யு. கொடுப்பதற்கும், லெக் அம்பயர் நோ பால் கொடுப்பதற்கும் கூட டெக்னாலஜியைக் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். அப்புறம் ஆடுகளத்தில் அம்பயர் எதற்கு? எனக்கென்னவோ இது சரியாகப் படவில்லை. எல்.பி.டபிள்யு முடிவை அம்பயர்தான் எடுக்க வேண்டும். அது சில நேரங்களில் தவறாகக் கூடப் போகலாம். ஆனால், கிரிக்கெட்டில் அது மாதிரியான மனிதத் தவறுகளும் அவ்வப்போது இருப்பதுதான் சுவாரஸ்யம்.


தொகுப்பு : எஸ்.ஜே. இதயா, பங்கேற்க: thuglak45@gmail.com, http://www.facebook.com/thuglakweb, படங்கள்: பேஜர் கிருஷ்ணமூர்த்தி

Advertisements

One thought on “2-டெக்னிக்கே இல்லாமல் காட்டான் மாதிரி சுத்துறான் – என்று என்னை விமர்சித்தார்கள்! – கிரிக்கெட் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்

  1. rjagan49 January 28, 2015 at 3:30 PM Reply

    Srikanth is just fabulous in his spontaneous replies and typically blunt in using the words! He is quite honest and at the same time has not accepted comments by interviewers even in his favour. He is a man of the changing times and this is a very good aptitude, I feel. Kudos to Srikanth! – R. J.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s